![]() |
Author: முருகேசபூபதி ப
Oct 2009 | Posted in Cover Story |
நேர்முகம் : என். செல்வராஜ்
- யார் தனக்குத் தானே கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறாரோ அவரே சுதந்திர மனிதர் என்றகருத்தை மனதில் கொண்டு தன்னைத் தானே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பத்தாவது துணைவேந்தர்.
- தீவிர ஆராய்ச்சியின் மூலம் ஒருங்கிணைந்த உரப் பரிந்துரைக்கு கணினி மென்பொருளை உருவாக்கிய சிறப்புக்குரியவர்.
- உலகளவில் மற்றும் தேசிய அளவில் பல நிறுவனங்களுடன் இணைந்து 19 ஆராய்ச்சிப் பணிகளை நிறைவேற்றி, நவீன முறையில் ஒருங்கிணைந்த பயிர் ஊட்டச்சத்து வழங்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர்.
- உழவர்கள் மண் மற்றும் நீர் பரிசோதனைகளை சலுகை கட்டணத்தில் மேற்கொள்வதற்கு முக்கிய பங்காற்றியவர்.
- உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு என பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர் முனைவர் ப. முருகேசபூபதி அவர்கள்.
‘சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும் அதை வெளிப்படுத்துபவரே சிறந்த தலைவர் ஆவார்.’ மாணவர்களிடம் உள்ள திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அவரை நாம் ஆசிரியர் டாக்டர் க. கலைச்செல்வி மற்றும் செந்தில் நடேசன் அவர்களுடன் சந்தித்தபோது, ‘சிந்தனையும் செயலும் ஒருங்கிணையும் போது சாதிப்பு என்பது நம் அருகில் தான்’ என்றவருடன் இனி நாம். . .
நீங்கள் கடந்து வந்த பாதை
நான் சேலம் மாவட்டத்தில் உள்ள திருவான்டிப்பட்டி கிராமத்தில் 1950-ம் வருடம் பிறந்தேன். என் தந்தை பழனிமுத்து மணியகாரரர், தாய் இந்திராணியம்மாள், தாத்தா மாமரக்காட்டு பழனிமுத்து, பாட்டி செம்பாய் அம்மாள் இவர் களின் செயல்பாடுகள்தான் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. செய்யும் தொழிலில் நாணயமிக்கவராக திருச்செங்கோடு, மோர் பாளையம் சந்தைகளில் மாடுகளை வாங்கி விற்கும் தொழிலை திறம்பட செய்து அதன் மூலம் எங்கள் குடும்பத்தை மேலோங்கச் செய்தவர். என் தாத்தா பழனிமுத்து அவர்கள். அவர் அதிகம் படிக்காதவர் தான் என்றாலும் அனுபவத்தின் மூலமாக பலரும் வியக்கும் வண்ணம் ஒவ்வொரு செயலையும் செய்யக்கூடிய வராக சிறந்து விளங்கியவர். குழந்தைப் பருவத் தில் இருந்தே அவரை உற்றுக் கவனித்ததினால் நான் என் வாழ்க்கையை நன்கு அமைத்துக் கொள்ள முடிந்தது. தான் படிக்காவிட்டாலும் தன்னுடைய மகனாவது படிக்க வேண்டும் என்று பெரும் பாடுபட்டவர் என் தந்தை.
குழந்தைகள் வளரும் பருவத்தில் இருக்கும் போது பெற்றவர்களின், மற்றவர்களின் நன்னடத் தையில் தான் அவர்களின் எதிர்காலம் அமை கிறது என்பதை ஒவ்வொரு குடும்பத்தினரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பள்ளி, கல்லூரிக் காலம்
நான் படிக்கும் போது தொடக்க பள்ளி மட்டும்தான் எங்கள் ஊரில் இருந்தது. எனவே நான் சென்னை யில் தொழில் புரிந்து கொண்டிருந்த என் தாத்தாவுடன் இருந்து படித்தேன். உயர் கல்வியைச் சேலத்தில் முடித்தேன். அந்த காலத்தில் எங்கள் ஊரில் இருந்து படிக்க சங்ககிரி அல்லது திருச்செங்கோடு போக வேண்டும் என்றால் சைக்கிளில் 8 கி.மீ. போக வேண்டும்.
எனவே நான் சேலத்தில் தங்கிப் படித்தேன். காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மட்டுமே எங்கள் வீட்டிற்கு விருந்தாளி போல் செல்வேன். கிராமத்தில் அதிகமாக தம்பி கௌசிக பூபதி அவர்களைத்தான் தெரியும்.
