Home » Cover Story » சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!

 
சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!


பாலசுப்ரமணியன் எம்
Author:

நேர்முகம் : என். செல்வராஜ்

சிந்தனையை சிறப்பானதாக்கிக் கொண்டால் ‘உயர்வு’ உறுதி என்றும், காலமெல்லாம் பெயர் நிலைபெற வாழ்தலே ‘வாழ்வு’ என்றும் வாழக்கூடியவர்.

அலட்சியத்தை விட்டுவிட்டு இலட்சியத்தை கைக்கொள் வெற்றி உன்வசம் என வெற்றியைத் தன் வசப்படுத்தியவர்.

“பொன்னார் திருமேனியனே புலித்தோலை அரைக்கசைத்து” என்று சுந்தரர் பாடிய பாடல் ஸ்தலம் அமைந்த கொள்ளிடக்கரையில் பிறந்தவர்.

அமைதி நிரம்பிய விசாலமான பார்வையுடன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து காரியத்தை கச்சிதமாக முடித்து பலரின் பாராட்டுகளை நிரம்பப் பெற்றுவரும் வங்கி தலைமைப் பொறுப்பாளர் இவர்.

கூட்டுறவு வங்கிகளில், 1988 முதல் கம்ப்யூட்டரை பயன் படுத்திய முதல் வங்கி ‘ரெப்கோ வங்கி’ என்ற பெருமையை ஏற்படுத்தியவர்.

0% வராக் கடன் உள்ள வங்கி ‘ரெப்கோ வங்கி’ என்ற சிறப்பைப் பெற்றுத் தந்தவர்.

பிறரால் சாதிக்க முடியாததை தன்னால் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன் நஷ்டத்தில் இயங்கிய வங்கியை இன்று 35 கோடி நிகர லாபம் ஈட்டுமளவு உயர்த்தியவர் இவர்.

‘திறமையை காட்ட வேண்டிய இடத்தில் மூளையை பயன்படுத்து. மனித நேயத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் இதயத்தை பயன்படுத்து” என்கிற கருத்துக்கு உகந்தவராக

திரு. எம். பாலசுப்பிரமணியம் அவர்களை திரு. எஸ்.ஆர்.கே. தேவராஜன் அவர்களுடன் நாம் சந்தித்தோம். அவருடனான சந்திப்பு நம்மை நிச்சயம் சாதிக்கத் தூண்டும்.

ரெப்கோ வங்கி என்பது…?

இலட்சக்கணக்கான பர்மா இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்பி புதுவாழ்வை எதிர்நோக்கி காத்திருந்த கால கட்டத்தில் நமது இந்திய அரசு ஒரு தொலை நோக்குப் பார்வையில் திட்டம் ஒன்றை வகுத்தது. அதுதான் Repatriates Co-operative Finance & Develop ment Bank’ என்று அழைக்கப்பட்ட ‘தாயகம் திரும்புவோர் கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு வங்கி’. இச்சீரிய முயற்சியில் மத்திய அரசும், தென்மாநில அரசுகளும் முதலீடு செய்து பங்குகொண்டது. 19.11.1969 ல் சென்னையில் ரெப்கோ வங்கி துவங்கப்பட்டது.

தாயகம் திரும்பியவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்திலும், கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் குடியேறினர். இலங்கையிலிருந்த நம் மக்கள் சிரிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நம் தாயகம் திரும்பினார்கள். தேயிலை தோட்டத்தில் வேலைபார்த்து பழக்கப்பட்ட நம் மக்கள் நீலகிரி மற்றும் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணியில் அமர்த்தப்பட்டார்கள். மேலும் ஏனையோருக்கு கேரளாவில் உள்ள புனலூர் ரப்பர் தோட்டங்களிலும் மற்றும் கர்நாடகாவைச் சுற்றிய தோட்டங்களிலும் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

‘ரெப்கோ வங்கி’ தாயகம் திரும்பியோரில் சிறுதொழில் புரிபவர்களுக்கு எளிய முறையில் கடனுதவி வழங்கியது. இதற்கும் மேலாக குடிபெயர்ந்தோரை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு கடனுதவி மற்றும் சலுகைகளை இவ்வங்கி வழங்கி வருகிறது.

