Home » Cover Story » அறிவை விசாலமாக்கு அகிலத்தை உனதாக்கு!

 
அறிவை விசாலமாக்கு அகிலத்தை உனதாக்கு!


பெரியசாமி G
Author:

தலைசிறந்த ஆண், பெண் குடிமக்களைக் கொண்ட நகரத்தையும் கிராமத்தையும் உருவாக்கிட வேண்டும். அதற்கு உயர்வான கல்வியினை செம்மையாக தந்திட வேண்டும் என்கிற டாக்டர் பழனி ஜி. பெரியசாமி நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டியில் பிறந்தவர். B.A , (பொருளாதாரம்) சென்னைப் பல்கலைக் கழகத்திலும், M.A., (பொருளாதாரம்), முனைவர் படிப்பை பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திலும் படித்து முடித்தவர்.

உற்பத்தி மற்றும் விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருபவர்.

“Cost and Benefits of Family Planning in india – A Analysis” என்ற தலைப்பில் ஆய்வைத் தொடங்கி பல்வேறு சமுதாயப் பயன்பாட்டு தலைப்புகளில் ஆய்வை செய்திருப்பவர். அது மட்டுமின்றி பல்வேறு பல்கலை கழகங்கள் மற்றும் கல்லூரிகளில பேராசிரியராவும், துணை கல்லூரிகளில் பேரசிரியராகவும் பணியாற்றி முக்கிய பங்களிப்பினை பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு அளித்திருப்பவர்.

“இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் எஃகு மற்றும் இரும்பின் பங்களிப்பு ” உள்ளிட்ட 14 தலைப்புகளில் பல்வேறு பத்திரிக்கைகளில் தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டவர்.

1960ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை மட்டும் இவர் பல்வேறு துறைகளில் 13 கவுரவப் பட்டங்களை பெற்றிருப்பவர். மேலும் சிறந்த நல்லாசிரியர் விருதினையும் “ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருதினையும் சிறந்த பணிக்காக பெற்றிருப்பர்.

“South Indian Sugar Mills Associaion”, Tamil Nadu Mini Cement Plants” உள்ளிட்ட நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பு வகித்த சிறப்பிற்குரியவர்.

பிஜிபி கல்வி மற்றும் பொதுநல அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவராகவும், இண்டோ – கனடியன் சேம்பர் ஆப் காமர்ஸ், சென்னை மற்றும் தென்னிந்திய சர்க்கரை மில் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், பேகல்டி செனேட் பாலிசி கமிட்டி உள்ளிட்ட பல கமிட்டிகளின் உறுப்பினராகவும், பால்டிமோர் கமிட்டிகளின் உறுப்பினராகவும், பால்டிமோர் ரீஜனல் இன்பர் மேஷனல் சைன்ஸ் சென்டரின் கவர்னராகவும், தரணி சுகர்ஸ் & கெமிகல்ஸ் லிமிடெட், தமிழ்நாடு, ஆனந்தி டெவலப்பர்ஸ் லிமிடெட், சென்னை உள்ளிட்ட நிறுவனங்களில் தலைமை பொறுப்பாளர்களாகவும் பொறுப்பாற்றியிருப்பவர்.

இது தவிர இன்ன ‘பிறதுறைகளில் இணை ஒருங்கிணைப்பாளர், பொது செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்திருப்பவர்.

1987-ம் ஆண்டு முதல் சென்னை பிஜிபி. குரூப் கம்பனீஸ் மூலமாக இந்தியத் தொழிற்துறை வளர்ச்சிக்கு புதிய நோக்கங்களுடன் கூடிய பாதையை அமைத்துத் தந்துள்ள சிறப்பிற்குரியவர்.

(பிஜிபி நிறுவனத்தின் கீழ் உள்ள கம்பெனிகள் அனைத்தும் வெளிநாட்டு வாழ் இந்தியரான டாக்டர் பழனி ஜி.பெரியசாமி மற்றும் அவரது நண்பர்களால் நடத்தப்படு வரக்கூடியதாகும்.)

சர்க்கரை தொழில் துறையில் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி பல இடங்களில் தனது முத்திரையை பதிக்க வைத்தவர்.

பெரியசாமி அவர்கள் பொருளாதாரத் துறையில் பேராசிரியராகவும், கிராஜூவேட் ஸ்கூல் ஆப் பிசினஸ் மேனேஜ்மெண்ட் நிறுவாகஸ்தராகவும் இருந்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் அனைவரையும் இன்று திரட்டி PSG International Financial and Industrial Consuitants in, USA என்ற சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் பண முதலீடு, நிர்வாகம், சேவை உள்ளிட்டவை குறித்து அறிவுரைகளை வழங்கி வரக்கூடியவர்.

