Home » Articles » தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…

 
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…


திருமுருகன்
Author:

இங்கு… இவர்… இப்படி…

 • பிரதி வாரம் 300 முதல் 600 குழந்தைகளுக்கு அன்னதானம் அளித்தல்.
 • இயற்கை அன்னையைப் பாதுகாக்க 50 முதல் 100 மரக்கன்றுகள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று நடுதல்.
 • தெரிந்த முதியவர்களையும் ஆதரவற்றவர்களையும் தக்க இடங்களில் சேர்த்து (ஆதரவற்றஆஸ்ரம், மருதுவ மனைகள்) உதவி செய்து வருதல்.
 • கல்வி பயில முடியாத ஏழை எளிய மாணவ மாணவியர்க்கு கல்வி பயில உதவி செய்தல்.
 • 2009 ஆம் ஆண்ட முதல் ஆதர வற்ற மற்றும் பள்ளிக் குழந்தை களுக்கு இலவசமாக காலணிகள் மற்றும் நோட்டுப்புத்தகங்களை வழங்குதல்.
 • 2009 ஆம் வருடம் மே மாதம் மலைவாழ் மரபினர்கள் வசிக்கும் அத்திக்கடவு பகுதியில் 60 குழந்தைகளுக்கு சீருடை வழங்கியது.
 • 2009 ஜூன் மாதம் 1000 பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், பள்ளிப்பை, டிபன் பாக்ஸ் வழங்கியது.
 • பார்வையற்றோர் இசைவிருந்து நிகழ்ச்சியின் மூலமாக கண் தானத்தின் சிறப்பை எல்லோருக் கும் தெரியப்படுத்தி அதனால் கண்ணில்லாதோர் பெறும் பயனை உணர்த்தும் விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை வழங்கி வருதல்.
 • சாலை விதிகளின் முக்கியத் துவத்தை அதனைச் சார்ந்த எல்லோரிடமும் முக்கியமாக பள்ளி மாணவ மாணவிகளிடம் விளக்கி நடைமுறைப் படுத்துதல்.
 • பிச்சைக்காரர்கள் மறுவாழ்விற்காக அதைச் சார்ந்த நபர்களிடம் பேசி மற்றசமூக நிறுவனங்களிடம் கலந்து ஆலோசித்து அவர்களுக்கு ஒரு புனர் வாழ்வினை ஏற்படுத்த ஏதுவாக இருத்தல்.

இதுபோன்ற நற்பணிகளை மிகச் சிறப்பாக நடத்தி வருபவர் ஏதோ செல்வச் செழிப்பில் திளைக்கும் இளைஞர் அல்ல. வாழ்க்கையில் தனக் கென்று ஓர் இருப் பிடம் கூட இல்லாமல் வயிற்றுப் பிழைப்பிற் காக கோவையை நோக்கி வருகை புரிந்தவர்.

தான் பெற்ற துன்பங்களை எந்த வொரு தனிமனிதரும் நம் சமூகத்தில் பெற்று விடக்கூடாது என்பதற்காக தனக்கு கிடைத்து வரும் சொற்ப வருமானத்திலிருந்து சமூக சேவைக்கென்று ஒரு பங்கை அளித்து வருபவர்.

தனிமனித சாதிப்பை விட பலரும் இணைந்து செயலாற்றினால் இந்தச் சமூகத்திற்கு நிரம்பச் செய்ய முடியும் என்று நண்பர்கள் பலரை தன்னுடன் இணைத்துக்கொண்டு ‘நிழல்’ மைய அறக்கட்டளையை உருவாக்கி அசத்தி வருபவர்தான் திரு. முருகன்.

நமக்கு கண்ணீரை வரவழைக்கும் திரு. முருகனின் கடந்த காலம்

சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி இறுதி வரை கூட படிக்க வசதி இன்றி பத்தாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வறுமையின் காரணமாக தன்னைக் காப்பற்றி கொள்ள வேண்டி சென்னையை விட்டு கோவை வந்தவர்தான் திரு. பி. முருகன்.

