– 2009 – August | தன்னம்பிக்கை

Home » 2009 » August

 
 • Categories


 • Archives


  Follow us on

  கல்லும் சிலையும்

  மக்கள் நடமாட்டம் குறைந்த
  மாபெரும் நகரின் கடைத்தெரு!
  வருவோர் போவார் எல்லோர்க்கும்
  இடைஞ்சலாய் கிடந்தது ஒரு பாறாங்கல்!

  Continue Reading »

  அச்சீவர்ஸ் அவென்யூ

  லேரி எல்லிசன்

  ஆரக்கிள் கம்பெனியை ஆரம்பித்தவர். பில்கேட்ஸுக்குப் போட்டியாளர்.
  பிள்ளைப் பருவம், பிரச்சனைப் பருவம், தந்தை யாரென்றே தெரியாது. தாயும் வளர்க்க முடியாமல் தவித்து, தத்துக் கொடுத்துவிட்டார். தத்தெடுத்தவரும் தட்டிக்கொடுத்து

  Continue Reading »

  இலக்கை நோக்கி….

  இலக்கை நோக்கி….
  இன்று வாய்ப்பை இழந்து விட்டால்….
  இனியும் வாய்ப்பு வராது – நாம்
  இருக்க வேண்டும் முனைப்பில் நின்று
  இலக்கை மனதில் விடாது!
  எந்த வழியில் எந்த வகையில்
  எங்கு செல்ல வேண்டும் – என்று
  சிந்தை நினைவை முனைப்பில் வைத்து
  செயலைச் செய்ய வேண்டும்!
  நமது திட்டம் நடைமுறையில்
  ஒத்துவரவும் வேண்டும் – பலர்
  சென்ற பாதை செயல்கள் கண்டு
  சிந்தை தெளிய வேண்டும்!
  முன்னும் பின்னும் பகுத்துப் பார்த்து
  புரிந்து கொள்ள வேண்டும் – நாம்
  எண்ணும் எண்ணத் தவறு எல்லாம்
  எடுத்து வீச வேண்டும்!
  உன்னில் உள்ள தன்னம்பிக்கையே
  உன்னைக் காக்கும் மந்திரம் – இசைப்
  பண்ணைப் போலே பாடம் செய்தால்
  பணிந்து வெற்றி வந்திடும்!
  முயன்று முயன்று தோல்வி வந்தால்
  முடிந்த தென்று ஆகாது – முயற்சி
  மீண்டும் தொடங்கி செயல்புரிந்தால்
  வெற்றி உன்னை விடாது!

  தோல்வி இல்லை

  விரக்தி வேண்டாம் விரட்டி விடு
  கவலை வேண்டாம் களைந்து விடு
  துக்கம் வேண்டாம் துரத்தி விடு
  துயரம் வேண்டாம் துறந்து விடு

  Continue Reading »

  தன்னம்பிக்கை கவிதைகள்

  தன்னம்பிக்கை

  நண்பனே…. என் இனிய இளைஞனே….
  “உன்னையே நீ அறிவாய்: உன்னையே நீ அறிவாய்”
  – இது கிரேக்க ஞானியின் தத்துவம்.
  “உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்….

  Continue Reading »

  இங்கு… இவர்… இப்படி…

  ஸ்ரீ கந்தன் ரக்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்

  ஓடும் நதி அதன் பாதையின் இரு கரைகளில் உள்ள விளைநிலங்களை வளப்படுத்தும் இயற்கையின் கொடையாகத் திகழ்கிறது. ஒரு நதியின் செயல்பாடே இவ்வாறிருக்க காவிரி, பவானி என்றஇரு நதிகள் அதன் பல மைல் தூர பாதைகளின் கரைகளில் உள்ள பல லட்சக் கணக்கான ஏக்கர் விளைநிலங்களை வளம் பெருக்கச் செய்து பின் பவானி நகரில் ‘சங்கமம்’ ஆகிறது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சங்கமம் நிகழும் பவானி நகரில், வறுமை என்ற பிரச்சனையை “இடைவிடாத தூண்டல்’ என்ற வாய்ப்பாக ஏற்று அவ்வாய்ப்பை ஒரு சுய முன்னேற்ற எண்ணமாகவும், இத்தூண்டலினால் தான் பணிபுரியச் சென்ற ‘பிரபாத்’ நிறுவனத்தின் உரிமையாளர் திரு. ஒ.ஓ. நாராயணன் அவர்களைப் போன்று தானும் ஒரு தொழிலதிபராக உருவாக வேண்டும் என்ற குறிக்கோளை மற்றொரு சுயமுன்னேற்ற எண்ணமாகவும் கொண்டு இவ்விரு சுயமுன்னேற்ற எண்ணங்களையும் ‘சங்கமம்’ ஆக்கி தன்னம்பிக்கையோடு ஒரு பெரும் தொழில் நிறுவனத்தை பவானியில் உருவாக்கி ஏழைக் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் பொருளாதார சுதந்திரத்தைக் கொடுத்து அவர்கள் வாழ்வை ஒளிரச் செய்தவர் அமரர் திரு. அ. கோபால்சாமி அவர்கள்.

  ஈரோடு அருகில் உள்ள அனுமன்பள்ளி என்ற கிராமத்தில் ஏழைக் கைத்தறி நெசவாளராக வாழ்ந்த திரு. அங்கப்ப முதலியார், திருமதி. அகிலாண்டம்மாள் ஆகியோருக்கு 16.11.1942 அன்று பிறந்தவர் கோபால்சாமி. உடன் பிறந்தோர் மூன்று தம்பிகள், இரு தங்கைகள். ஆறு மாதம் நன்றாகவும், ஆறு மாதம் நலிவுற்றும் இருக்கும் கைத்தறி நெசவை மேற்கொண்டிருந்த இந்த வறுமை படிந்த நெசவாளர் குடும்பத்தில் பிறந்த கோபால் சாமிக்கு கிடைத்த கல்வி எட்டாம் வகுப்பு வரை மட்டுமே. வறுமையை எதிர்கொள்ள இவருக்கு உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டிய தேவை. கற்ற தொழில் கைத்தறி என்பதால் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரியச் செல்லும் எண்ணத் தோடு அனுமன்பள்ளியில் இருந்து ‘ஜமுக்காள நகரம்’ என்று புகழ் பெற்ற பவானியில் ஜமுக்காள உற்பத்தி யில் தலைசிறந்து விளங்கிய ‘பிரபாத்’ என்ற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

  கடின உழைப்பே தன் குடும்பத்தைக் கரை சேர்க்கும் என்றுணர்ந்த கோபால்சாமி பிரபாத் நிறுவனத்தில் சுறுசுறுப்பு, நாணயம், அக்கறையுடன் கூடிய உழைப்பு ஆகியவற்றைக் கொண்டு செயல்பட்டதால் முதலாளி திரு. நாராயணன் அவர்கள், கோபால்சாமியின் தொழில் ஈடுபாட்டை புரிந்து கொண்டு ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ‘ஸ்ரீ கந்தன் இண்டஸ்ட் ரியல்ஸ்’ என்றகைத்தறி ஜமுக்காள உற்பத்தி நிறுவனத்தில் அ. கோபால் சாமியை ‘வொர்க்கிங் பார்ட்னர்’ ஆக்கினார்.

