Home » Articles » நிறுவனர் நினைவுகள்

 
நிறுவனர் நினைவுகள்


தியாகராசன் தூசி
Author:

கலை இலக்கியம் மக்களுக்காகவே என்று கற்பித்த கலா ரசிகர் அய்யா இல.செ.க. அவர்கள் பணியாற்றிய கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், ஆண்டுதோறும் முத்தமிழ் விழா வெகு விமரிசையாக நடைபெறும். இயல்விழா, இசைவிழா, நாடக விழா என்று மூன்று நாட்களுக்கு நடக்கும் இந்த விழாவில், பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், திரைப்பட நடிகர்கள் போன்றோர் கலந்து கொள்வார்கள். கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கள் பெற்றோர்களையும், உற்றார்களையும் கடிதம் போட்டு வரவழைத்து விடுவார்கள். கோவையில் உள்ள மற்றகல்லூரி நண்பர்களும், பொதுமக்களும் வந்து விடுவார்கள். உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையைப் போல, மூன்று நாட்களுக்கு “ஜே ஜே” என்று நடக்கும் இந்த விழாவை மாணவர் மன்றச் செயலர், ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, திட்டமிட்டு, செயல்படுத்துவார். இந்த விழாவின் மிக முக்கியமான ஆலோசகர் நமது இல.செ.க. அய்யா அவர்கள் தான்! அந்த விழாவின் ஒவ்வொரு நிகழ்வுக்கும், அய்யா பின்புலமாகவும், பக்க பலமாகவும் இருந்து வழிகாட்டுதல் புரிவார்.

1980-களில் நடந்த விழாவிற்கு, பிரபல எழுத்தாளர்கள் சுஜாதார, ராஜம் கிருஷ்ணன், புஷ்பா தங்கதுரை, சாண்டில்யன், ராஜேஷ்குமார், விமலா ரமணி போன்றோரும், கவிஞர்கள் புவியரசு, அப்துல் ரகுமான், மு. மேத்தா, சிற்பி பாலசுப்பிரமணியம் போன்றோரும், பேச்சாளர்கள் சத்தியசீலன், சாலமன் பாப்பையா, அறிவொளி போன்றோரும், திரையுலகினர் பாரதிராஜா, ஜெமினிகணேசன், வடிவுக்கரசி போன்றோரும் கலந்து சிறப்பித்துள்ளர்.

விழாவின் போது, தேனீர் இடைவேளையில், இத்தகைய சிறப்பு விருந்தினர்களோடு, அய்யாவும், பேராசிரியர்களும் அமர்ந்து சிறிது நேரம் கலந்துரையாடி மகிழ்வர். அது சமயம் ஒருமுறை, பிரபல கவிஞரும், மற்றொரு எழுத்தாளரும் தங்கள் படைப்புகளைப் பற்றி, அய்யாவிடம் அவரது கருத்தைக் கேட்டார்கள். அதற்கு அய்யா அவர்கள், “நீங்கள் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை. நான் இதைச் சொல்லியாக வேண்டும். உங்களுடைய கதையிலும், கவிதையிலும் புறம் அழகாக இருக்கிறது. ஆனால் அகம் அழுக்காக இருக்கிறது. மக்களை, குறிப்பாக இளைஞர்களைக் கவர்வதற்காக மட்டுமே எழுதுகிறீர்கள். அவர்களைக் கட்டிக் காப்பாற்றுவதாக இல்லை. உங்களுடைய எழுத்துக்கள், நிறைய வருமானம் பெறுவதற்கு, உங்களுக்குப் பயன்படலாமே தவிர, இந்தச் சமுதாயத்திற்குப் பயன்படவில்லை. சிந்தனையைத் தூண்டுவதை விட்டு விட்டு, சிந்தனையை மலடாக்கும் கதை, கவிதைகளால் என்ன பயன்?” என்று கேட்டு விட்டார். அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. தேனீர் வேளையில், தேனீ கொட்டியது போல் திகைத்துப் போனார்கள். “இனியேனும் பயனுள்ளவற்றைப் படையுங்கள்” என்று அய்யா கூற, அவர்களும் தலையசைத்து விட்டு, விழாமேடைக்கு விரைந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடக் காரணம் என்னவென்றால், “கலை இலக்கியம்” யாவும் மக்களுக்குப் பயன்படவேண்டும்” என்ற நோக்கமுடையவர் அய்யா அவர்கள். அப்படிப் பட்ட படைப்புகளிலே அவர் மூழ்கிப் போய்விடுவது அடிக்கடி நடக்கும். கவிதை களைப் படித்துவிட்டு, கண்ணீர் பெருக்கெடுக்க, மாணவர்களிடம் பகிர்ந்து கொள்வார். ஒருவரில் பழமொழியின் உள்ளர்த்தம் பற்றி, ஒரு மணிநேரம் விளக்கம் தந்து மகிழ்வளிப்பார். பழந்தமிழ் இலக்கியம், புதுக்கவிதை, பழமொழிகள், நாடகங்கள் எல்லாவற்றையும் சுவைத்து மகிழும் கலாரசிகர் அவர்.

“கிராமத்து ஓவியங்கள்” என்ற தனது நாவலை எழுதுகின்ற வேளையில், அவர் அழுது கொண்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டேன். “அய்யா என்னாயிற்று?” என்று கேட்டதற்கு, “ஒன்றுமில்லை. எனது கதாநாயகி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்று உணர்ச்சிவயப்பட்டார். “சிந்தனை மலடுகள்” என்ற தனது நூலுக்கான கட்டுரைகளை எழுதும் போது ஆவேசத்தோடு இருந்திருக் கிறார். அவரது கட்டுரைத் தலைப்புகளே, “ஓநாய்களால் வளர்க்கப்படுகின்றன ஆடுகள்” என்றும், “அரசு அலுவலகங்களிலே சில கோயில் மாடுகள்” என்றும் கொந்தளிப்போடு கொதிப்பனவான இருக்கும்.

