Home » Cover Story » உன்னைக்கொடு! விண்ணைத்தொடு!!

 
உன்னைக்கொடு! விண்ணைத்தொடு!!


குணசேகரன் S
Author:

– “வெற்றி விகாஸ்” “வித்யா விகாஸ்” கல்வி நிறுவனங்கள் டாக்டர் ந. குணசேகரன்

நேர்முகம்: டாக்டர். நடேசன் செந்தில்

நீங்கள் எதை முழுமையாகக் கற்றுக் கொண்டீர்களோ அதை நன்கு செயல்படுத்தி வாழ்வில் விழிப்புடன் வாழுங்கள், இதுவே வெற்றியின் ரகசியம் என்பார் கார்ட்டனர். 30 வருட ஆசிரியப் பணியின் அற்புத அனுபவத்தை நாளைய எதிர்காலம் நல்லதாய், வலிமையுள்ளதாய் அமைந்திடும் விதத்தில் பேராற்றல் மிகு மாணவ மாணவிகளை உருவாக்கும் ஆக்கப்பூர்வமான கல்விக் களத்தை மிகச்சிறப்பானதொரு முறையில் அமைத்து இன்று எண்ணற்ற மாணவ, மாணவிகளின் சாதனைகளுக்கு தூண்டுகோலாய் இருந்து வருபவராக,

வழிகாட்டுதலுக்கு சரியான நபரின்றி படித்து உயர தான்பட்ட சிரமத்தை எதிர்கால மாணவர்கள் படக்கூடாது என்பதற்காக முடிந்தவரை மாணவர்களின் மதிப்பெண்ணை விட படிப்பின் ஆர்வத்தைக் கொண்டு பள்ளியில் அனுமதித்து அவர்களை சாதனை மாணவராக்கிடும் தலைசிறந்த ஆசிரியராக,

இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது, கொங்கு சாதனையாளர் விருது, சிறந்த கல்வியாளர் விருது, சிறந்த தலைமையாசிரியர் விருது என பல விருதுகளைப் பெற்றவராக,

மனிதநேயம் மிக்க சிறந்த மாணவர்களை உலகளவில் உருவாக்கவேண்டும் என்பதை எதிர்கால இலட்சிய மாகக் கொண்டவராக,

ஆறிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள கணிதப் புத்தகத்தின் Syllabus Committee and review committee member ஆகவும்,

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்வுக் கமிட்டியின் உறுப்பினராகவும், Bharath Scouts and Guides District Chief Commis sioner ஆகவும் இருப்பதுடன் வித்யா விகாஸ் ஆண்கள், பெண்கள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வித்யா விகாஸ் ஆசிரியப் பயிற்சி பள்ளி; வித்யா விகாஸ் கல்வியல் கல்லூரி மற்றும் வித்யா விகாஸ் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மேலாண்மை இயக்குநராகவும் இருந்து கல்வியின் மீது தனி ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருபவர் டாக்டர் ந. குணசேகரன் அவர்கள்.

“அறிவை வளர்த்துக் கொள்வதுதான் மனித இனத்தினுடைய இலட்சியமாக இருக்க வேண்டும். அறிவுதான் சக்தி” என்ற அவரை தன்னம்பிக்கையின் கௌரவ ஆலோசகர் திரு. ந.த.ஓ. தேவராஜ் மற்றும் திரு. த.சுரேஷ் அவர்களுடன் நாம் நேர்முகம் கொண்டதிலிருந்து இனி…

நம்பிக்கை இல்லாத இதயம் மூளையைக்கூட மோசம் செய்யும் என்பார்கள். உங்களுக்குள் நம்பிக்கை?