ரமடா இன் (Ramada Inn) என்ற ஹோட்டலையும், பல அடுக்கு மாடி குடியிருப்புகளையும் வணிக வளாகங்களையும் குடியிருப்புகளையும், வணிக வளாகங்களையும் அமெரிக்காவில் பிஜிபி நிறுவனத்தின் மூலம் பிஜிபி கல்வி மற்றும் பொதுநல அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் டாக்டர் பெரியசாமி அவர்கள், 25 வருடங்களுக்கும் மேலாக சிறந்த கல்வியாளராக உள்ளவர். கல்வி மீது மிகுந்த பற்று கொண்ட காரணத்தால், பிஜிபி டிரஸ்ட்டை ஏறபடுத்தி அதன் மூலம்

பிஜிபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
தரணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
பிஜிபி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
பிஜிபி இண்டஸ்டிரியஸ் டெக்னிக் இன்ஸ்டிட்யூட்
பிஜிபி பாலிடெக்னிக்
பிஜிபி கல்வியியல் கல்லூரி

என பல கல்வி நிலையங்களை ஏற்படுத்தி திறம்பட நடத்தி வருபவர்.

பல்வேறு வசதிகளைக் கொண்ட ஒரு நிகர்நிலை பல்கலைகழகத்தை உருவாக்கி தொழிற்படிப்புகளை அளிப்பதையே தன் நீண்ட கால நோக்கமாக கொண்டிருக்கிற அவரோடு இனி நாம்….

படிக்கும் காலத்தில் உங்களுடைய இலக்கு

ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது தான் என் இலக்காக இருந்தது. விவசாயக் குடும்பத்தில் பழனியம்மாள் பழனிக்கவுண்டருக்கு மகனாக நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டியில் பிறந்தேன். பள்ளியில் சேர ஒரு வருடம் குறைவாக இருந்ததால் ஒரு வருடத்தை அதிகப்படுத்தி பள்ளியில் சேர்ந்தேன். நன்றாகப் படிப்பேன். எப்படியும் எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். ஆகிவிட வேண்டும் என்ற கனவோடு படித்தேன். ஆனால் வயது அதிகபடுத்திக் கொடுத்து பள்ளியில் சேர்ந்த காரணத்தால் வயது மூப்பு முடியாமல் போனது. கனவு தகர்ந்தது. அதற்காக கவனத்தைச் சோர்ந்து போகவில்லை. மீண்டும் கல்வியில் மாணவனாகத் தேர்வு பெற்று மாநில அளவில் தங்கப் பதக்கம் பெற்றேன. 1962ல் கோவை பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும், 1963லிருந்து 1967- வரை பாண்டிச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்தேன் 1967-ல் ஆய்வுப்படிப்பிற்காக (பி.எச்.டி) அமெரிக்கா சென்றேன். படிப்பை முடித்து அங்கேயே 1990ல் நமது தாயகம் திரும்பி வந்தேன். இன்றைக்கு தொழில் சம்பந்தமாக அமெரிக்காவுக்கும் தமிழகத்திற்கும் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

உலகத்தரம் வாய்ந்த கல்விக்கூடத்தை கிராமப்புறப் பகுதியில் தாங்கள் உருவாக்கிடக் காரணம்?

நல்ல தரம் மிக்க கல்லூரிகள் எல்லாம் நகர்ப்புறத்தைச் சாந்துதான் அதிகம் அமைகிறது. கிராமப்புறங்களைச் சார்ந்து அமைவதில்லை. அதனால் கிராமப்புற மாணவ, மாணவிகள் நல்ல கல்விக்காக கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. இதை உணர்ந்தேன். அதனால் உலகத்தரம் வாய்ந்த கல்வியை சகல வசதிகளுடன் கிராமப்புற மாணவ மாணவிகளுக்குத் தர வேண்டும் என நினைத்தேன். மேலும், நாம் பிறந்த கிராமத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தினாலும் பிறந்த கிராமப் புறத்தையே தேர்வு செய்து உலகத்தரம் மிக்க கல்வியைத் தர அத்தனை ஏற்பாடுகளையும் செய்தேன். அதன் பலன் இன்றைக்கு கிராமப்புறத்திலிருந்து மட்டுமல்லாது உலக நாடுகளிலிருந்தும் நிறைய மாணவ மாணவிகள் எங்கள் கல்லூரியில் படித்து பயன்பெற்று வருகிறார்கள்.

