Home » Articles » துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்

 
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்


ஆசிரியர் குழு
Author:

‘தன்னம்பிக்கை’ ஒரு மனிதனின் முதல் கை. இம்முதல் கை இல்லை யெனில் மனிதனின் வலக்கை, இடக்கை இவையிரண்டும் செயற்கையே! கஸ்தூரிமான் தன் அடிவயிற்றிலிருந்து தான் நறுமணம் வீசுகிறது என்பதை அறியாமல் அங்கும் இங்கும் அலையுமாம். புதிதாக கார் கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் ஒரு செல்வந்தன் செல்வச் செழிப்பில் அதை வாங்கி பயனித்தானாம்! அதைப் பார்த்த அறிவியல் அறிஞர் ஒருவர் 14 குதிரைகள் சக்தி கொண்ட ஒரு காரை ஐந்து குதிரைகளைக் கொண்டு இழுக்கச் செய்யும் அறிவில்லான் செலைக் கண்டு வியந்தாராம்! இன்றைய இளைய தலைமுறையும் இவ்வாறே!
தன்னிடமுள்ள சாத்தியக் கூறுகளை உணரத் தெரியாது தெளிவற்று உள்ள இந்த இளைஞர் சமுதாயத்திற்குத் தன் திறமைகளை உணரச் செய்து தெளிவைக் கொடுக்க தன்னம்பிக்கை மாத இதழால் பல ஆண்டுகளாக பல ஊர்களில் மாதா மாதம் நடத்தப்படும் சுய முன்னேற்றப் பயிலரங்கங்கள் இளைஞர்களின் உயிலரங்கங்கள் என்றால் அது மிகையில்லை!

இவ்வகையில் தன்னம்பிக்கை மாத இதழ் தனது விற்பனையில் ஒரு மைல்கல்லை கோபி செட்டிபாளையத்தில் அடைந்திருப்பதால், அதன் வாசகர்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவி யருக்கும், பொதுமக்களுக்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கை மாதந்தோறும் கோபிசெட்டி பாளையத்தில் நடத்தத் தீர்மானித்தது. இத்தீர் மானத்தின்படி ‘தன்னம்பிக்கை மாத இதழ்’ ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரி, கோபி’ உடன் இணைந்து கடந்த 21. 10. 2009 அன்று சுய முன்னேற்றப் பயிலரங்கத்தின் துவக்க விழாவை மேற்படி கல்லூரியின் அரங்கத் தில் ‘துணிவுடன் போராடு!’ என்ற தலைப்பில் தொடங்கியது.

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல்துறை சிறப்பு அதிரடிப் படை I.G. டாக்டர். செ. சைலேந்திரபாபு I.P.S அவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரை நிகழ்த்தினார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியின் சார்பாக அதன்தலைவர் திரு. .P. வெங்கடாசலம் அவர்கள், செயலாளர் திரு.. K. C. கருப்பணன் உல.ங.க.அ அவர்கள், இணை செயலாளர் திரு. G.P. கெட்டி முத்து அவர்கள், முதல்வர் டாக்டர் P. தங்கவேல் அவர்கள், துணை முதல்வர் திரு. ந. பிரகாசம் அவர்கள் ஆகியோரும், கோபி ஸ்ரீ முத்து மஹால் உரிமையாளர் தொழிலதிபர் திரு.K.M. வெங்கடேஸ்வரன் அவர்கள் தலைமை ஏற்கவும், உழைப்பால் உயர்ந்த திருப்பூர் சரவணா சில்க்ஸ் உரிமையாளர் தொழிலதிபர் திரு. M. ராயப்பன் அவர்கள் கௌரவ விருந்தினராக பங்கேற்கவும், தன்னம்பிக்கை மாத இதழின் சார்பில் கௌரவ ஆசிரியர் டாக்டர் N.செந்தில் அவர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் திரு. M. நம்பிராஜன் அவர்கள் ஆகியோரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

அரங்கம் வாசகர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், பிற பள்ளி மாணவ, மாணவியர், பத்திரிக்கையாளர்களால் நிரம்பி வழிந்தது.

தொழிலதிபர் திரு. K.M. வெங்கடேஸ்வரன் அவர்கள் விழாவின் சிறப்பைக் கூறி தலைமை உரையாற்றினார்.

அடுத்து வரவேற்புரையில் கல்லூரி முதல்வர் டாக்டர் P.தங்கவேல் அவர்கள் விழாவில் பங்கேற்ற அனைவரையும் தனித்தனியே வரவேற்றுப் பேசினார்.
விழாவிற்கு முன்னிலை ஏற்றுப் பேசிய கல்லூரியின் இணை செயலாளர்
திரு. எ.ட. கெட்டிமுத்து அவர்கள் துணிவுடன் செயல்பட்டு வாழ்வில் முன்னேற வேண்டும் துணிவு இல்லாமல் சாதனை இல்லை. துணிவுக்கு இலக்கணம் வகுத்தவர் I.G டாக்டர் செ. சைலேந்திரபாபு I.P.S அவர்கள் எனக் கூறியதோடு I.G அவர்களின் எழுச்சியுரையை அனைவரும் கூர்ந்து நோக்கி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் எனக் கூறி தனது உரையில் பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தினார்.

கல்லூரியின் தலைவரும், விழாவின் முன்னிலையாளருமான திரு. ட. வெங்கடாசலம் அவர்கள் முயற்சி, லட்சியம், நம்பிக்கை ஆகியவற்றின் அவசியத்தைக் கூறி உரையாற்றினார்.

அடுத்து கல்லூரியின் செயலாளர் திரு. K.C. கருப்பணன் EX. M.L.A. அவர்கள், “டாக்டர்.செ. சைலேந்திரபாபு, I.P.S அவர்கள் நேர்மை, துணிவு, கண்டிப்புடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னரே கோபியில் அ.ந.டயாகப் பணிபுரிந்து வந்தவர், தற்போது I.G என்ற உயர்ந்த நிலையை அடைந்து நமது கல்லூரியில் எழுச்சியுரை ஆற்ற வருகை புரிந்தமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என தன் மனப்பூர்வ வாழ்த்துக்களைக் கூறினார்.

மேலும் அவர், “I.G அவர்கள் தனக்கு உள்ள வாய்ப்பிற்கும், வசதிக்கும் உள்ள சாத்தியக் கூறுகள் எவற்றையும் ஏற்காமல் இவ்விழாவிற்கு வருகை புரிந்து எளிமைக்கு உதாரணமாகத் திகழ்கிறார். ஒரு வேளை உணவிற்கு ஏங்கும் ஏழைகள் இருக்க மாணவ, மாணவியர் தன் தேவைக்கு மேல் உணவைப் பெற்று அதைக் குப்பையில் கொட்டு வதைப் பார்க்கையில் என் மனம் வேதனைப் படுகிறது. I.G அவர்களின் எளிமையை நீங்கள் பின்பற்ற வேண்டும். அவரின் எழுச்சியுரையை ஏற்று துணிவுடன் போராடி வாழ்வில் வெற்றி பெற வேண்டும்; நேரத்தை நன்கு பயன்படுத்த வேண்டும் என அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தன் வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

தன்னம்பிக்கை இதழின் கௌரவ ஆசிரியர் டாக்டர் N. செந்தில் அவர்கள், கோபியில் துவங்கும் இந்த சுயமுன்னேற்றப் பயிலரங்கத் துவக்க விழாவிற்கு எழுச்சியுரை ஆற்ற டாக்டர் செ. சைலேந்திரபாபு I.P.S அவர்களை அழைத் ததும், தன் இடைவிடாத பணிகளுக்கும் இடையே வர சம்மதம் தெரிவித்து இங்கு எழுச்சியுரை ஆற்ற வந்தமைக்கு தன் நன்றிகளைத் தெரிவித்ததோடு, I.G அவர்கள் சமீபத்தில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிடப்பட்டுள்ள,
“ Boys and Girls Be Ambitious”
என்ற புத்தகத்தை தமிழிலும், வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தன் சிறப்புரையில் தெரிவித்தார்.

மிகுந்த எதிர்பார்புக்கிடையே விழாவின் நாயகராகப் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றிய I.G டாக்டர் செ. சைலேந்திரபாபு I.P.S அவர்கள் கடந்த ஆண்டு மொத்தம் 7லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதியதில் 6 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த 6 லட்சம் பேரில் 1 லட்சம் பேர் மட்டுமே மேற்கல்வியைத் தொடரும் வாய்ப்பைப் பெற்றனர். அந்த ஒரு லட்சம் பேரில் இங்கு கூடியுள்ள மாணவ, மாணவியர் நீங்களும் அடக்கம். எனவே நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். உங்களுக்குக் கிடைத்த இவ்வரிய வாய்ப்பை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொறியியல் படிப்பை 4 ஆண்டுகள் இங்கு பயின்று பொறியாளர்களாக வெளியேறும் போது ஆங்கிலம் முழுமையாகத் தெரிந்திருந்தாலே வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கப் பெறுவீர்கள். எனவே தகவல் தொடர்பு அறிவுக்கு ஆங்கிலம் மிக முக்கியம் என கூறிக் கொள்கிறேன்.

