Home » Articles » ஒரு பாதசாரியின் பயணக்குறிப்பு

 
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்பு


பாபு எஸ்
Author:

இரண்டு வாரங்களுக்கு முன்பு, கோவையில் “நெருஞ்சி இலக்கிய முற்றம்” என்ற அமைப்பின் சார்பாக ஒரு பாராட்டு விழா நடந்தது. பாராட்டப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் பேருந்து நடத்துனர் திரு.லோகநாதன். மற்றவர் தோழர் அறக்கட்டளை என்ற அமைப்பைச் சேர்ந்த திரு. சாந்தகுமார்.

இருவரும் சாதனைகளின் இரு வேறு சிகரங்கள். தனியொரு மனிதராக தமிழ்நாட்டில் இதுவரை முப்பதாயிரம் மரங்களுக்கும் மேலாக நட்டு சாதனை புரிந்திருக்கிறார் லோகநாதன். அவரது முயற்சியைப் பாராட்டி ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. ஊரையே பசுமையாக்குகிறோம் பேர்வழி என்று வெறும் விளம்பரத்திற்காக மரங்களை நட்டு அதை புகைப்படம் எடுத்து செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்திக் கொண்டு, பிசினஸ் நோக்கத்தில் செயல்படும் எந்த ஒரு அமைப்பையும் சாராதவர் இவர் என்பது ஆச்சரியமான தகவல். தன்னுடைய சமூகப்பணிக்கு இவர் உதவி நாடுவது, பள்ளிக்கூட குழந்தைகளிடம் மட்டும் தான். பள்ளிக் கூடங்கள் தோறும் சென்று இயற்கை மற்றும் மரங்கள் சம்பந்தமான காட்சி (Slide show) நடத்துகிறார். பின்னர் ஆர்வமுள்ள மாணவ-மாணவியரைக் கொண்டு அந்தந்தப் பகுதிகளில் மரங்களை நடுகிறார்.

இன்றைய காலகட்டத்தில் “மரம் நடுவது” என்பது பேஷனாகிவிட்டது. மரம் நடு விழாக்களைப் பற்றி நாள்தோறும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஆனால் அந்த மரங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனவா என்று கேட்டால், இல்லை என்பது தான் உண்மை. ஆனால் லோகநாதன் சற்று வித்தியாசமானவர். எந்த இடத்தில் மரம் நட்டால் அது வளரும் என்பதை முதலில் ஆராய்ந்து இடங்களை தேர்வு செய்கிறார். பின்னர் பள்ளிகூடக் குழந்தைகளைக் கொண்டு அங்கே மரங்களை நட்டு, அந்த மரங்களுக்கு “ப்ரியா புளியமரம்”, “விக்னேஷ் வேப்பமரம்” என்று குழந்தைகளின் பெயரை சூட்டுகிறார். இதனால் இது தங்களுடைய மரம் என்கிற உணர்வும் பொறுப்பும் குழந்தைகளுக்கு வந்து விடுவதால், அவர்களே மரங்களுக்கு பாதுகாப்பு அளித்து, நீருற்றி பராமரிக்கிறார்கள்.

அந்தப் பாராட்டு விழாவில் திரு.லோகநாதன் பேசியதிலிருந்து சில துளிகள் :

1. டியூட்டி முடிந்ததும் பேருந்து நடத்துனர்களில் பலர் மது அருந்தப் போவார்கள். என்னையும் அழைப்பார்கள். ஆனால் நான் மரம் நடுவதற்குப் போய்விடுவேன்.

2. மரக் கன்றுகள் வாங்குவதற்கோ, நடுவதற்கோ யாரிடமும் உதவி கேட்டதில்லை. என்னுடைய பணியைப் பார்த்து சிலர் மட்டும் தாமாக முன்வந்து மரக்கன்றுகளை இலவசமாகத் தருகிறார்கள்.

3. மரம் நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வியாபார நோக்கில் செய்து வரும் பல பசுமை அமைப்புகள் என் மீது மிகுந்த கோபத்தில் இருக்கின்றன.

4. என்னைப் பற்றி ஒரு பத்திரிகையில் கட்டுரை வந்தது. உடனே அந்தக் கட்டுரையை எழுதியவருக்கு மிரட்டலும் வந்தது.