கடந்து வந்த பாதை

தஞ்சாவூர் அருகே திருமழபாடி என்னும் குக்கிராமத் தில் மாணிக்கம் அங்கம்மாள் தம்பதிக்கு மகனாக 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி மகனாக பிறந்தேன. அப்பாவுக்கு தொழில் விவசாயம். ஒரு சகோதரன் ஒரு சகோதரி உடன் பிறந்தவர்கள். அரசினர் பள்ளியில் படிப்பு. திருச்சி செயின்ட் ஜோசப்

கல்லூரியில் PUC இந்தக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்ததே ஒரு சுவையான சம்பவம். கல்லூரியின் முதல்வர் திரு.மேத்தியாஸ் அவர்கள் மாணவர்களை இன்டர்வியூ மூலமாக தேர்வு செய்து கொண்டிருந்தார். அப்போது முப்பதாவது மாணவனாக நின்றுகொண்டிருந்த என்னை திடீரென அழைத்தவர் உன்னுடன் யார் வருகை புரிந்திருக்கிறார்கள் என்று கேட்டார். உடன் யாரும் வரவில்லை, நான் மட்டுமே தனியாக வந்திருக்கிறேன் என்று கூறினேன். (சக மாணவர்கள் அனைவரும் உடன் யாரேனும் ஒருவரை அழைத்து வந்திருந்தார்கள்.) மதிப்பெண் பட்டியலை பார்த்தார். நான் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றிருந்தேன். பள்ளியின் முதல்வரும் எனக்காக நற்சான்றிதழ் அளித்திருந்தார். எல்லாவற்றையும் கண்ணுற்றவர் எனக்கு உடனே கல்லூரியில் படிக்க அனுமதி வழங்கினார். எதிர்பாராமல் படிக்கும் காலத்திலேயே எனக்கு முதன்மை கிடைத்தது. அச்சம்பவம் அப்போது மனதுக்குள் திறமைக்கு ஒரு அங்கீகாரம் இருக்கும் என்ற நம்பிக்கையை வரவழைத்தது.

PUC முடித்தவுடன் மருத்துவத் துறையில் சேரவேண்டும் என்கிற விருப்பமே மேலோங்கியிருந்தது. நல்ல மதிப்பெண்ணும் எடுத்திருந்தேன். ஆயினும் ஏதோ காரணத்தால் மருத்துவத்தில் இடம் கிடைக்கவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் B.Sc (Agri) எடுத்துப் படித்து தங்கப் பதக்கம் பெற்றேன். M.Sc (Agri)யும் அப்பல்கலைக் கழகத்திலேயே படித்து தங்கப் பதக்கம் பெற்றேன். அரசு வேலை உடனே கிடைத்தது. புதுக் கோட்டை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் பணி யில் அமர்ந்தேன். அப்போது IIM-அகமதா பாத்தில் MBA படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு ஆனேன். மணிபால் சிண்டிகேட் பேங்கில் 14 வருடம் திட்ட வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றினேன். அக்கால கட்டத்தில் நல்ல அங்கீகாரமும், அனுபவமும் கிடைக்கப்பெற்றேன். அப்போது அரசால் ஸ்ரீலங்கா, பர்மா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர் களுக்காகவே ஆரம்பிக்கப் பட்ட கூட்டுறவு மேம்பாட்டு வங்கியான ரெப்கோ வங்கியில் நிர்வாக இயக்குனருக்கான தேர்வு நடந்தது. தேர்வில் தேர்ந்தெடுக்கப் பட்டேன். என் பணிக் காலம் சவாலாக அமைந்தது. பொறுமையுடன் எதிர்கொண்டேன். இன்றைக்கு வங்கியின் செயல் பாடு பிறர் பாராட்டுமளவு வளர்ந்திருக்கிறது என்பதை எண்ணி மகிழ்கிறேன்.