நிரம்ப இருந்தது. தேயிலைத் தோட்டத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் மகனாக மலேசியாவில் பிறந்து வளர்ந்தேன். எனக்கு பத்து வயது இருக்கும்போது பல்வேறு காரணங்களால் 1965-ல் மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு அப்பா அம்மா வந்த போது இருபதாயிரம் ரூபாய் செலுத்தி ஆங்கிலப் பள்ளியில் என்னை படிக்க வைக்க முடியாத நிலையில்தான் அவர்கள் இருந்தார்கள். தமிழ் எனக்கு அப்போது சரிவர வராது என்றாலும் வசதி கருதி அரசுப்பள்ளியில் சேர்ந்து படித்தேன். கடின உழைப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்வானேன். பின்னர் B.Sc., M.Sc. (கணிதம்) முடித்து B.Ed., தேர்வில் மாநில அளவில் முதல் மாணவனாகத் தேர்வுபெற்றேன். குன்னூர் செயிண்ட் ஜோசப் பள்ளியில் ஆசிரியப் பணி கிடைத்தது. 1 வருடங்கள் அங்கு பணி புரிந்தேன். பின்பு அரசுப்பள்ளியில் பணி கிடைத்து சென்னை மின்னல் என்ற கிராமத்தில் ஆறுமாத காலமும், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 23 வருட காலமும், திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தேன். படிக்கும் காலத்திலிருந்து பணி சேரும் காலம் வரை சிரமங்கள் தென்பட்ட போதெல்லாம் நம்மால் முடியும் என்கிற நம்பிக்கை தான் என்னை வெற்றியாளனாக்கியது.

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீங்களும் உடன் மற்ற ஆசிரியர் களும் பணியாற்றிய காலம் மாணவர்களுக்கு அது ஒரு பொற்காலம் என்று சொல்லலாமா?

ஒழுக்கத்துடன் அறிவு நிரம்பிய மாணவர்களை உருவாக்க வேண்டும்

என்பதை குறிக்கோளாகக் கொண்டு பணிபுரிந்தோம். கணித ஆசிரியராக நானும்

திரு. ந. இராமலிங்கம், இயற்பியல் ஆசிரியராக திரு. முத்துசாமி, வேதியியல் ஆசிரியராக திரு. சிங்காரவேலு என்று ஒவ்வொரு பாடத்திற்கும் ஆற்றல் மிகுந்த ஆசிரியர்கள் இருந்தார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களின் ஒட்டுமொத்த முயற்சியால் பள்ளியில் படித்த மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்குமாறு அவர்களை உயர்த்தினோம். அதனால் அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டினார்கள். பெற்றோர்களும் மனமுவந்து நன்கொடை தந்து ஊக்குவித்தார்கள். அதனால் புதிதாக நிறைய பள்ளியறைகளை உருவாக்கினோம். பள்ளி நன்கு வளர்ந்தது. எங்களுக்கும் நல்லபெயர் கிடைத்தது. திருச் செங்கோடு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த காலம் ஆசிரியர்களாகிய எங்களுக்கு மகிழ்ச்சிக்குரிய காலம். மாணவர்களுக்கு அக்காலம் நிச்சயம் பயனுள்ள காலம்.

“வித்யாவிகாஸ்” பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போது உங்களுக்குள் உதித்தது?

“நாம் வாழும் காலம் மிகவும் குறுகியது, அந்தக் குறுகிய காலத்தில் பெரியதொரு குறிக்கோளை. உன்னதமான கொள்கையை நமது வாழ்க்கையின் நோக்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதை அடைய வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும்” என்பார் சுவாமி விவேகானந்தர். நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் அயராது உழைத்த உழைப்பிற்கு மாணவர்களின் பெற்றோர்கள் தந்த ஊக்கம் தான். “வித்யா விகாஸ்” என்ற இப்பள்ளி உருவாகக் காரணம். திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சியும், சாதிப்பும் பெருமளவு பேசப்பட்ட போது மாணவர்களின் பெற்றோர்கள் நீங்களே தனியாக பள்ளியை உருவாக்குங்கள் என்றார்கள். அப்போது சிந்திக்க ஆரம்பித்தோம். அந்த நேரத்தில் அப்போது “1, “2 கல்வி நிலையங்களை தனியாரும் ஆரம்பிக்கலாம் என அரசு அறிவித்தது. அறிவித்த அந்த ஆண்டு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. அடுத்த ஆண்டு 1996-ல் அந்த வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் தனியாரால் துவக்கப் பட்ட இரண்டாவது “1, “2 கல்வி நிலையம் “வித்யா விகாஸ்” என்ற பெருமையுடன் கல்வி நிலையத்தை துவக்கினோம். ஆரம்பத்தில் 165 மாணவர்கள். இரண்டாவது வருடத்தில் 240 எனத் தொடர்ந்து இன்றைக்கு 7000த்திற்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

தரமான கல்வியைத் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு போதிக்கிறபோது மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிவருமே எப்படி சமாளிக்கிறீர்கள்?

