Home » Cover Story » சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!

 
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!


செந்தில் குமரன் S
Author:

– டாக்டர் S. செந்தில் குமரன்

நேர்முகம் : M. நம்பிராஜன், மக்கள் தொடர்பு அலுவலர்

பெரும் நிலக்கிழாருக்கு பேர் சொல்ல ஒரே மகனாகப் பிறந்ததே சிறப்பு என சிந்தை மகிழ்ந்து சும்மாயிருக்காமல், பள்ளிப் பருவத்திலேயே மருத்துவராக வேண்டும் என்ற பேரவாவில் குறிக்கோளுடன் படித்து மருத்துவராகி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனப்பூர்வ மருத்துவ சேவையாற்றி, ‘மேம்படுத்துதல்’ அவரை விரட்ட……… மேற்படிப்பையும் முடித்து…… மேலும் தன் வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு அரசு பணியை துறந்து இருபத்து நான்கு மணி நேர நர்சிங் ஹோமை சிறிய அளவில் தொடங்கி, படிப் படியாக அதை அரும்பாடு பட்டு மேம்படுத்தி, இன்று திருப்பூர் மாவட்டத்திலேயே தலைசிறந்த மருத்துவமனையாக தனது ஸ்ரீ குமரன் மருத்துவமனையை உருவாக்கி அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக வெற்றி வலம் வருபவரும், கடந்த 18 ஆண்டுகளில் 30 வருட முனைப்புடன் கூடிய உழைப்பைக் கொடுத்தும், எங்கும், எப்பொழுதும், எவருடனும் இன்முகத்துடனும் பழகியும், இவர் இருப்பவர், இவர் இல்லாதவர் என பாகுபாடின்றி இருபத்து நான்கு மணி நேர மருத்துவச் சேவையை நோயுற்றோருக்கு வழங்கியும், தன்னைத் தாக்கிய தன்மானமற்ற, தரங்குறைந்த, தாழ்வான சொல் அம்புகளை தன்னை உசுப்பேற்றி உந்தும் வார்த்தைகளாகப் பாவித்து அச்சொல் அம்புகளை வெற்றி மாலைகளாக மாற்றியும், தன்னம்பிக்கையோடும், தெய்வ பக்தியோடும் தன் வாழ்வை மேம்படுத்தி இன்று சிறந்த சாதிப்பாளராய் வலம் வந்து கொண்டுடிருப்பவர் தான் டாக்டர் ந. செந்தில் குமரன் அவர்கள்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகில் உள்ள பொம்மம்பாளையம் எனும் கிராமத்தில் பெரும் நிலக்கிழார் குடும்பதில் 24. 09. 1962 அன்று பிறந்தவர் இவர். தொடக்கக் கல்வியை பல்லடம் தாலுக்கா அனுப்பட்டி அருகில் உள்ள வேப்பங்கொட்டைப்பாளையம் எனும் தன் தாயாரின் கிராமத்தில் இருந்தபடியே அக்கிராமத் தின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திண்ணைப்பள்ளி போன்ற சூழலில் கற்றார்.

பின் அன்னூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் ந.ந.க.இ வரை அன்னூரில் இருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ள தன் பொம்மம்பாளையம் கிராமத்தில் இருந்து மிதி வண்டியில் சென்று பயின்றார். அந்நாளில் கல்வியின் மேல் மிகுந்த பற்றுடன், பயபக்தியுடன் கற்று பள்ளியில் முதல் மாணவராகத் திகழ்ந்துள்ளார். இவர் திறனறிந்து ஒன்பதாம் வகுப்பில் இருந்து சக மாணவர்களுக்கு சந்தேகம் தீர்ப்பதற்கு இவரை ஆசிரியர்கள் அனுமதிப்பது அன்றாடச் செயலானது.

பள்ளிக் கல்வி பயிலும் பருவத்திலேயே தான் ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் கனவு. கனவை நனவாக்க கோவை P.S.G. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மருத்துவ பிரிவை எடுத்து ட.ம.இ. பயின்றார். அதுவரை தமிழ் வழி கல்வியே கற்று வந்த இவருக்கு P.U.C.யில் அனைத்தும்

ஆங்கில வழி கல்வி என்ற நிலை மிரட்சியை ஏற்படுத்தியது. எனவே ஒரு கட்டத்தில் படிப்பை விட்டு விட்டு சொந்த கிராமத்திற்கே ஓடி விடலாமா? என எண்ணம் தோன்ற கடின உழைப்பின் மூலம் ஆங்கில அறிவை ஆர்வமுடன் அபிவிருத்தி செய்து அந்நிலையிலிருந்து மீண்டார்.

P.S.G.யில் படிக்கும் போதே கோவை அரசு மருத்துவக் கல்லூரியைப் பார்த்து தன் மருத்துவக் கல்லூரி வாழ்வைக் கனவு காண்பது இவர் வழக்கமாயிருந்துள்ளது. நாடி நரம்புகள் அனைத் திலும் ஓடிய மருத்துவச் சிந்தனை அதற்கான உழைப்பை நோக்கி உசுப்ப அதிகாலை மூன்று மணிக்கு எழ இவர் அலாரம் வைத்திருந் தால் சக மாணவர்கள் அதை ஒரு மணி என மாற்றுவதும் இதை அறியாத இவர் நள்ளிரவு ஒரு மணிக்கு எழுந்து படிப்பதும் பின் தான் ஏமாற்றப் பட்டதை அறிந்தாலும் மேலும் இரண்டு மணி நேரம் கூடுதலாக படிக்க கிடைத்தாக எண்ணி மகிழ்வதும் இவர் தன் கல்லூரி கால நீங்காத நினைவுகளாக குறிப்பிடுகிறார்.

இவ்வளவு சிரமம் மேற்கொண்டு படித்தும் P.U.C. மதிப்பெண்களைக் கொண்டு மருத்துவக் கல்லூரிக்கு இடம் கிடைக்கவில்லை என்ற தடங்கலைச் சந்தித்தார். தான் பெற்ற மதிப் பெண்ணுக்கு நிச்சயம் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதில் இவர் கொண்ட உறுதி காரணமாக இம்ப்ரூவ்மெண்ட் தேர்வை தவிர்த்தார். இவரைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்ததைக் கண்ட இவர் நேர்வழியைத் தவிர வேறு வழி தெரியாத நேர்மையின் காரணமாக மாற்றுப் படிப்பாக உயிர் வேதியியல் படிக்கத் தீர்மானித்தார்.

அவ்வாண்டும், அதற்கு முந்தையை ஆண்டும் நேர்மைக்குப் புறம்பான சட்ட விரோத செயல்கள் நடந்து வருவதைக் கண்ட அன்றைய மாநில அரசு குற்றத்தைத் தவிர்க்க 1981ஆம் ஆண்டு கொண்டு வந்த நேர்முகத் தேர்வின்படி

இவர் தன் லட்சியக் கனவான மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வாகி M.B.B.S. படித்து முடித்து வெற்றிகரமாக கனவை நனவாக்கினார்.

ஸ்ரீ குமரன் மருத்துவமனையை திருப்பூர் மாவட்டத்தில் தலைசிறந்த மருத்துவமனையாக உருவாக்கியதோடு, இந்திய மருத்துவக் கழகமும், ரோட்டரி சங்கமும் இணைந்து வழங்கிய மருத்துவத் துறையில் 2009 ஆம் ஆண்டிற்கான ‘இளம் சாதனையாளர்’ விருதைப் பெற்றும், அரிமா சங்கம் வழங்கிய 2009ஆம் ஆண்டிற்கான ‘சாதனைச் செம்மல்’ விருதைப் பெற்றும் சாதனை யாளராகத் திகழும் டாக்டர் ந. செந்தில் குமரன் அவர்களுடன் இனி நாம்…


தங்களை மருத்துவராகத் தூண்டியது எது?

நான் தாய்ப்பாலைக்கூட சுயமாக பருக முடியாத ஏழரை மாதத்தில் பிறந்த பலவீனமான குழந்தை. என் தாயார் தரும் தாய்ப்பாலை என் பாட்டி திருமதி. வேலாத்தாள் அவர்கள் சங்கில் ஊற்றி அதில் பஞ்சை நனைத்து எனக்கு புகட்டு வார்களாம்!

வீட்டில் ஏதேனும் சத்தம் என்றாலும் கூட அருகாமை வீட்டார் நான்தான் தவறி விட்டேனோ என ஓடி வருவது வழக்கம். குறை வான மருத்துவர்களே இருந்த அக்கால கட்டத்தில் என் பெற்றோரும், பாட்டியும் மிகவும் சிரமப்பட்டு என்னை உயிர் பிழைக்கச் செய்தார் கள். மேலும் நான் படித்த அன்னூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அக்காலகட்டத்தில் மருத்துவராக ஒரு மாணவர் உருவாவது அரிது. இக்காரணங்கள் என்னை பள்ளிப் பருவத்திலிருந்தே மருத்துவராகத் தூண்டின.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று மருத்துவரானதற்கும், ஸ்ரீ குமரன் மருத்துவ மனையைத் தாங்கள் தொடங்கியதற்கும் இடைப்பட்ட தங்கள் வாழ்க்கை?

M.B.B.S. முடித்ததும் என் 24ஆம் வயதில் நம்பியூர் அருகில் உள்ள சூரியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. S.K.செல்லப்ப கவுண்டர், பொன்னம்மாள் தம்பதியரின் மகளான கண்ணம்மாளுடன் திருமணம்.

அதன்பின் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் M.S. படிப்பு. பின் தாராபுரம் தாலூக்கா சங்கராண் டாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் மருத்து வராக ஓராண்டு பணிபுரிந்து விட்டு, 1991 ஆம் ஆண்டு திருப்பூர் அரசு மருத்துவ மனையில் மருத்துவராகப் பணியாற்றினேன்.

அரசு மருத்துவமனை என்பதால் என்னால் சுயமாக முடிவெடுத்து என் திறமையை வெளிக் கொணர முடியாத காரணத்தால் அரசுப் பணியை விட்டு விலகி சுயமாக மருத்துவ மனையைத் தொடங்கத் தீர்மானித்தேன். இதன் விளைவாக திருப்பூரில் உள்ள மேட்டுப் பாளையம் பகுதியில் பதினைந்து படுக்கை களுடன் வாடகை கட்டிடத்தில் ‘ஸ்ரீ குமரன் நர்சிங் ஹோம்’ என்ற பெயரில் 18. 11. 1991 அன்று ஆரம்பித்தேன்.

இந்தச் செயல்பாடுதான் மருத்துவமனையின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என நீங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது?

ஸ்ரீ குமரன் மருத்துவமனையைத் தொடங்கியதும் இதை வெற்றி பெறச் செய்தே ஆக வேண்டும் என்ற வேட்கையாலும், இளமை வேகத் தாலும் விஷம் குடித்தவர்கள், விபத்தில் சிக்கியவர் கள் உள்பட சிக்கல் நிறைந்ததாக கருதப்படும் எந்தச் சிகிச்சையையும் துணிந்து ஏற்று வெற்றி பெற்றேன். உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்கள் அனைத்தையும் மருத்துவமனையின் முன்னேற்றத்திற்கே அர்ப்பணித்தேன். சாதிக்க வேண்டுமானால் சில தியாகங்களுக்கும் தயாராக இருத்தல் வேண்டும் என்பது நியதி. பொழுது போக்குகளைத் தவிர்த்தேன். காலை ஆறு மணிக்கு மருத்துவமனைக்குப் புறப்படும் போதும், பணி முடிந்து இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பும் போதும் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருப்பார் கள். குழந்தைகளுக்காக நேரம் செலவிட்டதே குறைவு. நாளொன்றுக்கு பதினேழு மணி நேர உழைப்பைக் கொடுத்து மருத்துவமனையை வளர்த்தேன்.

நோயாளிகளுக்கு நான் கொடுத்த சிறந்த சிகிச்சையும், இரவு ஒரு மணி, இரண்டு மணி என எந்நேரத்திலும் நான் அளித்த சேவையும் ஸ்ரீ குமரன் நர்சிங் ஹோமிற்கு மக்களிடையே குறுகிய காலத்தில் நற்பெயரை பெற்றுக் கொடுத் தது. பன்னிரெண்டு ஆண்டுகள் வாடகை கட்டிடத்தில் ஸ்ரீ குமரன் நர்சிங் ஹோம் செயல்பட்டு மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொண்டது.

மருத்துவமனையை மேலும் மேலும் மேம்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் எழக் காரணம்?

ஸ்ரீ குமரன் நர்சிங் ஹோமின் நற்பெயர் திருப்பூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் பரவ பரவ உடல் நலம் பேண வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே மருத்துவமனை யில் இடப்பற்றாக்குறை உண்டானது. மேலும் திருப்பூர் மக்கள் சிறந்த மருத்துவத்திற்காக கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கே செல்ல வேண்டி இருந்தது. உதாரணமாக திருப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் நாங்கள் எவ்வளவுதான் சிறப்பான சிகிச்சையை அளித்தாலும், நோயாளிகளுக்குத் தேவைப்படும் இரத்தம் கோவையில் இருந்து வந்து சேர்வதற் குள் நோயாளிகள் மரணத்தை தழுவி வந்தனர். அந்த நாட்களில் என் மனம் மிகுந்த வேதனை யடைந்து தூக்கம் தொலைந்த இரவுகள் பல. இது போன்ற காரணங்களால் மேலும் மருத்துவ மனையை ‘மேம்படுத்தும்’ பொருட்டு தற்போது ஸ்ரீ குமரன் மருத்துவமனை செயல்பட்டு வரும் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்கினேன்.

14.09.2003 அன்று ஸ்ரீ குமரன் நர்சிங் ஹோமை ‘ஸ்ரீ குமரன் மருத்துவமனை’ என்ற பெயரில் இவ்விடத்திற்கு இடம் பெயர்த்தினேன். துவக்க விழாவிற்கு வந்திருந்த சிலர், உருப்படியாக கடனைக் கட்டி மீண்டு வந்தால் அது ஆச்சரியம் என என்னிடம் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர். என் மேல் நான் கொண்ட தன்னம்பிக்கையாலும், பொது மக்களிடம் நான் பெற்றிருந்த நல்லெண் ணத்தாலும் வேதனையைச் சாதனையாக்கி இக் கட்டத்தையெல்லாம் வெற்றிகரமாகத் தாண்டி வந்துள்ளேன்.

இன்று கண்டுள்ள இவ்வளர்ச்சிக்குக் காரணமான மருத்துவர்களுக்கும், ஊழியர் களுக்கும், பொதுமக்களுக்கும், நிறுவனங் களுக்கும், என்றும் எனக்கு உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்திவரும் என் குடும்பத் தாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீ குமரன் மருத்துவமனை திருப்பூரி லுள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்களுடன் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. ஒப்பந்த நிறுவனங் களின் எண்ணிக்கையிலும், அதற்கான குறைந்த சிகிச்சை கட்டணத்திலும் ஸ்ரீ குமரன் மருத்துவ மனை திருப்பூர் மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவத்திற்கான கலைஞர் காப் பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு இம்மருத்துவ மனைக்கு அளித்து அங்கீகரித்திருக்கிறது.

1991ஆம் ஆண்டு மருத்துவமனையைத் தொடங்கி நடத்தியபோது ஒவ்வொரு நோயாளிக்கும் எவ்விதம் சிறப்பாக மருத்துவம் புரிந்தேனோ அந்த நிலையில் இருந்து எள்ளளவும் குறைவின்றி இன்றும் அச் சேவையைத் தொடர்ந்து வருகிறேன்; இனி மேலும் தொடர்வேன்.

எதிர் வரும் காலத்தில் நீங்கள் செய்ய விரும்புவது?

இம்மருத்துவமனையில் டயாபடீஸ் சிகிச்சை, மூட்டு மாற்று சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு மருத்துவ சிகிச்சைகளும் உள்ளது. இருப்பினும் இருதய அறுவை சிகிச்சையும், புற்று நோய்க்கான கதிர் வீச்சு சிகிச்சையும் இல்லை. இவற்றை ஏற்படுத்து வதை என் முழுக் கடமையாக எண்ணுகிறேன்.

தங்கள் குடும்பத்தைப் பற்றி?

தந்தையார் காலம் சென்ற திரு. S. சண்முக வேலாயுத கவுண்டர், தாயார் திருமதி. S. பாலா மணி, உடன் பிறந்தவர் தமக்கை திருமதி. சுந்தராம்பாள், துணைவியார் திருமதி. கண்ணம் மாள் இம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குன ராக செயல்படுகிறார். மகள் செல்வி S. வினு ஆதித்ய வைஷ்ணவி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி. மகன் S. விக்ரம் ஹரி சித்தார்த் பதினொன்றாம் வகுப்பு மாணவன்.

ஒரு மருத்துவரின் துணைவியாரும் மருத்துவராக இருந்தாலே அம்மருத்துவர் வெற்றிகரமான மருத்துவராக விளங்க முடியும் என்ற சொல் வழக்கம் குறித்து தங்கள் கருத்து?

நிச்சயமாக அப்படியில்லை. என் துணைவியார் திருமதி. கண்ணம்மாள் எம். ஏ. பட்டதாரியே. அவர் குழந்தை களையும், குடும்பத்தையும், மருத்துவமனையையும் நன்கு கவனித்து என் வேலைப் பளுவைக் குறைத்து நான் இத்துடன் வேறு எப்பள்ளியிலும் இல்லாத அளவில் 8000 சதுர அடியில் ஆய்வுக் கூடங்கள் மருத்துவக் கல்லூரியில் இருப்பது போன்று Gallery Type Class Rooms (படிப்படியாக அமைக்கப்பட்ட தளம் போன்று) இங்கு வடி வமைக்கப்பட்டு செயல்படுகிறது. இப்பள்ளியில் மெட்ரிக் பாடம் சர்வதேச தரத்துடன் போதிக்கப் படுகிறது. மாணவ, மாணவியர் எத்துறையில் வரவேண்டும் என கனவு காண்கிறார்களோ அவ்வாறே அத்துறையில் அவர்களை உருவாக்கி வருகிறோம்.

கோவையைப் போன்ற நகரங்களில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிட்டல் திருப்பூர் போன்ற நகரங்களில் உருவாக்குவதென்பது எளிதா?

இல்லை. என்னைப் பொறுத்த வரையில் எனக்கிருந்த தைரியமும், தன்னம்பிக்கையும் தான் குமரன் மருத்துவமனையை சிறந்த மருத்துவ மனையாக உருவாக்கியிருக்கிறது. தலைசிறந்த மருத்துவக் குழுவினரை இரண்டாம் நிலை நகரங்களில் உருவாக்கி தக்க வைத்துக் கொள்வதில் நிறைய சிரமங்கள் இருக்கிறது. சாதிக்கும் மனப்பான்மை, நாமிருக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு நல்ல மருத்துவம் வழங்க வேண்டும் என்கிற எண்ணம் குறிக்கோளானால் உருவாக்க முடியும்.

நாளுக்கு நாள் மருத்துவத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வருகிறது. அதன் பயன்பாடுகள் எல்லா இடங்களையும் சென்றடைகிறதா?

தொழில்நுட்ப உபகரணங்களை அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப பயன்படுத்தத்தான் செய்கிறார்கள் என்றாலும், அதற்கான வேலையை சிறிய நகரங்களில் தொடர்ந்து தர முடிவதில்லை. தேவைகள் அதிகம் இருக்கும் போது தான் தேவையான உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிற ஆர்வம் அதிகரிக்கும். தற்போது அது கிராமம், நகரம் என்று பார்ப்பதற்கில்லை.

எதிர்வரும் காலங்களில் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் எந்தளவு வளர்ச்சி பெறும் என்று நினைக்கிறீர்கள்?

90% மக்கள் மருத்துவ காப்பீட்டு வசதி பெற்றிருப்பார்கள். அப்போது மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் அறிவிக்கின்ற மருத்துவ மனைகளில் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலை வரக்கூடும்.

கிராம மக்களிடையே மருத்துவ விழிப்புணர்ச்சி என்பது எப்படி இருக்கிறது?

கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தி ருப்பதால் எல்லோரும் நல்ல விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஊடகங்கள் மூலமாக அறிந்து கொண்ட செய்தியை ஏன்? எதற்கு? என்று கேட்டு நன்கு தெரிந்து கொள்கிறார்கள். மேலும் நாங்களும் முகாம்கள் நடத்தி அதன்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

நோயின் தாக்குதல்களிருந்து விடுபட நீங்கள் தரும் ஆலோசனை?

இயந்தரமான வாழ்க்கை முறைக்குள் ஒவ்வொருவரும் அல்லல்பட்டுக் கொண்டு வருவதால் எதிர்வரும் காலங்களில் மன அழுத்தத்தின் மிகுதியால் உருவாகும் நோய்களில் இருந்து விடுபட “யோகா” பெருமளவு உதவும். இதனால் எல்லோரும் யோகா கற்றுக் கொள்வது நல்லது. மருத்துவமனைகளின் சிகிச்சை முறைகளுள் யோகா வகுப்புகள் ஒரு பிரிவாக விரைவில் இடம் பெறக்கூடும்.

மூல நோய்க்கு சிகிச்சை தந்து இந்தப் பகுதியில் சிறப்பு பெற்றிருக்கிறீர்கள். மூல நோய் ஏற்பட என்ன காரணம்? அதனை எப்படி தவிர்க்கலாம்?

மலச்சிக்கலை உண்டாக்கக்கூடிய உணவு பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்வது, இரத்த நாளங்களில் ஏற்படும் மாறுதலும் மூலநோய் ஏற்படக் காரணம். இயற்கை உணவு வகைகளை விரும்பி ஏற்றுக் கொள்வ தினாலும், தண்ணீர் நிறைய குடிப்பதாலும் இந்நோயி லிருந்து விடுபட முடியும்.

இந்நோய்க்கு ஆளானவர்கள் ஆரம்பத் திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள தவறிவிடு கிறார்கள். முற்றிய நிலையிலேயே பெரும்பாலும் சிகிச்சைக்காக வருகிறார்கள். லேசர் சிகிச்சை முறை மூலம் குணப்படுத்துவதில் திருப்பூர் தனி மாவட்டம் ஆவதற்கு முன்பு கோவை மாவட்டத் தில் இரண்டாவது இடம் பெற்றிருந்தோம். தற்பொழுது இந்நோய்க்கான சிகிச்சை முறை களில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களிலேயே அன்றாட வேûலைகளை கவனிக்கிற அளவு மருத்துவம் வளர்ந்துள்ளது.

“சிறந்த வெற்றியாளராக” ஒருவருக்கு அவசியம் இருக்க வேண்டியது …

› தன்னம்பிக்கையுடன் கூடிய கடின உழைப்பு.

› விடாமுயற்சி

› எத்தொழில் செய்தாலும் அதில் முழுமையான ஈடுபாடு.

› அவமரியாதையை தன்னை முன்னேற்ற உதவும் உந்து சக்தியாக ஏற்றுக்கொள்ளும் பண்பு.

இன்றைய இளம் மருத்துவர்களுக்கு நீங்கள் தரும் ஆலோசனை …

› இன்றைய இளம் தலைமுறையினர் நன்கு திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் இன்னும் பெருமளவு அவர்களால் சாதிக்க முடியும்.

› படிப்படியாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். நிறைய அனுபவங்களைப் பெற்று சாதிக்க முடியும் என்கிற எண்ணம் மேலோங்க வேண்டும்.

› அவசரகால சிகிச்சை என்று அழைக்கும் போது இரவு, பகல் பார்க்காமல் பணத்திற் காக சிகிச்சை என்று இல்லாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையைத் தருதல் வேண்டும்.

› சிகிச்சை முறைகளில் தவறுகள் ஏற்பட்டு விடாத வண்ணம் அதிகக் கவனம் அவசியம் இருக்க வேண்டும்.

› 15 வருட சாதிப்பை 15 மாதங்களில் நிகழ்த்தி விட வேண்டும் என்கிற வேகம் வேகமாக ஒருவரை மருத்துவதுறையிலிருந்தே வெளியேற்றிவிடும் என்பது எப்போதும் மனதில் இருக்க வேண்டும்.

› பாதிக்கப்பட்டவர்களிடம் பொறுமையாக பேசி சிகிச்சை முறைகளை புரிய வைக்க வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும்.

பள்ளிக்காலத்தில் உங்களை கவர்ந்த ஆசிரியர்கள்….

தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு. முத்துச் சாமி அவர்கள் பேருந்து வசதி இல்லாத காலத்தில் எங்கள் ஊர் விநாயகர் ஆலயத்தில் செயல்பட்டு வந்த பள்ளியில் நேரம் காலம் பார்க்காமல் பாடம் சொல்லித் தந்த அவரின் அர்ப்பணிப்பும், உயர்ப் பள்ளி ஆசிரியர் திரு. வேலுச்சாமி அவர்களின் அணுகு முறையும் பள்ளிக் காலத்தில் என்னைக் கவர்ந்தது.

இடைவிடாத மருத்துவப் பணிக்கு மத்தியில் தங்களின் சமுதாயப் பணிகள் குறித்து…?

வருடம் சுமார் 20 இலவச மருத்துவ முகாம்கள் வீதம் 500 முகாம்கள் நடத்தி ஏழை எளியோருக்கு உதவியுள்ளோம். இந்தியாவின் தலைசிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் K.M. செரியன் அவர்கள் தலைமையில் எண்ணற்ற இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளோம். ஆன்மீகத்தின் மேல் கொண்ட பற்றால் பல கோவில்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளோம். ஸ்ரீ குமரன் மருத்துவ மனையில் இரண்டு படுக்கைகள் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வழங்கியுள்ளோம்.

தாய்மார்களுக்கு அவர்கள் கருவுற்ற நாள் முதல் பிரசவம் ஆகும் வரைக்கான சிகிச்சை கட்டணத்தை வெறும் ரூ.3500க்கு வழங்கு கிறோம். மேலும் 2010 ஆம் ஆண்டு வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழை எளியோருக்கு ஸ்ரீ குமரன் மருத்துவமனையிலும், ஸ்ரீ குமரன் ஸ்கூலிலும் தலா 10 பேருக்கு இலவச சிகிச்சை யும், கல்வியும் வழங்க உள்ளோம்.

இலவச சிகிச்சை பெறுவோர் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட கிராமபுறத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குக் கீழேயுள்ளவர் என்பதற் கான அத்தாட்சியுடன், இருதய அல்லது சர்க் கரை நோயாளிகளாக இருத்தல் வேண்டும். இலவச கல்வி பெறும் குழந்தைகள் என்னைப் போன்று அரசு பள்ளியில் படித்தவர்களாகவும், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர் என்பதற் கான அத்தாட்சியுடனும் வருமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்புக்கு:

டாக்டர் ந. செந்தில் குமரன்
ஸ்ரீ குமரன் மருத்துவமனை
774, P.N.ரோடு, புதிய பேருந்து நிலையம் அருகில்
திருப்பூர் – 641 602.
போன்: 0421-4330000 செல் : 98422-01500

***************************
டாக்டர். செந்தில் குமரன் அவர்கள் முயற்சி திருவினை யாக்கும் என்ற முதுமொழிக் கேற்ப விடாமுயற்சியுடன் செயல்பட்டு, எண்ணிய குறிக்கோளை கடின உழைப்பின் மூலம் அடைந்துள்ளவர். மேலும் மருத்துவத் துறையிலும், கல்வித் துறையிலும் பல சாதனைகள் படைக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
– Rtn. டாக்டர் E.K. சகாதேவன்
3202 – ரோட்டரி மாவட்ட ஆளுநர்,
மேலாண்மை இயக்குநர், லோட்டஸ் மருத்துவமனை,
ஈரோடு.

******************

மருத்துவ சிகிச்சை என்றால் கோவையே என்று எண்ணி வாழ்ந்த திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார மக்களுக்குத் திருப்பூரிலும் அச்சிறப்பு சிகிச்சை கிடைக்க வழிவகை செய்திருக்கும் ஸ்ரீ குமரன் மருத்துவமனை பாராட்டுக்குரியது. மேலும் நடைமுறை வாழ்க்கைக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வரும் ஸ்ரீ குமரன் ஸ்கூலின் நோக்கம் வரவேற்கத்தக்கது.
டாக்டர் செந்தில் குமரன் அவர்கள் தன் உழைப்பு, உற்சாகம், கனிவான சேவை, தொலைநோக்கு பார்வை மூலம் இவற்றை சாதித்துள்ளார்.
– க. ரவிகணேசன், தொழிலதிபர்,
பிரீமியர் பிளாஸ்ட், திருப்பூர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2010

அச்சீவர்ஸ் அவென்யூ
மாற்றம் மலரட்டும்!
ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
தடைகளைத் தகர்த்திடு!
வெற்றியின் வேர்கள்.
பன்றிக் காய்ச்சல் பற்றி…
இங்கிலாந்து சுற்றுலா
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!
விழித்தெழு மனமே…
ஒரு பிடி பேச்சு
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்
முயன்றேன், வென்றேன்
மகிழ்ச்சி
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
தேர்வு என்றால் திகிலா
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்