ரெப்கோ வங்கிதனை வெற்றிப்பாதைக்கு அழைத்து வர நீங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து…

1969ல் எந்த மக்களுக்காக வங்கி ஆரம்பிக்கப்பட்டதோ அவர்களின் தாயக வருகை 1984ல் நின்று போயிற்று. அந்த ஆண்டு முதல் மத்திய மாநில அரசுகள் வங்கியினை இலாபகரமாக இயக்க மாற்று வழிகளை யோசித்தன. வங்கி, உருவான நாட்களில் இருந்து அது வங்கி நிர்வாகத்தில் அனுபவம் இல்லாத தலைமையில் செயல்பட்டு வந்தது. வங்கியின் செயல்பாடுகளில் திருப்தி அடையாத அரசு, 1987ல் வங்கியை மூடி விடலாமா என்று கூட யோசித்தது. அப்போது மாற்று முயற்சியாக வங்கி நிர்வாகத்தில் முன் அனுபவம் நிறைந்த ஒருவரை வைத்து வங்கியை இயக்கி பார்த்தால் என்ன என்று யோசித்து முடிவெடுத்தது. சிண்டிகேட் வங்கியில் இருந்த என்னை இந்த தலைமை பொறுப்புக்கு அரசு தேர்வு செய்தது. 1987ல் பொறுப்பேற்றேன்.

சிரமம் நிரம்பியிருந்த வங்கியை சிகரத்துக்கு உயர்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்றாலும் அதை அடைந்தே தீர்வது என்று உறுதி கொண்டேன்.

எந்த ஒரு காரியத்தை சாதிக்க வேண்டு மென்றாலும் உடன் இருக்கும் மனித வளம் முக்கிய அம்சம் ஆகும். அப்போதிருந்த ஊழியர்கள் வங்கி வியாபாரத்தை கையாளக் கூடிய அனுபவம் அற்றவர்களாக இருந்தனர். அவர்களுக்கு தேர்ச்சி, நம்பிக்கை வரவழைக்க வேண்டும்.

அதற்காக அவர்களுக்கு நான் சவால் விடுத்தேன். “இந்த வங்கியியை வணிகரீதியில் வெற்றி பெறச் செய்யுங்கள். சமுதாயத்தை உயர்த்துங்கள். தாயகம் திரும்பியோரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துங்கள்” என்பதே அந்த சவால்.

நான் எனக்கே இட்டுக்கொண்ட சவால் – வங்கியை உயர்த்தி, தாயகம் திரும்பியோரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, சமுதாயத்தை உயர்த்தி ஊழியர்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்த வேண்டும் என்பது.

நான் என் சக ஊழியர்களுக்கு மூன்று அடிப்படை சிந்தாந்தங்களை விளக்கினேன்.

ஒன்று : சுவர் இருந்தால் தான் சித்திரம். எனவே வங்கியை பலப்படுத்துங்கள். நீங்கள் பலப்படுவீர்கள்.

இரண்டு : நீரளவே ஆகுமாம் ஆம்பல். வங்கி உயரும் மட்டத்திற்கே நீங்கள் உயர்வீர்கள்.

எனவே வங்கியை உயர்த்துங்கள். நீங்களும் உயர்வீர்கள்.

மூன்று : உங்களுக்கு வங்கி வேலை வாய்ப்பளித்தது. நீங்கள் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கி சமுதாயத்திற்கு சேவை செய்யுங்கள். இவைகளை அடைய மூன்று முக்கிய வேலைகள் செய்யப்பட வேண்டும்.

அதற்கான தாரக மந்திரம்.

1. உழைப்பு 2. உழைப்பு 3. உழைப்பு என சகதோழர்கள் என் அறைகூவலுக்கு எதிரொலி யாக அளித்த ஒத்துழைப்பு பிரமிக்கத்தக்கது!

அடுத்து வாடிக்கையாளர்கள்

தாயகம் திரும்பிய மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அரசு வங்கி மூலம் செய்து வரும் சேவைகளை எடுத்துச்சொல்லி புரிய வைத்தேன். பெற்ற கடனை திரும்பச்செலுத்தினால் மீண்டும் அவர்கள் தொழில்பெருக ஆவண செய்வதாக வாக்களித்தேன்.

தாயகம் திரும்பி மக்களிடையே செய்யும் வியாபாரம் வங்கிக்கு போதுமானதாக இருக்காது என்றகாரணத்தினால் சந்தையில் நுழைந்து மற்ற குழுமங்களையும் (SEGMENTS) இழுக்க வேண்டும் என்றுணர்ந்தேன். அதனால் வரும் இலாப நன்மைகளை தாயகம் திரும்பியவர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன்.

புதிய வாடிக்கையாளர்களை புதிய கடன் திட்டங்கள் மற்றும் வைப்புத்திட்டங்கள் மூலம் இழுத்தேன்.