5. எனக்கு நண்பர்களாக இருந்த பலர், நான் ஜனாதிபதி விருது வாங்கியதும் எதிரிகளாகி விட்டனர்.

6. ஒரே நாளில் இருபதாயிரம் மரங்களை நட்டு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யலாம் என்ற நோக்கில் சில அமைப்புகள் செயல்படு கின்றன. அதற்கு என்னையும் அழைக் கிறார்கள். வெறும் எண்ணிக்கைக்காக மரங் களை நட்டால் அவற்றில் பாதி கூட வளராது என்று நான் சொன்னேன்.

7. மரம் நடுவதை நான் போட்டோ எடுத்துக் கொள்வதில்லை. விளம்பரம் செய்வதில்லை. அதை ஒரு அன்றாடக் கடமையாக செய்து வருகிறேன். அன்றாடக் கடமைக்கு எதற்கு விளம்பரம்?

8. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் உங்களுக்கு ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். இது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருடைய கடமை. என் கடமையைத்தான் நான் செய்கிறேன். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்று சொல்வேன்.

9. பல அமைப்புகள் என்னை அவர்களுடன் இணைந்து கொள்ளச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் மரம் நடுகின்ற இந்தப் பணியை செய்வதற்கு எந்த ஒரு அமைப்பும் தேவையில்லை. எல்லோரும் இது தங்களுடைய கடமையாக நினைத்து அவரவர் செய்யலாம்.

10. உங்கள் பிறந்தநாள், உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களில் எனக்கு போன் செய்தால் போதும். உங்கள் பெயரில் எங்கோ ஒரு இடத்தில் ஒரு மரம் நடுவேன்!

இன்னும் ஏராளமான செய்திகளைச் சொன்னார் லோகநாதன். எத்தனையோ தடைகளுக்கிடையேயும் கொஞ்சம்கூட தளர்வு அடையாமல் தொடர்ந்து இயங்கி வருகிறார். அவருடைய பேச்சு பல சிந்தனைகளைத் தூண்டுவதாக இருந்தது. சமூகப்பணி என்று சொன்னாலே அது தன்னலமற்ற பணியாகத் தான் இருக்க முடியும். ஆனால் சமூகப் பணியினை ஒரு வியாபாரமாக, லாப நோக்கில் செய்பவர்கள் தான் நாட்டில் அதிகம் இருக்கிறார்கள். சமூகப்பணி என்பது தங்களுடைய கடமை என்று நினைப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பசுமை நகரம், எப்ர்க்ஷஹப் ரஹழ்ம்ண்ய்ஞ் என்றறெல்லாம் நாம் வெறுமே எழுதிக் கொண்டு பேசிக் கொண்டும் இருக்கிறோம். ஆனால் லோகநாதன் போன்றவர்கள் மட்டும் தான் சத்தமில்லாமல் களத்தில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

விழாவில் பாராட்டப்பட்ட இன்னொருவர், திரு.சாந்தகுமார். தோழர் அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர்களுடைய பணி என்ன தெரியுமா? அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வது. ஒரு பத்துப் பேர் மட்டுமே சேர்ந்து இந்த அமைப்பை வைத்திருக்கிறார்கள். சொந்தமாக ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் வைத்திருக்கிறார்கள். அரசு மருத்துவமனையில் இறந்த போகிற சில நோயாளிகளின் பிணங்களை ஏழ்மை காரணமாக பெற்றுக் கொள்ள மறுத்து அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுபவர்கள் ஏராளம் இருக்கிறார்களாம். அப்படி கைவிடப்பட்ட பிணங்கள், மாதக் கணக்கில் மருத்துவமனை குளிர் பெட்டிகளில் இருக்கும் பிணங்கள், மார்ச்சுவரியில் நாட் கணக்கில் நாற்றமெடுத்துக் கிடக்கும் அனாதைப் பிணங்கள், ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த பிணங்கள், சாலை விபத்துகளில் இறந்து அடை யாளம் காணமுடியாமல் போன பிணங்கள் என அனாதைப் பிணங்களில் பல வகை இருக்கிறது. இவற்றை காவல்துறை மற்றும் அரசு மருத்துவ மனையின் அனுமதியுடன் சாந்தகுமார் மற்றும் அவருடைய குழுவினர் பெற்றுக் கொள்கிறார் கள். அவர்களே பிணங்களை குளிப்பாட்டி, புத்தம் புது வெள்ளைத் துணியில் பேக் செய்து, மாலை அணிவித்து, நாற்றத்தை கட்டுப்படுத்த வாசனைத் தைலங்கள் தெளித்து, சடங்குகளைச் செய்து, ஆம்புலன்ஸில் ஏற்றி சுடுகாட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே குழிகள் தோண்டி, தக்க மரியாதையுடன் பிணங்களை அடக்கம் செய்கிறார்கள். அமைப்பினை துவங்கி சிறிது காலத்திலேயே கோவையில் இதுவரை 430 பிணங்களை அடக்கம் செய்திருக்கிறார்கள்.