ஆன்மிக வாழ்வுடன் ஆனந்தத்தை, கற்கும் கல்வியால் நல்க வேண்டும் எனும் வகையில் செயல்பட்டு வருகிற எங்களுக்கு மாணவர்கள்-பெற்றோர்கள் ஆதரவு நன்கு இருக்கிறது. மேலும் நிறைய மாணவர்களை சாதிக்கத் தூண்டும் விதமாக 2002-2003ஆம் கல்வி ஆண்டில் “வெற்றி விகாஸ்” என்கிற கல்வி நிலையத்தை உருவாக்கினேன். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு படித்து வருகிறார்கள். ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் பலரும் பாராட்டும்படி எனது மகன் வெற்றி அக்கல்வி நிறுவனத்தை நிர்வகித்து வருவதை எண்ணி நாளும் மகிழ்கிறேன். மேலும், நான் பிறந்த நாடான மலேசியாவிலும் ஒரு கல்வி நிலையத்தை தற்போது உருவாக்கி இருக்கிறேன்.

மலேசியா வளமிக்க நாடு என்றாலும், கல்வி அறிவில் இன்னும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளார்கள். எனவே தான் பிறந்த மண்ணின் மக்களும் தரமான கல்வியைப் பெற்று பயனுற வேண்டுமென்று நினைத்து பள்ளியை உருவாக்கியிருக்கிறேன். இன்றைக்கு தமிழகத்தில் 9 கல்வி நிலையங்களும், மலேசியாவில் ஒன்று மாக மொத்தம் 10 கல்வி நிறுவனங்கள் உள்ளது.

மனைவி, மகள், நண்பர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் இப்படி எல்லோரும் நன்கு அமைந்ததினால்தான் சாதிப்புகள் என்பது சாத்தியமானது.

தங்கள் கல்வி நிறுவனங்களின் வெற்றிக்கு காரணமாக நீங்கள் கருதுவது?

 • ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அயராத உழைப்பு.
 • பெற்றோர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை.
 • ஆர்வம் மிக்க மாணவர்களின் செயல்பாடு.
 • ஒவ்வொரு மாணவர்களுடன் நேரடித் தொடர்பு.
 • தனிமனித ஒழுக்கம்
 • கல்விக்கு தேவையான வசதிகளை உடனுக் குடன் ஏற்படுத்திக் கொடுத்தல்.
 • எடுத்துக்கொண்ட நோக்கத்தில் வெற்றியைச் சந்திக்கும் வரை ஓயாது உழைத்தல்.
 • இலக்கு நோக்கிய பயணம்.
 • நம்மால் எல்லாமுமே முடியும் என்கிற சிந்தனை நிரம்பியவர்களை உடன் வைத்திருத்தல்.

மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறுகிற மாணவர்களை எவ்விதத்தில் நீங்கள் உருவாக்கு கிறீர்கள்?

எங்களுக்கு கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துகிற கல்வி முறை, அடுத்து கற்றுக்கொடுக்கும் முறை. மேலும் கோடை கால விடுமுறைஎன்பது கூட பத்து நாட்கள் மட்டும் தான். மற்றநாட்கள் எல்லாம் வகுப்பு இருக்கும். அரசு பள்ளிகளில் டிசம்பர் மாதம் முடிக்கும் பாடங்களை நாங்கள் ஆகஸ்ட் மாதத்திலேயே முடித்து விடுகிறோம். அதற்கு பின்பு யூனிட் டெஸ்ட், ஒன் பை தேர்டு டெஸ்ட், ஆஃப் போர்சன் டெஸ்ட், புல்போர்சன் டெஸ்ட் இப்படி அடுத்தடுத்து மாணவர்களுக்கு தேர்வு இருக்கும். குறைந்தபட்சம் 15 புல் போர்சன் டெஸ்ட்டை மாணவர்களுக்கு வைக்கும் போது நன்கு தேர்ச்சி பெற்று விடுகிறார்கள்.

