Home » Articles » ஊக்கமும் சுறுசுறுப்பும்

 
ஊக்கமும் சுறுசுறுப்பும்


மனோகரன் பி.கே
Author:

வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரியும். கேட்டால் பட்டியலிட்டுச் சொல்வார் கள். நீங்கள் அதனைச் செய்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பினால் மௌனம்தான் பதிலாகத் கிடைக்கும். இதற்குக் காரணம் ஊக்கம் இன்மைதான்.

ஊக்கம் என்பது நமக்குள்ளேயே தோன்றும் ஒருவித உந்து சக்தி. ஒரு செயலைச் செய்யத் தூண்டும் அல்லது வற்புறுத்தும் ஓர் உள்ளுணர்வு. காலையில் பல் தேய்ப்பது முதற் கொண்டு இரவு பாய்விரித்து படுக்கச் செல்லும் வரை அனைத்து செயல்களுக்கும் ஆணிவேராக இருப்பது இந்த ஊக்கம்.

அனைத்து நடத்தைகளுக்கும் ஆதாரமாக விளங்குவது ஊக்கமாகும். ஊக்கம் இல்லையேல் வாழ்வில் ஒன்றுமில்லை. ஊக்கம் என்ற உந்து சக்தி இல்லை என்றால் படிப்பு, வேலை, சம்பாத்தியம், சேமிப்பு செலவு போன்ற எதிலும் நாட்டம் ஏற்படாது.

ஊக்கம் நம் செயல்களையும், உணர்வு களையும் முடுக்கி விடும். சோம்பலை அகற்றி சுறுசுறுப்பைக் கொடுக்கும். ஒரு தீப்பொறியாக நமக்குள் உண்டாகி செயலின் வேகத்தைக் கூட்டும்.

இலக்கு நோக்கி பயணிக்க நமக் குள்ளேயே உயிர்ப்பெற்று, கருவாகி, உருவாகி, நம் நடத்தைகளை நெறிப்படுத்திச் செல்லும் ஒரு உற்ற தோழனாக விளங்குவது. ஊக்கம் என்பதை குறிக்கோளை நோக்கிய முனைப்பான நடத்தை எனலாம்.

உங்களின் தேவை உங்களால் உணரப் பட்டு விட்டால் அது உடனடியாகத் தீர்க்கப் பட்டு விடும் என்பது உளவியல் உண்மை. உணரப்பட்ட தேவைக்குத்தான் ஒருவரை உந்தித் தள்ளும் சக்தி உண்டு. தேவை என்பது என்ன? எந்த ஒன்று இல்லாமல் ஒருவனால் வாழ முடியாது என உணர்கிறானோ அதுவே அவனது தேவையாகும். அத்தகைய தேவைதான் ஒருவனை தீவிரமான தேடலுக்கு ஆட்படுத்தும்.

தாகத்தோடு அலைந்த காகத்தின் கதை நாம் அறியாதது அல்ல…. கூஜாவில் கற்களைப் போடும் உத்தியை அந்தக் காகத்திற்கு யார் கற்பித்தது? வேறு யாரும் அல்ல; காகத்தால் உணரப்பட்ட தாகம் என்னும் அதன் தேவைதான் கற்பித்தது.

ஆசைக்கும் தேவைக்கும் இடையே பெருத்த வேறுபாடு கிடையாது. வாழ்க்கையே ஆசைகளின் மூலமாகத்தான் தொடங்குகிறது. அந்த ஆசைதான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தை வேட்கையை உண்டாக்குகிறது. அந்த ஆர்வமே அவனது முயற்சிக்கும் உழைப்புக்கும் வித்தாக அமைகிறது.

மனிதர்கள் செய்கின்ற காரியம் ஒன்றாக இருக்கும். ஆனால் அந்த காரியத்திற்கு பின்னால் இருக்கும் உந்து சக்தி பலவாக இருக்கும். ஒவ்வொரு செயலிலும் ஊக்கம் என்பது நேரிடையாவோ, மறைமுகமோ நிலை பெற்றிருக்கும். பாராட்டு, பெருமை, புகழ் போன்ற பல காரணங்கள் ஊக்கத்தின் வித்துக்களாக திகழ்கின்றன. ஒரு மாணவன் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பது மாணவனுக்கு உந்து சக்தி. நல்ல தேர்ச்சி விகிதத்தை கொண்டு வர வேண்டும் என்பது ஆசிரியரின் உந்து சக்தி.