  நெசவுத் தொழிலாளர்கள் தன்னை கோபால்சாமி என பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு அவர்களிடம் அன்போடு பழகி அவர்களின் தேவைகளை நிறைவேற்றியும், அவர்களை உற்சாகப்படுத்தி உற்பத்தியை உயர்த்தியும், அன்றைய வேலைகளை அன்றே முடித்தும் ஆறு ஆண்டுகளிலேயே சில்லறை விற்பனையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜமுக்காள நிறுவனங்களை முந்தி முதல் இடத்தை அடைந்தார் கோபால்சாமி. இச்சமயத்தில் பவானி தபால் நிலையத்தில் இவர் அனுப்பும் ஜமுக்காள பார்சல்களை கவனிக்க ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஸ்ரீ கந்தன் இன்டஸ்ட்ரியல்ஸ் நிறுவனத்திற்காகவே பவானி தபால் நிலையம் விரிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  இதன் பின் சில்லரை விற்பனையோடு, மொத்த விற்பனையாக ஜமுக்காளத்தை வட இந்தியாவில் கொல்கத்தா, பீகார் மாநிலம் ராஞ்சி, டெல்லி போன்றஊர்களில் வெற்றி கரமாக விற்பனை செய்தார். மேலும் தன் ஜமுக்காள உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தீர்மானித்தார் கோபால்சாமி. வெளிநாட்டில் இருந்து வரும் வாடிக்கையாளர்களிடம் எப்படி பேச்சு வார்த்தை நடத்துவது என்பது கூட புரியாத புதிராக இருந்த அக்கால கட்டத்தில் வெகு சிலரே ஏற்றுமதியில் கால் பதித்திருந்தனர். இவ்வகையில் கரூரில் “அமர்ஜோதி பேப்ரிக்ஸ்’ என்றஏற்றுமதி நிறுவனம் கரூரில் உள்ள அனைத்து ஏற்றுமதி நிறுவனங்களின் தாய் நிறுவனமாகத் திகழ்ந் திருந்தது. இந்நிறுவனத்தை கோபால்சாமி அணுகி தன் ஜமுக்காளத் தயாரிப்புகளைக் காட்டி ஏற்றுமதி வாய்ப்பைக் கேட்டதற்கு மறுக்கப்பட்டு பின் இவரே கைத்தறியில் அமர்ந்து நெய்து தன் தயாரிப்பில் பல மாற்றங்களைச் செய்து காண்பித்து அது ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டு ஒன்றரை வருடம் போராடி முடிவில் உலகில் அனைத்து நாடுகளிலும் கிளைகளைக் கொண்டுள்ள IKEA என்றஸ்வீடன் நாட்டின் கம்பனி ஆர்டரைப் பெற்று அமர்ஜோதி மூலம் ஏற்றுமதி செய்து வென்றார். அதுவரை அதிகபட்சமாக ஆயிரம் ஜமுக்காளங்கள் ஆர்டரை மட்டுமே பெற்று வந்த இவர் IKEA கொடுத்த ஐம்பதாயிரம் ஜமுக்காளங்கள் ஆர்டரை அல்லும் பகலும் பாடுபட்டு குறித்த நேரத்திற்கு தயாரித்துக் கொடுத்து, அமர்ஜோதியிடம் பாராட்டும் பெற்று பெருந்தொகை ஈட்டினார்.

  இதைக் கண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஹன்ஸா எக்ஸ்போர்ட்ஸ் கார்ப்பரேஷன், தனலட்சுமி வீவிங் வொர்க்ஸ், திருவாங்கூர் மேட்ஸ் & மேட்டிங் கம்பனி உள்பட பல ஏற்றுமதி நிறுவனங்களும் இவரை அணுகி இவர் தயாரிப்பை வாங்கி ஏற்றுமதி செய்து வந்தனர். இந்த ஆர்டர்களை பவானியை மையமாக வைத்து நூறு கி.மீ. சுற்று வட்டாரத்தில் பத்தாயிரம் கைத்தறிகளைக் கொண்டு உற்பத்தி செய்து சாதித்தார் கோபால்சாமி. மேலும் அமர்ஜோதி கொடுத்த பல ஆர்டர்களை ஸ்ரீ கந்தன் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர் தாங்கிய லேபிள்களை ஒட்டி ஏற்றுமதி செய்தாலும் ஒருமுறை கூட நேரடியாக வெளிநாட்டு நிறுவனங் களை அணுகாது வியாபாரத்தில் நாணயத்தை மேற்கொண்டதால் அமர்ஜோதியின் நன்மதிப்பை கோபால்சாமி பெற்றார்.

  இவரின் நாணயத்தைக் கண்டு அமர் ஜோதியே தங்களுக்கு இவர் தயாரித்துக் கொடுப்ப தோடு, இவரே நேரடியாக வெளிநாட்டு நிறுவனங் களுக்கு ஏற்றுமதி செய்யவும் உதவியது. சுயமாக ஏற்றுமதி செய்து மேலும் தன் நிறுவனத்தை முன்னேற்றினார் திரு. கோபால்சாமி. நிறுவனம் வளர்ந்ததால் 1992 ஆம் ஆண்டு ‘ஸ்ரீ கந்தன் ரக்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று சுயமாகத் தன் நிறுவனத்தைத் தொடங்கினார்.

  சுவிட்ஸர்லாந்தில் இருந்து ஒரு நிறுவனம் இவரை அணுகி ‘ரேக் ரக்ஸ்’ எனும் பாவு நூலும், உற்பத்தி செய்யப்பட்ட துணியில் வெட்டி நீக்கப்பட்ட வேஸ்ட் துணியை ஊடைக்கும் கொண்டு நெசவு செய்யப்பட்ட கால்மிதி கைத்தறி மேட் ரகத்தைக் காண்பித்து இதுபோல் தயாரித்து தங்களுக்கு ஏற்றுமதி செய்யக் கேட்டது. இப்புதிய ரகத்தை நெசவு செய்யத் தயங்கிய நெசவாளர்களை விடாமுயற்சியுடன் அணுகி இதன் சாதகங்களைத் தெரிவித்து நெசவு செய்து வாங்கி வெற்றிகரமாக ஏற்றுமதி செய்தார் கோபால்சாமி.

  அறிவுத்திறன் கொண்ட கோபால்சாமி தன் தொழிலில் தன் இடைவிடாத யோசனை காரணமாக ஊடைக்குப் பயன்படுத்தும் வேஸ்ட் துணிக்குப் பதிலாக அருகில் உள்ள திருப்பூரின் பனியன் கம்பெனிகளில் டன் கணக்கில் வேஸ்ட் டாகக் கிடக்கும் பனியன் வேஸ்ட்டுகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டார். அதுவரை இயந்திரங் களை சுத்தப்படுத்தவும், காகித ஆலைகளில் கூலாக மாற்றப்பட்டு காகிதம் தயாரிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த பனியன் வேஸ்ட்டுகளை கால்மிதிக்கு பயன்படுத்துவதன் மூலம் காலுக்கு இதமான மேட்டாகவும், விலை மலிவான மேட்டாகவும் உருவாக்கியதோடு அதுவரை கிலோ ஐம்பது பைசா என்றபரிதாப விலைக்கு மட்டுமே சென்ற பனியன் வேஸ்ட்டுகளுக்கு கிலோவிற்கு பதினெட்டு ரூபாய் என்றகௌரவமான விலையை பெற்றுத் தந்தவர் கோபால்சாமியே. பனியன் வேஸ்ட் மேட்கள் விற்பனையில் இதற்கு முன் இருந்த வேஸ்ட் துணி மேட்டுகளை முந்திச் சென்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சாதனை நிகழ்த்தியது. குப்பைக்குச் சென்று கொண்டிருந்த பனியன் வேஸ்ட்டுகளை டாலராக மாற்றியதோடு, இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும், வெளிநாடு களில் பரவலாகவும் இந்த பனியன் வேஸ்ட் மேட்டுகளை இடம் பெறச் செய்தது திரு. கோபால்சாமியின் யோசனையே. இன்று இந்த பனியன் வேஸ்ட் மேட்டுகளை சீனாவும் பின்பற்றி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யச் செய்தவர் தமிழர் கோபால்சாமி.