1967-ல் பியூசி கந்தசாமி கண்டர் கல்லூரியில் பயின்று, பின்பு கோவை தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரியில் இளநிலை வேளாண்மைப் படிப்பை முடித்தேன்.
கல்லூரி முதலாம் ஆண்டுத் தேர்வில் தோல்வியுற்றேன். 160 பேரில் 102 பேர் தோல்வி அடைந்தனர். அதற்கு காரணம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் கல்லூரி வகுப்புகள் நடைபெறவில்லை. எனவே எங்கள் வகுப்பில் 50 பேர் மட்டுமே 1971 -ல் வேளாண்மைப் பட்டப் படிப்பை முடித்தார்கள். மீதமுள்ள பெரும் பாலான மாணவர்கள் 1972-ஆம் ஆண்டு தான் பட்டப்படிப்பை முடித்தார்கள் அதில் நானும் ஒருவன். 1972 ல் வேளாண்மைப் பல்கலைக்கழகம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே நான் பட்டம் பெற்றேன். இதுவரைக்கும் இருந்த துணை வேந்தர்கள் அனைவரும் சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள். நான் இங்கேயே பட்டம் பெற்று பல்கலைக் கழகத்திலேயே துணைவேந்தராக இருக்கிறேன் என்பது பெருத்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவரால் இன்று நான் இப்படி…. குறிப்பிடும்படி யாரேனும்?
வேளாண்மைச் செயலராக பணியில் இருந்த திரு. ஆதிமூலம் I.A.S. அவர்கள் என் நெருங்கிய நண்பர். அவரை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். அவர் என்னிடம் எந்த ஒரு துறையிலும் இல்லாத சிறப்பம்சம் வேளாண்மைத் துறையில் உள்ளது. முழு ஊதியத்துடன் M.Sc. படிக்க அனுப்புகிறோம். மேலும் 6000 ரூபாய் ஊக்கத் தொகையும் தருகிறோம். நீ இத்துறையில் மண் வேதியியல் நிபுணராக இருந்திருக்கிறாய், முதுநிலை படிப்பு இருந்தால் உனக்கு இயக்குநராக பதவி உயர்வு கொடுத்திருக்க முடியும்.
B.Sc. (Agri) இளநிலை பட்டத்துடன் மட்டும் இருப்பது ஏன் என்றார். இது என் மேல் படிப்பு பற்றி யோசிக்க வைத்தது.
பிறகு 1986-ல் திரு. ஆதிமூலம் I.A.S. அவர்கள் வேளாண்மைத் துறை ஆணையராக இருக்கும்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் B.Sc.. (Agri) படிக்க முடிவு செய்தேன்.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உங்கள் ஆராய்ச்சி பணி குறித்து?
1986-ல் முதுநிலை வேளாண்மை மண்ணி யியல் படிக்கச் சென்றேன். எப்பொழுதுமே என்னைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் இருக்கும். ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்வோம். முதுநிலை வேளாண்மை 1998ல் முடித்தவுடன் சேலத்தில் பணியில் சேர்ந்தேன்.
பிறகு உடனடியாக 1988ல் உதவிப் பேராசிரி யராக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் கிள்ளி குளம் வேளாண்மைக் கல்லூரி யில் சேர்ந்தேன். 1995ல் Ph.d. முடித்தேன். அதன் பிறகு இணைப் பேராசிரியராகவும், 1998ல் பேராசிரியராகவும் பணி உயர்வு பெற்றேன். மேலும் 2001ல் ஆராய்ச்சி இயக்குனர் அலுவலகத்தில் துணை இயக்குநராக பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களை மேற்பார்வை இடும் பணியில் இருந்தேன். 2007-ல் திட்டமிடுதல் மற்றும் மேற்பார்வை இயக்குனராக பதவி உயர்வு பெற்று வேளாண்மை அமைச்சக பணிக்குச் சென்றேன்.
2003-ல் மண் வளத்திற்கு ஏற்ற பயிர் சாகுபடி என்னும் ஆராய்ச்சி திட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டேன். மலையில் விளையும் காய்கறிகளை அதிகமாக ஆய்வு செய்யவில்லை என்று ஆடுதுறையில் இருந்த மையத்தை ஊட்டிக்கு மாற்றினேன். 27 வகை ஆராச்சிகளை அங்கு செய்தோம். பொதுவாக நாங்கள் ஆய்வுக் கூடத்தில் அதிகமாக ஆராய்ச்சி செய்யவில்லை. இதற்கு மாறாக விவசாய நிலத்திலேயே ஆய்வை மேற்கொண்டோம். இதனால் விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான திட்டங்களை என்னால் பிற்காலத்தில் உருவாக்க முடிந்தது.