தேர்வுத்தாளைத் திருத்தும் போது அருகாமையிலேயே மாணவர்களை வைத்து திருத்தி தவறுகளை சுட்டிக்காட்டி அடுத்தடுத்து அத்தவறு நேராத வண்ணம் மாணவர்களை உருவாக்க தனி ஆசிரியர்குழு வைத்தும் செயல்படுகிறோம்.

கட்டாயக் கல்வியை ஒரு மாணவனுக்குள் திணிக்கும்போது அவனது மனநிலை பாதிப்பிற்கு உள்ளாகக் கூடுமா?

எங்கள் பள்ளியைப் பொறுத்தவரையில் ஒரு மாணவனை அடித்தோ, துன்புறுத்தியோ படிக்கச் சொல்வதில்லை. பெற்றோர்களின் கவனிப்பு போன்றுதான் நாங்களும் மாணவர் களைப் பார்த்துக் கொள்கிறோம்.

அமைதியான, தெளிவான மனநிலையைப் பெறமாணவர்களுக்காக வேதாத்ரி மகரிஷி அவர்களின் அகத்தாய நிலை, காயகல்ப பயிற்சி ஆழியாரில் பிரம்மஞானப் பயிற்சி என்ப தெல்லாம் கொடுக்கப் பெற்றபின்புதான் தேர்வை மாணவர்கள் எழுதுகிறார்கள். இப்பயிற்சியின் மூலம் நல்ல ரிசல்ட் மாணவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றோம். சராசரி மாணவன் கூட சாதனை மாணவனாக உயர்ந்தான். அதனால் தியானம், யோகா, உடற்பயிற்சி என்பதெல்லாம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மாநில அளவில் முதலிடம் பிடித்த எங்கள் பள்ளி மாணவி தாரணி மற்றும் இரண்டாவது இடம் பிடித்த தளபதி குமார் விக்ரம் இவர்களிடம் வெற்றி குறித்து கேட்டபோது அவர்கள், எங்கள் பள்ளியில் “எங்களுக்கு கிடைத்த பிரம்மஞானப் பயிற்சியும் ஒரு காரணம் என்று சொல்லி யிருந்தார்கள்”. அதனால் எந்த விதத்திலும் பாதிப்பின்றி நல்ல மாணவர்களை உருவாக்க அத்தனை முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம்.

பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே உயர்தர கல்வி நிறுவனங்களில் அனுமதி கிடைக்கிறது என்கிறபேச்சு ஆங்காங்கே எழுகிறதே? உங்கள் பள்ளியில் நீங்கள் எப்படி?

அப்படி இல்லை. வசதி குறைந்தவர் களுக்கும் எங்கள் கல்வி நிறுவனங்களில் நிச்சயம் இடம் கொடுக்கிறோம். வசதி குறைந்த மாணவ / மாணவிகளின் கல்விச் செலவை நாங்களே முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். அந்த வகையில் ஆண்டுக்கு 150 பேர் பயன்பெறுகிறார்கள். அரசுப் பள்ளியில் படித்து விட்டு வரும் மாணவ / மாணவிகளுக்கு நிறைய சலுகைகள் வழங்குகிறோம். தமிழ்வழி கல்வியில் படிக்கும் மாணவ / மாணவிகளுக்கு கட்டணம் இல்லை. இப்படி நிறைய சலுகைகள் கொடுத்துக் கொண்டுதான் வருகிறோம்.

குழந்தைகளை விடுதியில் சேர்த்து படிக்க வைப்பதால் அவர்களின் மனதில் ஓர் இறுக்கம் ஏற்படுகிறது என்பது உண்மையா?

கல்வி ஆரம்பிக்கும் இடமே வீடுதான். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை எந்தளவு தங்கள் பராமரிப்பில் அன்பு காட்டி ஊக்கப்படுத்துகிறார்களோ அந்தளவு அக்குழந்தைகள் எதிர்காலத்தில் சாதிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஓரளவு வெளியுலக அறிவைப் பெற்றபின்பு அந்தக் குழந்தைகளை விடுதியில் சேர்த்திவிடுவது நல்லது. அப்படி செய்கிறபோது அவர்களின் மனநிலையில் எந்தப் பாதிப்பும் வராது. பத்து வயது வரை ஒரு குழந்தை பெற்றோர்களிடம் இருந்து கல்வியைக் கற்றுக் கொள்வதே மிகச் சிறப்பு.

பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு நீங்கள் தரும் ஆலோசனைகள்?

எங்கள் பள்ளி மாணவர்களைப் பொறுத்த வரையில், 2 1/2 மணி நேரத்திலேயே தேர்வை எழுதிவிட்டு மீதி 1/2 மணி நேரத்தில் எழுதியதை சரிபார்க்க பயன்படுத்துகிறார்கள். எங்கேனும் தவறு செய்திருக்கிறோமா என்று சரிபார்த்து எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலைத் தந்திருக்கிறோம் என்கிறமுழு திருப்தியடைந்த பின்புதான் தேர்வு அறையை விட்டே வெளியே வருகிறார்கள். அந்தளவு அவர்களை உருவாக்குகிறோம். இம்முறையை எல்லோரும் கடைப்பிடித்தால் இந்தக் கேள்வி விட்டு விட்டேன், பதில் மாற்றி எழுதிவிட்டேன் என்கிற தவறுதல்களை தவிர்க்க முடியும். மதிப் பெண்களை முழுமையாக எடுக்க முடியும்.

உங்களால் மறக்க முடியாத அனுபவம்?

ஆரோக்கியமான, ஆனந்த மான வாழ்விற்கு வழிகாட்டிய “வேதாத்ரி மகரிஷி” அவர்களையும்,

“தனிமனிதனின் வாழ்க்கையில்

ஒழுக்கம் இருந்தால்

நடத்தையில் அழகு மிளிரும்

நடத்தையில் அழகு மிளிர்ந்தால்,

குடும்பத்தில் சாந்தி நிலவும்

குடும்பத்தில் சாந்தி நிலவினால்

நாட்டில் சீர்முறைபெருகும்,

நாட்டில் சீர்முறைபெருகினால்

உலகத்தில் அமைதி நிலைக்கும்”.

என்று கூறிய டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களை நாங்கள் (குடும்பம், ஆசிரியர்கள்) நேரில் சந்திக்கச் சென்றபோது அவர் மிகுந்த மரியாதையுடன் மேலைநாட்டு V.V.I.P-க்கள் அமரும் சிறப்புமிக்க இருக்கையில் அமரச்செய்து உங்களை கௌரவிப்பதில் பெருமைப்படுகிறேன். ஆசிரியப்பணி என்பது அவ்வளவு அற்புதமான பணி என்றார். அச்சிறப்பு மிக்க மாமனிதரையும் சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.

உங்கள் பள்ளியின் குறிக்கோளாக நீங்கள் கொண்டிருப்பது?