  Wal mart, J.C. Penny, Sears போன்றஉலகம் முழுவதும் கிளைகள் கொண்டு வியாபாரம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பனியன் வேஸ்ட் கைத்தறி மேட்டுகளை ஏற்றுமதி செய்தார் இவர். ஒரு ஏழைக் கைத்தறி நெசவாளராகப் பிறந்த இவர் தன் வாழ்வில் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவாளர்களுக்குத் தேவைப்படும் உதவியாளர்கள், சாயத் தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் என மொத்தம் பதினைந்தாயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுத்தார். பொதுவாக பெரும் நகரங்களில் மட்டுமே வங்கிகள் செய்து வந்த அந்நியச் செலாவணிப் பரிமாற்றத்தை பவானி என்ற சிறு நகரத்திலும் பாரத ஸ்டேட் வங்கி மூலம் செய்ய வைத்தவர் திரு. கோபால் சாமி அவர்கள். இழப்புகள் ஏற்படும்போது கூட அதனை பெரிதுபடுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து பணிகளை திறம்படச் செய்து இழப்புகளையும் இன்பங்களாக்கிக் கொள்ளும் பண்பாளர் இவர்.

  தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறையின் விருதை ஐந்து முறையும், இந்திய அரசின் கைத்தறி ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத்தின் விருதை ஒன்பது முறையும் பெற்று சாதனை படைத்துள்ளது திரு. அ. கோபால்சாமி அவர்களின் ‘ஸ்ரீ கந்தன் ரக்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’.

  அமரர் திரு. J.K. நாராயணன் அவர்கள் நல்ல மனதுடன் பலருக்கும் பொருளுதவி கொடுத்து தொழில் தொடங்கிக் கொடுத்திருந் தாலும் அவரே ஆச்சரியப்படும் அளவிற்கு கோபால்சாமி அவர்கள் பெற்றவாய்ப்பை நன்கு பயன்படுத்தி தன் நிறுவனத்தை முன்னேற்றி சாதனை புரிந்துள்ளார்.

  இளைஞர்கள் பலர் சுயவேலை வாய்ப்பின் அடிப்படையில் ஒரு மாதப் பழக்கத்தில் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் நெசவு செய்து ரூபாய் நூற்றி ஐம்பதை ஆண் மற்றும் பெண் நெசவாளர்கள் பெறுகின்றனர். இவ்வகை மேட் கைத்தறி போட தறி ஒன்றுக்கு ரூ. இரண்டாயிரத்து ஐநூறு மட்டுமே தேவைப்படுகிறது. இளைஞர்கள் பலர் சுய வேலைவாய்ப்பின் அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ள இந்நிறுவனத்தில் சுய தொழில் புரிய விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம் :

  ஸ்ரீ கந்தன் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
  60, ஸ்ரீனிவாசபுரம், பவானி – 638 301
  ஈரோடு மாவட்டம்.
  போன் : (04256) 230352, 230373, 230073

  பலரின் முன்னேற்றத்திற்கு பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்த திரு. கோபால் சாமிக்கு திருமதி. கனகாம்பாள் என்ற துணைவி யாரும், திருமதி. மரகத வடிவு என்ற ஒரு மகளும், திரு. சடையராஜ், திரு. சரவணராஜ் என்று இரு மகன்களும் உள்ளனர்.

  அமரர் திரு. கோபால்சாமி அவர்களின் நினைவாக ‘ஸ்ரீ கந்தன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி’ எனும் பெயரில் 2000 ஆம் ஆண்டு கல்லூரியைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். 105 மாணவ, மாணவியருடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி இன்று 1450 மாணவ, மாணவி யருடனும், ஐநஞ 9001 : 2000 சான்றிதழுடனும் நடை பெறுகிறது. இந்நிறுவனத்தில் உழைக்கும் கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத் தில் சலுகை அளிக்கப்படுகிறது.

  இக்கல்லூரியில் பயிலும் ஏழைக் கைத்தறி நெசவாளரின் மகள் மோகனாள் என்ற மாணவி விளையாட்டுத் துறையில் சீனா வரை சென்று சாதித்துள்ளார். மேலும், இங்கு பயின்ற மாணவ, மாணவியர் பலர் உள்நாட்டிலும், வெளிநாடு களிலும் உயர் பதவியில் பணிபுரிகின்றனர். கல்லூரியின் முதல்வராக பேராசிரியர் திரு. அ. ராஜேந்திரன், M.A., M.Phil., அவர் களும். ஸ்ரீ கந்தன் ரக்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் பொதுமேலாளராக திரு. முகம்மத் அவர்களும், திறம்பட செயல்பட்டு வருகிறார்கள்.

  அமரர் திரு. கோபால்சாமி அவர்களின் நினைவாக இன்று அவரது குடும்பத்தார் தற்போது ‘மானசரோவர்’ என்ற மினரல் வாட்டர் வியாபார நிறுவனத்தில் பங்குதாரராகவும் உள்ளதோடு, மேலும் சில தொழில்களை நடத்தவும் திட்ட மிட்டுள்ளனர்.

  குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் 5 அற்புத வழிமுறைகள்

  5 அற்புத வழிமுறைகள்

  வெற்றி வாழ்விற்கு, சாதனை வாழ்விற்கு, சந்தோஷ வாழ்விற்கு அடிப்படை குறிக்கோள் மற்றும் வைராக் கியத்துடன் கூடிய திட்டமிட்ட செயல்பாடே ஆகும். வெற்றி என்பது குறிக்கோள்களை மட்டும் முடிவு செய்த வுடன் தானாக வருவது கிடையாது.

  வெற்றி அல்லது சாதனை என்பது எந்த அளவுக்கு உங்கள் குறிக்கோளுக்காக வாழ்கிறீர்கள் என்பதை பொறுத்தே வருகின்றது. வெற்றி பெற்ற மனிதர்களிடம் கேட்பீர்களா னால், அவர்கள் நிச்சயம், “குறிக்கோளுக்காகவே எங்கள் வாழ்க்கை” என்ற தாரக மந்திரமே எங்கள் வெற்றிக்கு காரணம் என கூறுவார்கள். இதைத்தான் உலகத்தில் மிகவும் அற்புதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி வேடிக்கையான செய்திகள் நிரூபிக்கின்றது. எடிசன் தன் கண்டுபிடிப்புகள் என்ற குறிக்கோள்களுக்காக உணவை மறந்த நாட்கள், மனைவியையே மறந்த தருணங்கள் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. ஆகவே குறிக் கோள்களை காதலிக்க துவங்கினால், குறிக் கோள்களை அடைய எத்தகைய தியாகங் களையும் செய்ய தயார் ஆகுவோம். வெற்றிகள் குவியத் துவங்கும். மகிழ்வான வாழ்க்கை வசப்பட ஆரம்பிக்கும். சாதனை சரித்திரத்தில் உங்கள் பெயர்களை பொன்னெழுத்துகளால் பொறிக்கப் படும் வாய்ப்பும் உருவாகும்.

  சாதனை சரித்திரத்தை உருவாக்க வெற்றிப் பயணத்தை துவங்கி இருக்கும் என் இனிய தன்னம்பிக்கை வாசக நண்பர்களே, வாழ்வில் சாதனைகளை உருவாக்க உதவும் உயர்ந்த குறிக்கோள்களை உருவாக்கி, விடாமுயற்சியுடன் செயலாற்றி எளிதில் வெற்றியை ஈட்டும் வழிமுறைகளை இக்கட்டுரை மூலம் பார்க்கலாம்.

  1. உள்நோக்கி பயணம் செய்யுங்கள்

  இன்று பலரும் தங்கள் ஆசைகளை, குறிக்கோள்களை, விருப்பங்களை நிறைவேற்ற முடியாமல் போக முதல் காரணம், அந்த ஆசை அல்லது குறிக்கோள் உண்மையிலேயே அவருடைய ஆழ் மனதின் ஆசையாகவோ, குறிக்கோளாகவோ இருக்காது. அந்த ஆசை அல்லது குறிக்கோள் அவர் பெற்றோராலோ அல்லது அவர் நண்பராலோ அல்லது ஆசிரி யாராலோ அல்லது ஏதேனும் சூழ்நிலைகளோ அல்லது ஏதேனும் திரைப்பட காட்சிகளாகவோ அல்லது ஏதேனும் தொலைக்காட்சி தொடர் களாகவோ உருவாக்கப்பட்ட ஆசை அல்லது குறிக்கோளாக இருக்கலாம்.