பலர் படிப்பிற்கு நீங்கள் உதவி செய்திருக்கிறீர்கள். அந்த உதவி குறித்து. . .
நான் என் பெரியம்மா வீட்டில் இருந்து தான் படித்தேன். அதனால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கல்வியில் அதைப் போன்ற வாய்ப்பு இல்லாதவர்களுக்கு அந்த வாய்ப்பினை வழங்கினேன்.
என் மனைவி திருமதி. ஜான்சி ராணி அதற்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டார்கள். நல்ல ஒத்துழைப்பு தந்தார்கள். நான் காலையில் 8 மணிக்கு வேலைக்குச்சென்றால் எப்பொழுது திரும்பி வருவேன் என்று தெரியாது. மதிய உணவுக்கு வீட்டிற்கு வருகிறேன் என கூறிவிட்டு வேறு எங்காவது சாப்பிட்டிருப்பேன். தொலை பேசியில் அழைத்து மதிய உணவிற்கு இன்று வரமுடியவில்லை வெளியே சாப்பிட்டுவிட்டேன் எனக் கூறினால், முன்னமே சொல்லியிருந்தால் உணவு வீணாகாமல் இருந்திருக்குமே என்பார்கள். வார்த்தைகளில் கோபம் இருக்காது. அன்பு, பாசம், கவனிப்பு இருந்தது. எல்லோரையும் அதனால் அரவணைக்க முடிந்தது.
உங்களை வழிநடத்தும் சக்தி…
என் தாய். அவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற கதைகளைக் கூறி சத்தியம், நியாயம், தர்மம், நேர்மை போன்றவற்றை அறிவுறுத்தி நீதியுடன் வாழ வேண்டும் என்று போதித்தார்கள். இளம் வயதில் அவை எனக்குள் ஆழமாக பதிந்தது. இன்று மனைவி, மகன் டாக்டர் மு.தினேஷ் குமார் M.D., மருமகள் டாக்டர் எல்.கிருத்திகா, பேத்தி சன்சனா, பேரன் நரேன் சியாம் இவர்களுடன் அப்படியே வாழ்ந்து வருகிறேன்.
நூற்றாண்டு விழா கண்ட பல்கலைக்கழகத் திற்கு துணைவேந்தராக இருக்கும் இத்தருணம் குறித்து…?
ஒரு குக்கிராமத்தில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த என்னை 100 ஆண்டு பழமை கொண்ட பல்கலைக் கழத்திற்கு துணைவேந்தராக நியமித்ததற்கு மாண்புமிகு வேளாண்மை அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக இணைவேந்தர் அமைச்சர் வீரபாண்டியார் அவர்களுக்கு எனது குடும்பம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. நாங்கள் படிக்கும் காலத்தில் துணைவேந்தர் அறை என்பது புனிதமாக கருதப்பட்டது. அங்கு பயபக்தியுடன் செல்வோம். அத்தகைய இடத்தில் அமர்ந்து பணிபுரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அச்சிறப்புக்குரிய பொறுப்பால் எல்லோரையும் நன்கு அரவணைத்து, பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களின் ஒத்துழைப்புடன் பல்கலைக் கழகத்தின் தரத்தை இன்னும் உயர்த்த பெருமளவு பாடுபட வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. எனவே சிறப்புடன் பல்கலைக்கழகத்தை உயர்த்த வேண்டும் என்று செயல்படுவேன்.
பல்கலைக்கழகத்தின் எதிர்காலக் குறிக்கோள்?
பல்கலைக்கழகத்திடமிருந்து அரசாங்க மும், விவசாயிகளும் என்ன எதிர்பார்க்கிறார் களோ அதைச் செய்யவேண்டும். மாநில அரசு 150க்கு மேல் கோடி நிதியுதவி தருகிறது. அதை தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும். விஞ்ஞானிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். ஆராய்ச்சிகள் விவசாயிகளை சென்றடைவ தில்லை. அதனை விவசாயிகளுக்குச் சென்ற டையச் செய்ய வேண்டும். விவசாயிகள் விதை களை அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். அவர் களுக்கு தரமான விதைகளை பல்கலைக்கழகம் வழங்க வழியினை ஏற்படுத்த வேண்டும். மேலும் தொழில்நுட்ப விசயங்களை விவசாயி களிடம் விளங்க வைக்க வேண்டும்.
இளநிலை விவசாய பட்டத்தை விவசாயி களுக்கு வழங்கி அதற்காக தமிழில் பாடத்திட்டத்தை அமைத்து சான்றிதழ் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
10 கோடி வருமானம் உள்ள பல்கலைக் கழக நிதியை இன்னும் இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும்.
நவீன விவசாயத்தை பாரம்பரிய விவசாயிகள் ஏற்றுக் கொள்கிறார்களா?
மரபு வழியாக வந்த பாரம்பரிய விவசாயிகள் அதனையே கடைபிடிக்கின்றனர்.
படித்தவர்கள், இளைஞர்கள் போன்றோர் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் காரணமாக இயற்கை வேளாண்மையைக் குறைத்து தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.
விவசாய நிலம் குறைவாக இருந்தாலும் இப்போது உற்பத்தி திறன் அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் தொழில்நுட்ப முன்னேற் றமே என்பதனை உணர்ந்தவர்களாக இருக்கி றார்கள் நவீன விவசாயிகள். வளர்ந்து வரும் மக்கள் தொகையின் காரணமாக இயற்கை வேளாண் மையை செய்தால் அனைத்து மக்களுக் கும் உணவு அளிக்க முடியாது. இயற்கை உரங் களுடன் ரசாயன உரங்களையும் கலந்து ஒருங் கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் தான் நமது உணவு உற்பத்தியை பெருக்க முடியும்.
மாறிவரும் உலகில் மாற்றங்களை பயனுள்ளதாக்கிக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது.
இரசாயன உரம் மண்வளத்தை பாதிக்கிறதா?
பயிரின் வளர்ச்சிக்கு முக்கியமாக நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற முதன்மை சத்துகள் தேவை. இவையே மண்ணுக்கு உரமாகத் தரப்படுகிறது. இவற்றில் நைட்ரஜன், பாஸ்பரஸ் நம் இந்தியாவிலேயே கிடைக்கிறது. பொட்டாசியம் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உரத்தால் மண் வளம் பாதிக்கப்படுகிறது என்று சொல்ல முடியாது.
மண் வளத்தை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. உரங்களை பயன்படுத்துவதன் மூலமே பயிர்களின் ஊட்டச் சத்து தேவையை தற்போதைய சூழ்நிலையில் சரிசெய்ய இயலும்.
பொருளாதாரத்தில் உயர்வதற்கான வழி
தேடல், உழைப்பு தொய்வின்றி ஒருவருக்குள் இருந்தால் பணம்,பதவி,புகழ் என யாவையும் பெற்றுவிட முடியும். எங்கள் வீட்டில் குடும்பத்தின் பொறுப்பு என்னிடம் விடப்பட்ட போது, நான் என் தந்தையிடம் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்க முடியாது. எனவே ஒரு தொழிலைத் தொடங்கலாம் எனக் கூறினேன். ஊரில் உள்ள பலர் லாரி, வட்டிகடை போன்ற பல தொழில்களைச் செய்து கொண்டிருந்தனர். எங்கள் குடும்பத்தில் 1977ஆம் ஆண்டு ரூ.1,80,000 வங்கி கடனுடன் ரூபாய் 3 லட்சம் முதலீட்டில் மீன்பிடி படகுத் தொழிலைத் தொடங்கினோம். முதல் ஆண்டு சிறப்பாக இருந்தது. இரண்டாம் ஆண்டு முதல் வியாபாரத்தில் பிரச்சனை வர ஆரம்பித்தது.
நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்து, ஒரு நாள் நானும், மறுநாள் சகோதரர் என்று படகில் கடலுக்குள் சென்று தொழிலை விரிவுபடுத்த எண்ணினோம். எனினும் தொழில் எங்கள் கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. மீனவர் களை எதிர் நோக்கியே இருந்தது. 1978ஆம் ஆண்டு படகை மத்திய பாதுகாப்பு படைக்கு
ரூ.1,200 வாடகைக்குக் கொடுத்து தொழிலில் குடும்ப நஷ்டத்தைத் தவிர்த்தோம். 1980-ல் பெட்ரோல் பங்க் டீலர்சிப் சென்னையில் கிடைத்தது. எனது தம்பி கௌசிக பூபதி அவர் களுக்கு அதை எடுத்துச் செய்ய உதவி புரிந்தேன்.
சுமைகளை சுமைகளாக கருதாமல் வாழ்க்கை கல்வியாக எடுத்துக்கொண்டு போராடினால் வெற்றி நம் வசம் வந்தே தீரும்.

October 2009
















No comments
Be the first one to leave a comment.