 • அனைத்து மாணவர்களையும் 100 சதவீதம் தேர்ச்சி அடைய வைப்பது.
 • மருத்துவம், பொறியியல் போன்றதொழிற் கல்லூரிகளில் அனைவரும் சேர்வதற்கும் சிவில் சர்வீஸ் தேர்வு (IAS & IPS) எழுதி வெற்றி பெறுவதற்கும் பயிற்சி அளித்தல்.
 • மாணவர்களை ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டில் உயர்ந்து விளங்கச் செய்தல். உடலாலும் உள்ளத்தாலும் பன்மடங்கு வலிமை பெறச் செய்தல்.
 • சிறப்புமிக்க ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு நன்முறையில் பயிற்சி அளித்து எதிர்பார்ப்பதை விட உயர்ந்த மதிப்பெண்கள் பெற வழிவகை செய்தல்.
 • போட்டிகளில் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் மாணவர்களுக்கு இலட்சக்கணக் கான ரூபாய் மதிப்பில் பரிசுப் பொருட்கள் வழங்குதல்.
 • மாநில அளவில் சிறப்பு தகுதிகளைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கும் அவர்களை சாதனை யாளர்களாக்கிய ஆசிரியப் பெருமக்களுக்கும் ஏறத்தாழ 50 பவுன் அளவிற்கான பரிசுகள் வழங்கி ஊக்குவித்தல்.

தனியார் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அரசுப்பள்ளிகளில் இல்லையே என்ன காரணம்?

நான் அரசுப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து நல்ல தேர்ச்சி விகிதம் கொடுத்துத் தான் இன்றைக்கு இந்தளவு வளர்ந்திருக்கிறேன். முறைப்படி முயற்சிகள் செய்தால் முடியாதது இல்லை. ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக் கூடாது என்ற உத்தரவால் மிரட்டி படிக்க வைக்க முடிவதில்லை என்பதையெல்லாம் ஆசிரியர்கள் காரண மாக்காமல் மாணவர்களை நன்கு ஊக்கு வித்து கடின முயற்சிகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டால் தேர்வில் சாதித்துக் காட்ட முடியும்.

ஆசிரியர்களைக் கண்டால் பயப்படும் மாணவர்கள் இன்று இல்லை. விளையாட்டுத் தனமும், கேலியும், கிண்டலுமாக பள்ளிக்கு வந்து போகிற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்களை மதித்து, தன் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகிற கல்வியை நன்கு கற்று வெளிவர வேண்டும் என்கிறதாக்கம் மாணவர் களிடையே அதிகம் வர வேண்டும். அப்போது தான் ஆசிரியர்களுக்கும் ஆர்வம் அதிகரிக்கும். இல்லையென்றால் ஆசிரியர்கள் சொல்வதை சொல்லிவிட்டு நமக்கென்ன என்று அமைதியாக இருந்து விடுவார்கள். அதுதான் இன்று நடக்கிறது. இந்நிலை மாறினால் மாற்றம் வரும்.

 • உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை சம்பவமாக நீங்கள் கூற விரும்புவது?
 • கோவையில் படித்துக் கொண்டிருந்த போது என் தந்தை காலமானார். அப்போதுதான் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனை எனக்குள் எழுந்தது. எப்படியும் தந்தை குடும்பத் திற்காக சொத்துகள் சேர்த்து வைத்திருப்பார் என்று தான் அதுவரை நினைத்திருந்தேன். அப்பா காலமான இரண்டு மாதங்களுக்கு பின்பு விசாரித்துப் பார்த்ததில் ரூபாய் 15 ஆயிரம் மட்டுமே அவர் எங்களுக்காக விட்டுச் சென்றிருந்தார். பெரிய அளவு எதிர்பார்த்த எனக்கு பெரிய அதிர்ச்சி. சமுதாயத்தில் உயர்ந்த வாழ்க்கை என்பது கனவாகிவிடக் கூடாது என நினைத்தேன். வீறுகொண்டு எழுந்தேன். குன்னூர் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது கல்லூரி வேலை நேரம் போக மீதி நேரங்களில் டியூசன், டியூசன் என இரவு பகல் பாராது உழைத்தேன். தினமும் இரவு 12 மணிக்குத் தூக்கம். அதிகாலை 5 மணிக்கு விழிப்பு. டியூசன், வேலை என அயராது உழைத்தேன். பொருளாதாரத்தில் மெல்ல மெல்ல உயர்ந்தேன்.

