Home » Articles » நிறுவனர் நினைவுகள்

 
நிறுவனர் நினைவுகள்


தியாகராசன் தூசி
Author:

கிராமத்துக் காதலர்

கிராம வளர்ச்சியிலே மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அய்யா இல.செ.க. அவர்கள். ஆரம்பத்தில் ஒரு சிறிய ஊற்று போலவே, அந்த எண்ணம் அவர் உள்ளத்தில் உருவெடுத்தது. பின்னாளில் அது மெல்ல மெல்ல வளர்ந்து, பெரும் நீர்வீழ்ச்சி போல பீறிட்டுப் பாய ஆரம்பித்துவிட்டது. இதற்குக் காரணமானது இரண்டு நிகழ்ச்சிகள்.

அது 1979-80 ஆம் ஆண்டு காலம். ஒருமுறை, திருப்பூருக்கு அருகேயுள்ள ஒரு கிராமக் கூட்டத்திற்கு அய்யா போயிருந்தார். கூடவே, நானும், சில மாணவ நண்பர்களும் போயிருந்தோம். அந்தக் கூட்டத்திற்கு சுற்றியுள்ள கிராம மக்களும் வந்திருந்தார்கள். மாலை ஆறு மணிக்குத் தொடங்கிய அந்தக் கூட்டத்தில், கடைசி யாக அய்யா சிறப்புரையாற்றுவதாக நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது. அவருக்கு முன்பாக, நிறையப் பேர் பேசுவதாகவும் இருந்தது.

ஆனால், வரவேற்புரை கூறி முடித்த வுடனே, பெரும்பாலோர் எழுந்து, அய்யாவை முதலில் பேசுமாறு வற்புறுத்த ஆரம்பித்தார்கள். என்ன காரணமென்று விசாரித்தபோது, ஒருவர் எழுந்து “எங்கள் கிராமத்திற்கு ஏழு மணிக்கு மேல் பஸ் வசதியில்லை. அதைத் தவறவிட்டால், மூணு மைல் நடக்க வேண்டும்”, என்றார்.

அய்யா திகைத்துப்போனார். “சுதந்திரம் வாங்கி முப்பது ஆண்டுகள் முடிந்தும், பஸ் வசதி கூட வரவில்லையா?” என்று கேட்டார். உடனே இன்னொருவர், “அதுகூட பரவால்லீங்க. எங்க ஊர்லே குடிக்கிறதுக்கே தண்ணி இல்லீங்க. ரோட்டுலே கரண்ட் லைட் இல்லீங்க. அதோ, அவுங்க ஊர்லே ஆஸ்பத்திரி வசதி இல்லீங்கோ. யாருக்காவது அடிபட்டாலே, வெசம் தொட் டாலே, தூக்கி மாட்டுவண்டியிலே போட்டுட்டு திருப்பூருக்கு ஓடோனுமுங்க. பள்ளிக் கூடத்துக்குச் சரியான கட்டிடம் இல்லீங்க. இதோ, இவுங்க ஊர்லே, செத்தா பொதைக் கிறதுக்கு சுடுகாடு இல்லீங்கோ. பொணத்தைத் கொண்டு போய் பொதைக்கிறதுக்குள்ளே, நாம செத்து போயிடுவமுங்க”, என்று அடுக்கித்தள்ள ஆரம்பித்தார்.

அவர்களுடைய சிரமங்களை உணர்ந்த அய்யா, முதலிலேயே பேசி முடித்தார். பேசும் போது அய்யா, “இந்தியாவின் நாடி நரம்புகளே கிராமங்கள்தான். அவைகள் தளர்ந்து போனால், பாரதத் தாய்க்குப் பக்கவாதம் வந்துவிடும். எனவே, ஆட்சியாளர்களே, முதலில் கிராமத் திற்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுங்கள்”. ஓ… என்றன் கிராமத்து மக்களே, உங்கள் வேர்வையில் தான், எங்கள் மின் விசிறிகள் ஓடுகின்றன என்பதை நாங்கள் எப்போதும் உணர்ந்து வருகிறோம். இனி கிராம வளர்ச்சியே எனது குறிக்கோள். உங்களது கிராமத் தேவைகளை, ஊர்ப் பொதுச் சிக்கல் களை எனக்கு எழுதுங்கள், இன்றில்லா விட்டாலும், காலம் வரும்போது கட்டாயம் தீர்வு காண்போம்”, என்று உணர்ச்சிப் பிழம்பாகப் பேசினார்.

கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பும் போது, வரும் வழியெல்லாம், “இலக்கியம் பற்றி எழுதியது போதும். இனி, கிராமங்களைப் பற்றி எழுதப் போகிறேன்”, என்று பேசிக் கொண்டே வந்தார். வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். கனத்த இதயத்தோடு.

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், வருடந்தோறும் முத்தமிழ் விழா நடைபெறும். அதற்கான ஆலோசனைக்கூட்டம் அய்யாவின் அறையில் நடந்தது. மாணவப் பிரதிநிதிகள் நிரம்பியிருந்தனர். அதில் ஒருவர் இயல், இசை விழாக்களுக்கு அடுத்ததாக வரும் நாடக விழாவுக்கு ,இயக்குனர் பாரதிராஜா அவர் களை அழைக்கலாம் என்று முன்மொழிந்தார்.

“ஆமாங்கய்யா, முற்றிலும் வித்தியாசமாக, கிராமச் சூழலில், கிராம மக்களைப் பாத்திரங் களாக வைத்து, பதினாறு வயதினிலே’ ன்னு, ஒரு படத்தை வெளியிட்டிருக்காரு. ரொம்ப பிரமாதம். அவரையே கூப்பிடலாமுங்க”, என்று நான் வழி மொழிந்தேன்.

புருவங்களை உயர்த்தியவாரே அய்யா, “அப்படியா! அதிலே கிராம மேம்பாடு பற்றி ஏதாவது சொல்கிறார்களா?” என்றார்

எனக்கு திடுக்கென்றது. பாட்டு, நடனம், நகைச்சுவை எப்படி என்றால் சொல்லலாம். கிராம மேம்பாடு பற்றியா? அதுவும் இந்தககாலத் திரைப்படங்களிலா? அய்யா எந்த உலகத்தில் இருக்கிறார்? என்று எண்ணிக்கொண்டேன். சரியான பதில் தர முடியாமல், மேலும் கீழும் விழித்தபடியே, “அய்யா, அந்தக் கண்ணோட்டத் திலே நான் பாக்கலீங்க. ஆனா, அந்தப் படத்திலே மயிலுன்னு ஒரு அழகான பொண்ணு வருது. அதை வச்சுத்தான் கதையே…”, என்று இழுத்தேன்.

“ஓ… இப்போ தெரியுது. நீங்க எந்தக் கண்ணோட்டத்திலே பாத்தீங்கன்னு”, என்று கிண்டலாகச் சொல்ல, அத்தனை பேரும் ‘ஹோ’ வென்று சிரித்துவிட்டனர்.

கொஞ்சம் சமாளித்தபடியே, “அய்யா, எதற்கும் நீங்கள் ஒருமுறைஅந்தப்படம் பார்த்தால் நன்றாயிருக்கும்”, என்றேன். முதலில் அய்யா மறுத்து விட்டார். விடாப்பிடியாக நான் வற்புறுத்தியதால், இறுதியில் வர ஒப்புக் கொண்டார். பாரதிராஜாவையே அழைப்பதாக முடிவாகி, மாணவர்களும் கலைந்து சென்றனர்.

அன்று மாலை, அய்யா, நான், எனது மாணவ நண்பர் மோகன் ராஜன் (கரூரில் இன்று சிண்டிகேட் வங்கியில் தலைமை மேலாளராக இருக்கிறார்) மூவரும் சென்று படம் பார்த்தோம்.