சிந்திய வேர்வைகள் முத்தாக விளைந்தது. கொண்ட வெற்றிகள் ஊழியர்களுக்கு ஊக்க மாத்திரைகளாக செயல்பட்டது.

வெற்றிகள் வங்கியின் இலாபத்தை அதிகரித்தது. ஊழியர்களுக்கு இதர வணிக மற்றும் அரசு வங்கிகளுக்கு இணையான சம்பளம் சலுகைகள் வந்தடைந்தது. ஊழியர்கள் மேலும் ஊக்கம் பெற்றனர்.

நான் என் மீது கொண்ட நம்பிக்கை. எனது சக ஊழியர்களிடம் நான் கொண்ட நம்பிக்கை. அவர்கள் என் மீது வளர்த்துக்கொண்ட நம்பிக்கை.

வாடிக்கையாளர்கள் என் மீது வைத்த நம்பிக்கை. நாங்கள் வாடிக்கையாளர்கள் மீது வைத்த நம்பிக்கை. இது ஒரு மாபெரும் நம்பிக்கை கூட்டணியாக மாறியது.

இதற்கெல்லாம் கிரீடம் வைத்தாற்போல அரசு எங்கள் வெற்றியைக்கண்டு எங்கள் மீது நம்பிக்கை வைத்தது.

வங்கி அசுர வளர்ச்சியை கண்டது. நஷ்டத்திலிருந்த வங்கி 1992-93ல் இலாபத்தை ஈட்டியது. இரண்டு கிளைகளில் இருந்து 55 கிளைகளாக விரிந்தது. 55 ஊழியர் கூட்டம் 550 ஊழியர் கூட்டமாக பெருகியது.

இருபது வருடங்களுக்கு மேல் நஷ்டத்தை மட்டுமே பார்த்த வங்கி, மொத்த நஷ்டத்தையும் ஈடுகட்டி அரசு / வணிக வங்கிகளுக்கு மேலாக இலாபத்தை எடுத்தது. விளைவு அரசாங்கமே வியந்து மூலதனத்தை உயர்த்தி கொடுக்க முன்வந்தது.

தாய் வங்கியாக பரிணமாக வளர்ச்சி அடைந்த ரெப்கோ வங்கி ஒவ்வொரு துறையினருக்கும் உதவி செய்ய பிள்ளைகளாக பல ஸ்தாபணங்களை உருவாக்கியது.

1. ரெப்கோ வீட்டுவசதி வங்கி

2. ரெப்கோ இன்பிரா (Infra)

3. ரெப்கோ எம் எஸ் எம் இ (MSME)

4. ரெப்கோ பவுண்டேஷன் (Foundation)

இப்போது 1500க்கு மேல் வேலை வாய்ப்பு. ரூ.5000 கோடிக்கு மேல் வர்த்தகம். 60 கோடிக்கு மேல் இலாபம். நாட்டுக்கு நாங்கள் அளிக்கும் காணிக்கை.

அரசு இலாகா போல் செயல்பட்டிருந்த வங்கியை பிற வணிக வங்கியைப் போல் இன்று உயர்த்தியிருக்கிறீர்கள் என்றால் எளிய கடன் திட்டங்கள் தான் காரணம் என்று சொல்லலாமா?

உறுதியாகச் சொல்லலாம். எங்கள் கடன் திட்டங்கள் மிகவும் எளியது. நல்ல பலன் தரக்கூடியது.

 • ‘Hire Purchase Scheme’’ எனப்படும் நூதன வகை கடன் உதவி திட்டத்தை தென்னிந்திய கூட்டுறவு வங்கிகளில் முதன் முறையாக அறிமுகப்படுத்தினோம்.
 • ‘Daily Deposit Scheme’’ என்ற புதிய திட்டத்தை முதன்முறையாக ரெப்கோ அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலம் வங்கியின் முகவர், வாடிக்கையாளரின் இடத்திற்கே சென்று டெபாசிட் தொகையையும் கடனுக் குண்டான தொகையையும் வசூலிப்பது.
 • ‘Bank Assurance Product’’ திட்டத்தை தென்னிந்தி யாவிலேயே முதலாவதாக அறிமுகப் படுத்திய கூட்டுறவு வங்கி.
 • ஆயுள் காப்பீட்டு கழகத்துடன் (LIC) இணைந்து ‘ஆயுள் காப்பீட்டு பாலிசி’ வழங்குவது.
 • ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘Non-life Insurence’’ திட்டத்தை செயல்படுத்தியது.
 • அயல் நாட்டில் இருப்பவர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்கு ஏற்புடையதாக ‘Western Union Money Transfer’ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருவது.
 • நிறுவனத்துடன் இணைந்து பரஸ்பர பாலிசிகளை வங்கியிலேயே வழங்க ஏற்பாடு செய்திருப்பது.
 • முதியோர்களின் டெபாசிட் தொகைக்கு அதிக வட்டி, டெபாசிட்தாரர்களுக்கு வட்டி விகிதம் கூடுதல் என செயல்பட்டு வருவது. (மற்ற வங்கிகளில் கடன் பெற முடியாதவர்கள் எங்கள் வங்கியில் கடன் பெற முடிந்தது அவர்கள் திரும்பவும் சரியாக கடனை அடைத்தனர்.)

