Home » Cover Story » மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…

 
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…


ராஜ்குமார் சி
Author:

– திரு. சி. ராஜ்குமார்
ஓ.பி. ஜிண்டல் குளோபல் பல்கலைக்கழகத் துணைவேந்தர்

நேர்முகம் : – டாக்டர் செந்தில் நடேசன்

இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு செயல்பட்டவர்கள் இமயம் தொட்டு நிற்பார்கள் என்று         சொல்லி மகிழ்வதுண்டு நாம்.  நாளை இவரையும் நாம் அவசியம் அப்படித்தான் சொல்லி மகிழப் போகிறோம்.  என் சமுதாயம் எந்தவிதத்திலும் தாழ்ந்து இருக்கக் கூடாது உயர்ந்தே இருக்க வேண்டும் அதற்கான உயர்வான சிந்தனைகளை தன்னகத்தே கொண்டு செயல்படக்கூடிய ஆற்றல் நிரம்பியவர் களை இனம் கண்டு வளர்த்தெடுக்க வேண்டும்  என்பதில் உறுதியாக இருந்து செயல்பட்டு வருகிறவர்.

இந்திய சட்டத் தொழில் முறையில் மறுசீரமைப்பு அவசியம் தேவை என்றும்,  சட்டக் கல்வி பயின்றவர்கள் நாட்டை முன்னெடுத்து வளர்த்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தி வருபவர்.

மக்களின் நல்வாழ்வுக்கு உகந்த சட்டங்கள் இன்னும் இயற்றப்பட வேண்டும் சட்டங்களை எடுத்துக் கையாளும் வழக்கறிஞர்கள் தவறுக்கு துணைபோகாமல் தேசத்தின் நலனையும், தேசமக்களின் நலனையும் காக்க வேண்டும் என்கிறவர்.

பொறியியல், மருத்துவம் போல் சட்டக்கல்வி ஒரு தனிப்பட்ட இடத்தை வகிக்கும் வண்ணம் அக்கல்வியினை உயர்த்திடும் நோக்கில் ஓ.பி ஜிண்டல் குளோபல் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்து திறம்பட செயலாற்றி வருபவர்.

பெண்களின் பங்களிப்பை பாராட்டவும், மதிக்கவும் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் முன்னேற அனைவரும் ஒத்துழைப்பை நன்கு அளித்திடவும் வேண்டும் என்று குரல் கொடுத்து வருபவர் திரு. சி. ராஜ்குமார் அவர்கள்.

“சொற்கள் நம் சிந்தனையின் உடைகள், அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக்கூடாது” என்பார் செஸ்டர்பீல்டு. சொற்களை பிறரின் மகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் மட்டுமே பயன்படுத்தி தன்னால் முடிந்தளவு நற்பணிகளைச் செய்ய வேண்டும்  என்ற அவருடன் இனிநாம்……

உங்கள் இளமைக்காலம், பெற்றோர் குறித்து?

என் தந்தை திரு. சொக்கங்கம் அவர்கள் கிரிமினாலஜி துறையில் பேராசிரியர். அவர் கிரிமினாலஜியில் முனைவர் பட்டம் பெற்றவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியவர். தற்பொழுது தொகிவாவில் கிரிமினாலாஜி துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். என் தாயார் திரு. விஜயலட்சுமி அவர்கள் எக்மோர் மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி. எங்கள் குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. என் பெற்றோர் இருவருமே கடின உழைப்பாளிகள். என் தந்தை ஒழுக்கம், மேன்மை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பை பாராட்டுபவர். அவரை முன் மாதிரியாகக் கொண்டே நானும் இத்துறையைத் தேர்ந்தெடுத் தேன். இதுமட்டுமின்றி சட்டம் படித்த காந்தி அதை அநீதிகள் களைய உபயோகப்படுத்திய முறை எனக்கு  மிகவும்  பிடித்திருந்தது.  மேலும் நம்நாட்டு சுதந்திரத்தில் பங்கேற்ற முன்னோடி களான மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, அம்பேத்கார் உள்ளிட்டோர் அனைவரும் சட்டத்துறையைச் சேர்ந்தவர்களே. இதனால் இத்துறையின் மீது ஆர்வம் கொண்டு இதனை தேர்ந்தெடுத்தேன்.