அய்யா ரசித்த புதுக்கவிதைகள்

மனதை உறுதியாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் இக்கவிதை, அய்யா மாணவர்களுக்கு அடிக்கடி சொல்வது.

கறுப்பு சிவப்பு ரவிக்கை போட்டு

கட்டம் போட்ட சேலை கட்டி

குனிந்து வளைந்து ஒருத்தி

குப்பையைக் கூட்டிப் போனாள்

அறைசுத்தமானது

மனசு குப்பையானது

மக்களையும் பற்றிக் கவலைப்படாமல் கண்ணுறங்கும் அரசு அலுவலர்களைப் பற்றி, தாய் தனது தாலாட்டுப் பாட்டிலே சொல்வது போன்றகவிதை, அவர் ரசித்து மகிழ்வது.

ஏழுகடல் தாண்டி – உங்கப்பன்

ஏலக்காய் மலையேறி

பசியாப் பழம் பறிக்கப்

போயிருக்கார் கண்ணுறங்கு!

வேளை வரும் வரைக்கும்

வெறும் பயலே கண்ணுறங்கு!

ராசாங்கம் பார்ப்பவர் போல்

ரத்தினமே கண்ணுறங்கு!

(ஆதாரம் : அய்யாவின் “புதுக்கவிதை ஒரு பார்வை”)

அய்யா புசித்த பழமொழிகள்

சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் கொண்ட பழமொழிகளில், அய்யா குளித் தெழுந்து, பெரிய ஆய்வையே நடத்தியிருக்கிறார். “வேளாண்மைப் பழமொழிகள்” என்றஅவரது நூலே இதற்கு அத்தாட்சி.

“பாழில் போட்டலும் பட்டத்தில் போடு”

“காணி தேடினும் கரிசல் தேடு”

“எட்டடி வாழை கமுகு, ஈரடி கரும்பு கத்தரி,

இருபதடி பிள்ளை”

“மாட்டை நடையில் பார்,

ஆட்டைக் கெடையில் பார்”

“மேனா மினுக்கியைக் கொண்டவனும் கெட்டான்

மேட்டிலே பயிரிட்டவனும் கெட்டான்”

“கடன் வாங்கிப் பயிரிட்டவனும்

மரமேறிக் கைவிட்டவனும் ஒன்று”

உழுதவன் கணக்குப் பார்த்தல் உழக்கு மிஞ்சாது”

ஆழ உழுது அரும்பாடு பட்டாலும்

பூமி விளைவது புண்ணியவான்களுக்கே”

போன்ற பழமொழிகளிலே பொதிந் திருக்கின்ற கருத்து, அனுபவம், நம்பிக்கை, தெளிவு, செறிவு, எளிமை போன்றவற்றை அடிக்கடி மாணவர்களுக்கு விரித்துரைப்பார்.

இவர் செய்த ஆராய்ச்சியின் மேன்மையை அறிந்து, மதுரையில் 1981-ல் மறைந்த மாண்புமிகு முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடத்திய ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்ட விழா மலரில், இவரது கட்டுரை அவசியம் தேவை என்றே கேட்கப்பட்டு, அம்மலரில் இடம் பெற்றது.

(ஆதாரம் : ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு – மதுரை 1981 – விழாமலர் – “வேளாண்மையில் பழமொழிகள்” – இல.செ.க.வின். கட்டுரை – பக்கம் 292 முதல் 299 வரை).

இங்ஙனம், எப்போதும், தான் எழுது கின்றவை அனைத்தும், மற்றவர்கள் படைக்கின்ற கலை இலக்கியங்கள் அனைத்தும், சமுதாய மேம்பாட்டிற்காகவே உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அய்யா அவர்கள். உயர்ந்த கலை இலக்கியங்களைப் படித்து, புசித்து, ரசித்து, மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்தவர். அவரது அனைத்து நூல்களுமே, “குறிக்கோளை நோக்கி”, “கிராமங்களை நோக்கி”, “இளைய தலைமுறைக்கு” என்றஇலட்சியத் தலைப்புக்களையே தாங்கி நிற்கும். மக்களுக்காக எழுதும் படைப்பாளிகளுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார் அய்யா.

அய்யாவின் இனிய நண்பர் டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள், தமிழ்நாட்டின் இளைஞர்களைத் தமது “எண்ணங்களால்” தட்டி எழுப்பியவர். அய்யா தனது “முன்னேற்றத்திற்கு மூன்றேபடிகள்” என்றநூலை, அவருக்கே காணிக்கையாகப் படைத்தார். அந்த நூலில், எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் அய்யாவைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டிருப்பார்.

“டாக்டர் இல.செ. கந்தசாமி அவர்கள் சமுதாயத்திற்குப் பயன்படுவனவற்றைமாத்திரமே எழுதுகிறசக்கரவாகப் பட்சி! வீழ்ந்து கிடக்கிற மானிடத்திற்கு விழிகளை வழங்குகிற எழுத்துக் களாக, தனது வார்த்தை விரிப்புக்கள் விளங்க வேண்டும் என்பதில் மெத்தக் கவனம் செலுத்தி வருகிறார் இந்த மேன்மையாளர்! டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்குப் பிறகு, இங்கே பயன்படவே எழுதப்படுகிறதமிழ் எழுத்து பேராசிரியர் இல.செ. கந்தசாமி அவர் களுடையது! சிந்தனை தோய்ந்த அவரது சிகர எழுத்துக்கள் வெல்க! வாழ்க!.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்