கிராமப்புறப் பகுதிகளில் பெரிய அளவில் கல்விக்கூடத்தை ஆரம்பிப்பதால் இடர்பாடுகள் நிறையவே உண்டு என்று சொல்வதுண்டு. நீங்கள் இதை எப்படி உணர்கிறீர்கள்?

இடர்பாடுகள் உண்டு என்பது உண்மைதான். பெற்றோர்களும், மாணவர்களும் நல்ல கல்வி வேண்டும் என்றால் அதிகம் செலவு செய்து நகர்ப்புறத்திற்குப் போனால்தான் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அதனால் தான் நாம் கிராம்ப்புறங்களில் சிறந்த கல்விக்கூடத்தை உருவாக்கினாலும் நம்பிக்கையோடு வந்து சேர தயங்குகிறார்கள். இந்த எண்ணத்தை மாற்ற முதலில் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

நல்ல ஆசிரியப் பெருமக்களை பணியில் அமர்த்துவதிலும் சிரமம் உண்டு. காரணம் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் நகர்புறத்தைச் சார்ந்திருந்துவிட்டு கிராம்ப்புறத்தில் தங்கியிருப்பது கடினமாகிவிடுகிறது. அதனால் அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. நல்ல ஆசிரியர்கள் ஆர்வத்தோடு இங்கு நிலைத்து பாடம் கற்றுத்தர பெரிய அளவில் ரிசர்ச் சென்டர் ஒன்றை உருவாக்கிட வேண்டும் என்பது என் கனவாக இருக்கிறது. விரைவில் அதைச் செயலாக்கத்திற்கு கொண்டு வந்து பிஜிபி கல்வி நிறுனங்கள் உள்ள இந்தக் கிராமம் உலகமறிந்த கிராமம் எனப்பெயர் எடுக்க வேண்டும், புகழ் பெறவேண்டும் என்பதே என் கனவாக இருக்கிறது.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் நாட்டுக் கல்விமுறை எப்படி உள்ளது?

ஆசிரியர் சொல்லிக் கொடுத்து அதை மாணவன் கேட்டு, படித்து, தேர்வு எழுதக்கூடிய மனப்பாட முறையிலதான் உள்ளது. இது கல்வியில் ஒரு பகுதிதான். உண்மையான பகுதி என்பது கல்வியைக் கொடுத்து, மாணவ, மாணிகளை நல்ல முறையில் ஆராய்ந்து சிந்திக்க வைத்திருக்கிறோமா என்பதில் தான் இருக்கிறது. பாடத்தை மனப்பாடம் செய்து 90%, 95% என மதிப்பெண் பெறுவதாக இல்லாமல் சிந்திக்க வைத்து அவர்களால் இன்னொன்றை உருவாக்கும் அளவு அறிவை விசாலப்படுத்துகின்ற கல்விமுறை வேண்டும் என்பதுதான் என் ஆசை.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், ஒரிஜின் நாலேட்ஜ் பேஸ் இவையே கல்வியில் முக்கியமாக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை இங்கு நம்மிடம் இல்லை. முழுக்க முழுக்க மனப்படமுறை மட்டுமே இருக்கிறது. உலகளாவிய சிந்தனை, நம்பிக்கையை வளர்த்தல், சுதந்திரமான செயல்பாடு, பொதுநல அக்கறை என நிறைய மாறுதல்களை உண்டாக்கக்கூடிய கல்விமுறை வேண்டும்.

மருத்துவம், இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இது தவிர வேறு படிக்க ஒன்றுமே இல்லை என்று சில பெற்றோர்களும் மாணவர்களும் குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்களே இது ஆரோக்கியமானதா?

நிச்சயமாக இல்லை. என்ன செய்கிறாய் என்று எந்த மாணவ மாணவிகளைக் கேட்டாலும் இன்ஜினியரிங், மருத்துவம், கணினி இதில் ஏதோ ஒன்றைத்தான் சொல்கிறார்கள்..

கல்வி நிறுவனங்களும் மருத்துவம், இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இந்த மூன்றுக்கும் தான் ஒவ்வொன்றிலும் இவ்வளவு மாணவ, மாணவிகளை உருவாக்கி இருக்கிறோம் என்று சொல்லி மகிழ்கிறார்கள்.!

எத்தனைக் கல்வி நிறுவனங்கள் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் என உருவாக்க முயற்சி எடுக்கிறது. எதுவும் இல்லை. ஏன் அக்கவுண்டன்ட்டை உருவாக்கக் கூட அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.

சென்னை மயிலாப்பூரில் பிறந்த நூயி என்கிற பெண்மணி பெப்சி நிறுவனத்தின் Coவாக உலகளவில் உயர்ந்திருக்கிறார்கள். அதற்கு அவர் படித்த கல்வி அக்கவுண்ட்ஸ். நிறைய வாய்ப்புகளைத் தருகிற படிப்புகள் இருக்கத்தான் செய்கிறது. விசாலமான பார்வை, தேடல் இல்லை. ஒரு குறிப்பிட்ட பாடப் பிரிவைத் தாண்டி மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் வழிகாட்டுதல் இங்கு குறைவு. IT IT என்று பேசிப் பேசி அதிலேயே சென்று கொண்டிருந்தால் நம் தேசம் என்னாவது கவலையளிக்கிறது.

நிறையத் தலையீடுகள், கல்விக்கூடம் என்பது ஆலயம் என்ற எண்ணமே இல்லை. எதற்கெடுத்தாலும் லஞ்சம், உயர்ந்த நோக்கம், அயராத உழைப்பு, நேர்மை, சமுதாய நலம் இல்லை. மதிக்கத்தக்க, போற்றத்தக்க கல்வி முறை வேண்டும் அது இல்லை.

உங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்த சம்பவங்கள்/புத்தகங்கள்…

ஏழு மைல் தூரம் நடந்து சென்று படித்து வழக்கறிஞராகவும், அமெரிக்காவின் ஜனாதிபதியாகவும் உயர்ந்து நிறவெறியை ஒழித்த ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு, மகாத்மா காந்திஜியின் My Experiments with Truth சத்தியசோதனை, ஜான் எஃப் கென்னடியின் “ஃப்ரொபைல்ஸ் இன் கெரேஜ் (Profiles in Courage) நேருஜியின் “Discovery of India” விவேகானந்தர், திருக்குறள் இவற்றில் எந்த ஒன்றினை எடுத்து படித்தாலும் முடிக்காமல் வைக்க மாட்டேன். படித்து முடித்தவுடன் அன்றைய நாள் முழுவதும் அது சார்ந்து சிந்தித்துக் கொண்டே இருப்பேன். உயர வேண்டும், மற்றவர்களை உயர்த்த வேண்டும். அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம். எனக்குள் இந்தச் சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும்.

சிறு குடிசைதான் வீடு, வறுமை வாட்டி எடுத்தது என்றாலும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து வழக்கறிஞராகி மெட்ராஸ் ஐகோர்ட் ஜட்ஜ் ஆக உயர்ந்தவர் முத்துசாமி ஐயர் என்பவர். இவர்கள் எல்லாம் தான் என் வாழ்க்கையை மாற்றியமைத்தவர்கள். வழிகாட்டிகள்.

போராட்ட குணமும் வெற்றிபெறமுடியும் என்ற தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டால், எல்லோராலும் சாதிக்கமுடியும்.

என்னென்ன மாற்றங்கள் வந்தால் இன்னும் கல்வித்துறை சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

 • கல்வித்துறையில் மற்ற தலையீடுகள் குறைய வேண்டும்.
 • பெற்றோர்கள், மாணவர்களுக்கு இரண்டு, மூன்று பாடப்பிரிவுகளைத் தவிர(மருத்துவம், இன்ஜினியரிங், கம்ப்யூட்டர்) இன்னும் நிறைய இருக்கிறது என்பது தெரியுமளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
 • உலகளாவிய அளவில் மற்றதுறைகளில் கால்பதித்து சாதிக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
 • தகுயில்லாதவர்கள் கல்வித் துறையில் வரும்போது மக்கள் அவர்களை தடை செய்ய தயங்குதல் கூடாது.
 • கல்வித்துறையில் அநாவசியமாய் எந்த தலையீடும் இல்லாது இருத்தல் வேண்டும்.
 • பாடத்திட்ட முறை மாற்றப்பட வேண்டும் மனப்பாட முறையை நீக்கி தன்னம்பிக்கை, தைரியம், சுயசிந்தனையை ஏற்படுத்தக்கூடிய முறையைக் கையாள வேண்டும்.

இன்றைய மாணவர்கள் உங்கள் பார்வையில்?

அந்தக் காலத்தில் 1950 லிருந்து 1960 வரை படித்தவர்கள் நல்ல ஈடுபாட்டோடு இருந்தார்கள். 1970லிருந்து 1980 வரை படித்தவர்கள் அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லை. ஆனால் இன்றைக்கு இருக்கிற மாணவர்கள் நல்ல ஈடுபாட்டுடன் அக்கறையுடன் இருக்கிறார்கள். படிக்கிறார்கள்.