சென்ற 1990களில் சாதனையாளர்கள் பெரும்பாலும் பொறியியல், மருத்துவம், கணக் கியல் போன்ற துறைகளில் மிகுந்த அளவுக்கு ஆர்வம் காட்டி வந்தார்கள்.  அவர்களுடைய பாதையில் நானும் பயணம் செய்ய விரும்ப வில்லை. நான் மாறுபட்ட ஒரு தொழில் துறையில் ஈடுபட விரும்பினேன். இந்தியச் சூழல் சட்டவியல் தொடர்பான நடைமுறைகளும், நடவடிக்கைகளும் என்னை மிகுந்த அளவிற்கு பாதித்தன. குறிப்பாக, சட்டத் தொழில் துறையில் மலிந்து காணப்படும் ஊழல், அதிகாரத்தைக் கேவலப்படுத்துதல், கொடூரமான வகையில் அமைந்த நீதிமன்றக் காலதாமதங்கள் போன்றவை சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு  உள்ளன.

ஆகவே, அந்தத் தொழில்துறையில் மறு சீரமைப்புக்களைச் செய்ய வேண்டுமென்று விரும்பினேன். அதனாலேயே அந்தத் தொழில் துறையைத் தேர்ந்தெடுத்தேன்.

மேலும் பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளும் நாடுகள் வளர்ச்சி அடைவ தில்லை. சட்டதிட்டங்களை முழுமையாக பின் பற்றும் நாடே உயர்கின்றது. சில காலங்களுக்கு முன்பு சீனா பொருளாதாரத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இருந்தது. ஆனால் இப்போது உண்மை நிலையை அறிந்து கொண்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேயா உள்ளிட்ட நாடுகள் உயர்ந்திருப் பதற்குக் காரணம் அவர்கள் சட்டங்களைக் கண்டிப்புடன் பின்பற்றுவதுதான்.

லயோலா கல்லூரியில் இளங்கலைப் பட்டம் (பி.காம்) பயின்றேன். பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்தேன். லயோலா கல்லூரியின் கொள்கை, என்னை மிகவும் கவர்ந்தது. சமூகத்தின் பல்வேறு பொருளாதார நிலையில் உள்ள மாணவர்களை ஒருங்கே நடத்திய பண்பு என்னை ஈர்த்தது.  அப்படி எங்கள் பல்கலைக்கழகமும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக 2 கோடி மதிப் புள்ள ஊக்கத் தொகையை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது என்பதை சொல்லிக் கொள்வதில் ஒருவித பெருமிதம் எனக்குள்.

சட்டக்கல்வி இப்போது 5 ஆண்டு படிப்பாக இருப்பதைப் பற்றி தங்கள் கருத்து?

இது ஒரு நல்ல முயற்சியே. மருத்துவம் மற்றும் பொறியாளரைப் போல 5 வருடம் சட்டக்கல்வியை தொடர்ந்து படிப்பது, நல்ல தகுதியுடைய வழக்கறிஞர்களை உருவாக்குகிறது.  ஆனால் அதே நேரத்தில் மாணவர்கள் பாடத் திட்டத்தையும் தாண்டி பல்வேறு துறைகளைப் பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது பல மருத்துவர்களும் பொறியாளர் களும்  சட்டக்கல்வி  மீது  ஈடுபாடு  கொண்டு இதைப்படிக்கத் தொடங்கியுள்ளனர். பொறி யாளர்களுக்கு இத்துறை மிகவும் பொருத்தமான தாக இருக்கும்.

‘கம்பெனி LAW’ போன்ற சட்டத்துறைச் சார்ந்த கல்விக்கு படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாததற்குக் காரணம்?