  ஆனால் நம் ஆழ்மனது உறுதியாக அடைய வேண்டும் என முடிவு செய்து விடுகின்ற ஆசைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை புறமனதும், ஆழ்மனதும் இணைந்து செயலாற்றி நிறைவேற்றி விடுகின்றன. எடுத்துக் காட்டாக உயிர்வாழ உதவும் ஆக்சிஜன், உணவு, நீர் போன்றவற்றை தேவைக்கேற்ப அடைந்தே தீரவேண்டும் என்ற அடங்கா ஆசை மற்றும் தேவை இயற்கையால் நம் ஆழ்மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இப்போது நம் புறமனது வேண்டாம் என்று நினைத்தாலும் ஆழ்மனது எப்படியாவது புறமனதை ஒத்துக்கொள்ளச் செய்து நம் அடிப்படை தேவைகளை முடிந்த அளவுக்கு அடையச் செய்கின்றது. புறமனது உணவு வேண்டாம், கடமைதான் முக்கியம் என்று கட்டுப்படுத்த முயன்றாலும் ஆழ்மனது புறமனதோடு சமாதானத்தை ஏற்படுத்தி உணவு உண்ணுலதற்கான வழிவகையைச் செய்துவிடும்.

  ஆகவே, தேர்ந்தெடுக்கப்பட்ட குறிக் கோளை அடைய வேண்டும் என்று முடிவெடுக்கு முன், அந்தக் குறிக்கோள் உங்கள் ஆழ்மனதின் விருப்ப, தேவை, மதிப்பீடுகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்புடையது தானா என ஆராய்ந்து பார்ப்பது எளிதாக குறிக்கோளை அடையும் வழிமுறைக்கு அடிப்படையாகும்.

  எப்போதேனும் உங்கள் ஆழ்மனதிற்கு ஏற்புடையதல்லாத ஒரு குறிக்கோளை அடைய ஆசைப்பட்டால், முதலில் மீண்டும் மீண்டும் உங்கள் ஆழ்மனதோடு தொடர்பு கொண்டு உங்கள் குறிக்கோளை எடுத்துரைத்து உங்கள் ஆழ்மனத்தின் குறிக்கோளாக மாற்றுங்கள்.

  2. குறிக்கோளை முடிவு செய்யுங்கள்

  நீங்கள் உள்நோக்கிய பயணத்தின் மூலம் ஆழ்மனதின் தன்மையை அறிந்து, அதன் விருப்பத்திற்கு ஏற்ப குறிக்கோளை முடிவு செய்தாலும் சரி, அல்லது உங்கள் தவிர்க்க முடியாத தேவை அல்லது சூழ்நிலை திணிக்கும் குறிக்கோளாக இருந்தாலும் சரி, உங்களை வெற்றியினராக மாற்ற உதவப்போகும் குறிக் கோளை கவனமாக ஆனால் உறுதியாக முடிவு செய்யுங்கள்.

  நீங்கள் முடிவு செய்யப்போகும் குறிக் கோள் எந்த அளவு பொருத்தமானதாக, சரியானதாக, சிறப்பானதாக இருக்கின்றதோ, அதைப் பொறுத்துதான், நம் மனது நம் குறிக்கோளுக்காக நம்மை செயல்பட செய்து நம்மை வெற்றியடையச் செய்யும்.

  எனவே உங்கள் வாழ்நாள் / நீண்ட கால குறிக்கோளை அடையும் முயற்சியில், குறிக் கோளை முடிவு செய்வது என்பது மிகவும் முக்கியமான கட்டம் ஆகும். ஆகவே நண்பர்களே, நீண்ட கால குறிக்கோளை முடிவு செய்யும்போது, ஒரு நாள் அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் அல்லது ஒரு வருட காலத்தை செலவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நீங்கள் முடிவு செய்யும் குறிக்கோள் உறுதியானதாக உயர்ந்ததாக, சிறந்ததாக, உள்ளத்திற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஏனென்றால் பலர் அவசர கதியில், பிறர் தலையீட்டை அனுமதித்து தங்கள் ஆழ்மனதிற்கு ஏற்புடையதல்லாத குறிக்கோள்களை முடிவு செய்து, வெற்றிகளை ஈட்டினாலும், உலக சாதனை சரித்திரத்தில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர்.

  எடுத்துக்காட்டாக பலர் ஆசிரியர், பெற்றோர் விருப்பத்திற்கு இணங்க இந்திய ஆட்சிப்பணியியல் (IAS)தேர்வில் வெற்றி பெற்று உயர் பதவிகளில் வந்தும், ஒரு கட்டத்தில் தங்கள் பதவியை விட்டு விட்டு பிறதுறைகளில் மீண்டும் குறிக்கோள்களுடன் செயல்பட்டு அபரிதமான வெற்றிகளுடன் சாதனை நாயகர்களாக மாறமுடியாமல் அடங்கிவிடுகிறார்கள்.
  ஆகவே குறிக்கோளை முடிவு செய்யும் இந்த கட்டம் வாழ்க்கையில் மிக மிக முக்கிய மான தருணம். எனவே உங்கள் முழு கவனத்தையும் செலுத்துவதுடன், பல்வேறு வெற்றியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் அறிஞர் களிடமும் கருத்துக்களை கேட்டு மிக மிக கவன மாக சிறப்பாக குறிக்கோளை நிர்ணயம் செய்யுங்கள். அப்படி செய்தால், குறிக்கோளை நோக்கிய பயணம் வேகமாகவும், தடையற்ற தாகவும், மகிழ்ச்சியுடையதாகவும் அமைவது நிச்சயம்.

  3. குறிக்கோளுக்காக வாழ துவங்குங்கள்

  உங்கள் குறிக்கோள் நோக்கி நீங்கள் துவக்கிய பயணத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உயர்ந்த பலன்களை, விளைவுகளை, முடிவுகளை அடைய வேண்டுமானால், நிச்சயமாக நீங்கள் உங்கள் குறிக்கோளுக்காக வாழ வேண்டும். குறிக் கோளினையே வாழ்க்கையாக மாற்றவேண்டும். இன்று வரை உலக சாதனை சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவருடைய வெற்றி வாழ்வின் பின்னணி என்ன என்று ஆராய்ந்தீர்களானால், நிச்சயம் அவர்கள் தங்கள் குறிக்கோளையே வாழ்க்கையாக மாற்றி வைராக்கியத்தோடு வாழ்ந்திருப்பார்கள்.

  எப்படி குறிக்கோளினை வாழ்க்கையாக மாற்றுவது?

  சாதாரண ஒரு குறிக்கோளினை அடைந்தே தீர வேண்டும் என்ற அசாதாரண அவசியமாக மாற்றினால் மட்டுமே, உங்கள் வாழ்வில் நீங்கள் கனவு காணும் உயரிய செயல்களை அல்லது சாதனைகளை அடைய முடியும். எனவே நீங்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் நினைக்கும் குறிக்கோள் களை, அடைந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கூடிய இலக்குகளாக மாற்றுவது வெற்றிக்கு அடிப்படையாகும். குறிக்கோளையே வாழ்க்கையாக்க உதவும் வழிமுறைகள் :

  மனதுக்கு பிடித்த குறிக்கோள்தானா என சரிபார்க்கவும்.

  நீங்கள் அடைய நினைக்கும் குறிக்கோள் உண்மையிலேயே உங்கள் மனதுக்கு பிடித்த குறிக்கோள்தானா என ஆய்ந்து பார்க்கவும். அப்படி உங்கள் மனதிற்கு பிடிக்காத குறிக் கோளாக இருந்தால், நிச்சயமாக அந்த குறிக் கோளுக்காக உங்கள் நேரம் மற்றும் சக்தியை வீண் விரயம் செய்யாது வேறொரு குறிக்கோளை தேர்ந்தெடுக்க ஆயுத்தமாகுங்கள்.

  திட்டவட்டமான குறிக்கோளா என உறுதி செய்யவும்

  காரணம் நாம் அடைய நினைக்கும் குறிக் கோள் திட்டவட்டமானதாக இருந்தால் மட்டும் நம் மனதிற்கு அல்லது நமக்கு எதை அடைவதற் காக செயல்பட வேண்டும் என்ற உறுதியான உணர்வு இருந்து கொண்டிருக்கும். நாம் குறிப்பிட்ட எந்த விளைவுக்காக அல்லது முடிவுக்காக வாழ்கிறோம் என நம் ஆழ்மனதிற்கு உறுதியாக தெரிந்திருந்தால், நம் ஆழ்மனது நம்மை, நம் சக்தியை, நம் செயல்களை, நம் எண்ணங்களை முழுமையாக அந்த குறிப்பிட்ட இலக்கை நோக்கி செயல்படுத்த துவங்கும். நம் ஆழ்மனது திட்டவட்டமான செய்திகளை மட்டுமே நம்பும் தன்மை கொண்டது. அது நம் குறிக்கோளை நம்பி தன்னுள் இடம் அளித்து விட்டால், அந்த குறிக்கோளை நிறைவேற்றும் பொறுப்பை அது ஏற்றுக்கொள்ளுமானால், நிச்சயம் குறிக்கோளே நம் வாழ்வு என்ற நிலையில் நாம் நிச்சயம் தடைகளை தாண்டி வெற்றிகளை குவிப்போம். சாதனைகளை நிகழ்த்துவோம்.

  குறிக்கோள்களுக்கு எழுத்து வடிவம் கொடுக்கலாமே

  எப்போது உங்கள் மனது ஒரு உயரிய குறிக்கோளை அடைய வேண்டும் என்று முடிவு செய்கின்றதோ, உடனடியாக அந்த குறிக்கோளை எழுத்து வடிவத்தில் குறிக்கோளை திரும்ப திரும்ப படியுங்கள். தினமும் வாசியுங்கள். நீங்கள் தினமும் திரும்ப திரும்ப நடமாடும் இடங்களில் உங்கள் பார்வையில் படும்படி பதித்து வையுங்கள். இச்செயல் உங்களுக்கு உங்கள் குறிக் கோளை உங்கள் ஆழ்மனதில் பதிய வைக்க உதவும்.

  ஆனால் சாதிக்க துடிக்கும் சாதனை மனிதர்கள் இந்த குறுக்கு வழிகள் எதுவும் இன்றியே அவர்கள் குறிக்கோளை நோக்கிய லட்சிய பயணத்தில் வைராக்கியத்தோடு, முழு மனதையும் ஈடுபடுத்தி செயலாற்றி வெற்றி கொண்டிருப்பர்.

  தனியாத தாகம் கொள்ளுங்கள்

  குறிக்கோளை அடைவதனால் வர விருக்கும். அற்புத நன்மைகளை நன்கு மனதில் பதிய வையுங்கள். இந்த நன்மைகள் உங்களுக்கு, உங்களை சார்ந்த குடும்பத்தவருக்கு, உங்கள், உங்கள் தன்மானத்திற்கு, சமூக அந்தஸ்திற்கு, உங்கள் பொருளாதார உயர்வுக்கு, உங்கள் வாழ்வின் அர்த்தத்திற்கு எந்த அளவுக்கு உதவி புரிய வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறிந்து முழுமையாக உணருங்கள். மேற்கண்ட எண்ணப் பதிவுகள் மற்றும் உணர்வுகளை மீண்டும் மீண்டும் மனக்காட்சித் திரையில் காணத் துவங்குங்கள். இந்த செயல் உங்கள் ஆழ்மனதிற்கு எப்படியேனும் இந்த குறிக்கோளை அடைந்தே தீர வேண்டும் என்ற தணியாத தாகத்தை ஏற்படுத்தி விடும். அந்த தாகம் எந்த தடைகள் வந்தாலும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வெற்றிப்பாதையை நோக்கி வழிநடத்தும்.

  முடியும் என்று நினைத்தால் முடியும்.

  பலரும் குறிக்கோள்களை அடைய முடியாமல், குறிக்கோள்களையே விட்டுவிட காரணம், நான் சாதரணமானவன், நான் திறமை யற்றவன், என்னால் முடியாது என்ற எதிர்மறை எண்ணங்களே. உலக வரலாற்றைபுரட்டி பார்த்தால் தெரியும். வெற்றி பெற்றவர்களில் அதிகமானவர்கள் ஏழ்மை, ஊனம், கல்வியறி வின்மை, என பல்வேறு தடைகளை தாண்டி வெற்றி பெற்றவரே என்பது புரிய வரும்.

  ஆகவே நீங்கள் குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்ற மனநிலையை உருவாக்க வேண்டு மானால், வெற்றியாளர்களின் சுயசரிதைகளை படிப்பது பயிலரங்குகளில் கலந்து கொள்ளுவது, வெற்றி பெற்றவரின் சொற் பொழிவுகளை கேட்பது, என்னால் முடியும், என்னால் முடியும் என சுய அறிவுறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது நல்லது.

  வாழ்வின் அனைத்து பகுதிகளையும் கருத்தில் கொண்டு குறிக்கோள் முடிவு செய்வது நல்லது
  குறிக்கோள் முடிவு செய்யும்போது, வாழ்வின் ஒவ்வொரு பகுதி (குடும்பம், பொருளாதாரம், சமூகம், உடல்நலம், மனநலம் போன்ற காரணிகளை)களையும் திருப்திப் படுத்தும் அடிப்படையில் அமையும் படி பார்த்துக் கொள்ளவும்.

  ஏனென்றால், குறிக்கோளை நோக்கி வேகமான வெற்றிப் பயணம் மேற்கொள்ளும் போது ஏதேனும் ஒரு வாழ்வு சார்ந்த காரணியில் திருப்தியின்மை ஏற்பட்டுவிட்டால், நம் குறிக்கோளை நோக்கிய செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  ஆகவே குறிக்கோள் நிர்ணயம் செய்யும் வழிமுறையின் போது, உங்கள் குறிக்கோளை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் வாழ்வு சார்ந்த அனைத்து காரணி களிலும் எந்த எந்த நிலையை எட்ட வேண்டும் என்ற துணை குறிக்கோள்களையும் முடிவு செய்வது நல்லது.

  எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட ஆண்டில், குறிப்பிட்ட மாதத்தில், குறிப்பிட்ட நாளில், நாம் அடைய முடிவு செய்திருக்கும் வாழ்நாளில் அடைய வேண்டிய குறிக்கோளினை நோக்கிய பயணத்தின் குறிப்பிட்ட கால கட்டத்தில், நம் உடல்நலம் எப்படி இருக்க வேண்டும் (எடை அளவு, இரத்த அளவு போன்ற காரணிகளில்)நாம் குடும்பத்திற்கு வழங்கும் தரமான நேரத்தின் அளவு (Quality time) எந்த அளவு இருக்க வேண்டும் என்பது போன்ற ஒவ்வொரு காரணிகளையும் குறிக்கோள் முடிவு செய்யும் வழிமுறையின் போது கருத்தில் கொள்ள வேண்டும்.

  அவ்வாறு குறிக்கோளை அனைத்து குடும்ப, சமுதாய, தனிப்பட்ட காரணிகளையும் கருத்தில் கொண்டு முடிவு செய்வோமானால் நம் லட்சிய பயணம் தங்கு தடையின்றி வேகமாக செல்வது உறுதி. வெற்றியும் உறுதி.

  முடியும் என்றால் முடிவெடுங்கள்

  குறிக்கோள் நோக்கிய பயணத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் மற்றொரு காரணி, உங்கள் குறிக்கோள் உங்களிடம் உள்ள பல திறன் மற்றும் நேரத்தின் மூலம் அடைய முடியும் குறிக்கோளா? இல்லையா என்பது.

  நீங்கள் நிர்ணயம் செய்யும் குறிக்கோள் உங்கள் கல்வி தகுதி, உடல் பலம், பண பலம், தேர்ந் தெடுக்கும் கால அளவு போன்றவற்றையும் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட வேண்டும். எடுத்துக் காட்டாக ஒரு கல்லூரியின் முதல்வராக வேண்டு மானால் 10 வருடம் விரிவுரையாளராக பணி யாற்றியே ஆக வேண்டும். அப்போது தான் உங்கள் குறிக்கோள் உங்கள் வாழ்வின் அடிப்படை அம்சமாக மாறும். நீங்கள் உங்கள் குறிக்கோளுக்காக அர்ப்பண வாழ்வு வாழ ஆரம்பிப்பீர்கள். உங்கள் சாதனை சாகசங்கள் எளிதில் நிறைவறேத் துவங்கும்.

  (தொடரும்)

  அரசு பள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டால் ஏற்றம் உண்டு

  மது முன்னோர்கள் நமக்கு கூறிய அமுத மொழிகளில் ஒன்று தான் பிதா, குரு மற்றும் தெய்வம் என்பது. இவ்வாறு அவர்கள் கூறியதன் நோக்கம் என்னவென்று ஆராய்ந்தோமானால் சில கருத்துகள் நமக்கு புலப்படுகின்றன அல்லவா! ஆம், மாதா என்றசொல்லில் இந்த பிரபஞ்சமே அடங்கிவிடுகிறது. ஏனெனில் ஒரு உயிரை உலகிற்கு அறிமுகம் செய்யும் பேறு பெற்றவள் தாய் தான். அதனால் தான் தாயை முன்னிலைபடுத்தினார்கள். மேலும் நமது இளம் பருவத்தில் நமக்கு இன்னவை, இன்னாதவை என்பனவற்றைகற்றுத் தருபவளும் அந்த மனித தெய்வம் தானே!
  சரி, இரண்டாவதாக நம்மை வழிநடத்தும் பணியைச் செய்பவர் தந்தை தான். நம்மை பள்ளியில் சேர்ப்பது உலக நடைமுறைகளை நமக்கு தெரியப்படுத்துவதும் இவர்தான். அதனால் தான் நமது பழைய பாடல் ஒன்று கூறுகிறது.

  “அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்!
  தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்!”
  என்று கூறுகிறது.

  மூன்றாவதாக, அதாவது நமது ஐந்து வயதிற்கு மேல் நம்மை வழிநடத்தும் பொறுப்பை வகிப்பவர்கள் நமது ஆசிரியர்கள் தான்.

  “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”

  நமது நிறைகுறைகளை கூறி, நமது உண்மையான திறமையை கண்டுபிடித்து உலகிற்கு பறைசாற்றும் முழு பொறுப்பும் இவர்களையே சார்ந்துள்ளது. எனவேதான் மானிட வாழ்வில் வாழும் தெய்வங்கள் ஆசிரியர்கள் தான் என்பதை உணர்ந்து நமது முன்னோர்கள் ஆசிரியர்களை தெய்வத்தி னின்றும் முதன்மை படுத்தியுள்ளனர்.

  அடுத்ததாக, முக்கிய இடம் வகிப்பது தெய்வம். இதனை நமது தன்னம்பிக்கை என்று கூட பொருள் கொள்ளலாம். ஏனென்றால் நாம் ஒவ்வொரு செயலையும் தொடங்கும் முன் இறைவா! நான் தொடங்கும் இச்செயல் செவ்வனவே நிறைவேறவும், இடையில் ஏற்படும் இடையூறுகளையும் துன்பங்களையும் ஏற்று! இவற்றில் இருந்து விடுபடும் தன்னம்பிக்கை யையும் வல்லமையையும் எனக்குத் தா! என்று தானே வேண்டுகிறோம்.

  சரி! இனி நாம் நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம்.

  ஆரம்பகாலத்தில் கல்வி முறை

  நாம் நமது புராணங்களிலும், இதிகாசங் களிலும் நமது பண்மைடய கால கல்விமுறையை பற்றி அறிந்திருக்கிறோம். அதாவது அப்பொழு தெல்லாம் அரசன் முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் தங்கள் குழந்தைகளை கல்வி கற்பதற்காக குருகுலத்திற்கு அனுப்பி வைத்தனர். இம்மாணவர்களும் தங்களின் குருக்களுக்கு சேவகம் செய்து, பணிவுடன் பாடங்களைப் பயின்றனர். அந்த குருமார்களும் மாணவர்களை தங்களின் பிள்ளைகளைப் போல பாவித்து கலை, இலக்கியம், அறிவியல் என பலதுறை கல்வியையும் பண்பாட்டையும் போதித்தனர். குறிப்பிட்டு சொல்வோமாயின், தங்கள் வாழ்நாள் முழுவதும் குருக்களை ஒரு முக்கிய அங்கத்தினராக மாணவர்களும் மதித்து வந்தனர் என்பது புரிகிறது.

  நவீன கல்வி முறை

  நமது அரசின் பல்வேறு துறைகளில் கல்வித்துறை ஒரு சேவையாகவே கருதப் படுகிறது. ஏனெனில் கலங்கமற்ற துறையாக கல்வித்துறைவிளங்கியது ஒரு காலம். ஆனால் இன்று அந்த சேவையும் சீரழிந்து வருகிறது. இதனை ஒரு உதாரணத்தின் மூலம் காண்போம்.

  இன்று தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி வருகிறது. இதற்கு காரணம் என்ன? மேலும் இங்கு கல்வி கட்டணங்களும், இதர கட்டணங்களும் அரசு பள்ளிகளுடன் ஒப்பிடும் போது பல மடங்கு அதிகமாக இருக்கும் போதிலும், மாணவர்களை சேர்ப்பதற்கு மக்கள் அங்கே குவிகின்றனர் இதற்கு காரணம் என்ன? என்று ஆராய்ந்தோமானால் இரண்டு வினாவிற்கும் விடை ஒன்றுதான்.

  அதாவது அரசு பள்ளிகள் தங்கள் செயல்பாடுகளில் இருந்து தரம் தாழ்ந்து விட்டது என்பதையும், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் தங்களின் கடமைகளை சரிவர செய்வதில்லை என்பதையும் தெள்ளத் தெளிவாக வெளிப்படுகிற தல்லவா!
  ஆசிரியர்களின் மெத்தன போக்கிற்கு காரணம்

  இன்று அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகளில் எத்தனை பேர் அரசு பள்ளிகளில் பயிலுகின்றனர்? பெரும் பாலும் இவர்களின் பிள்ளைகள் படிப்பது தனியார் பள்ளிகளில் தான். காரணம் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியருகும் அரசு பள்ளிகளில் மேல் நம்பிக்கையில்லை. மேலும் அவர்களிடம் பணம் இருப்பதினால் அவர்களின் குழந்தைகள் எளிமையாக தனியார் பள்ளிகளில் பயில முடிகிறது.

  ஆனால் இன்று அரசு பள்ளிகளை மட்டுமே நம்பி வாழும் கிராம மற்றும் நகர்ப்புற ஏழை மக்களின் குழந்தைகளின் நிலை என்ன? என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர்ந்து செயல்பட்டால் கல்வியின் தரம் காக்கப்படும், இல்லையேல் இந்த கல்விமுறைசமுதாயத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை.

  கல்வித் துறை

  அரசு பள்ளியின் முன்னேற்றத்திற்காக நமது அரசு செயல்படுத்திவரும் அரும் பெரும் திட்டங்களையும் நாம் மறந்து விட முடியாது. இன்று பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே இலவச புத்தகங்களும் வழங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. மேலும் குறைந்த கட்டணங்கள் கூடவே உதவி தொகைகளும் வழங்குவது கல்வித்துறைக்கு பொது மக்களின் மீதுள்ள அக்கறையைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.

  மேலும் ஆசிரிய பெருமக்களுக்கு ஊதிய உயர்வு மற்றம் போனஸ் போன்றவை வழங்குவது எதற்காக அவர்கள் சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்று தானே!

  மாற்றம் ஏற்பட்டால் ஏற்றம் நிச்சயம்

  இவற்றையெல்லாம் நமது மனித தெய்வங் களான ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட்டால் நமது மாணவ சமுதாயமும், இளைஞர் சமுதாயமும் நிறைவான வளம் பெறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. மேலும் அனுபவம் நிறைந்த அவர்கள் பண்டையகால குருமார்களை போல் அனைத்து மாணவர்களுக்கும் அவர் அவரின் திறமைக்கேற்ப சரியான வழிகாட்டு தலை தந்தால் ஆயிரம் “அப்துல் கலாம்”, லட்சக் கணக்கான “மயில்சாமி அண்ணாதுரை”கள். நூற்றுக்கணக்கான ங.ந. விஸ்வநாதன் உருவாக்கப் படுவார்கள். ஆம் மாற்றம் ஏற்பட்டால் நிச்சயம் ஏற்றமும் ஏற்படும்.

  இந்தக் கட்டுரை ஏதோ குறைகளை மட்டும் கூறுவதாக கல்வியாளர்களும், சான்றோர்களும் எண்ணிவிட வேண்டாம். சற்று ஆராய்ந்து பார்த்தால் இது எந்த அளவிற்கு உண்மையை சுமந்துள்ளது என்பதும் புலப்படும். எனவே அனைத்து தரப்பினரும் இன்றைய இளைய மற்றும் மாணவ சமுதாயத்திற்கு சரியான வழியை காட்டி நாளைய பாரதம் வளமானதாக அமைய அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

  திறமைசாலிகள் திறமைசாலிகளாக பிறப்பதில்லை அவர்கள் திறமைசாலிகளாக உருவாக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து செயல்படுவோம். உயர்வான இந்தியாவை உருவாக்குவோம்.

  ஊக்கம் தன்னம்பிக்கையின் ஆதாரம்

  ஒரு குழந்தை வளர வளர அந்தக் குழந்தையை சுற்றியுள்ளவர்கள் – பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்கள், பள்ளிக்கூட சூழ்நிலை, ஆசிரியர்கள் இப்படி பலருடனும் அக்குழந்தை பழகும்போது கிடைக்கும் அனுபவங்கள் தான். உதாரணமாக ஐந்து மாத குழந்தை தவழ ஆரம்பிக்கும்போதோ பின் நிற்க, நடக்க முயலும்போதோ அதன் பெற்றோர் கொடுக்கும் ஊக்கத்தில் தான் அது தவழவோ, நிற்கவோ, நடக்கவோ செய்யும். அதை விடுத்து பெற்றோரே ஐய்யோ! குழந்தை நிற்க முயலும்போது விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி, குழந்தையை கீழே விடாமல் தூக்கி வைத்துக் கொண்டே இருந்தால் முடியுமா? குழந்தை ஒரு தரம் விழுந்தாலும், “கண்ணா! உனக்கு ஒன்றுமில்லை. எங்கே திரும்ப நில் பார்க்கலாம்’ என்று தான் ஊக்கப் படுத்துவார்கள். அந்த ஊக்கம்தான் முதலில் “தன்னம்பிக்கை’யை உண்டாக்குகிறது. இப்படி தொடர்ந்து, மற்றவர்கள் தரும் ஊக்கத்தினால் தான் குழந்தைகள் வளரவளர முன்னேற முடியும்.

  நான் முதன்முதலில் உயர்நிலைப் பள்ளியில் ந.ந.க.இ. முடித்து விட்டு, அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரியில் டமஇ சேர்ந்தேன். வகுப்புக்கு வந்தவுடன் எங்கள் வகுப்பில் ஒரு சில மாணவியர் மிக சரளமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ் மீடியத்திலிருந்து வந்த எனக்கு அதைப் பார்த்தவுடனேயே மிகவும் பயமாகிவிட்டது. அதைத் தொடர்ந்து வகுப்பில் ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் பாடம் எடுத்தவுடன் “கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்’ இருந்தது. கல்லூரியில் இருந்து வீட்டுக்குத் திரும்பிப் போய்விடலாம் என்று ஆகிவிட்டது. ஆனால், அப்போது விடுதியில் இருந்ததால், சக மாணவியருடனும், ரூமில் அக்காமார்களுடனும் பழகும் வாய்ப்பு கிடைத்ததால், அவர்கள் கொடுத்த தைரியத்தில் சிறிது சிறிதாக பயம் போக ஆரம்பித்தது.

  காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் அய்யா, அம்மா என்று நாங்கள் அனைவரும் அன்புடன் அழைக்கும் எங்கள் கல்லூரியை உருவாக்கிய திரு. T.S. அவினாசிலிங்கம் அய்யா அவர்களும், அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து, இன்று சிறந்த பல்கலைக்கழகமாக அக்கல்லூரியை உயர்த்திய எங்கள் அம்மா டாக்டர் இராஜம்மாள் பா. தேவதாஸ் அவர்களும் பிரார்த்தனைக்குப் பின், எங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் கூறி, எங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிப்படுத்த, “தன்னம்பிக்கை’ என்ற சிறந்த சத்துணவை எங்களுக்கு அளித்தார்கள். காரணம், நம்மிடையே மாற்றங்கள் உண்டாக, நம்மை நாம் செம்மைபடுத்திக்கொள்ள, நாம் வளர, நம்மால் நம்மை சுற்றியுள்ளவர்களும் பயன்பெற, நம் சூழ்நிலையும் ஒரு மிகப் பெரிய காரணம். அன்று நான் PUC-லேயே பயந்து என் படிப்பைத் தொடராமல் விட்டிருந்தால், இன்று நான் ஒரு பொறுப்பான பதவியில் இருக்க முடியாது. அன்று இறையருளால், என்னைச் சுற்றி இருந்தவர்கள் கொடுத்த ஊக்கத்தால் தான் என்னுள் “தன்னம்பிக்கை’ மரத்தின் வேர் நன்கு ஊன்றஆரம்பித்தது.

  அதேபோல, எல்லோருக்கும் அவர்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறமுடியாது. அல்லது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியாமலும் போகலாம். ஆனால் வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை “”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பதற்கிணங்க சரியான முறையில் பயன்படுத்தி வெற்றிக்கொடி நாட்டுபவர்கள் பலர்.

  வாய்ப்பினை உடனே பயன்படுத்தி பயன்பெற முடியாதவர்களுக்கு அவர்கள் உடன் இருப்பவர்கள் ஊக்கம் கொடுக்கும்போது அவர்களது “தன்னம்பிக்கை’ என்ற மரத்தில் கிளைகள் வளர ஆரம்பிக்கின்றன. இப்படி ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் “ஊக்கம்’ என்றடானிக் கிடைத்தால் அவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடிகிறது. பள்ளிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாம் பல்வேறு போட்டிகள் வைப்பதன் மூல காரணமே, மாணவ மாணவி களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தத் தான். இங்கு போட்டிகள் அவர்களை ஊக்குவித்து அவர்களை போட்டியில் பங்கேற்க வைத்து தன்னம்பிக் கையை வளர்க்கிறது.