கல்லூரியில் போராட்டங்களை நடத்தி, காலத்தை வீண்டிக்காமல் வாய்ப்புகளைத் தேடி பறந்து கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி தருகிறது.

போட்டிகள் அதிகம் இருப்பதால் திறமையை நன்கு வளர்த்த முயற்சிக்கிறார்கள். நல்ல வழிகாட்டுதல் இருந்தால் இன்றைய இளைஞர்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்களாக உள்ளார்கள்.

அன்றைய குருகுலக் கல்வியை இன்றைக்கு நீங்கள் தருவதாக சொல்கிறீர்களே முடியுமா என்ன?

ஏன் முடியாது அன்றைய குருகுலக் கல்வியை இன்றைக்கு கொஞ்சம் நவீனப்படுத்தி தரப்போகிறோம். அதாவது self டிப்பன்ஸ், பள்ளிக்கு வந்தால் படிக்கும் அறை; கழிவறை முதலியவற்றை அவர் அவரே சுத்தம் செய்தல் என்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

குருகுலக் கல்வி என்பது பாதி கல்வி, பாதி சேவை. அந்த சேவையினால் தான் அன்று மாணவர்கள் கல்வியை நன்கு கற்றுக் கொண்டார்கள். கற்றுக்கொண்ட கல்வியும் சேவையும்தான் அன்றைக்கு மாணவர்களை பெரிய மனிதனாக உயர்த்தி அடையாளம் காட்டியது.

பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாக் கொண்டு செயல்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. பொது ‘நலம் வேண்டும். தாம் உண்டு தன் வேலை உண்டு என்று இயந்திர வாழ்க்கையிலிருந்து திசை திருப்பி சமுதாயம் வாழ நாம் பயனாக வேண்டும் என்பதற்காகத்தான் குருகுலக்கல்வியை ஏற்படுத்துகிறோம்.


பல்வேறு தொழிலில் கால் பதித்து அத்தொழில்களில் எல்லாம் முத்திரை பதித்தவராக உயர்ந்திருக்கிறார்கள். புதிதாக தொழில் தொடங்குவோருக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள்?

 • எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். செய்ய ஆரம்பிக்கும் முன் நிறைய ஆராய்ந்து அறிதல் வேண்டும்.
 • ஒன்றை ஆரம்பித்துவிட்டால் அதை நோக்கி முன்னேறிக்கொண்டு தான் செல்ல வேண்டுமே தவிர ஏன் இதை ஆர்ம்பித்தோம் வேறொன்றை செய்திருக்கலாமே என்று குழப்பமான மனநிலையை வளர்த்துக் கொள்ளக் கூடாது.
 • தோற்றுப் போவோம் என்கிற எண்ணம் எந்த சூழலிலும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • முன் வைத்த காலை பின் வைக்கவே கூடாது. போராட்டக் குணம், தன்னம்பிக்கை, விசாலமான பார்வை அவசியம்.
 • தடைகளைக் கண்டு சோர்ந்துபோய் விடக்கூடாது. இவை நம்மை என்ன செய்துவிடும் என்கிற நம்பிக்கை வேண்டும்.

உங்களுடைய எதிர்காலத் திட்டம் குறித்து?

கல்வித் துறையில் நிறையச் செய்ய வேண்டும். உலகளாவிய கல்வியை திறம்படத் தரவேண்டும்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டு கை சுத்தத்துடன் நிறையச் சேவைகள் புரிய வேண்டும்.


Share
 

1 Comment

Post a Comment


 

 


April 2008

நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
வெற்றிக்கனவு
மனநலமே…உடல்நலம்!
இதுதான் வாழ்க்கை
சந்தோஷமான வாழ்க்கையே வெற்றிகரமான வாழ்க்கை
படித்தார் சாதித்தார்!
பிரச்சனைகள் தீர்வுகள்
பழையதும் புதியதும்
வேரில் பழுத்த பலா
மனிதா..! மனிதா…!
என்னால் இது முடியும்
வெற்றிப் படிகட்டுகள்
கவிதை எனும் விதை விதைத்த விவசாயி
உள்ளத்தோடு உள்ளம்
அறிவை விசாலமாக்கு அகிலத்தை உனதாக்கு!
துணிவுடன் போராடு வெற்றி வரும்
வேலை தருவது வெற்றிமாலை
துள்ளி எழு
சிந்தனைத் துளி