“ஒரு வேளைக்கு உணவிற்காகவும், தங்கும் இடத்திற்கும் கூட மிகவும் துன்பப்பட்டு கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் சிறுமுகையில் ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்து, பசியைப் போக்கிக்கொண்டு சாலை ஓரங்களில் தங்கிக்கொண்டு இருந்தேன். எனக்கு வருமானம் போதாத காரணத்தினால் அதிகாலையில் விஸ்கோஷ் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு செய்தித்தாள்களை விநியோகித்தும் லாட்டரி டிக்கெட்களை கடைகடையாக விற்றுக் கொண்டும் வந்தேன். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஒரு வாடகை வீட்டை எடுத்துக்கொண்டு (சுப்பையாகக் கவுண்டர் தோட்டம்) தங்க ஆரம்பித்தேன். மேலும், சிறுமுகை திரு. அப்துல் அவர்களின் உதவியுடன் பழைய செய்தித்தாள்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பழைய பேப்பர் கடைக்கு எடைக்குபோட்டு அதன் மூலம் வரும் வருமானத்தைப் பெருக்க ஆரம்பித்தேன்

இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டு முன்னேறிய வேலையில் நண்பர்கள் 3 பேருடன் கூட்டுச் சேர்ந்து (குமார், சண்முகசுந்திரம், ரவி) லாட்டரி ஏஜென்சி ஒன்றைதுவங்கி படிப் படியாக முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைத்தேன்.

1993 முதல் 1997 வரை வாழ்ந்த முருகனுக்கு 3 நண்பர்களுடன் இணைந்து நடத்திக் கொண்டிருந்த வியாபாரத்தில் மந்தம் ஏற்படவே மீண்டும் துன்பத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திற்குத் தள்ளப் பட்டிருக்கிறார்.

அப்போது விஸ்கோஸில் அலுவலராக வேலைசெய்த நண்பர் திரு. வெங்கட்ராமனின் ஆலோசனையில் அவரது சகோதரர்

திரு. சுந்தரராஜன் அவர்களுடன் கோவைக்கு வந்து சாய்பாபா காலனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். மாத வருமானம் ரூ. 2000. இந்தத் தொகையில் வீட்டுவாடகை, மூன்று வேலை உணவு ஆகியவற்றை பூர்த்தி செய்துகொள்ள கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நான்கு சக்கரவாகனத்தை ஓட்டக் கற்றுக்கொண்டு கஷ்டப்பட்டு அதற்கு ஓட்டுனர் உரிமம் பெற்று அதே கம்பெனியில் ஆட்டோ டிரைவராகவும் விற்பனையாளராகவும் பணி யாற்றியிருக்கிறார். வருமானம் உயர்ந்திருக்கிறது. பின்பு கவுண்டம்பாளையம் அசோக் நகருக்கு இடம்பெயர்ந்திருக்கிறார் இங்குதான் முருகனுக்கு சமூக சேவையின் மீது ஈடுபாடு அதிகரித்து அது செயல்வடிவம் பெற்றது.

“எனக்குக் கிடைத்துக் கொண்டிருந்த வருமானத்தில் ஒரு பகுதியினை 20.06.1999 அன்று ஏழை குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு கொடுப்பதற்காக சேமிக்கத் தொடங்கினேன். சேமிக்க தொடங்கிய சிறிது காலத்திற்கு பிறகு முதல் கட்டமாக 25 ஏழைக் குழந்தைகளுக்கு சாய்பாபா கோயிலில் உள்ள உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் கொடுக்கத் தொடங்கினேன். அதன் பிறகு ரோட்டில் உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் அன்னதானம் வழங்க ஆரம்பிந்தார்.

2002 முதல் 2006 வரை பலு தூக்கும் போட்டியிலும் மற்றும் ஆணழகன் போட்டி யிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றேன். மீண்டும் செய்யும் தொழிலில் இடையூறுகள் ஏற்பட, நிரந்தரமான வருமானத்திற்கு வழிதேட வேண்டியதாயிற்று.

நல்ல மனம் படைத்தவர்களை ஆண்டவன் சோதித்துப் பார்ப்பான் என்பது இதுதானோ, அதே சமயம் கைவிட மாட்டான் என்று சொல்வார்களே, முருகனை கை விட்டிருக்க மாட்டான் என்று நாம் எண்ணியபோது அவரே, ஓரியண்ட் ஹார்டுவோர் அண்டு டூல்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனர் உயர்திரு. ஷபீர் இமானி அவர்களின் சந்திப்பிற்குப்பின் ஒரு நிரந்தர வேலை, நிரந்தர வருமானம் கிடைக்கப் பெற்றேன்.

