Home » Articles » மனித மனங்களை வெல்லும் கலைகள்

 
மனித மனங்களை வெல்லும் கலைகள்


வெங்கடாசலம் ப
Author:

ஒரு நிகழ்ச்சிக்கு, விழாவிற்கு செல்லும் இடத்தில் எல்லோரும் நம்மை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். அன்புடன் நம்மிடம் பேச வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றோம். அலுவலகத் திலும், பொது வாழ்விலும் நமக்குத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை கூடக்கூட நமது தன்னம்பிக்கையும் கூடுகிறது. பொதுவாக நாம் மனிதர்களுக்குள் இருக்கும் போதும், வாழும் போதும் தான் சமூக வாழ்க்கையை பெற முடிகிறது. மனித இன வரலாற்றில் மனிதர்கள் எங்கும், எப்போதும் தனிமனிதர்களாய் இருந்ததில்லை. குடும்பம், சமூகம், அலுவலகம், தொழிற்கூடம் என கூட்டாகவே இருக்கின்றனர், வாழ்கின்றனர். இப்போது இந்தக் கூட்டு வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்பும், உற்பத்தி முறையின் வளர்ச்சியும், மனிதர்களைத் தனித்தனியாக மாற்றிவிட்டது. இன்று மனிதர்கள் தங்களின் கருத்துக்களை சகமனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. கூட்டாக சேர்ந்து இருப்பது இயல்பான குணமாக இருப்பினும், பல்வேறு வாழ்நிலை மற்றும் சூழ்நிலை மனிதர்களை பிரித்தே வைத்துள்ளது. இதற்கான காரணங்களை அறிந்து, அவற்றைஉணர்வு பூர்வமாக மாற்றிட இங்கு சில வழிமுறைகள் முன்மொழியப் பட்டுள்ளன.

உதாரணமாக

அவர் மிக நல்ல மனிதர்…

அவருடன் பேசிக்கொண்டே இருக்கலாம்!

அவரின் கண்களும் பேசுகின்றன…

அவருடன் வேலைசெய்வது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது!

அவரை விட்டுப் பிரிய மனம் இடம் தரவில்லை…

என்ற நேர்மறையான எண்ணங்களும்,

அவன் ஒரு மனிதனே இல்லை

அவரை பார்க்கவே பிடிக்கவில்லை

அவரை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கமுடியாது அவருக்கு யாருடன் எதைப்பேசுவது என்றே தெரியவில்லை

என்ற எதிர்மறையான கருத்துக்களும் சமுதாயத்தில் நிலவுகின்றன. இத்தகைய கருத்துக் கள் உருவாக அவர்களின் மனிதர்களுடனான அணுகுமுறையே முக்கிய காரணமாகும்.

அவசரமான இந்த வாழ்க்கையில் மனிதர் களும் இயந்திரங்களாகி விட்டனர். தேவையை ஒட்டி மட்டுமே உறவு வைத்துக்கொள்வதும், அவசியமின்றி பேசுவதற்குக்கூட தயங்குவதும் இன்று இயல்பாகிவிட்டது. இத்துடன் இன்றைய வாழ்க்கையின் அழுத்தம், மனிதனின் பலவீனம், பிரச்சனைகளை எதிர்கொள்ளத் திறமையின்மை, போன்றனவும் ஒருவருடன் ஒருவர் பழகுவதை பலவீனப்படுத்துகின்றன.

ஒருவருடன் ஒருவர் பழகுவதற்கும், பேசுவதற்கும் இன்று பல்கலைக் கழகங்களில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மனித வள மேம்பாடு என்று எல்லா நிறுவனங்களிலும் இதற்கான தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப் படுகின்றன. ஆனால் மனித உறவு பாடங்களின் மூலமோ, தனிப்பயிற்சியின் மூலமோ வருவ தில்லை. அன்றாட வாழ்வில் இயல்பாய் இருக்க வேண்டியவையாகும்.

குழந்தைகளை மற்றவர்களுடன் பழக விடாமல், படிப்பதும், மதிப்பெண்கள் வாங்குவது மட்டுமே வாழ்க்கை என வளர்க்கத் தொடங்கி, அதற்குப்பின் வேலைக்கான தயாரிப்புகள் செய்வது என்றும், பின்னர் பணிகளைச் செய்வது என்றும் வாழ்க்கை ஆகிவிட்டது. இது இன்று மனநிலை பாதித்தவர் களையும், இயந்திர மனிதர்களையும் உருவாக்கியுள்ளது.

குடும்பத்திலும், அலுவலகத்திலும், சமூகத்திலும் இன்று மனிதர்கள் மட்டும் இருக்கிறார்கள். மனித உறவுகள் மறைந்து போய்விட்டன. அவற்றை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியில் இது ஒரு சிறு முயற்சி. இங்கு மனிதர்களுக்கிடையில் ஏற்படும் சின்னச்சின்ன முரண்பாடுகளை, முகச்சுளிச்சல்களை போக்கு வதற்கு சில ஆலோசனைகளை முன் வைத்துள்ளேன். இவை மனித மனங்களை வெல்லும் கலைகள். நீங்களும் பின்பற்றி பல இதயங்களை வெல்லுங்கள். உறவுகளில் மூழ்கி மகிழ்ச்சி முத்தெடுங்கள்.

முதலில் மனிதர்களை சரியாக அறியும் கலையைப் பற்றித் தெரிந்து கொள்வோம்

மனிதர்களையும் அவர்களது குணங்களையும் முழுமையாகவும், முறையாகவும் புரிந்து கொள்வது தான் அவர்களுடன் நல்லுறவையும் நெருக்கத்தையும் வளர்த்துக்கொள்ள உதவும்.

