Home » Articles » நிறுவனர் நினைவுகள்

 
நிறுவனர் நினைவுகள்


தியாகராசன் தூசி
Author:

– தூசி தியாகராசன்

கால வெள்ளத்தில் சற்று பின்னோக்கி நீந்திச் செல்வோம். வாருங்கள்.

இன்றைய 2009லிருந்து 27 ஆண்டுகளைக் கழித்தால் வருகின்ற 1982 ஆம் ஆண்டுக்குப் போகலாம் வாருங்கள்.

அந்த நாள் 05 – 06 1982!

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கே உரிய முத்தமிழ் விழாவின் முதல் நாளான இயல்விழா நாள்! அறிஞர் அண்ணா அரங்கம் அழகுக்கோலம் பூண்டிருந்தது. வாசலிலே வாழை மரங்கள்; வழியிலே மாவிலைத் தோரணங்கள்; வரவேற்கும் வண்ண மலர் ஆரங்கள்; நாதமழை கொட்டுகின்ற நாதஸ்வர ஆலாபனைகள் தமிழ்த்தேனருந்தக் காத்திருக்கும் மாணவர் ஆசிரியர் கூட்டங்கள் அத்தனைக்கும் நடுவே, அன்றைய சிறப்பு விருந்தினர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார் கள் கல்லூரி முதல்வரும், அய்யா இல. செ. கந்தசாமியும மற்றும் பல பேராசிரியர்களும்.

அப்போது ஒடிவந்து அய்யாவிடம் சொன்னார், இலக்கிய மன்றச் செயலர் திரு. என். மதுபாலன் அவர்கள், “அய்யா அவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள்” என்று. அந்தக் கூட்டத்தில் நானும் ஆர்வமாய்த் தலையை நீட்டிப் பார்த்தேன் வந்தவர்களை

எழுத்தாளர்கள் தீபம் நா. பார்த்தசாரதி, கோவி. மணிசேகரன், உஷா சுப்பிரமணியம் போன்றோரும், பேச்சாளர்கள் சத்தியசீலன், அறிவொளி போன்றோரும் வந்து இறங்கியிருந்தார்கள். என்றும் சிறந்த படைப்பாளிகளையும், பண்பாளர்களையும் போற்றி மகிழும் வேளாண் பல்கலைக்கழகம், அன்றும் அவர்களை வணங்கி வரவேற்றது.

(மேற்குறிப்பிட்ட என். மதுபாலன் அவர்கள், தற்போது தருமபுரி மாவட்டத்தில் மொரப்பூர் வட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.)

பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களது புன்னகைகளையும், பூங்கொத்துக் களையும் வழங்கி எல்லோரையும் வரவேற்றனர். அன்புக் கரங்களால் அவர்களைப் பற்றி அழைத்துச் சென்று, அரங்க மேடையில் அமர்த்தினர்.

முதல் எழுத்தாளர்கள் மாணவர்கள் நேருக்கு நேர் உரையாடல் நிகழ்ச்சி தொடங்கியது. அதிலே மாணவர்களின் பற்பல கேள்விகளுக்கு எழுத்தாளர்கள் சுவையான பதில்களைக் தந்து கொண்டிருந்தார்கள். அவற்றில் மறக்க முடியாத மூன்று கேள்விகளும், அதற்கு தீபம் நா. பார்த்தசாரதி அவர்கள் தந்த பதில்களும் இதோ.

கேள்வி 1 : இன்றைய இளைஞர்களால், தங்களது இலட்சியத்தை, பெரும்பாலும் நிறைவேற்ற முடிவதில்லையே ஏன்?

பதில் 1 : சுதந்திரப் போராட்ட காலத்திய இளைஞர்களின் இலட்சிய தாகம், காட்டுத்தீயைப் போல இருந்தது. கட்டுக்கடங்காமல் பாய்ந்து, பரவி, பற்றி எரிந்தது. ஆனால் இன்றைய இளைஞர்களின் இலட்சிய தாகம், வெறும் தீக்குச்சி உரசல்களைப் போல் இருக்கிறது. விளக்குத் திரியை நெருங்குவதற்குள் பொசுக்கென்று அணைந்து போகிறது.

கேள்வி 2 : எண்ணத்தோடு எண்ணங்கள் ஆயிரம் இருந்தும் சாதிக்க முடியவில்லையே, ஏன்?

பதில் 2 : எண்ணத்தோடு எண்ணமாய் இருந்து விட்டால் போதுமா? அது செயல் வண்ணமாய் மாற வேண்டு மானால், திட்டம் வேண்டும், உழைப்பு வேண்டும்.

கேள்வி 3 : அப்படியானால் செயல் திட்டம் எப்படித் தீட்ட வேண்டும்?

பதில் 3 : அதற்கு என்னை எதற்குக் கேட்கிறீர்கள்? உங்களது தலைசிறந்த பேராசிரியர்களையும், தமிழறிந்த தமிழ்ப் பெருந்தகை இல.செ. கந்தசாமி போன்றவர்களையும் கேளுங்கள். சிறந்த செயல் திட்டம் தீட்டித் தருவார்கள். கலங்கரை விளக்குகள் உங்கள் கையிருக்க, தெரு விளக்குகளை ஏன் தேடுகிறீர்கள்?

…… இங்ஙனம் பேராசிரியர்களைப் பற்றி தீபம் நா. பார்த்தசாரதி அவர்கள் குறிப்பிட்ட போது, மாணவர்கள் மத்தியிலே மகிழ்ச்சி ஆரவாரம் எதிரொலித்தது.

அடுத்த நிகழ்வாக, பட்டிமன்றம நடந்தது. ‘பாரதி கண்ட கனவுகள் நனவாகிவிட்டனவா?’ என்பதே விவாதத்திற்கான தலைப்பு. அதிலே ‘நனவாகிவிட்டன’ என்ற அணியில் பேசிய திரு. சத்தியசீலன், திரு. அறிவொளி போன்றவர்கள், இல.செ.க அய்யா அவர்கள் ஆசிரியராய் அமர்ந்து செயல்பட ‘வளரும் வேளாண்மை’ மாத இதழின் முதல் பக்கத்தில் பொறிக்கப் பட்டிருக்கும்

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் – இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திடல் வேண்டும்

என்ற பாரதியின் வைர வரிகளைக் குறிப்பிட்டுப் பேசினார்கள். அப்போது அண்ணா அரங்கம் கரவொகளில் நிறைந்தது. விழாமுடிந்தபிறகு, அனைவரும் விடைபெற்றுச் சென்றனர். அப்போது எழுத்தாளர்களில் ஒருவர் அய்யாவிடம், “பார்த்தசாரதி சொன்னதைப் போல, இளைஞர்களுக்கு, குறிப்பாக, கிராமப்புற இளைஞர்களுக்கு ஒரு செயல் திட்டம் வரையுங்கள். அது அவர்களுக்கும் வருமானம் தரவேண்டும். அந்த ஊருக்கும் வருமானத்தைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும்” என்று சொன்னார். அய்யாவின் அகத்தில் சிந்தனைப் பறவை சிறகடிக்கத் தொடங்கியது.

சில நாட்கள் கழித்து, அய்யாவைப் பார்ப்பதற்காக, அவரது அருமை நண்பர் திரு. பி. கோமதிநாயகம் அவர்கள் வந்திருந்தார். அவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புளியங்குடி கிராமத்தில், விவசாய சேவா நிலையத்தின் செயலாளராகச் செவ்வனே செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரை, அய்யா அவர்கள் எனக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்

அதற்குப் பிறகு, அய்யா அவர்கள் சிறப் பான சில கட்டுரைகளை எழுதினார். அவை “கிராமத்து இளைஞர்கள் செயல்படுத்த…”, “இளைஞர்களின் சிக்கல் தீர…,” “திட்டமிட்டுச் செயலாற்றுவோம்,” போன்றவை ஆகும். இவற்றில், இளைஞர்களுக்கான செயல்திட்டம் இடம் பெற்றிருக்கிறது. அவர்கள் ஒன்றுகூடி நற்பணி மன்றங்களை அமைப்பது பற்றியும், தமக் கும், தமது ஊருக்கும் நியாயமான வருமானத்தை ஈட்டும் வழிவகைகள் பற்றியும் ஈடுபாட்டோடு எழுதியிருக்கிறார். இவை, பின்னாளில், அவரது கிராமங்களுக்குள்ளே என்ற நூலும் இடம் பெற்றிருந்தன. இந்தக் கட்டுரைகள் பற்றி, ஏராள மான இளைஞர்களும், உழவர்களும் கடிதங்கள் எழுதினார்கள். தமது ஊருக்கேற்ற பயிர் வகை கள், விற்பனை வாய்ப்புகள் பற்றியெல்லாம் கேட்டிருந்தார்கள்.

பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறை களுக்கும் அக்கடிதங்களை அனுப்பி, அவற்றுக் குரிய பதிலைப் பெற்று அவர்களுக்கு அனுப்பி வைப்பதையும், அவற்றை ‘வளரும் வேளாண்மை’ இதழில் வெளியிடுவதையும் ஒரு தொண்டாகவே செய்து வந்தார் அய்யா அவர்கள். தன்னைப் பற்றியும், தன்மக்களைப் பற்றியும், இந்த மண்ணின் மக்களைப் பற்றியுமே சிந்தித்த மாமனிதர் இல.செ.க. அவர்கள்.

ஓ… எந்தன் இளைஞர்களே!

அலைபேசிகளிலும், திரைவாசல்களிலும், ஆற்றலையும், அரும் பொழுதுகளையும் வீணாக்குவதை நிறுத்துங்கள். கதாநாயகர்களும், கவர்ச்சிப் பாவைகளுக்கும் ரசிகர் மன்றம் வைத்து பாலாபிசேகம் நடத்தியது போதும். அய்யா போன்றோரின் அறிவுரைப்படி, நற்பணி மன்றங் கள் வைத்து, ஊருக்கும் உங்களுக்கும் உதவிக் கொள்ளத் தயாராகுங்கள். காலம் உங்களுக்குப் பட்டாபிசேகம் செய்யக் காத்திருக்கிறது!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்