இருக்க ஓர் இருப்பிடமும் உண்ண உறங்க உறைவிடமும் கிடைத்தவுடன், இது கிடைக்கப் பெறாத மக்களைப் பற்றி மேலும் சிந்திக்க ஆரம்பித்தேன். அதன் மூலமாக பிறந்தது தான் பெருமளவு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம். முதலில் 25 நபரில் ஆரம்பித்து இன்று மாதம் 1500 முதல் 2000 நபர் வரை அன்னதானம் செய்ய முடிகிறது. என் பணி பாதித்துவிடக் கூடாது என்பதற்காக சமூக சேவையில் ஆர்வமுற்றபெண்ணையே திருமணம் புரிந்துகொண்டேன்.

2005 ஆம் ஆண்டு ஐந்து நண்பர்களுடன் (செல்வம், செல்வக்குமார், முரளி, சதாசிவம், சுதர்சம்) இணைந்து “ப்ரண்ட்ஸ் குரூப் ஆப் வாய்ஸ்” என்றபெயரில் மரக்கன்றுகள் வைப்பது உள்ளிட்ட சமூகப் பணிகளைச் செய்ய ஆரம்பித்தோம். மேலும் இப்பணி சிறக்க சமூக ஆர்வமுள்ள 20 நபர்களைச் சேர்த்துக்கொண்டு அவர்கள் மூலம் ஒருவருக்கு 100 ரூபாய் என சேர்த்து சமூக சேவை செய்வதை மிகப் பெரிய பொறுப்பாக ஏற்றுக்கொண்டு பணிகளை செய்து வருகிறோம். 12.12.2008 ல் ‘நிழல் மையம்’ அறக்கட்டளையை உருவாக்கி தன்னால் இயன்ற பணிகளை நண்பர்களுடன் அற்புதமாக செய்து வருகிறார் திரு. முருகன். 4 நபர்களுடன் ஆரம்பிந்த இந்த மையம் இன்று 25 க்கும் மேற்பட்ட நபர்களை உள்ளடக்கி உயர்ந்து நிற்கிறது.

வேதாத்ரி மகரிஷி அவர்கள் அருளிய உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு, சமூக நலனில் ஆழ்ந்த அக்கறை இவைகள் உத்தமரின் இயல்பு என்பதைத் தவிர நாம் முருகனைப் பற்றி வேறு என்ன சொல்ல முடியும்.

நிழல் மையத்தின் எதிர்காலப்பணி

பிச்சைக்காரர்களை ஒழிப்பது

 • சாலைகளில் பிச்சை எடுப்பது, அவர் களுக்கு பண உதவி செய்வது ஆகிய வற்றை சட்டப்படி குற்றம் ஆக்குதலை அரசாங்கத்திற்கு அறிவித்தல்.
 • உடல் ஆரோக்கியமும் உறுதியும் இருந்து பிச்சை எடுப்பவர்களை மற்ற பிற தொழில் களைச் செய்து வாழ யோசனைகளையும் இயன்றஉதவிகளையும் செய்து சரி செய்தல்.
 • வயதான பிச்சைக்காரர்கள், உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள் இவர்களை அரசாங்க காப்பகங்களில் அமர்த்தி ஆவண செய்தல். இதற்காக அரசாங்கத் திடம் காப்பகங்களின் தேவைகள் பற்றி எடுத்துரைத்தல்.
 • தெருக்களிலும், பொது இடங்களிலும் படுத்துக்கொண்டு பிச்சை எடுப்பதை சட்டப்படி குற்றம் ஆக்க ஒவ்வொரு தனிமனிதனையும் உதவிக்கு அழைத்தல்.
 • ஒவ்வொரு டிராபிக் சிக்னலிலும் பிச்சை எடுப்பதை தவிர்க்க பொதுமக்களும் காவல்துறையினரும் கூட்டு முயற்சியில் உழைக்க வலியுறுத்தல்.
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment