Home » Articles » குழந்தைத் தொழிலாளர் நிலை

 
குழந்தைத் தொழிலாளர் நிலை


விஜயகுமார் ஈ
Author:

– ஈ. விஜயகுமார்,
திட்ட இயக்குநர், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம், கோவை.

குழந்தைத் தொழிலாளர் முறை இந்த தேசத்தின் மனிதாபிமானமற்ற தீமைகளில் ஒன்றாகும். கல்வி கற்று, விளையாடி மகிழ்ச்சியை பரிமாற்றம் செய்ய வேண்டிய ஓர் அற்புத படைப்பு குழந்தைப்பருவம். இதைத் தவிர்த்து தொழிற்சாலைகளிலும், பனியன் கம்பெனிகள், செங்கல் சூளைகள், நகைப் பட்டறைகளில், ஹோட்டல் மற்றும் பேக்கரிகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடுமையான உழைப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதை காணும் போது நெஞ்சம் பதபதக்கிறது.

குழந்தைப் பருவம்

ஐக்கிய நாடுகளின் சபை 18 வயதிற்கு உட்பட்டவர்களை குழந்தைகள் என்று குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவும், 1986ஆம் ஆண்டு
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டமும் 14 வயதிற்கு உட்பட்டவர்களை குழந்தைகள் என்று தெரிவிக்கிறது.

யார்? குழந்தைத் தொழிலாளர்

கல்வி கற்கும் வயதில் தன் குடும்ப தேவைக்காக தன் குடும்பத்தினருடன் சேர்ந்தோ அல்லது தனிப்பட்ட முறையிலோ வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டக் கூடியவர்களை குழந்தைத் தொழிலாளர் எனக் கூறலாம்.
பிஞ்சு வயதிலேயே குடும்ப பொறுப்புக்கள் சுமத்தப்பட்டு வெளியூர்களில் இருந்து வந்து பெற்றோர்களை பிரிந்து சரியான நேரத்திற்கு உண்ண உணவு கிடைக்காமல் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் ஓய்வின்றி, உறக்கமின்றி பல மணி நேரம் ஆபத்தை விளைவிக்க கூடிய தொழில் களில் பெற்றோர்கள் குழந்தையின் பெயரில் பெற்றுச் சென்ற கடனை அடைப்பதற்கு குழந்தைகள் வேலை செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தமிழ் நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள்

1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 5.78 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் (5-வது முதல் 14 வயது வரை) பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் தீவிர முயற்சியாலும், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை உள்ளம் கொண்டோரின் அயராத உழைப்பின் காரணமாக 2003 ஆம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட கணக்கெடுப்பின்படி 70,344 குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. மேலும் இந்த எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டில் 25,589 ஆக குறைந்துள்ளது என்பதும் ஆறுதல் அளிக்க கூடியச் செய்தியாக உள்ளது.

கோவை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள்

கோவை மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாகவும் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய தொழில் வாய்ப்புகள் உள்ளதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்தும்

ஆயிரக்கணக்கான மக்கள் கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு குடி பெயர்ந்து வருகிறார் கள். இவ்வாறு வருகை தரும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியை பாதியில் நிறுத்தி மாற்றுச் சான்றிதழ் பெறாமல் அழைத்து வருகிறார்கள்.

இங்கு வந்து வேலை கிடைத்தவுடன் மறுபடியும் சொந்த ஊருக்குச் சென்று மாற்றுச் சான்றிதழ் பெற்று வந்து குழந்தைகளை சேர்க்கும் முயற்சியில் தோற்றுப் போகிறார்கள். காரணம் வேலைப் பளுவும் குடும்ப வறுமையைப் போக்க தொடர்ந்து வேலை செய்தாக வேண்டிய அவசியம் உருவாகிவிடுகிறது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் குழந்தைகள் பள்ளி செல்லாமல் சுற்றித் திரிவதை தடுத்து நிறுத்தி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாக கருதி சில பெற்றோர்கள் கிடைக்கும் வேலைக்கு குழந்தைகளையும் அனுப்ப துணிந்து விடுகிறார் கள். ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் 300லிருந்து 450 வரை வருமானம் கிடைப்பதால் குழந்தைகள் பாக்கெட்டை நிரப்பும் தாரக மந்திரத்தை பெற்றோர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். பெற்றோர் இதை நல்ல வாய்ப்பாக எண்ணி குழந்தைகளின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைத்து விட்டு வேலைக்கு அனுப்பி குழந்தையின் வருமானத்தை காசு காய்க்கும் மரமாக கருதி விடுகிறார்கள். மற்றொன்று என் குழந்தை படித்தால் கலெக்டர் வேலையா? தரப் போகிறார்கள் என்று எண்ணும் பெற்றோர்கள் படிப்பு என்பது வேலை வாய்ப்பு சம்பந்தப் பட்டது மட்டும் அல்ல என்பதை பெற்றோர் களுக்கு உணர்த்த வேண்டி உள்ளது.

இவை ஒருபுறம் இருக்க வேலை அளிப்போர் குழந்தைகளின் பெற்றோரின் ஏழ்மை நிலையை போக்க கடவுளால் அவதாரம் எடுத்து உதவுவது போன்று குழந்தைகளுக்கு வேலை அளிப்பதாக உரிமையாளர்கள் பெருமை பட்டுக் கொள்கிறார்கள். குழந்தை ஊதியம், நிறைய நேர வேலை, சொல்லுகின்ற வேலையை ஏமாற்றாமல் கபடமின்றி செய்யும் தன்மை, போனஸ் கேட்காது. வேலை செய்யாமல் ஏமாற்றுவது கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக சங்கம் சேரமாட்டார்கள் என்ற சாதகமான அம்சங்களை எல்லாம் இந்த அவதார புருஷர்கள் தங்களின் சுயவளர்ச்சிக்கு அரிய வாய்ப்பாக குழந்தைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் சட்டத்தை ஏமாற்றும் சமயோகித புண்ணியவான்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

வீட்டு வேலைகளில் குழந்தைகள்

பெரிய நகரங்களிலும் அடுக்கு மாடி குடியிருப்புகளிலும், பெரிய பெரிய பங்களாக் களிலும் வீட்டு வேலைகளில் குழந்தைகள் (குறிப் பாக பெண் குழந்தைகள்) ஈடுபடுத்தப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் பணியாற்றும் குழந்தைகள் குறித்து தகவல் சேகரிப்பது எளிது. ஆனால் வீடுகளில் ஆய்வு மேற்கொள்வது என்பது மிகுந்த சட்ட சிக்கல் களை ஏற்படுத்தும் என்பது காவல் துறையினரின் வாதம். இதன் காரணமாக அடுக்கு மாடி குடியிருப்புகளில் பணியாற்றும் குழந்தைகளை மீட்பதில் சில தடங்கல்கள் ஏற்பட்டு வருவதை மறுக்க முடியாது. இருந்தாலும் 2006-ம் ஆண்டில் மத்திய அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்தின்படி ஹோட்டல், பேக்கரி, தபே, ரெஸ்டாரெண்டுகள், தெருவோர உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள் மற்றும் வீட்டு வேலைகளும் அரசியல் சட்டப் பிரிவு 23ன் கீழ் அபாயகரமான தொழிலாக அறிவித்துள்ளதை மனதில் கொண்டு செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.

வீட்டு வேலைகளில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் குடியிருப்போர் நலச்சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுக்கு கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, சமையல் எரிவாயு வினியோகம் செய்வோர், சலவைத் தொழிலாளர்கள், மின்அட்டை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் கூரியர் நிறுவன பணியாளர்களுக்கு பயிற்சிகள் அளித்து அவர்களை குழந்தைத் தொழிலாளர் களை பணிக்கு அமர்த்தி உள்ளோர் குறித்து தகவல் அளிப்பவர்களை பயன்படுத்திக் கொள்வதன் மூலம், வீட்டு வேலைகளில் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுவதை கண்டறிந்து, ஆய்வு மேற் கொண்டு, மீட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற் கொள்வதோடு குழந்தைகளுக்கான மறுவாழ்வு அளிக்க முடியும்.

தேவை மனமாற்றம்

குழந்தைத் தொழிலாளர் முறை அகற்ற கடுமையான சட்டங்கள் தேவை என்றும், வேலை அளிப்போருக்கும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும் குடும்ப அட்டை, மின் இணைப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒரு சிலரின் முழக்கங்களும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அபாயகரமான தொழில்களில் குழந்தைகளை பணிக்கு அமர்த்துவோருக்கு ரூ.10,000 (பத்தாயிரம்) அபராதம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு நிதிக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டி இருந்தாலும், அபராதத் தொகை ரூ.10,000 மட்டும் சம்மந்தப்பட்ட உரிமை யாளர்கள் செலுத்தி விடுகிறார்கள். மீதமுள்ள 20,000 பெரும்பாலும் வசூலிப்பது குதிரை கொம்பாகத்தான் உள்ளது. பல நேரங்களில் வழக்கு திசை மாறி குழந்தை வேலை செய்தமைக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

குழந்தைகளுக்கு வேலை அளிப்போர் தன் வீட்டு குழந்தை கான்வெண்டில் நல்லமுறையில் படிக்கவேண்டும் என்பதற்காக ஊரார் வீட்டு குழந்தைகளின் படிப்பை பாழாக்கி உழைப்பை உறிஞ்சுகிறோமே? என்ற எண்ணம் ஆழ்மனதை உறுத்த வேண்டும். மனதளவில் பாதிப்பு ஏற் பட்டால் தான் அது குற்றம் என்பதை உள்மனம் உணரும். பெற்றோர்கள் இன்றைக்கு கல்வி வளர்ச்சிக்காக அரசு அளித்து வரும் சலுகை களை உணர வேண்டும். இன்று அரசு பள்ளி களில் தொடக்க கல்வியில் குழந்தைகளை வருடம் முழுவதும் சேர்க்கலாம் என்று தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. மேலும்,

1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை இலவச பாடபுத்தகங்கள், இலவச பஸ் பாஸ், இலவச சீருடை., மதிய உணவு என்று அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். மேற்கண்ட வகுப்பு களுக்கு பள்ளிக் கட்டணமாக வருடத்திற்கே குறைந்த பட்சமாக ரூ.100க்கும் குறைவாகத்தான் செலுத்த வேண்டி இருக்கும். இந்த தொகையைக் கூட செலுத்த இயலாத ஏழை என்றால் அவர்களின் வருமானம் வேறு தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது தான் உண்மை. பெற்றோர்கள் படிப்பறிவு இன்மையால் தான் பட்ட துயரங்களை தன் குழந்தைகள் அனுபவிக்காமல், தன்னைக் காட்டிலும் உயர்ந்த நிலைக்கு தன் குழந்தை வரவேண்டும் என்றால் அதற்காக எத்தகைய தியாகத்தையும் சந்திக்க தயார் என்றஉறுதியான மனநிலை பெற்றோர்களிடம் ஏற்படுமானால் அன்றைக்குத்தான் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். அதற்கான முயற்சியில் நன்கு படித்து கற்றதன் பயனை அறுவடை செய்து கொண்டிருக்கும் நல்ல குணம் படைத்தவர்கள் ஒன்று சேர்ந்து பெற்றோர் களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

 

1 Comment

  1. D.Muthu Prakash says:

    Very Nice Mr.Vijaya Kumar. Keep it up….

    D.Muthu Prakash.

Post a Comment


 

 


June 2009

இளைஞர்கள் இதயத்தில் எழுச்சி நிலா
உன்னதமாய் வாழ்வோம்! உயிர் இரக்கம் பெறுவோம்!!
வெற்றிப் புதையல்….
எழுந்து வா!……
அ…ஆ..
இசைந்து இசைந்து
நிறுவனர் நினைவுகள்
இன்று மகிழ்ச்சி நாள்
புல் கூட நமை வீழ்த்தும்
மாற்றத்தின் மறுஉருவம் வெற்றி
இளைய பாரதம்
நம்பிக்கை தான் வாழ்க்கை
காணாமல் போன கடிதக்கலை
பழக்கம் வெற்றியின் முழக்கம்
அச்சீவர்ஸ் அவென்யூ
இங்கு… இவர்… இப்படி…
ஆரோக்கியமான சில உணவு வகைகள்
திறந்த உள்ளம்
மனிதா! மனிதா!
பொக்கிஷங்கள்
குழந்தைத் தொழிலாளர் நிலை
உள்ளத்தோடு உள்ளம்