 • தடைகளை நீங்கள் எதிர்கொண்ட விதம் குறித்துச் சொல்லுங்களேன்?
 • தடைகள் வரும்போதுதான் நமக்குள்ளே உள்ள ஆற்றலை கண்டு கொள்கிறோம். மலேசியாவில் துவக்கப்பட்டுள்ள பள்ளிக்கு வராத தடைகளே இல்லை. பள்ளியைத் துவக்குவதற்கான அரசு அனுமதியைப் பெறபல மாதங்கள் தொடர்ந்து போரட வேண்டி யிருந்தது. அனுமதி கிடைக்கப் பெற்ற பின்பு “வித்யா விகாஸ்” என்ற பெயரை சூட்டிக் கொள்ள முடியவில்லை. பெயருக்காக ஆறு மாதங்கள் போராடி இறுதியாக சில காரணங் களால் “விகாஸ் இன்டர்நேஷனல்” என்ற பெயரை வைத்தோம். மூன்று வருடம்

  தொடர்ச்சியாகப் போராடித்தான் அங்கு பள்ளியைத் துவக்க முடிந்தது.

  நேர்முகச் சிந்தனையுடன்

  விடாமுயற்சி இருந்தால்

  வெற்றியை நிச்சயம் பெற்று விட முடியும்.

  “If you want to do; We can do”

  முடியாதது என்று எதுவுமே இல்லை.

  முயற்சியுங்கள். எல்லாமுமே முடியும். வாழ்த்துகள்!

  8-ம் வகுப்பு வரை சராசரி மதிப்பெண் எடுத்து வந்த நான் இப்பள்ளியில் சேர்ந்த பிறகு ஆசிரியர்களின் சிறப்பான போதனைகளால் இன்று 87 சதவீதத்திற்கும் கூடுதலாக, மதிப் பெண்கள் பெற்று வருகிறேன். வரும் பொதுத் தேர்வில் மேலும் கூடுதலாக மதிப்பெண் பெற்று சாதிப்பேன் என நம்புகிறேன்.

  – ஈ. இராமகிருஷ்ணன், பனிரெண்டாம் வகுப்பு (M4)

  “வித்யா விகாஸ்” பள்ளியில் “இளம் விஞ்ஞானி” என்ற பாராட்டுதலை மாசா என்ற மாணவி பெற்றுள்ளார். அம்மாணவி டிரெயின் டாய்லெட்டை புதிய முறையில் வடிவமைத்துக் காட்டியதை டாக்டர் மேதகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற

   

  2 Comments

  1. mkrevathi says:

   sir

   this site is very useful sir . your advice life long follow up sir. thanks a lot.
   by

   – mkrevathi.B.Lit.,M.A.,

  2. A.GOWRISHANKAR says:

   THANKS. VERY USEFUL TO ALL

   


  March 2009

  பயிலரங்கம்
  உலக மகளிர் தினம் வாழ்த்துகள்!
  நான் ஒரு வெற்றியாளர்
  தன்னம்பிக்””கை”” யால்
  தன்னம்பிக்""கை"" யால்
  ஈரோடு பயிலரங்கம்
  உயர்வின் பாதை
  நிறுவனர் நினைவுகள்
  இனியொரு விதி செய்வோம்!
  இன்பமாக வாழ வழி
  தேர்தல் ஜனநாயகம்
  உங்கள் எண்ணங்களே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது!
  சாதிப்பை நோக்கிய பயணத்தில்
  இங்கு… இவர்… இப்படி…
  உன்னதமாய் வாழ்வோம்! செயல்விளைவு உணர்வோம்!!
  அச்சீவர்ஸ் அவென்யூ
  சிந்திக்க… சிறக்க….
  திறந்த உள்ளம்
  வெற்றிப் படிக்கட்டுகள்
  உடலினை உறுதி செய்!
  அச்சீவர்ஸ் அவென்யூ
  பயிலரங்கச் செய்தி
  மனிதா! மனிதா!!
  சிந்தித்தால் சிகரம் எட்டும்!
  அச்சீவர்ஸ் அவென்யூ
  நல்ல வண்ணம் வாழலாம்
  அச்சீவர்ஸ் அவென்யூ
  உன்னைக்கொடு! விண்ணைத்தொடு!!
  உள்ளத்தோடு உள்ளம்