வங்கியின் வளர்ச்சிக்கான திட்டங்கள் என்று நீங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது?

 • ரெப்கோ வீட்டுவசதி நிறுவனத்தை குறுகிய காலத்தில் முதன்மை நிறுவனமாக உருவாக்கியது.
 • ரெப்கோ பவுண்டேசன் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு அவர்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள கடன் மட்டுமல்லாது தரமான பயிற்சிகளையும் கொடுத்துவருவது.
 • ராயல் சுந்தரம் LIC அவர்களுடன் இணைந்து இன்சூரன்ஸ் பிரிவில் கால்பதித்தது.
 • ரெப்கோ அறக்கட்டளை மூலம் தாயகம் திருமம்பியோருக்கு நிரந்தர நலத்திட்டங்கள் செயல்படுத்த வழிவகை செய்தது.
 • Repco MSME Developments & Finance Ltd மூலம் சிறு மற்றும் நடுத்தர மைக்ரோ நிறுவனங் களுக்கு ஆக்கத்திற்கு உதவிபுரிந்தது.

இப்படி நிறைய திட்டங்களை உருவாக்கி செயல்பாட்டுக்கு கொண்டுவந்தோம். இன்று வங்கியானது நேரடி மற்றும் பிறவற்றின் மூலமாக 5000 கோடியளவு வர்த்தகத்தை செய்துவருகிறது.

“ஐம்பது மனிதர்கள் செய்யும் வேலையை ஒரு மிசினால் செய்யமுடியும். ஆனால் திறமை வாய்ந்த ஆற்றல் மிக்க ஒரு மனிதனின் சேவையை எத்தனை மிசின்களாலும் செய்யமுடியாது.”

தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்விற்கு இன்று ரெப்கோ வங்கி ஆற்றிவரும் பணிகள்

சுய உதவிக்குழுக்கள் அமைத்து அதன் மூலமாக நிறைய உதவிகளை அவர்களுக்கு அளித்து வருகிறோம். குன்னூர், கூடலூர் பகுதியில் அவர்கள் வாழும் இடங்களுக்குச் சென்று, தொழில் சார்ந்த பயிற்சிகள் கொடுத்து வருமானத்தை பெருக்க வழிவகையும், கடனுதவியும் தந்துவருகிறோம்.

கைவினைப்பொருட்கள் தயாரித்தல், சணல் பொருட்கள் பயிற்சி இப்படி நிறைய கைத் தொழில் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்து வருகிறோம்.

வங்கி லாபத்தில் 2 சதவீத லாபத்தினைக் கொண்டு அறக்கட்டளையை உருவாக்கியிருக் கிறோம். அதன் மூலமாக மருத்துவ வசதி, குழந்தைகளுக்கு கல்வி, அடிப்படை வசதிகள், தொழிற் பயிற்சிகள், ‘2 வில் உயர் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இலவசக் கல்வி இப்படி நிறைய சலுகைகள் வங்கியின் மூலமாக வழங்கி வருகிறோம்.

இவர்கள் எனக்கு வழிகாட்டினார்கள் என்று நீங்கள் சொல்லக்கூடியவர்கள்

எனது தோட்டக்கலை பேராசிரியர். சி.ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் பூச்சியியல் பேராசிரியர் திரு. பாலசுப்பிரமணியம். இவர்கள் இருவரும் எனக்கு நல்ல வழிகாட்டிகளாக இருந்தார்கள். திரு. சி.ஆர். முத்துக்கிருஷ்ணன் அவர்கள் ‘வாழ்க்கையின் தலையாய கடமை பெற்ற தாய், தந்தையரை பேணிப்பாதுகாத்து அவர்களின் மகிழ்ச்சியில் நம் மகிழ்ச்சியை காண வேண்டும்’ என்று அடிக்கடி வலியுறுத்துவார்.

திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் “எந்த வேலையையும் முழுமையாக சரியாகச் செய்ய வேண்டும். தவறுகளுக்கு இடம் கொடுக்கவே கூடாது” என்பார். மிகப்பெருமையாக கருதுவது, பாரத ரத்னா சி.சுப்ரமணியம் அவர்களுடன் இரண்டு ஆண்டுகள் இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு வித்திட ஒரு தேசிய விவசாய நிறுவனம் உருவாக உழைத்தது. அதன்மூலம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்றவர் களின் அறிமுகம். 90 வயதிலும் சி.எஸ். அவர்களின் நினைவாற்றலும், நாட்டுத் தொண்டும் என்னை பிரமிக்க வைத்தன.

உங்கள் விருப்பம்

பெரியவர்கள், சாதனையாளர்கள் தங்கள் அனுபவங்களை நல்ல முறையில் வளரும் தலைமுறைக்கு கொண்டு சேர்த்து, அவர்களின் பாதையை, வெற்றியின் பக்கம் திருப்ப வேண்டும் என்பதே என் விருப்பம்.

இளைஞர்கள்

தடைகள் ஏராளம் ஏராளமாய் வரலாம். நம்பிக்கையுடன் போராட வேண்டும். எல்லாவற் றிற்கும் ஒரு வழி இருக்கிறது. அது எது என்பதை கண்டுபிடித்து வாழ்வில் வெற்றிவாகை சூட வேண்டும்.

எதிர்காலப் படிப்பை தேர்வு செய்வதில் அதிகக் கவனம் கொள்ளுதல் வேண்டும். தனக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் கேட்டுக் கொண்டார்கள் என்பதை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு பாடப் பிரிவை தேர்வு செய்யக்கூடாது.

கல்வியாளர்களிடம் கலந்தாலோசித்து, எதிர்காலத்தில் எக்கல்விப்பாடத்திற்கு முக்கியத் துவம் இருக்கும் என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து, திடமான முடிவு எடுத்து, அதையே குறிக்கோளாக்கி சாதிக்க வேண்டும்.

சிறந்த தலைமை பொறுப்பாளருக்கு தேவையானது

 • இது இப்படித்தான், இவர் இப்படித்தான் என்கிற தனிப்பட்ட முடிவை முன்கூட்டியே எடுக்கக் கூடாது.
 • பல வழிகளையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன்.
 • மனதை எப்போதும் தெளிவாக வைத்திருத்தல்.
 • எல்லோரிடமும் ஆலோசனை பெறுதல்.
 • அனைத்து ஊழியர்களையும் மதிப்புடன் அரவணைத்துச் செல்லுதல்
 • திறந்த மனதுடன் எல்லோரிடமும் பழகுதல்
 • உடனுக்குடன் ஊழியர்களின் குறைகளைக் களைதல்.
 • மற்றவர்களின் திறமையைப் பாராட்டிப் பேசுதல்.
 • முகஸ்துதிக்கு ஆளாகாமல் இருத்தல்
 • எந்த ஒரு issueவிலும் ஒரு clinical approach வைத்துக்கொள்வது.
 • ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆராய்ந்து அதனை அவன் கண்விடல்’ என்ற குறளுக்கு இலக்கணமாக செயல்படுவது.

இந்தப் பிறப்பின் சிறப்பு

ஏற்றுக்கொண்ட பொறுப்பில் பிறருக்கு உதவுவதற் கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால் அதன் மூலம் உண்மையாக உதவிபுரிதல்தான். வாழ்ந்த காலத்தில் நம்மால் பிறருக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்று சிந்தித்து சேவை புரிய வேண்டும். சேவை செய்தலே இந்தப் பிறப்பின் சிறப்பு.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை தான் நம் வாழ்வின் உயிரோட்டம். படிப்பு, வேலை, தொழில், குடும்பம் என எல்லா இடங்களிலும் மேலோங்கி நிற்க வேண்டும்.

குடும்பம்

1975-ல் சேலத்தை சேர்ந்த கலைவாணி யுடன் திருமணம். ரம்யா, பிரியா இருமகள்கள். அருமையான மாப்பிள்ளைகள். ஒருமகள் ஆஸ்திரேலியாவிலும், இன்னொரு மகள் அமெரிக்காவிலும் வாழ்கிறார்கள். மகிழ்வான குடும்ப வாழ்க்கை.

வங்கியில் வேலைவாய்ப்பு

நிறைய வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அறுபதாயிரம் காலியிடங்களுக்கான தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வில் தேர்ச்சி பெறமுயற்சிகள் எடுத்தால் எளிதாக வங்கிப் பணியில் அமர்ந்து விடலாம்.

உங்கள் ‘நன்றி’

வங்கித் துறையில் எந்தவித அனுபவமும் இல்லாத ஊழியர்கள், புதிய வங்கித்துறைத் திட்டங்களை நன்கு கற்றுக்கொண்டு மிகவும் திறமையாக செயல்புரிந்து முழுமையான வங்கி யாக ரெப்கோவை உயர்த்தியிருக்கிற அவர் களுக்கும், எங்களின்மீது நம்பிக்கை வைத் திருக்கும் வாடிக்கையளார் களுக்கும் பெரிதும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

ரெப்கோ வங்கி நலத்திட்டங்களினாலும் விரை வான சேவையாலும் மக்களின் நன் மதிப்பை பெற்றுள்ளது. இச்சிறிய வங்கி பெரிய வங்கி களுடன் போட்டி போடும் அளவு இன்று உயர்ந் துள்ளது. மேலும் மக்களின் வளத்திற்கும் லாபத் திற்கும் பெயர் பெற்ற வங்கியாக திகழ்கிறது.

விஞ்ஞானி பத்மநாபன், ஜெர்மனி.

பணி ஓய்வு பெற்ற பின்பு நமது தாயகத்தில் பல்வேறு பணிகளை செய்துவருகிறோம். எங்களுக்கு வங்கிகளின் சேவைகள் பெருமளவு தேவைப்படுகிறது. அத்தேவைகளை நன்கு உணர்ந்து ரெப்கோ உதவிபுரிந்து வருகிறது.

பர்மாவிலிருந்து தாயகம் திரும்பிய கே. குருமூர்த்தி

1965-ல் வெறும் 13.50 ரூபாயுடன் இந்தியாவிற்கு வந்தேன். நான் சமையல் வாயு விநியோகம் தொழில் செய்ய ரெப்கோ வங்கி கடனுதவி அளித்தது. இப்போது நான் ரெப்கோ வங்கியில் ரூபாய் 1 கோடி அளவிற்கு கடன் வரம்பு பெற்றுள்ளேன்.

பர்மாவிலிருந்து திரும்பிய ஈ. சந்தானம்

இந்தியாவிற்கு பர்மாவிலிருந்து வந்த போது மிதிவண்டியில் போகும் அளவுக்குக்கூட வசதியில்லை. ஆனால் இன்று கோழிப் பண்ணை களின் அதிபராக வும், அப்பண்ணைகளுக்கு தீவனங்களை சப்ளை செய்யும் நிறுவனராகவும் உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ரெப்கோ வங்கிதான்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2009

வருங்காலம் மல்டிமீடியாவில்
ஆத்ம சக்தி (Will Power)
நமக்குள் நாம்
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
கல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை
கண்ணாடி உறவுகள்
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்
உன்னதமாய் வாழ்வோம்!
மனிதா! மனிதா!!
மனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை
பாதுகாப்பான முதலீடு
உடலினை உறுதி செய்
ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
புலம்பலை நிறுத்து
அன்பை ஆயுதமாக எடு
இலட்சிய தீயே நீ!
வெற்றி வந்து குவியும்
வளமான தேசத்தை உருவாக்க
இன்று மகிழ்ச்சி நாள் -4
இன்று மகிழ்ச்சி நாள் -3
இன்று மகிழ்ச்சி நாள் -2
இன்று மகிழ்ச்சி நாள் -1
சிந்தனைத் துளிகள்
கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்
அச்சீவர்ஸ் அவென்யூ – 2
அச்சீவர்ஸ் அவென்யூ -1