  ஒரு சில நேரங்களில் கட்டாயத்தின் காரணமாகவும் “தன்னம்பிக்கை’ வளர வழி ஏற்படுகிறது. என்னடா இவர்கள் இப்படி எழுதுகிறார்கள் என்று படிப்போர் எண்ணுவீர்கள். ஆனால் அது என் விஷயத்தில் உண்மை. நான் கல்லூரியில் எனது B.Sc., M.Sc., படிப்பை முடிக்கும் வரை படிப்புடன் சரி. வேறு extra curricular activity கிடையாது. என் திருமணத்திற்கு என் கணவருடன் ஜேசீஸ் சங்க கூட்டத்திற்கு செல்வேன். ஒருமுறைஜேசீஸ் மாநாடு ஈரோட்டில் நடந்தது. என் தமையனாரும் ஜேசீஸ் சங்கத் தலைவராக இருந்தவர். ஈரோடு சென்றபோது, நான் அங்கு செல்லும் முன்பே என் தமையனார் அங்கு வந்திருந்தவர் ‘Public Speaking Context’க்கு என் பெயரை கொடுத்து விட்டார். நான் போனாவுடன் கௌரி, உன் பெயரையும் பேச்சுப் போட்டிக்கு கொடுத் துள்ளேன். நீ கண்டிப்பாக பேச வேண்டும் என்று கூறிவிட்டார். எனக்கு ஏற்பட்ட சங்கடம் சொல்லி மாளாது. இதுவரை நான் மேடையில் பேசியதே இல்லை. நான் எப்படி பேசுவேன் என்று புலம்ப ஆரம்பித்தேன். ஆனால் சில நிமிடங்களில் அந்த சூழ்நிலையினை எப்படியும் சமாளிக்க வேண்டுமே என்ற கட்டாய உணர்வு எனக்கேற்பட்டவுடன் பயம் போய், என்ன பேசலாம் என்ற யோசனைக்கு வந்துவிட்டேன். என் அண்ணாவே எனக்கு பேசுவதற்கான கருத்துக்களும் கூறினார். அந்த மாநாட்டில் Priliminar test -ல் நான் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் இறுதிச் சுற்றில் பரிசும் பெற்றேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இங்கு “கட்டாய சூழ்நிலை’ கொடுத்த ஊக்கத்தால் எனக்கு தன்னம்பிக்கை வந்தது.

  இப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் இருக்கும். ஒவ்வொன்றையும் கேட்பதே சிலருக்கு தன்னம்பிக்கை வளர ஊக்கம் தருபவையாக இருக்கும். எனவே “தன்னம்பிக்கை’ என்றமரம் தழைக்க “ஊக்கம்’ என்ற நீர் தான் ஆதாரம் என்பது என் பணிவான எண்ணம்.

  உன்னதமாய் வாழ்வோம்! உடலினை உறுதி செய்வோம்!!

  அன்பிற்கினிய நண்பர்களே!

  சென்ற இதழ் களில், நம் உடல் ஆரோக்கியம் என்பது உடல் வலிமை உடல் தூய்மை (கழிவு நீக்கம்) மற்றும் உயிர் திறன் (செயலாக்கம்) ஆகிய மூன்று அடிப்படை தன்மைகளை சார்ந்துள்ளதை அறிந்தோம். இந்த மூன்று அடிப்படை களில் முதலாவதான உடல் வலிமை (structure) அதாவது உடல் கட்டுமானம் பற்றிய ஆழமான புரிதலை இனிவரும் அத்தியாயங்களில் பார்ப்போமா?

  நண்பர்களே! உடல் கட்டுமானம் என்பது ஒரு படிநிலைகளை உள்ளடக்க மாகக் கொண்ட அமைப்பாகும். நாம் உண்ணும் உணவானது நம்உடலில் சக்தியாக உருமாறி, உடலின் ஏழு நிலைகள் அல்லது ஏழு தன்மை களாக உருமாறுகின்றது. அதாவது நம் உணவின் சக்தி உடலின் ஏழு நிலைகளுக்கு சக்தியளிக்கிறது.

  நாம் எடுத்துக் கொள்ளும் உணவானது இரைப்பையில் (stomach) நொதிகளின் செயலால் இரசமாக உருவெடுக்கிறது. இந்த இரசம் சிறிது மற்றும் பெருங்குடல் வழியாக இரத்தத்திற்கு உறிஞ்சப்படுகிறது. இரத்தத்தில் கலந்த இரசம் இரத்தத்தின் உபபொருட்களாக உருமாறு கின்றது. இந்த இரத்தம் உடல் சதைகளுக்குப் பாய்ந்து சக்தி அளிக்கும் செயலை செய்கிறது. சதை பகுதிகளுக்குப் பாய்ந்த சக்தி போக மீதம் உள்ள சக்தி கொழுப்பு பொருளாக சேமிக்கப் படுகிறது. அடுத்ததாக சக்தி நிலை எலும்புக்கு பாய்கிறது. எலும்புக்கு பாய்ந்த சக்தி போக, மீதம் உள்ள சக்தி எலும்பின் மஜ்ஜையாக உருமாறுகின்றது. எலும்பின் மஜ்ஜையானது தண்டுவடத்தை அடையும்போது நரம்பு மண்டலமாக உருமாறுகின்றது. இதுவே மண்டை ஓட்டை நிரப்பும்போது மூளையாக மாறுகின்றது. ஆக மஜ்ஜை, தண்டுவடம் மற்றும் மூளை ஆகிய மூன்றும் நரம்பு மண்டலமாக கருதப்படுகிறது. அடுத்ததாக சக்தியானது நரம்பு மண்டல வழியாக ஆண்களில் விந்தாகவும் பெண்களில் நாதம் (கருமுட்டை) யாகவும் நிலை பெறுகின்றன. இந்த ஞானம் பெற வழியாக இருந்த வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு நன்றி.

  இனிய நண்பர்களே! உடல் உறுதி என்பது நம் உணர்வின் மூலம் பெற்ற சக்தியானது நம் உடலின் இந்த ஏழு நிலைகளை உருவாக்கி வலுவாக்குவதில் உள்ளது. நம் உடலின் சக்தி பயணம் விந்து/நாதம் வரை வெற்றிகரமாக முடிந்தால், நம் உடலின் ஏழு நிலைகளும் (மண்டலங்களும்) வலுவாகவும் ஆரோக்கிய மாகவும் விளங்கிடும். நம் உடலின் சக்தி பயணம் தடைபடுமாயின், தடைபட்ட நிலையை கெடுப்பதோடு, அதன் கீழ் உள்ள நிலைகளை பலவீனமாக்கிவிடும்.

  உதாரணமாக நாம் உண்ட உணவு செரித்து இரசமாக மாறியும், குடல் உறிஞ்சிக் கொள்ளும் தன்மை குறைவால், இரத்தத்தில் குறைவாக சக்தி மாற்றம் நடந்தால், மற்றநிலைகள் எல்லாம் பலம் இழந்து போய்விடும். ஆக, சக்தி நிலை எங்கு தடை படுகிறதோ அங்கிருந்து ஆரம்பமாகி விடுகிறது உடல் பலவீனம் என்பது புரிகிறதா?

  உன்னதமாக வாழ விரும்பும் அன்பர்களே! உங்கள் சக்தி நிலைகளான இந்த ஏழு படிகளையும் குலைக்காமல் வாழத் தெரிந்து கொண்டால் மட்டுமே உன்னதமாக வாழ முடியும். இந்த ஏழு நிலைகளில் எங்கு தவறு நடந்தாலும், சக்திப் பயணம் தடைபட்டு நோய் நிலைகளுக்குள் சிக்கிப் போய்விடுவோம். ஆகவே அன்பர்களே! நம் உடலின் ஏழு தன்மைகளை காக்கும் இரகசியங்கள் முக்கியம்தானே! இவற்றை ஒவ்வொன்றாக வரும் அத்தியாயங் களில் பார்ப்போம்.

  செயல்முறை : ஒரு விடுமுறைநாளில், காலை முதல் மாலை வரை முடிந்தால் இரவு தூங்கப்போகும் வரை மௌனமாக இருந்து பாருங்கள். மௌன விரதத்தின் போது அளவான, சைவ உணவும், அதிகமான நீரும் அருந்த வேண்டும். எழுதுவதும், சைகை புரிவதும் கூடாது. உங்கள் சக்தி பிரவாகம் எடுத்து உடலின் ஏழு தன்மைகளையும் ஊடுருவுவதை உணர முடியும். மௌனம் பழகும்போது, பேச்சு மற்றும் செயல் புரிவதற்காக இருந்த சக்தி மீதப்படுவதால், உடலின் ஏழு தன்மைகளுக்கு பாய்ச்சப்பட்டு, தேக்க நிலைகள் நீக்கப்படுகிறது.

  உன்னதத்தை உணருங்கள்,
  உன்னதத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
  உன்னதமாய் வாழ்வோம்! உயர்வாய் இருப்போம்!!

  இரகசியங்கள் தொடரும்…….