தனிப்பட்ட வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, தேசிய வாழ்க்கை அனைத்திலும் ஏதாவது ஒரு உந்து சக்தி இருக்கும். ஊக்கத்திற் கான காரணங்களைக் கண்டறிந்து விட்டால் உங்களுக்கு நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ள வும் முடியும். பிறரை ஊக்குவிக்கவும் முடியும்.

உங்களிடம் கார் இருக்கலாம், டேங்க் நிறைய பெட்ரோல் இருக்கலாம், உயர் ரக எஞ்சின் இருக்கலாம், என்றாலும் சாவி போட்டு ஸ்டார்ட் செய்யவில்லை என்றால் எதுவும் செயல்படாது, பயன்தராது. அந்த சாவிதான் ஊக்கம். உங்களிடம் அறிவு, ஆற்றல் நிர்வாகத்திறன் என்று அனைத்தும் இருந்தாலும் ஊக்கம் என்ற ஒன்று இல்லாது போனால் எதனாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.

ஊக்கத்திற்கு இலக்கு தேவை. இலக்கு தெளிவாக தெரிந்தால் தான் ஊக்கம் வேர்பிடிக்கத் துவங்கும். ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்வது போல் ஊக்கத் திறனையும் எளிதில் கற்றுக் கொள்ளலாம்.

எந்த ஒரு செயலிலும் ஊக்கம் அதிகமாக இருந்தால் அதைச் செய்வதில்அதிக ஆர்வமும், அதை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படும். நம் கவனம் முழுவதையும் அதில் செலுத்த முடியும். இதன் காரணமாக அச்செயலை எளிமையாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க முடியும்.

மாறாக குறைந்த அளவு ஊக்கம் இருந்தால் ஆர்வமும் செயல் வேகமும் குறைந்து விடும். நம் விருப்பத்திற்கு மாறாக அந்தக் காரியம் நம் மீது திணித்து விட்டது போன்ற உணர்வு தோன்றும். இந்நிலையில் அச்செயலை ஒரு வழியாக செய்து முடித்தாலும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று சொல்ல முடியாது.

ஊக்கத்தின் வகைகள்

ஊக்கம் உள்ளூக்கம், வெளியூக்கம் என இருவகைப்படும். உள்ளிருந்தே குறிக்கோளை நோக்கிச் செல்ல தூண்டுகின்ற காரணிகள் உள்ளூக்கம் எனப்படும். உள்ளார்ந்த ஆர்வம், விருப்பு, தேவை, மனப்பாங்கு, கவலை ஆகியன உள்ளுக்கத்தை தூண்டுவன. விளையாட்டில் ஏற்படும் மனநிறைவு அவனை விளையாட்டில் மேலும் ஈடுபடச் செய்தால் அந்த மனநிறைவே அக ஊக்கியாகும்.

ஒருவன் விளையாட்டில் ஈடுபடுவதற்குக் காரணம் பாராட்டு அல்லது பரிசு என்பதாக இருந்தால் அந்த பரிசு மற்றும் பாராட்டு புற ஊக்கியாகும். பரிசுகள் புகழுரைகள், இகழுரை கள் தண்டனைகள், போன்றவை வெளியூக்கத் திற்குச் சான்றுகள்.

இதில் வெளியூக்கத்தை விட உள்ளுக்கமே சிறந்தது. உள்ளூக்கத்தினால் செயல்படுபவர் தான் செய்யும் செயலில் அதிக கவனம், முயற்சி, ஆர்வம், ஈடுபாடு காட்டுவர். எனவே செலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படும். வெளியூக்கத்தினால் செயல்படு பவர், உதாரண மாக பெற்றோர் அல்லது ஆசிரியரது கட்டாயத்திற்காக கற்க முயற்சிக்கும் மாணவர், படிப்பில் உண்மையான அக்கறை காட்டுவதில்லை. குறைவான நேரமே செயலில் ஈடுபடுவர். எனவே வெளியூக்கத் தினால் விளையும் முன்னேற்றம் குறைவு.