வீட்டுக்கு வந்ததும், அவரது துணைவியார், ‘அய்யாவுக்கு சினிமாவே பிடிக்காது. அவரையே அழைச்சிட்டுப் போயிட்டீங்களே! இது உலக அதிசயந்தான். ஆமா, நாங்க கூப்பிட்டா எங்களோடு வர்ரதில்லே. உங்க மாணவர்கள் கூப்பிட்டா மட்டும் போறீங்களே”, என்று கோபமாகக் கேட்டார். அய்யா அதற்கு ஒரு சிரிப்பைப் பதிலாகத் தந்தார். “சரி படம் எப்படி இருந்துச்சு?” என்றார் அவரது துணைவியார் மீண்டும்.

“உம்-உம். பரவாயில்லை. இருந்தாலும் சில காட்சிகள் ஏடாகூடமாக இருந்தது. அந்த நேரத்தில் நான் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டேன்”, என்றார் அய்யா.

“அதுக்கு எதுக்குப் போகணும்? சரி, நீங்க என்ன பண்ணுனீங்க?” என்று அம்மா என்னைக் கேட்டார்கள்.

நான் தயக்கமாக, “நான் ஒரு கண்ணை மாத்திரம் மூடிக்கொண்டேன்”, என்றேன்.

“அதென்ன கணக்கு?” என்றார் அம்மா.

“நாம பாக்கவேணும்னு தான் பல லட்சத்தைக் கொட்டி, பாரதிராஜா படம் எடுத்திருக்காரு. அந்தக் காட்சிகளை நான் பாக்கலேன்னா. அவரு வருத்தப்படுவாரு. அதனாலே, அவருக்காக ஒரு கண்ணைத் திறந்துட்டேன்ங்க. அந்தக் காட்சிகளைப் பாத்தேன்னா, அய்யா என்மேலே வருத்தப் படுவாரு. அதனாலே, இவருக்காக ஒரு கண்ணை மூடிக்கிட்டேன்ங்க” என்று சமாளித்துச் சொன்னேன்.

கோபத்தை மறந்து அம்மா சிரிக்க, அய்யா சிரிக்க, குழந்தைகள் சிரிக்க, சூழலே மாறிப் போனது.

அதற்கடுத்த பதினைந்தாவது நாளில் முத்தமிழ் விழா நடந்தது. பராதிராஜாவும் வந்து கலந்துகொண்டார். அவரது கைகளால், சிறந்த நாடக இயக்குனருக்கான பரிசு எனக்குக் கிடைத்தது. விழா முடிவில் சிற்றுண்டியின்போது அய்யா, அவரிடம் சொன்னார்.

“உங்களுடைய படத்திலே கிராமியச் சூழல் மணக்கிறது. மிக அருமை! கிராமத்துக் காதலை மையமாக வைத்துக் கதை போகிறது. இன்னும் கிராம மக்களிடையே ஏராளமான குறைநிறைகள் உள்ளன. வறுமை, அறியாமை, மூட நம்பிக்கை, போலி கௌரவம், இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கையின்மை, இப்படி எத்தனையோ… இவற்றையும் வருங்காலத்தில் நீங்கள் காண்பிக்க வேண்டும்”, என்றார் அய்யா.

அதற்கு இயக்குனர் பாரதிராஜா, “இதுவரை என்னை எல்லோரும் ஆகா, ஓகோவென்று பாராட்டினார்களே தவிர, ஆலோசனை சொல்ல வில்லை. நீங்கள்தான் சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் நன்றி. எனது அடுத்த படங்களில் அவற்றையெல்லாம் கொண்டு வருவேன்”, என்று அன்பொழுகச் சொன்னார்.

“கிராமங்களைக் காட்டி, சினிமாக்காரர்கள் தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள லாம். ஆனால், எங்களது நோக்கம், கிராமங்களின் வருமானத்தைப் பெருக்க வழியென்ன என்று கண்டுபிடிப்பது தான்”, என்று பல்கலைக் கழகத்தின் குறிக்கோள் பற்றியும் அய்யா சொல்ல, இயக்குனரின் விழிகள் வியப்பால் விரிந்தன.