மனிதர்களையும் அவர்களது இயல்புகளையும் புரிந்து கொள்வது

  • அவர்கள் ஒன்றைச் செய்வதற்கான காரணத்தை அறிந்து கொள்வதும்
  • குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர்கள் எப்படி, எவ்வாறு எதிர் வினையாற்றுவார்கள் என்பதை அறிந்து கொள்வதும் ஆகும்

இவைதான் மனித மனங்களை வெல்வதற்கு அவசியமான அடிப்படைகள்.

மக்கள் மற்றும் மனித இயல்புகளை அறிவது என்பது அவர்கள் எவ்வாறு உள்ளார்கள் என்பதை அறிவதாகும். மாறாக அவர்கள் இவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் அனுமானிப்பதல்ல. யதார்த்தத்தில் அவர்கள் எவ்வாறு உள்ளார்கள் என்பதை அறிய வேண்டும்.

மனிதர்கள் முதலாவதாக அவர்களின்பால் அதிக அக்கறையுடையவர்களாகவும், அவர் களின் வாழ்விலும் வளர்ச்சியிலும் முழுமையான விருப்பமுடையவர்களாகவும் இருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ அதிகம் அக்கறை கொள்வதில்லை.

இதையே வேறுவகையில் சொன்னால் ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களை விரும்புவதைவிடப் பத்தாயிரம் தடவை அவன்பால் அதிக விருப்பம் கொண்டுள்ளான்.

இது உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் உங்கள் வாழ்வின்மேல் காட்டும் விருப்பம் மற்றவர்களிடம் காட்டும் விருப்பத்தைவிடப் பலமடங்கு அதிகம் என்பது உண்மைதானே?

மனிதனின் செயல்பாடுகள் அனைத்தும் அவனது சுயமுன்னேற்றம், சுயவிருப்பம் மற்றும் சுயஉயர்வைச் சார்ந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

“தான்” என்பது மனிதனுடன் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. மற்றவர்களுக்கு உதவுவதும், கொடுப்பதும் கூட, உதவி, ஈகை என்பதைவிட அவன் கொடுப்பதால் கிடைக்கும் சுய திருப்திதான் அவனுக்குப் பெரிது. அதன் மூலம் மற்றவர்கள் பெரும் பயன் இரண்டாவ தாகவே கருதப்படுகிறது.

மனிதனின் “தனது” என்றசுய விருப்பம் மற்றும் சுய திருப்தி, அவனின் தொடக்க காலம் தொட்டு, அதாவது ஆதிமனிதன் முதல் இருக்கும் இயல்பான குணமாகும். அது அவனது இறுதிக்காலம் வரை இருக்கும். மாறவே மாறாது. அதற்காக வருத்தப்படவோ, அதிர்ச்சி யடையவோ தேவையில்லை. ஒவ்வொருவரும் தனக்கான சிந்தனையை முன்வைத்தே செயல்படுகின்றனர். அதுவே மனித இனத்தின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்து வருகின்றது. சமுதாய உணர்வு கூட, அவனது தற்காப்பு மற்றும் அவனது இருத்தலுக்கான அவசியத்தில் தான் உருவாகின்றது. தனது வாழ்வின் உத்திரவாதத்திற்குத்தான் மனிதன் கூட்டமாக வாழ நினைக்கிறான். இல்லாவிட்டால் தனித்தனியாகவே வாழ்ந்திருப்பான்.

மனிதர்கள் தனக்கான, தனது உயர்வுக்கான விருப்பத்தை எந்த அளவுக்கு கொண்டுள்ளனர் என்றஉண்மையை அறிவது, அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த மிகவும் அவசியம், என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த உண்மையை நினைவு கொள்ளுதல், மற்றவர் களுடன் உறவை ஏற்படுத்தும் திறனையும், ஆற்றலையும் கொடுக்கின்றது. இனி வரும் அனைத்து வழிமுறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டதே.

மனிதர்களின் சமூக வாழ்வுக்கு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டியுள்ளதால் அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள். இதை நாம் குடும்பங்களில் காண முடியும். தனக்கு கூடுதல் லாபம் இருக்கும் வரை கூட்டுக் குடும்பத்திலும், அவ்வாறு இல்லாத போது தனிக்குடும்பமாகவும் உடைந்து போவதும் “தான்” என்ற உணர்வால்தான். இதே அணுகுமுறைதான் வியாபாரத்திலும் பிரதிபலிக்கின்றது. ஆரம்பிக்கும் போது கூட்டாகத் தொடங்கி, அதிக லாபம் வர ஆரம்பித்ததும், ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு, பிரிந்து செல்வது கண்கூடான காட்சியாக உள்ளன. கூட்டாக வாழ்வதற்கும், தனியே பிரிந்து செல்வதற்கும் அடிப்படையாக அமைவது சுயநலமே ஆகும்.

சுருக்கமாக, ஒவ்வொரு மனிதனும் முதன்மையாக தனது உயர்வில்தான் அதிகம் விருப்பம் கொண்டுள்ளான். மற்றவர்களின் உயர்வு பற்றி இரண்டாவதாகவே எண்ணு கின்றான். மற்றவர்களோடு பேசும்போதும், பழகும்போதும் இதே உண்மையை நினைவில் கொள்ள வேண்டும் அதற்கேற்ப நம் பேச்சு மற்றும் அணுகுமுறை இருக்க வேண்டும்.

– அடுத்த கலையைப் பற்றி அடுத்த இதழில்…


Share
 

2 Comments

  1. balasankar says:

    It is concern with human mind. Your thannambikkai articles are good. thank you

  2. Thiagarajan says:

    The words that, “people will always be selfish from our creation. That cant be repaired till their end” is very nice…

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்