வெற்றி ஏற்படும்போது, நினைத்தது நடக்கும் போது உள்ளத்தில் தோன்றும் உற்சாகம் ஊக்கத்தை அதிகரிக்கும். ஊக்குவித்தல் நடைபெற உதவும் காரணிகளை ஊக்கிகள் என்கிறோம். பிறரால் ஏற்கப்படுதல், பிறரது பாராட்டுக்களைப் பெறுதல், பிறரோடு இணைந்து செயல்படுதல் போன்ற சமூகத் தேவை களால் எழுபவை சமூக ஊக்கிகள் எனப்படும்.

ஒருவன் தான் மேற்கொள்ளும் செயலில் சிறப்பு மிக்க உயர் சாதனையை அடைய முற்படு தலும் ஊக்கியாகச் செயல்படுகிறது. உயரம் தாண்டுதலில் ஒருவர் 4 அடி தாண்டி முடிந்ததும், அடுத்து 4 1/2 அடி தாண்ட வேண்டும் என்ற ஆவலும் ஒரு வகையான ஊக்கிதான். பொதுவாக வெற்றியடைந்த நிலையில் ஆவல் மேலும் அதிகரிக்கும். தோல்வி ஆவல் நிலையை குறைத்து விடும். ஆனால் தற்காலிகத் தோல்வி மேலும் முயற்சி செய்து இலக்கை அடையத் தூண்டும்.

சுறுசுறுப்பு

நம் வாழ்வில் வளம் சேர்க்கும் இன்னொரு அம்சம் சுறுசுறுப்பு. ஒரு துருவம் சுறுசுறுப்பு என்றால் மறு துருவமாக இருப்பது சோம்பல். சோம்பல் உடம்பில் ஊறிக்கொண்டே இருந்தால் சோர்வு உள்ளத்தில் ஏறிக்கொண்டே இருக்கும். ‘ஒன்றைச் செய், அதையும் இன்றே செய்’ என்பது ஊக்க மொழி ‘நடப்பது நடக்கும், நாளை பார்த்துக் கொள்ளலாம்’ என்பது சோம்பல் மொழி.

எல்லா நேரங்களிலும் நம்மால் சுறுசுறுப்பாய் இருக்க முடிவதில்லை. எடுத்துக் காட்டாக மதிய உணவு உண்ட பிறகு சிறிது தூக்கக் கலக்கமாக இருக்கும். அதனால் எல்லா நேரத்திலும் எந்த வேலையையும் செய்வது என்ற அணுகுமுறையை தவிர்த்து எந்தெந்த வேலைகளை எந்தெந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதையும் முன்னமே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொன்றுக்கும் திட்டமிட்டுக் கொண்டிருந்தால் அதற்கே கணிசமாக நேரம் போய்விடாதா? என்று கேட்கத் தோன்றும். திட்டமிடுதலில் நாம் செலவழிக்கும் ஒரு நிமிடம் அதனைச் செயலாக்குவதில் 4 நிமிடங்களை சேமிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

காலத்தோடு எதனையும் செய்க! தள்ளிப் போடுவதைத் தள்ளி விடுக. காலம் எவருக்குங் காத்திராது. உடனுக்குடன் காரியம் செய்தால் மனப்பாரம் குறையும். விழுந்து விட்டோமே என்று விம்மி விம்மி அழக்கூடாது. “விழுவது எழுவதற்கே’ என்ற எண்ணம் மனதில் எழுந்தால் மறுகணம் நாம் கம்பீரமாக நின்று கொண் டிருப்போம். சாதனை படைத்தோரெல்லாம் ஒரே மூச்சில் வென்றவர்கள் அல்ல. விழுந்து விழுந்து எழுந்தவர்கள். தோல்வி நேரும் போது ‘எல்லாம் தலையெழுத்து’ என்று தத்துவம் பேசி முடங்கி விடக்கூடாது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் உண்மைகளை உலகுக்கு அளித்த தாமஸ் ஆல்வா எடிசன் கூறுகிறார் “மேதைத்தனம் என்பது ஒரு சதவீத விதி, 99 சதவீத உழைப்பு” என்று. அடைக்க அடைக்க விசையோடு பீச்சி அடிக்கும் நீர் போல, தடைகள் ஏற்பட ஏற்பட எண்ணங்களும் செயல்களும் பீறிட்டு எழ வேண்டும். முயன்றால் முடியாதது இல்லை. “விழி! எழு! வெற்றி இலக்கை அடையும் வரை விடாது உழை” எனும் வீரமுரசு விவேகானந்தர் அறிவுரையைக் கலங்கரை விளக்கெனக் கொண்டு கடமையினைச் செய்ய வேண்டும்.