நான் 26 வயதில் கோபிசெட்டிபாளையத்தில் A.S.Pயாக பதவி ஏற்ற போது என் நிர்வாகத்தின் கீழ் 20 காவல்நிலையங்களும், 600 காவலர்களும் பணியாற்றினர். இவர்களில் அனைவரிலும் குறைந்த வயது எனதே. எனவே, சிறு வயதிலும் சாதனை சாத்தியமே. இந்தியாவில் கற்ற கல்விக்குத் தகுந்த வேலைகள் உண்டு. வேலை இல்லை என்பது உண்மையல்ல. தகுதி வாய்ந்த பொறியாளர்கள் கிடைப்பதில்லை என்பதே உண்மை. தகுதியுள்ள பொறியாளர்களுக்கு பெரும் சம்பளத்துடன் வேலைகள் கொடுக்க பெரும் நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

இந்தியாவில் கல்வி கற்று Motorola நிறுவனத்தில் C.E.O பதவி வகிக்கும் திரு. சஞ்சய் ஜா அவர்களின் ஆண்டு சம்பளம் ரூ.520 கோடி. மேலும், இந்தியப் பெண்மணி திருமதி. இந்திரா நூயி Pepsi நிறுவனத்தின் C.E.O பதிவு ஏற்று பல கோடி ரூபாய் வருமானத்துடன் திகழ்கிறார். இத்துவக்க விழாப் பயிலரங்கத்தின் தலைப்பான ‘துணிவுடன் போராடு!’ என்பது மாணவ, மாணவி யரான உங்களைக் காட்டிலும் பல்வேறு சிரமங் களுக்கிடையிலும் உங்களைப் பயில வைக்கும் உங்கள் பெற்றோருக்கே உகந்தது என்பேன்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஆசை வர வேண்டும்; மனதில் மாற்றம் வர வேண்டும்; பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற நம்பிகை கொள்ள வேண்டும் என்பதை இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். குறைந்த கல்வியே பயின்ற திரு. ட.வெங்கடாசலம் அவர்கள் இன்று தொழிலதிபராக, இக்கல்லூரியின் தலைவராக உயர்ந்து பெரிய சாதனை நிகழ்த்தி யிருப்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தான் மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற உள் மனத் தேவையுடன் வாழ்கிறார்கள். இதை அடைய ஒவ்வொருவரும் கடின உழைப்பை மேற்கொள்ளல் வேண்டும். தற்போதைய நிலவரப்படி தமிழ் நாட்டின் பொறியியல் கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவ, மாணவியரில் 100க்கு 8 பேர் மட்டுமே வேலை பெறும் தகுதியுடன் வெளிவரு கின்றனர் என்பது வருத்தம் தரும் புள்ளி விபரம். கல்லூரிப் படிப்பை முடித்து வெறும் பட்டம் மட்டும் பெற்று என்ன பயன்? பட்டத்துடன் துறை சார்ந்த நடைமுறை ஞானத்தையும் பெற்று வெளி வர வேண்டும். சாதனை புரிய தனக்கு பிடித்த துறையை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரு மாணவனுடைய நடத்தையில் அறிவு, திறமை, மனப்போக்கு என்ற மூன்று விஷயங்களில் விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவது தான் கல்வியின் அர்த்தம். ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் படிக்க செலவிட்டு சிறந்த ஆசிரியர்கள் என பெயரெடுக்க வேண்டும். தன்னம்பிக்கை மாத இதழின் நிறுவனர் பேராசிரியர் டாக்டர் இல.செ. கந்தசாமி அவர் களைப் போன்றோரை ஆசிரியர்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். டாக்டர் இல.செ. கந்தசாமி அவர்களின் மாணவன் என் பதில் நான் பெருமையடைகிறேன். கல்லூரியில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்பதன் மூலம் ஆளுமைத் திறனை மாணவ, மாணவியர் வளர்த்துக் கொள்ள வேண்டும். செயல்படுத்தும் எண்ணமே வெற்றியைத் தரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க்கைக் குறிக்கோளை அடைய ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தான் மட்டுமே துணை என்பதை அறிந்திருக்க வேண்டும் என்று கூறி தன் நீண்ட நெடிய உரையை நிறைவு செய்தார்.

விழாவில் தன்னம்பிக்கை மாத இதழின் சார்பாக திரு. K. வெள்ளிங்கிரி, விற்பனை மேலாளர் திரு. R. சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சித் தொகுப்பை கவிதையாக எழுதியும், மேடை நிர்வாகத்தை சிறப்புடனும் செய்திருந்தார் தன்னம்பிக்கை வாசகர் திரு. சோம. அருள்மொழி அவர்கள்.மாணவர் திரு. S. செந்தமிழன், மாணவி செல்வி. D. மோகனப் பிரியா ஆகியோர் நிகழ்ச்சித் தொகுப்பை சிறப்பாக வாசித்தனர்.

விழாவின் ஒருங்கிணைப்பாளரும், தன்னம்பிக்கை மாத இதழின் மக்கள் தொடர்பு அலுவலருமான திரு. M. நம்பிராஜன் அவர்கள் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்