விழாவில் இவர்களுடைய செயல்பாடுகள் குறித்து குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. சடலங்களை இவர்கள் பெற்றுக்கொள்வது தொடங்கி சுடுகாட்டில் அடக்கம் செய்வது வரையில் அதை குறும்படாக எடுத்திருக் கிறார்கள். குறும்படம் திரையிடப்பட்ட போது பார்வையாளர்கள் மத்தியில் ல்ண்ய் க்ழ்ர்ல் ள்ண்ப்ங்ய்ஸ்ரீங் நிலவியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், சாந்தகுமாரின் மனைவி, உறவுப் பெண்கள் மற்றும் ஒரு கல்லூரி மாணவி உட்பட ஐந்து பெண்கள் இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். விழாவில் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. திரையிடல் முடிந்ததும் சாந்தகுமார் பேசினார். ஒரு முறை ரத்த தானம் செய்வதற்கு அரசு மருத்துவ மனைக்குப் போன போது அங்கு மார்ச்சுவரியில் அனாதைப் பிணங்கள் குவிந்து கிடந்ததைப் பார்த்த பிறகு, இந்த இயக்கத்தைத் துவங்குகிற முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டார். இதற்கு தங்கள் சொந்தப் பணத்தை தான் செலவழிக் கிறார்கள். யாரிடமும் பண உதவி கேட்பதில்லை. காரணம் கேட்டதற்கு, இத்தகைய செயலுக்கு பண உதவி செய்யக்கூடியவர்கள் நிச்சயம் நிறைய பேர் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் யாராவது ஒருவர், “ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை” என்று கேட்டுவிட்டால் அதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே தான் நாங்கள் யாரிடமும் உதவியை எதிர்பார்ப்பதில்லை என்கிறார். ஆதரவற்ற சடலங்கள் மட்டு மல்லாமல் வசதியற்றசடலங்களையும் இவர்கள் அடக்கம் செய்கிறார்கள். இந்த தோழர் அறக்கட்டளையின் தொடர்பு எண்கள் : 98422 67700, 98439 67700, 98433 47786.

விழாவில் எழுத்தாளர் பாமரன் பேசும்போது, “நான் இறந்து போனால் எனது பிணத்தை உறவினர்கள் மற்றும் சாதிக்காரர்கள் கைப்பற்ற வருவார்கள். ஆனால் எனது பிணத்தை எனது நண்பர்கள் தான் கைப்பற்றவேண்டும். சுடுகாட்டுக்கு சாந்தகுமாரின் வண்டியில் பயணம் செய்து, அவர் கையால் அடக்கம் செய்யப்படுவதையே விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டது பார்வையாளர்களை உருக்கு வதாக இருந்தது.

