– அருள்நிதி Jc S. M. பன்னீர் செல்வம்
பிரிட்டிஷ் லைப்ரரி
உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற நூலகம் பிரிட்டிஷ் நூலகம். இது லண்டனில் கிங்ஸ்கிராஸ் என்றபகுதியில் உள்ளது. இப்போதுள்ள கட்டிடத்தை 1998ல் இங்கிலாந்து ராணி திறந்து வைத்தார். உறுப்பினராகி ரீடர்பாஸ் (Reader Pass) வாங்கியவர்கள் மட்டுமே புத்தகங்கள் உள்ள அறைகளுக்குள் செல்ல முடியும்.
பார்வையாளர்களுக்கென சில இடங்களை ஒதுக்கி யுள்ளனர். உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரது பேச்சுக்களைப் பதிவு செய்து வைத்துள்ளனர். கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, ஹெட்போன் மூலம் அவர்களது பேச்சுக்களைக் கேட்கலாம். தாமஸ் ஆல்வா எடிசன் (1908), ஐன்ஸ்டீன் (1930), பிளாரன்ஸ், நைட்டிங்கேல் (1890), ஆன்ட்ரூ கார்னீஜ் (1914), சிக்மண்ட் பிராய்டு (1938), மாவோதுங் (1949), ஹிட்லர் (1938), வின்ஸ்டன் சர்ச்சில் 1940 ஆகியோரது பேச்சைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
12-ம் நூற்றாண்டு முதல் சேகரித்த புத்தகங்களை பார்வைக்கு வைத்துள்ளனர். சேக்ஸ் பியர், லியனார் டோ டாவின்சி ஆகியோரது கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. டிஜிட்டல் புத்தங்களும் உள்ளன. டச் ஸ்கிரீனை விரலால் தொட்டு, விரலை உயர்த்தினால் பக்கம் மாறுகிறது. ஜும் செய்து பார்க்கலாம். ஹெட்போன் மூலம் அந்தப் பக்கத்திலுள்ளவைகளைப் பேச்சாகவும் கேட்கலாம்.
பஸ்நிறுத்தம் சேட்டிலைட் வியூ
இங்கிலாந்தில் பல நகர்களில் பெரும் பாலான பஸ் நிறுத்தங்களில் செயற்கைக்கோள் வழி காட்சிக்கான ஸ்கிரீன் அமைத்துள்ளனர். வருடம் முழுதும் இது இயங்கிக் கொண்டுள்ளது. அந்தப் பாதையில் வரும் பொதுமக்களுக்கான பஸ்களின் எண்கள், செல்லுமிடம், புறப்பட்ட இடம், வரும் நேரம் முதலியவை தெளிவாகத் தெரியும். இத்துடன் பஸ்நிறுத்தம், அதிலிருந்து எவ்வளவு தொலைவில் பஸ்கள் வந்து கொண்டுள்ளன என்ற (மேப்) வரைபடமும் காட்சியாகத் தெரிகிறது. எவரிடமும் விசாரிக்க வேண்டியதில்லை. அதைப் பார்த்தவுடனே தேவையான தகவல்கள் கிடைத்துவிடும். உடனே ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிடலாம். இது போன்ற வசதிகளால் தான் வெளிநாடு களில் ஒருவருடன் ஒருவர் அறிமுகம், பழக்கம், பேச்சு என்பவை நம் நாட்டைப் போல இல்லை. செயற்கைக்கோள் காட்சி வசதி இல்லாத பஸ் நிறுத்தங்களும் உண்டு. அங்கு விரிவான தகவல் களுடன் போர்டுகள் வைத்துள்னர். ஒரு சில இடங்களில் இந்த போர்டுகளும் இல்லை.