Home » Articles » ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்

 
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்


பாபு எஸ்
Author:

பயணங்கள் இப்போதெல்லாம் பாதுகாப்பானதாய் இல்லை. நகரத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இரு சக்கர வாகனங்களில் அவ்வளவு எளிதில் போய் விட முடிவதில்லை. சாலை விபத்துக்கள் பற்றிய ஒரு கவிதையில் பூமா, ஈஸ்வரமூர்த்தி என்ற கவிஞர், “மரணம் என்பது ஒரு லிஸ்ட் வைத்துக் கொண்டு, இன்றைக்கு எத்தனை பேர் சாலை விபத்துக்களில் இறந்திருக்கிறார்கள் என்று சரி பார்த்துக் கொள்கிறது” எனும் பொருள்படும்படி உருவகித்து எழுதுகிறார். மரணத்தின் என்றபட்டியலில் நாம் இருக்கிறோமோ என்றபதட்டத்தை உருவாக்குகிறது அந்தக் கவிதை. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று மொத்தம் இருப்பது நான்கு திசைகள் தான். தமிழ் இலக்கியத்தில் கூட எட்டு திசைகள் தான் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இன்றைக்கு, சாலையில் சில இடங்களில், பதினாறு திசைகளிலிருந்து பாய்ந்து வருகிறார்கள். இரவு பத்து மணிக்கும் இதே நிலைமைதான். அப்படி எங்கே தான் போகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். சாலையில் வண்டி ஓட்டும் எல்லாருக்கும் எப்படி அவசரமிருக்க முடியும்? அவசரத்துக்கும், பொறுமை யின்மைக்கும் நிறைய வித்தியாசமுண்டு. நம்மில் பலருக்கு பொறுமை இல்லை. அவ்வளவுதான். ரொம்பவும் மெதுவாகச் செல்லும் யாரையாவது வேகமாக போக வைக்க வேண்டுமா? அவர்களை சட்டென்று முந்திச் செல்லுங்கள். இவன் என்ன நம்மை முந்துவது என்று வேகமெடுப்பார்கள். இரு சக்கர வாகனம் ஓட்டுகிற பெரும்பாலனாவர்களின் மனப் போக்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. நகரங்களில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர் களின் மனப்போக்கு பற்றி சைக்கலாஜி பயில் பவர்கள் ஒரு பி.எச்.டி. ஆய்வே மேற் கொள்ளலாம்.

நான் பயன்படுத்துவது சைக்கிள்களுக்கு இணையான வேகத்தில் செல்லக்கூடிய பாட்டரி வண்டி. எவ்வளவு இயக்கினாலும் 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லாத வண்டி அது. அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் சைக்கிள் ஓட்டுபவர்கள் பல பேர் என்னை முந்திச் செல்கிறார்கள். பெட்ரோல் இல்லாமல் வெறும் மின்சாரத்தால் இயங்கும் இந்த வண்டி இப்போது கோவையில் மிக பிரபலம். அலுவலகம் செல்பவர்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், ரிடையர் ஆகி வீட்டில் இருக்கும் முதியவர்கள் ஆகியோருக்கு மிகவும் பொருத்தமான வாகனம் இது. செல்போனை சார்ஜ் செய்தால், எழுபது கி.மீ. தொலைவு செல்லலாம். எழுபது கி.மீ. தொலைவு செல்ல ஆகும் மின்சார செலவு பத்து ரூபாய்க்கும் குறைவு. வாகனப் பதிவு கிடையாது. அத னால் எண் கிடை யாது. ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவை இல்லை. எஞ்சின் ஆயில் எதுவும் இல்லாததால் பரா மரிப்பு செலவு என்று ஒன்றும் இல்லை. வண்டியில் சத்தமே வராது. ஸ்டார்டிங் பிரச்சனை எதுவும் கிடையாது. சாவியைப் போட்டு ஆக்ஸி லேட்டரை முறுக்கினால் வண்டி போகும். ஆக்ஸிலேடரின் இயக்கம் தான் பேட்டரியை கட்டுப்படுத்துகிறது. தாழ்வான சாலையிலும், சிக்னலிலும் நாம் ஆக்ஸிலேடரை பயன் படுத்துவது இல்லை. அதனால் அச்சமயங்களில் சார்ஜ் செலவாகாது. மிதமான வேகத்தில் மட்டுமே செல்ல முடியும் என்பதால் வண்டியின் வேகம் நம் கட்டுப்பாட்டில் இருக்கும். விபத்துக்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

பெரிய வண்டிகளில் போகிறவர்கள் பெரும் பாலும் தலைக்கவசம் அணிவதே இல்லை. கார ணம், நாம் தானே வண்டி ஓட்டுகிறோம், விபத்து நடக்க வாய்ப்பே இல்லை என்கிறதுணிவு. ஆனால் பெரும்பாலான விபத்துக்கள், விபத்துக்கு உள்ளாகிறவர்களால் நடப்பது இல்லை. நாம் சாலை விதிப்படி, சிறு தவறு கூடச் செய்யாமல் வண்டி ஓட்டலாம். நமக்கு பின்புறமோ, எதிர்புறமோ, பக்கவாட்டிலோ வண்டியில் வருபவர்கள் செய்யும் சிறு தவறினால் நாம் விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. நம்மோடு சாலையைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் எல்லோரும் நம்மைப் போல சரியாக வண்டியைச் செலுத்துபவர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? தலைக்கவசம் அணியாததால் விபத்துக்கு உள்ளாகி மூளைச் சிதைவு சாவு ஏற்பட்டு இறந்து, உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்தவரின் மகள், சமீபத்திய தொலைக்காட்சி செய்திகளில் “தயவு செய்து எல்லோரும் ஹெல்மெட் போட்டுட்டுப் போங்க. என்னைப் போல பலரையும் அனாதை ஆக்கிடாதீங்க” என்று கதறியது நினைவை விட்டு அகலாதது.

இளம் பெண்கள் பல பேர் ஸ்கூட்டி போன்றவாகனங்களில் மின்னல் வேகத்தில் போகிறார்கள். கல்லூரி மாணவர்கள் மற்றும் நடுத்தர வயதுடைய ஆண்கள் பலர் ஊரையே கூப்பிடும்படி உறுமிக் கொண்டு போகிறார்கள். அப்படி அதிவேகமாகப் போகிறவர்களை முன்பெல்லாம் “என்னவோ அவன் அப்பன் வீட்டு ரோடு மாதிரி போறான் பாரு” என்று கமெண்ட் அடிப்பது உண்டு. இப்போது அதற்கும் வழியில்லை. கோவையில், சில இரு சக்கர வாகனங்களின் பின்னால் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது. “வங்ள், ற்ட்ண்ள் ண்ள் ம்ஹ் ச்ஹற்ட்ங்ழ்’ள் ழ்ர்ஹக்”.

மேற்குறிப்பிட்ட எனது பாட்டரி வண்டியை, இ-பைக் என்று அழைக்கிறார்கள். எலக்ட்ரிக் பைக் என்பது விரிவு. வாகனத்தை வாங்கியதி லிருந்து இந்த எட்டு மாதத்தில் இதைப் பற்றி ஒரு ஆயிரம் பேரிடமாவது சொல்லியிருப்பேன். கடைத்தெருவில் நிறுத்தும் போது என்று மட்டும் இல்லை. சிக்னலில் நிற்கும் போதும், நெடுஞ்சாலையில் அத்தனை டிராபிக்கிலும் தங்கள் மோட்டார் பைக்கில் உறுமிக் கொண்டு பக்கவாட்டில் வந்து இந்த வண்டியைப் பற்றி விசாரிக்கிறார்கள். சிலர் உரிமையோடு வழி மறித்தே கேட்கிறார்கள். எங்கள் பகுதியில் மற்ற சிலர் இது போன்றவண்டியை வாங்கும் வரை நானொரு விளம்பர மாடலாகவே செயல்பட்டேன் எனலாம். இத்தனையும் இந்த கட்டுரையில் எழுதுவதற்கு காரணமுண்டு. சமீபத்தில், காட்சி-தொடர்பியல் பயிலும் மாணவ-மாணவியர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஒரு குறும்படத்துக்காக என்னை என் வாகனத்தோடு படமெடுத்து பேட்டியும் எடுத்தார்கள். இதை electric bike என்று சொல்வதைவிட ecofriendly-bike என்று சொல்வதே அதன் பெயர்க் காரணத்துக்கு பொருத்தமானதாக இருக்கும். புகை வருவதில்லை என்பதைவிட, வண்டி இயங்கும் சப்தம் சுத்தமாக வருவதில்லை என்பதைத்தான் முக்கியமானதாகக் கருதுகிறேன்.

காற்று மற்றும் நீர் மாசுபாடு பற்றி பேசும் பலர், சப்தங்கள் உண்டாக்கும் சுற்றுச்சூழல் கேடு பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை. இன்றைக்கு நம்முடைய நகரங்கள் நாராசமான சப்தங்களால் நிறைந்திருக்கின்றன. நகரத்தின் சப்தங்கள், மனிதனுடைய செவியும் உடலும் தாங்கிக் கொள்ளக்கூடிய சப்த “டெசிபல்” அளவீட்டை விட அதிகமாக ஆகி பலகாலம் ஆகிவிட்டது. வெளி உலகில் மட்டுமல்லாது வீட்டுக்குள்ளேயே ஒலிக்கும் தொலைக்காட்சி, தொலைபேசி மற்றும் அழைப்பு மணியின் ஒலி அளவை தாங்கிக் கொள்கிறசக்தி கைக்குழந்தைகள், முதியவர்கள் ஆகியோரின் உடலில் இயற்கையாகவே கிடையாது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? குறுகிய தெருக்களில், மதியப் பொழுதுகளில் வண்டியின் ஹாரனை பலமாக ஒலிப்பவர்களைப் பிடித்து கடுங்காவல் தண்டனை விதிக்க வேண்டும்.

அ. வெண்ணிலா என்றகவிஞர் எழுதுகிறார்…

“அழைப்பு மணியை அழுத்துவதற்கு முன்
அரை நொடி யோசி அந்த வீட்டினுள்
ஒரு குழந்தை தூங்கிக் கொண்டிருக்கலாம்”

மிக்ஸியைப் போட்டதும், தொட்டிலில் தூங்கும் குழந்தையின் உடலில் ஒரு நடுக்கம் பரவுவதை நாம் கவனித்திருக்கலாம். தொலைக் காட்சிப் பெட்டி, மியூசிக் சிஸ்டம், தொலைபேசி மற்றும் அழைப்பு மணியின் அலறல், முதியவர் களை பதட்டமடையச் செய்யும். ஏனென்றால் இது இயற்கை. நாமும் குழந்தைகளாக இருந்தபோது இப்படித்தான் இருந்திருப்போம். முதியவர்களாக ஆகும் போது இப்படித்தான் இருப்போம்.

இதையெல்லாம் தவிர்க்க முடியாது என்று வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். ஒரேயொரு உண்மையை மட்டும் நாம் அவ்வப்போது நினைத்துக் கொண்டால் போதுமானது. நம்மைத் தவிர இன்னும் ஏராளமான மனிதர்கள் இந்த பூமியில் வாழ்கிறார்கள் என்பதுதான் அது.

– வழிக்குறிப்புகள் வளரும்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்