நிகழ்ச்சியின் இடைவேளையின் போது அங்கு வந்திருந்த ஒரு இளம் திரைப்பட இயக்குனரிடம் பேசிக் கொண்டிருந்ததோம். இதே போன்று ஒரு ஏழு நிமிட குறும்படத்தை தான் பார்த்ததாகச் சொன்னார். அவர் விவரித்த அந்தக் குறும்படம் : முதலில் குளோசப்பில் ஒரு ஈ காட்சிப்படுத்தப்படுகிறது. அந்த ஈ எதன் மீதோ உட்கார்ந்திருக்கிறது. கேமிரா கொஞ்சம் மேலெழும்போது அந்த ஈ ஒரு மனித மூக்கில் உட்கார்ந்திருக்கிறது. மேலும் கேமிரா மேலெழும்போது, அது ஒரு பிணம், கேமிரா கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழ காட்சி விரிகிறது. அந்தப் பிணம் ஒரு பிளாட்பாரத்தில் கிடக்கிறது. அது ஒரு பரபரப்பான சாலை. வாகனங்கள் எதிரும் புதிருமாய் விரைந்து செல்கின்றன. மனிதர்கள் பரபரப்பாக நடந்து செல்கிறார்கள். அவர்களில் யாரும் பிளாட் பாரத்தில் கிடக்கும் பிணத்தை கண்டு கொள்ள வில்லை. பிணத்தைப் பார்த்துக் கொண்டே விலகி நடக்கிறார்கள். சில நிமிடங்கள் நீடிக்கும் இந்தக் காட்சிக்குப் பின் கேமிரா அப்படியே திரும்பி நகரத்தின் வேறொரு பகுதிக்கு செல்கிறது. அங்கே ஒரு காகம் செத்துக் கிடக்கிறது. நூற்றுக்கணக்கான காகங்கள் சுற்றிலும் வட்டமடித்து “கா…கா…..கா…..கா….” என்று கரைந்து கொண்டிருக்கின்றன. அதோடு குறும்படம் முடிகிறது.

வாழும் காலத்திலேயே யாருக்கும் உதவி செய்ய மறுக்கிறோம். அப்படியே உதவி செய்தாலும் அதை சொல்லிக் காட்டுகிறோம். ஆனால் இறந்து போன மனிதர்களுக்கு நாம் மரியாதை செய்வதோ அவர்களை அடக்கம் செய்வதோ இறந்து போனவர்களுக்கு தெரியப் போவதில்லை. அவர்களுக்கே தெரியாமல் நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதையும் உதவியும்தான் உண்மையானதாக இருக்க முடியும். அத்தகைய மகத்தான செயலை தன்னல மில்லாமல் செய்து வருகிறார்கள். தோழர் அறக் கட்டளையினர் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நாடெங்கும் மரம் நட்டுக் கொண்டிருக்கும் லோகநாதனுக்கும், ஆதரவற்ற பிணங்களை ஆதரித்துக் கொண்டிருக்கும் சாந்தகுமாருக்கும் நடைபெற்றஅந்த பாராட்டு விழாவில் பங்கேற்று விட்டுத் திரும்பிய போது, சமுதாய மாற்றம் குறித்து மேடைதோறும் பேசிக் கொண்டும், கவிதை வாசித்துக் கொண்டும், பத்திரிகைகளில் கவிதை கட்டுரை எழுதிக் கொண்டும் இருக்கிற நான், இவர்களின் செயலில் நூற்றில் ஒரு பங்குகூட சமூகத்துக்கான களப் பணி என்று எதுவும் இதுவரையில் நான் செய்யவில்லையே என்ற குற்ற உணர்ச்சி மேலிட்டது…!

வழிக்குறிப்புகள் வளரும்….


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2008

நலமாகும் பயிற்ச்சி
இயந்திர மனிதர்கள்
குழந்தை பருவங்களில் உடற்பருமன்
இங்கு இவர் இப்படி
கடமைதான் வாழ்க்கை
தாழ்வு மனப்பான்மையை தவிடுபொடியாக்குங்கள்
இதுதான் வாழ்க்கை
வெற்றிப்படிக்கட்டுக்கள்
திறந்த உள்ளம்
அற்புத இளைஞனே!
மனிதா.. மனிதா..!
பயோடேட்டா தயாரிப்பது எப்படி?
உடலினை உறுதிசெய்!
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்பு
எண்ணங்களை செயலாக்கு! வெற்றிகளை மாலையாக்கு!
உள்ளத்தோடு உள்ளம்
இளைஞனே…கிராமத்தில் வசிப்பவனா நீ?
திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கச் செய்தி
தடைகளை உடைப்போம்
நிறுவனர் நினைவுகள்
பெரிய நம்பிக்கை