“உங்கள் வார்த்தைகள் எனக்குப் புது வேகத்தைத் தந்திருக்கின்றன. உயர்ந்த எண்ணம் உங்களுடையது”, என்று பாராட்டிவிட்டு, விடைபெற்றுச் சென்றார்.

ஒரு வாரங்கழித்து, அய்யாவை சந்திக்க நானும், மோகன் ராஜனும் சென்றோம். மும்முரமாக கட்டுரை எழுதிக்கொண்டிருந்தார்.

நாங்கள் அமைதியாக எதிரில் அமர்ந்தோம். எழுதி முடித்த தாள்களைப் பார்க்கும்படி, எங்கள் பக்கம் நகர்த்தினார், பார்த்தோம்.

“கிராமங்கள்…. கிராமங்கள்… (தலைப்பு) கிராமங்களை வைத்துச் சினிமாக்காரர்கள் படம் எடுக்கிறார்கள், கிராமங்களே, தெரியாத நகரத்து மக்கள் பார்த்து மகிழ…

இந்த நாட்டின் உயிர் நாடியே கிராமங்கள் தான் என்று மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலி பெருக்கிகளில் முழக்கங்கள்…

“ஓ…. என்றன் கிராமத்து மக்களே உங்களுக்குத் தேவையானது தண்ணீர் ஒன்றுதான்…

“கங்கையும் காவிரியும் இணையாதா? நம் கவலைகள் தீராதா?” (ஆதாரம் – கிராமங் களுக்குள்ளே பக்கம் 14) என்று எழுதினார். படித்துவிட்டு நிமிர்ந்தபோது சொன்னார்.

“இனிமேல் கிராமங்களை நோக்கி பயணம் செல்லவிருக்கிறேன். கிராமங்களுக்குள்ளே, என்ன தேவை என்று எழுதவிருக்கிறேன். நம் தலைவர்களுக்கும், மக்களுக்கும் என் நூல்கள், கிராமத்தைப் பார்ப்பதற்கு, ஜன்னல்களாக உதவும்.”

தான் சொன்னபடியே, கிராமங்களுக் குள்ளே என்றும், கிராமங்களை நோக்கி என்றும், கிராமத்து ஓவியங்கள் என்றும் நூல்களை எழுதினார். அவற்றிலே, கிராம வளர்ச்சிக்குப் பல்வேறு ஆலோசனைகளைக் கொட்டிக் குவித்திருக்கிறார். ஆட்சியாளர்கள் அவற்றைச் செயல்படுத்தினால், நாடு சுதந்திரம் பெற்றதின் நோக்கம் நிறைவுறும்.

காந்தியடிகள் காண விரும்பிய ராம ராஜ்ஜியம் என்பதே கிராம ராஜ்ஜியம் தானே!

 

1 Comment

  1. S.M.PANNEERSELVAM says:

    dear thusi, gts from panneerselvam from london. read ur article in sep2009 issue. very good. as told mr. barathiraja released more films on the issue of our villages.
    we also do wonders ,if we really think about our fellohumans.
    with love
    panneerselvam

Post a Comment


 

 


September 2009

வருங்காலம் மல்டிமீடியாவில்
ஆத்ம சக்தி (Will Power)
நமக்குள் நாம்
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
கல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை
கண்ணாடி உறவுகள்
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்
உன்னதமாய் வாழ்வோம்!
மனிதா! மனிதா!!
மனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை
பாதுகாப்பான முதலீடு
உடலினை உறுதி செய்
ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
புலம்பலை நிறுத்து
அன்பை ஆயுதமாக எடு
இலட்சிய தீயே நீ!
வெற்றி வந்து குவியும்
வளமான தேசத்தை உருவாக்க
இன்று மகிழ்ச்சி நாள் -4
இன்று மகிழ்ச்சி நாள் -3
இன்று மகிழ்ச்சி நாள் -2
இன்று மகிழ்ச்சி நாள் -1
சிந்தனைத் துளிகள்
கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்
அச்சீவர்ஸ் அவென்யூ – 2
அச்சீவர்ஸ் அவென்யூ -1