இந்தியாவில் 913 சட்டக் கல்லூரிகள் உள்ளன.  இவற்றுள் வெறும் 60 கல்லூரிகள் மட்டுமே தரமான கல்வியைத் தருகின்றது.  எஞ்சியுள்ள மற்ற அனைத்து கல்லூரிகளின் தரமும் குறைவாகவே உள்ளது.  கட்டமைப்பு வசதி, ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக நல்ல மாணவர்கள் இந்தக் கல்லூரிகளில் உருவாவ தில்லை. இப்போது சட்டக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல வாய்ப்புகள் காத்திருக் கின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன.  சட்ட நிறுவனங்கள், தேசிய கூட்டவை, சர்வதேச கூட்டவை  உள்ளிட்ட நிறுவனங்கள் நூற்றுக் கணக்கான வழக்கறிஞர்களை நியமிக்கின்றது.  ஆனால் தரமான கல்வி பயின்ற திறமை மிக்க மாணவர்கள் கிடைக்காத காரணத்தால் கம்பெனி லா (LAW) பயின்றவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. அவற்றை படிக்கும் மாணவர் களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

கல்வித் தரத்தில் மாற்றங்களும் முன்னேற்றங்களும் கொண்டு வருவதே நாம் செய்ய வேண்டிய முக்கியக் கடமை. நம் நாட்டில் கல்லூரிகள் எண்ணிக்கைகளை பெருக்க நினைக்கிறோமேயன்றி அதன் தரத்தை உயர்த்த நினைப்பதில்லை. இது மாபெரும் தவறு.

இதற்கான தீர்வாக தங்கள் சொல்ல விரும்புவது?

கல்வி கற்பிக்கும் நிறுவனங்களின் சட்டதிட்டங்கள் கல்வி தரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதை வற்புறுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களின் சட்ட திட்டங்களை நிர்ணயிப் பவர்களும், கல்வி நிறுவனங்களில் உள்ள உயர் பதவிகளில் வகிப்பவர்களும் உயர் கொள்கை யுடன் இருத்தல் வேண்டும். ஆனால் இப்போ துள்ள தகவல் தொடர்பு துறையும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் தரத்திற்கு முக்கியத் துவம் அளிக்கத் தொடங்கியுள்ளது நல்ல செய்தி ஆகும். சென்ட்ரல் இன்பர்மேஷன் கமிஷன் மற்றும் ஸ்டேட் இன்பர்மேஷன் கமிஷன் இரண்டும் தண்ஞ்ட்ற் ற்ர் ஐய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய் அஸ்ரீற்  கீழ் கல்வி நிறுவனங்களின் தரத்தையும், நம்பகத்தன்மை யையும் தெரிவிக்க வேண்டும். இதோடு மட்டு மின்றி மற்ற நாட்டில் உள்ள கல்வித் திட்டங்களில் சிறந்தவற்றை பின்பற்ற வேண்டும்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் நம் நாட்டிற்கு வருவதைப் பற்றி….

ஒழுக்கக் கோட்பாடுகள் குறைந்துள்ள நம் நாட்டிற்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயமே. உள்நாடோ வெளிநாடோ, எந்தப் பல்கலைக் கழகமாக இருந்தாலும் அவை சிறந்த தரத்துடன் விளங்குவதே முக்கியமாகும்.

“சட்டக்கல்லூரி” தங்கள் பார்வையில்?

மருத்துவம், பொறியியல் போன்ற துறை களுக்கு கொடுக்கப்படும் கௌரவம், இத் துறைக்கு இல்லை.

சட்டதிட்டங்களை சமூகம் சரியாக பின் பற்றாத வரை, சமூகம் நல்வழிப்படாது.

அப்படிப்பட்ட சமூகத்தில் சட்டக் கல்லூரியும், சட்டக்கல்லூரி மாணவர்களும் எதையும் சாதிக்க முடியாது.

சட்டம் படித்தவர்கள் வேறு துறைக்கு பணிக்குச் செல்கிறார்களே?

1991ஆம் ஆண்டு வரை சட்டம் படித்தவர் கள் நீதிமன்றங்களுக்குச் சென்று பணியாற்றினர்.  ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் இத்துறையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 50 சதவிகிதம் சட்டத் துறைக்கு செல்வதில்லை.  என்.ஜீ.ஓ, தன்னார்வ நிறுவனம், அரசு நிறுவனம், எம்.என்.சி, தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைக்குச் சென்று தங்கள் சட்ட அறிவை பயன்படுத்துகின்றனர்.  இது வரவேற்கத்தக்கதே. இதற்கேற்றார்போல் சட்டக்கல்லூரிகளில் பன்முகநோக்கு கொண்ட பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். எம்.ஐ.டி போன்ற பொறியியல் கல்லூரிகளில் இந்த வசதிகள் உள்ளன.  ஜப்பான் போன்றநாட்டிலும் இத்தகைய பன்முகநோக்கு, ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பாடங்களும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது பணியில் இருக்கும் வழக்கறிஞர்கள் குறித்து?

வழக்கறிஞர்களை கவனித்து அவர்களை வழிநடத்தும் எவ்வித சக்தியும் நம்நாட்டில் இல்லை. சட்டக்கல்வி படித்த உடனே நம் நாட்டில் வழக்கறிஞர்கள் ஆகிவிடலாம். பல மேலை நாடுகளில், சீஎல்ஈ (CLE) மற்றும் பார் தேர்வுகளும் வழக்கறிஞர்களை மேம்படுத்திக் கொள்ள நடைபெறுகின்றன. ஆகவே நம் நாட்டில் வழக்கறிஞர்கள் தாமே தம் வேலையை செவ்வனே செய்ய வேண்டும்.

தங்களுடைய சட்டக்கல்வி அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்…

முதலாவதாக, டெல்லி பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி பயின்றேன். கடந்த 1997ல் சட்டக் கல்வியில் பட்டம் பெற்றேன்.  அதைத் தொடர்ந்து, பல வருடங்கள் வரை மனித உரிமைகள் பற்றியும், தேசியப் பாதுகாப்புத் துறை பற்றியும் பல விதமான ஆய்வுகளைச் செய்தேன். அந்த முயற்சிகள் எனக்கு உலகளாவிய பார்வைகளையும், சிந்தனைகளையும், வாய்ப்புக் களையும் தந்தன.  அதன் விளைவாக ‘ரோடிஸ் ஸ்காலர்’ என்ற வகையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் குடியுரிமைச் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.  தொடர்ந்து 2000-ல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கக.ங பட்டம் பெற்றேன். மேலும், சவம சட்டக் கல்லூரியில் ஆராய்ச்சியாளராகப் பணி யாற்றினேன்.  தொடர்ந்து, ஜப்பான், ஹாங்காங் நாடுகளில் மனித உரிமைகள் தொடர்பான ஆய்வுகளை நடத்தினேன்.  அங்கெல்லாம் உள்ள சட்டக்கல்வியின் தரத்தைப்பற்றியும், அதனுடைய மறு உருவாக்கத்தைப் பற்றியும் சிந்தித்தேன்.  மேலும் நீதியரசர் திரு. வி.ஆர் கிருஷ்ணய்யர்

திரு. பி. என். பகவத் போன்ற சட்ட வல்லுநர்கள் எனக்குத் தூண்டுதலாக இருந்து வருகின்றனர்.

ஜப்பான், ஹாங்காங் போன்ற நாடுகளில் சட்டக் கல்வி பயில்வதற்கான வாய்ப்புக்கள் எப்படி உள்ளன?

தாராளமாக உள்ளன. தாராளமான அளவில்  திறமைகளின்  அடிப்படையில்  கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.  கல்வியாளர்கள் மிகமிக உயர்தரமான கல்வியைக் கற்பிக்கிறார்கள். அமெரிக்காவுக்கு வெளியில் நிறுவப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் பெரும்பாலானவை தனியார் துறையைச் சார்ந்தவை. அவை இலாபம் கருதாத விதத்திலும், தார்மீகக் கண்ணோட்டத்திலும் சட்டக் கல்வியை வழங்குகிறன.

மேல்நாட்டு அனுபவங்கள் உங்களை எந்த வகையிலாவது பாதித்ததா?

உண்மையிலேயே எனக்குள் பல விதமான சிந்தனைகளைத் தோற்றுவித்தன.  இந்தியாவில் புதுமையான ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டு மென்று முடிவு செய்தேன்.  குறிப்பாக ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்குரிய விதத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தை அமைக்க முடிவு செய்தேன்.  இந்தியச் சட்டங்களின் அடிப்படைகள் நாட்டிற்கு அப்பால் உள்ளவற்றைத் தழுவக் கூடியவையாக இருக்க வேண்டுமென்று விரும்பினேன். பாடத்திட்டமும், கற்பிக்கும் வழிவகைகளும் மாறுபட்டவையாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அகில உலக அளவில் ஒப்பீடு முறைகளில் சட்டக்கல்வி உலக அளவில் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்று விரும்பினேன்.  புதிய பொருளாதாரச் சூழல் தன்மைகளை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்று திட்டமிட்டேன்.  பல கோடி டாலர் மதிப்புள்ள கல்வியை இந்தியாவுக்குக் கொண்டுவர முனைந்தேன்.  ஹார்வர்டு அல்லது யேல் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக அவை இருக்க வேண்டுமென்று விரும்பினேன்.

அதைத் தொடர்ந்து ஏதேனும் முயற்சிகளைச் செய்தீர்களா?

நிறையவே முயற்சிகளைச் செய்தேன்.  அகில உலக அளவில் ஆலோசனைக் குழுவை அமைத்தேன். சென்ற 2006-ல் மத்திய சட்டத்துறை அமைச்சர் எச்.ஆர் பரத்வாஜ் அவர்களை சந்தித்துப் பேசினேன். என்னுடைய கருத்தை ஏற்றுக்கொண்ட அவர், தான் அதற்கு எந்த விதத்தில் உதவ முடியும் என்று என்னிடம் கேட்டார். அதற்கு 60 முதல் 70 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யக் கூடிய ஒருவர் தேவை என்றும், இலாப நோக்கமில்லாமல் கல்வி கற்பிப்பதற்கு உதவக்கூடியவராக அவர் இருக்க வேண்டும் என்றும் நான் அவரிடம் சொன்னேன்.  பின்னால் தொடர்பு கொள்வதாகச் சொல்லி அவர் என்னை அனுப்பி வைத்தார்.

அதற்குப் பிறகு அவரின் தொடர்பு குறித்தும் உங்களின் நடவடிக்கைகள் குறித்தும் சொல்லுங்களேன்?

நவீன் ஜிண்டால் அவர்களுடன் என்னை இணைத்து வைத்தார். ஜிண்டால் மிகப்பெரிய செல்வந்தர். உருக்கு மற்றும் தொழில் வணிகத்துறைகளின் வாயிலாக ஏராளமான அளவில் அவர் பொருள் சேர்த்திருந்தார்.  ஏறத்தாழ ஒரு வருட காலம் வரை அவரை ஊக்குவித்தேன். தகுந்த ஒரு சூழலில் ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தை நிறுவ அவர் ஒப்புதல் அளித்தார்.

சுமார் ஒன்றரை வருட காலம் பல வகை யான முயற்சிகளில் ஈடுபட்டேன். டெல்லியில் வல்க்குப் பகுதியில் பல்கலைக்கழகத்திற்குத் தேவைப்பட்ட நிலத்தை வாங்குவதற்காக ஒரு குழுவை அமைத்தேன். கட்டிட வடிவமைப்பு, கட்டுமானப்பணிகளைச் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தேன். கல்லூரிக்குரிய உரிமங்களை அரசிடமிருந்து பெறவும், பாடத் திட்டத்தை வடிவமைக்கவும் முயற்சிகளைச் செய்தேன். தொடர்ந்து, தகுதியுள்ள பேராசிரியர் களைக் கண்டுபிடித்துப் பணியில் அமர்த்தினேன்.  மாணவர்களை ஈர்க்கும் விதத்தில் விளம்பரங் களைச் செய்தேன். அதற்கெல்லாம் சுமார் ஆறுமுதல் எட்டு வருடங்கள் தேவைப்பட்டன.

கல்லூரியை எப்போது தொடங்கினீர்கள்?

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கல்லூரியைத் தொடங்கினோம். மொத்தமாக

223 மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள். உலகளாவிய கல்வியாளர்கள் பணியில் அமர்த்தப் பட்டிருந்தார்கள்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் குறிப்பிடத் தகுந்த நிகழ்வு ஏதேனும் உண்டா?

ஏகந புரோக்ராம் நிறுவனத்தில் சட்டத் தொழில்துறைதலைவர் பேராசிரியர் டேவிட் வில்க்கின்ஸ் அந்த விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.  அப்போது அவர் ஒன்றைக் குறிப்பிட்டார். “குமார் தொலைநோக்குப் பார்வை உடைய ஒரு தலைவர்.  ஒரு கல்வி நிறுவனத்தை அமைப்பது என்பது சுலபமான செயல் அல்ல.  ஒரு புதிய கல்வி நிறுவனத்தை அமைப்பது ஒரு போதும் எளிதாக இருக்க முடியாது.” அதைக் கேட்டு என் மனம் பரவசம் அடைந்தது.  அதைத் தொடர்ந்து அவர் மேலும் சொன்னார், “இந்தக் கல்லூரி இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கியமான பணியை நிறைவேற்றப் போகிறது. சட்டம் உலகமயமாகிக் கொண்டிருக்கும் சூழல் இது மிகச்சரியான விதத்தில் எதிர்வினை ஆற்றும்.”

இந்த அனுபவங்களிலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டதாக எண்ணுவது?

மிகப்பெரிய இலக்குகளை அடிப்படை யாக வைத்துச் சிந்திக்க வேண்டும். அதை அடைவதற்கு விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும். நாம் வாழும் இந்த உலகம் அறவழியில் முன்னேறி அமைதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்தி யாவைப் பற்றிச் சிந்தித்தேன். நமது இந்தியச் சமுதாயம் துடிப்புகள் மிகுந்ததாகவும், அமைதி இல்லாததாகவும் இருக்கிறது. மக்களின் நல்வாழ்வுக்கு உகந்த விதத்தில் சட்டங்கள் போது மானவையாக இல்லை. சராசரி மனிதனும், அரசும் சட்டத்திற்குரிய மதிப்பைக் கொடுப்ப தில்லை. ஆகவே, சட்டம் குறித்த விழிப்புணர்வு நமக்குத் தேவையாக இருக்கிறது.  அதனால், சட்டக்கல்வி பயிலும் மாணவர்கள் சமுதாயத்தில் நீதிநெறிகளை நிறுவிக் காப்பாற்றக் கூடிய தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு நாட்டை முன்னெடுத்துச் செல்லத் தேவையான சட்டக் கல்வியைப் பயில வேண்டும்.  இதற்கான முயற்சியில் ஈடுபடுவது எனக்கு மனநிறைவை அளிக்கிறது.

தங்களுடைய எதிர்காலத்திட்டம் என்ன?

எங்களது பல்கலைக் கழகத்தில் நிர்வாக இயல்  எம்.பி.ஏ  கல்வியைக்  கற்றுக்  கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.  எதிர்காலத்தில் வணிகம் மற்றும் தொழில்களில் புதிய சவால்களைச் சந்திக்க வேண்டி உள்ளது. உலகளாவிய கல்வியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.  அதைப் போலவே, மேலாளர்களுக்கும், வல்லுனர் களுக்கும் புதிய கல்வியை வழங்க வேண்டும்.  உலகளாவிய வணிகக் கல்வித்திட்டத்தின் அடிப்படையில் பாடத்திட்டத்தை வகுக்க வேண்டும். கார்ப்பரேட் உலகைப் பாதிக்கும் பிரச்சனைகளைக் குறித்த ஆய்வுகளையும், கருத்தரங்குகளையும், பயிற்சிகளையும் நடத்த வேண்டும். வருகின்ற ஆகஸ்டு முதல் அவற்றிற் குரிய விதத்தில் எம்.பி.ஏ பட்டக்கல்வியை தொடங்க உள்ளோம். அது இந்தியா மட்டு மல்லாமல் உலக அளவில் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். ‘ஜிண்டால் குளோபல் பிசினஸ் ஸ்கூல்’ வாயிலாகத் தொழில் வணிகத் துறைகளுக்குத் தேவையான கல்வியை வழங்குவதே எமது அடுத்த திட்டம்.

உங்கள் குடும்பம் குறித்து…?

மனைவி பிரதீபா ஜெயின், அபிமன்யு என்ற மகனும், அவெந்திகா என்ற மகளும் உள்ளனர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு