Home » Articles » ஒரு பிடி பேச்சு

 
ஒரு பிடி பேச்சு


பதி ஆர்.வி
Author:

– ஆர். வி. பதி

அதிசயங்களும் இனிமைகளும் நிறைந்த இந்த அற்புதமான பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அன்றாடம் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறோம். நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைவது எது என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அன்றாட வாழ்க்கையில் நாம் பேசும் அவசியமில்லாத பேச்சுக்களே நம்முடைய பல பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

சிலர் எப்போதும் எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சிலர் தேவை யில்லாமல் பிறரிடம் பேச மாட்டார்கள். சிலர் தேவைப்படும் சமயங்களில் கூட பேச மாட்டார்கள். பலர் அடுத்தவருடைய சொந்த விஷயங்களை கற்பனை கலந்து பிறரிடம் பேசுவார்கள். சிலர் மற்றவர்களை குறைவாக எடை போட்டு அவர்களை உதாசீனப்படுத்தி பேசுபவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஏழைகளை மனிதர்களாகக் கூட மதிக்காமல் கேவலமாக பேசுவார்கள். சிலர் தான் மட்டுமே இந்த உலகில் புத்திசா என்று தனக்குத்தானே கற்பனை செய்து கொண்டு பிறரைத் தாழ்த்தி தன்னை உயர்த்தி பேசிக் கொண்டே இருப்பார்கள். சொல்லப்போனால் இவை எல்லாம் தவறான பேச்சுக்களே.

நாம் எப்படி பேசினால் அனைவரும் நம்மை மதித்துப் போற்றும்படி வாழலாம் என்பதை முதல் தெரிந்து கொள்ள வேண்டும். இனிமையான பேச்சு. அன்பான பேச்சு. அவசியமான பேச்சு. அடக்கமான பேச்சு. பிறரை குறைகூறாத பேச்சு. பிறருக்கு நன்மை மட்டுமே தரும் பேச்சு. இத்தகைய பேச்சுக்கள் நமக்கு எப்போதும் நன்மையை மட்டுமே பரிசாகத் தரும். தவளை தன் வாயால் கெடும் என்பது முதுமொழி. தவளை தேவையின்றி தானே கத்திக் கத்தி தனது இருப்பிடத்தை எதிரிக்கு காட்டிக் கொடுத்து மாட்டிக் கொண்டு உயிரை இழக்கும்.

ஒன்றுமில்லாத விஷயத்தை பேசிப் பேசி பெரிதாக்கி பின்னர் அதனால் அவதிக் குள்ளாகும் பலரை நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பேருந்தில் பயணம் செய்யும் போது கூட்ட நெரிசல் சகபயணி காலை மிதிப்பது இயல்பு. உடனே மிதித்தவர் அனிச்சையாக மன்னிப் பும் கேட்டு விடுவார். இது பேருந்துப் பயணங்களில் சகஜமாக நடக்கும் ஒரு விஷயம். இதோடு விட்டுவிட்டால் பிரச்சனை முடிந்தது. ஆனால் மிதிபட்டவர் விடமாட்டார். உனக்கு கண்ணு தெரியாதா? என்று கோபமாக ஒரு கேள்வியைக் கேட்பார். சாரி கேட்டும் இப்படிப் பேசுகிறாரே என்று மிதித்தவர் இதற்கு கோபமாக பதில் சொல்லுவார். இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறிப் பேச கடைசியில் கைகலப்பு நடக்கும். இதனால் இருவருக்குமே மிஞ்சுவது அவமானம் மட்டுமே.

அளவிற்கு அதிகமாக பேசுவதைக் குறைப்பதும், குறைவாகப் பேசுவதும் மிகவும் சுலபமான ஒரு விஷயம் என்றும் அதை நினைத்த மாத்திரத்தில் செய்து விடலாம் என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் சொல்லப்போனால் அது ஒரு மிக அபூர்வமான கலை என்றே சொல்லலாம். பேசாமல் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை ஒரு கதை மூலம் புரிந்து கொள்ளலாம்.

அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவர் யோகக் கலையில் கைதேர்ந்தவர். அவரைப் பற்றி அந்த ஊரில் வாழ்ந்து வந்த நான்கு இளைஞர்கள் கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் நால் வரும் அந்த துறவியைச் சந்தித்து வணங்கினார்கள்.

அவர்களைப் பார்த்த துறவி சுருக்கமாக “எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார்.

“துறவி அவர்களே. தாங்கள் தியானத்தில் நிபுணர் என்று கேள்விப்பட்டோம். தங்களிடம் தியானக் கலையினை கற்க வந்துள்ளோம்”.

அந்த நான்கு இளைஞர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்கு தியானம் கைவராது என்பதை துறவி உணர்ந்து கொண்டார்.

“இளைஞர்களே. தியானத்தைக் கற்கும் முன்னால் நீங்கள் மௌனமாக இருப்பது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஒரு சோதனை வைக்கிறேன். அதில் நீங்கள் வெற்றி பெற்றால் தியானக்கலையினை உங்களுக்கு கற்பிக்கிறேன்”.

துறவி சொன்னதை அவர்கள் ஏற்றார்கள்.

“நீங்கள் இந்த இடத்தில் தொடர்ந்து ஒரு மணி நேரம் மௌனமாக அமர்ந்திருக்க வேண்டும். அப்படிச் செய்து விட்டால் நீங்கள் வெற்றி பெற்றதாகக் கருதி நான் உங்களுக்கு தியானமுறைகளை கற்றுத் தருகிறேன்”.

அந்த இளைஞர்களும் ப்பூ இவ்வளவு தானா? போட்டி என்றதும் நாங்கள் என்னமோ ஏதோ என்று நினைத்துவிட்டோம் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். மௌனம் என்பது அவ்வளவு அரிய கலை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

அது ஒரு மாலை நேரம். போட்டி தொடங்கியது. சிறிது நேரத்தில் இருட்டத் தொடங்கியது. சற்று நேரம் சென்றதும் நான்கு இளைஞர்களில் ஒருவன் இப்படிச் சொன்னான்.

“இருட்டிவிட்டது. யாரும் விளக்கேற்ற வில்லை”

உடனே மற்றொரு இளைஞன் சொன்னான்.

“நாம் இப்போது மௌனவிரதம் இருக்கிறோம். எனவே பேசாதே”

இரண்டு இளைஞர்கள் பேசியதைக் கேட்ட மூன்றாவது இளைஞன் சொன்னான்.
“நீங்கள் இரண்டு பேரும் பேசி போட்டியில் தோற்றுப் போய் விட்டீர்கள்”

இப்போது நான்காமவன் சொன்னான்.

“தோற்றது இரண்டு பேர் அல்ல. மூன்று பேரும்தான். நான் மட்டுமே பேசாமல் இருந்தேன்”

ஒரு மணி நேரம் கழிந்ததும் துறவி தன் மௌனத்தைக் கலைத்தார்.

“உங்களால் ஒரு மணி நேரம் கூட மௌனமாக இருக்க முடியவில்லை. உங்களால் தியானம் பயில முடியாது. நீங்கள் புறப்பட்டுச் செல்லலாம்”.

அந்த நான்கு இளைஞர்களும் வெட்கத் துடன் புறப்பட்டுச் சென்றார்கள்.

பேசாமல் இருப்பது என்பது எவ்வளவு கடினம் என்று இப்போது உங்களுக்குப் புரிகிறதா? நாம் சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு யோசித்து யோசித்து செலவழிக்கிறோமோ அது போலவே பேச்சையும் யோசித்து யோசித்துப் பேசப் பழகவேண்டும். பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ரூபாயை செலவழிப்பதற்குச் சமம் என்று நாம் கருதப் பழக வேண்டும். சம்பாதிக்கும் பணத்தை நம் விருப்பம் போல செலவழித்துக் கொண்டிருந்தால் பிற்காலத்தில் நாம் அனைத்தையும் இழந்து துன்பத்தைச் சந்திக்க நேரிடும். அதுபோலவே எப்போதும் எந்த சூழ்நிலையிலும் யோசிக்காமல் வார்த்தைகளைக் கொட்டுபவர்களும் ஏராளமான சிக்கல்களை சந்திக்க நேருகிறது.

அதிகமாக பேசினாலும் ஆபத்து. பேசா மல் இருந்தாலும் ஆபத்து. பேசாமல் இருந்து விட்டால் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கிட்டும். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அச்சமயங்களில் நீங்கள் மௌனச் சாமியாராக மாறப் பழக வேண்டும். பேசித்தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் இருக்கின்றன. அச்சமயங்களில் நான் ஒரு மௌனச் சாமியார் என்று நீங்கள் பேசாமல் இருந்தால் பிரச்சனை இன்னும் பெரிதாகிவிடக் கூடும்.

தினந்தோறும் காலை முதல் மாலை வரை உங்களுக்கு சௌகரியப்படும் நேரத்தில் ஒரு மணி நேரத்தை ஒதுக்குங்கள். அந்த ஒரு மணிநேரம் முழுக்க கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து எக்காரணத்தைக் கொண்டும் பேசாமல் இருந்து பழகுங்கள். இப்படியே ஒரு மாதம் பயிற்சி செய்யுங்கள். பின்னர் விடுமுறைநாட்களில் இரண்டு மணிநேரம் ஏதும் பேசாமல் இருந்து பாருங்கள். இப்படியே நீங்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் தேவையின்றி பேசும் வழக்கம் உங்களை விட்டு மெல்ல மெல்ல அகலும். மாதத்தில் ஏதாவது ஒரு நாளைத் தேர்வு செய்து அன்று முழுவதும் யாராவது உங்களிடம் பேச முற்பட்டால் அதற்கு பதில் மட்டுமே பேசும் வழக்கத்தைக் கடைபிடியுங்கள்.

எந்த மனத்தாங்கலாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவரை நேரடியாக அணுகி அவரிடம் பேசுங்கள். ஆனால் மூன்றாம் நபரிடம் மற்றவரைப் பற்றிய குறைகளைக் கூறாதீர்கள். ஏனெனில் மூன்றாவது நபர் சம்பந்தப்பட்டவரிடம் சென்று நீங்கள் கூறிய குறைகளை கண் மூக்கு காது வைத்து அழகுபடுத்திச் சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலமும் பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும்.

தேவையில்லாத பேச்சுக்களால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அளவிற்கு அதிகமாக பேசுவதால் நமது சக்தி நம்மையறியாமல் வீணாகிறது. நமது கவனம் சிதறிப்போய் விடுகிறது. இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் இக்கணமே ஒரு சபதம் செய்தாக வேண்டும்.

‘நான் இக்கணத்திருந்து நல்ல விஷயங் களை மட்டுமே பேசுவேன். பிறரைப் பற்றிய தேவையில்லாத விஷயங்களை நான் யாரிடத் திலும் பேச மாட்டேன். இதுபோன்ற விஷயங் களை யாராவது என்னிடத்தில் பேச முற் பட்டாலும் அதை நான் நாகரீகமாக தவிர்த்து விடுவேன். பிறருக்கு நன்மை தரக்கூடிய விஷயங் களை மட்டுமே பேசுவேன். கூடுமானவரை உண்மையை மட்டுமே பேசுவேன்”.

நீங்கள் இப்போது சபதம் செய்திருக் கிறீர்கள். சபதம் என்பது கிட்டத்தட்ட சத்தியம் போலத்தான். இந்த சபதத்திருந்து நீங்கள் ஒரு நாளும் மீறி நடக்கக்கூடாது.

ஒரு பிடி சோறு நோய்கள் நம்மை நாடி வராமல் பாதுகாக்கும். ஒரு பிடி பேச்சு வீண்.

 

5 Comments

 1. Ramanan says:

  அழகான கட்டுரை. பாராட்டுக்கள். ரமணன்

 2. Rajprabhu says:

  this article is nice.

 3. Premkumarm says:

  எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது

 4. Premkumar M says:

  எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

 5. Guru says:

  அருமை

Post a Comment


 

 


January 2010

அச்சீவர்ஸ் அவென்யூ
மாற்றம் மலரட்டும்!
ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
தடைகளைத் தகர்த்திடு!
வெற்றியின் வேர்கள்.
பன்றிக் காய்ச்சல் பற்றி…
இங்கிலாந்து சுற்றுலா
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!
விழித்தெழு மனமே…
ஒரு பிடி பேச்சு
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்
முயன்றேன், வென்றேன்
மகிழ்ச்சி
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
தேர்வு என்றால் திகிலா
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்