ஒரு கைதேர்ந்த மரம் வெட்டுவோன் தொடர்ந்து மரத்தை வெட்டிக் கொண்டிருப் பதை விட தனது கையிலிருக்கும் கோடாரியைக் கூர்மைப்படுத்திக் கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்வான் என்கிறார் ஆப்ரகாம் லிங்கன். அதுபோல சுறுசுறுப்பாக உழைக்கும் அதே நேரத்தில் திறமையை மேம்படுத்திக் கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

எந்த ஒரு செயலையும் தொடங்க விடாமல் ஓடாத கடிகாரம் போல் நம்மை உட்கார வைத்துவிடுவது சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்ல உட்கார்ந்து விட்டால் இருக்கையை விட்டும் எழுந்திருக்க மாட்டார்கள். சுறுசுறுப்பானவர்கள் சட்டென எழுந்து தங்களது வேலையைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்வார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக் கொள்வார்கள். மற்றவர் களுக்கும் சலிப்பூட்டுவார்கள். சுறுசுறுப் பானவர்கள் தானும் மகிழ்ச்சியாய் இருப்பார்கள். சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாய் வைத்திருப்பார்கள். சோர்வு என்ற சொல்லின் முதல் எழுத்தை மாற்றினாலே போதும், பிறந்து விடும் தீர்வு சோம்பல் மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ! சோம்பலைத் துடைத் தெறிவோம், சுறுசுறுப்பை விரும்பி ஏற்போம்.

அதிஷ்டத்தால் முன்னுக்கு வந்தவர் என்கிற பெயர் தேவையில்லை. உழைப்பால் உயர்ந்தவர் என்ற பெயர் கிடைக்கும் படியாக முன்னேற வேண்டும். எழுத்தாளர் கல்கியிடம் நண்பர் ஒருவர் உங்கள் பெயருக்கு ஜாதகம் பார்ப்பதுதானே என்று சொன்னாராம். அதற்கு கல்கி “தம்பி ஜாதகம் பார்க்கிற பைத்தியம் மட்டும் எனக்கு கட்டோடு பிடிக்காது. காலில் நகம் முளைத்த காலத்தில் இருந்து எத்தனையோ இடத்தில் அடிபட்டு மிதிபட்டு கஷ்டப்பட்டு நான் ஒவ்வொரு படியாக முன்னேறியது என் சொந்த உழைப்பினால்தான். ஆனால் ஜோசிய ரிடம் போய் கேட்டால் ஏதோ செவ்வாய், சுக்கிரன், சூரியன் தான் காரணம் என்று சொல்வார். இதை எப்படி கேட்டுக் கொண்டு சகிப்பது?” என்றாராம்.

எனவே உழைப்புதான் உண்மையான அதிர்ஷ்டம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். காலையில் கண் விழித்ததும் செய்தித் தாளில் ராசி பலன் பார்த்து அதன்படி செயல் திட்டம் வகுப்பதை விடுத்து அறிவுபூர்வமாக சிந்தித்து சோம்பலை கழற்றி எறிந்து சுறுசுறுப்போடும் ஊக்கத்தோடும் செலாற்றினால் நினைத்தது நடக்கும்.

 

3 Comments

  1. raja says:

    mikka nanri ayya

  2. தியாகராஜன் says:

    அருமையான பதிவு

  3. தியாகராஜன் says:

    அருமையான தகவல்

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்