Home » Articles » நிறுவனர் நினைவுகள்

 
நிறுவனர் நினைவுகள்


தியாகராசன் தூசி
Author:

சொல் பயனுடைய சொல் என்று சொல்லித்தந்த சொற்கொண்டல் இல.செ.க.

அது 1973 ஆம் வருடம். தமிழ்மொழிக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பொற்காலம் என்றே சொல்ல்லாம். தொலைக்காட்சியின் ஆதிக்கம் குறைவாக இருந்த காரணத்தால், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் கொடிகட்டிப் பறந்தன. கலைஞர், கி.ஆ.பெ. அறம், சாலை இளைந்திரையன், குமரி அனந்தன், சாலமன் பாப்பையா, அறிவொளி, நாவுக்கரசர், பேரூர் தமிழ்க்கல்லூரி அடிகளார் போன்ற பெரியோர்கள் மேடைத்தமிழுக்கு மேன்மை தந்து மெருகேற்றிக் கொண்டிருந்தார்கள். கிருபானந்த வாரியார், புலவர் கீரன்,குன்றக்குடி அடிகளார் போன்றோர் தெய்வீகத்தமிழை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். கவிஞர்கள் கண்ணதாசன், மு.மேத்தா, வாலி, வைரமுத்து, அப்துல் ரகுமான் சிற்பி பாலசுப்பிரமணியம் , புவியரசு போன்றோர்களால் மரபுக்கவிதைகளும், புதுக் கவிதைகளும் புனையப்பட்டு, கவியரங்குகளில் கொட்டிக் குவிக்கப்பட்டன; ரசிக்கப்பட்டன. நாடக்க் காவலர் ஆர்.எஸ். மனோகர், விசு, எஸ்.வி.சேகர், துக்ளக் சோ போன்றவர்கள் நாடகங்களை நடத்தி, மக்களைப் பரவசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வீணை பாலச்சந்தர், குன்னக்குடி வைத்தியநாதன், பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற இசை வித்தகர்களின் நாதத்திற்கு நாடே மயங்கிக் கிடந்தது.

சித்திரை பௌர்ணமி, பொங்கள் திருநாள், கல்லூரி ஆண்டு விழா, பள்ளி இலக்கிய விழா, கோவில் திருவிழா என்று எல்லா விழாக்களிலும் பட்டிமன்றம், கவியரங்கம், நாடகங்கள், இசையரங்கம் நடக்கும், குறிப்பாக, பட்டிமன்றம் சூடாகவும், சுவையாகவும இருக்கும். வழக்காடு மன்றத்தில் ‘கர்ணன் குற்றவாளி’ என்ற தலைப்பில் வழக்கு நடக்கும்போது, அந்தப் பேச்சாளர்கள், தரம் மிகுந்த தமது வாதங்களை எடுத்து வைப்பார்கள். ‘கர்ணன் குற்றவாளியா? இல்லையா? என்பது அரங்கே குழம்பிக் கூத்தாடும். குடுமி பிடி சண்டைப் பிடிக்காத குறைதான். அப்படி பேச்சாளர்கள் தங்கள் வாதத்திறமையால், மக்கள் மனதைக் கட்டிப் போட்டு விடுவார்கள். நிகழ்ச்சி முடிந்து வீட்டக்குப் போன பிறகும் கூட, அதைப்பற்றி சிலாகித்துப்பேசிக்கொள்வதும், யாருடைய வாதம் சிறப்பாக இருந்து என்று விவாதித்துக் கொள்வதும் வெகுநேரம் குடும்பத்தினரிடையே நடக்கும். இவ்வாறு, பட்டி தொட்டிகளிலெல்லாம் வீசிய அந்த ‘பட்டிமன்றம்’ என்ற பைந்தமிழப்புயல எங்களையும் பந்தாடியது.

தமிழின் அமுதச் சுவைக்கு, தெய்வங்களே மயங்கும்போது, எங்களைப் போன்ற மாணவர்கள் எம்மாத்திரம்? பட்டிமன்றத்தில் ஒரு மாணவன் பேசி, கைதட்டல் வாங்கிவிட்டால் அவன் கல்லூரியில் கதாநாயகனாகி விடுவான். எங்கு கண்டாலும், ஆசிரியர்களும், சகமாணவர்களும் அவனைப்பாராட்டி, தனிமரியாதை தருவார்கள். அது கண்டு, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு வேளான் இயல் படித்துக்கொண்டிருந்த, எங்களுக்கும் பட்டிமன்றம் நடத்த வேண்டும் என்ற தாகம், இதயத்தில்பொங்கற் சோறாக பொங்கிக் கொண்டேயிருந்தது. எங்களுடைய ஆர்வத்திற்கு உரம்போடுபவர் அய்யா இல.செ.க. அவர்கள்தான். ஆகவே, எல்லோரும் அவரது அறைக்குப் போனோம்.

அவரது மேசையைச் சுற்றி, அரைவட்டமாக அணி வகுத்து நின்றோம். ஆளுக்கொரு வார்த்தை பேசி, அத்தனையும் சேர்த்து ஒரு வாக்கியமாக்கி, அவர் முன் வைத்தோம். ஆவல் பூக்க, அவரது பூமுகத்தைப் பார்த்தார்; நெற்றியைத் தேய்த்தார்; புருவங்களை வளைத்தார்; எம்மை விழிகளால் அளந்தார்; தனக்குள்ளே ஏதோ பேசி தலையசைத்தார்; முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டார். இரண்டொரு நிமிடங்களுக்குப் பின் இதழ் மலர்ந்தார்.

‘என்ன தலைப்பு வைத்துக்கொள்ளலாம்? என்று கேட்டார். சம்மதம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், மனதிற்குப் பட்டதெல்லாம் சொன்னோம். கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?’ ‘கம்பனின் சிறந்த கதாபாத்திரம் ராமனா? ராவணனா?’ ‘மனிதருக்குத் தேவை இல்லறமா? துறவறமா? ‘குடும்பத்தைக் கட்டிக் காப்பது கணவனா? மனைவியா? ‘மங்கையர்க்குப்பெருமை சேர்ப்பது பிறந்த வீடா? புகுந்த வீடா?’ ‘சமுதாயத்தைச் சீரழிப்பது செய்தித்தாளா? திரைப்படமா?’

இதையெல்லாம் கேட்டவர், இடிஇடி யென்று சிரித்தார்; எங்களுக்கோ சங்கோஜம்! குலுங்கிச் குலுங்கிச் சிரித்தவர், முடிவில் எமக்கு அறிவுரை சொல்லத் தொடங்கினார். “இங்கே பாருங்க. உங்களுடைய ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். முதலில், உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு ஆனபின், உங்கள் தலைப்பில் எனக்கு முரண்பாடு, ஏனென்றால், நாம் நினைக்கின்ற நினைப்பும், பேசுகின்ற பேச்சும், செய்கிற செயலும் எல்லாமே நமது வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்க வேண்டும். நீங்கள் சொன்ன தலைப்புக்கள் எல்லாமே, உங்களுடைய படிப்புக்கும், தொழிலுக்கும் பொருத்தமற்றவை” என்றார்.
நான் கொஞ்சம் தைரியத்தைச் சேர்த்துக் கொண்டு, “அய்யா, வெளியில் இப்படியெல்லாம் பட்டிமன்றங்கள் நடக்கின்றன. அங்கே இடம் பெற்ற தலைப்புகளைத் தான் சொன்னோம்” என்று இழுத்தேன்.

“அதற்காக முதலில் வந்ததுத முட்டையா? கோழியா, முகத்திறகு அழகு மீசையா தாடியா? மொட்டைக்குப் பெயர் போனது பழனியா? திருப்பதியா? என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்தலாமா?” என்று, சற்று கோபமாகவே கேட்டார். நாங்கள் மௌனமானோம்.

இறுக்கத்தைச் சிறிது குறைந்த பின்னர் சொன்னார். “பட்டிமன்றம் என்ற பெயரில் சிலவற்றைத் தவர, பெரும்பாலும் வெட்டி மன்றங்களே நடக்கின்றன. கருத்துக்களை விட்டுவிட்டு, காதுகுளிர கதை சொல்வதும், ஜோக் அடிப்பதும், நையாண்டி செய்வதும், கட்டைப்பஞ்சாயத்து போல நடத்தி கைதட்டல் வாங்குவதுமே நோக்கமாக இருக்கிறது. இதிலே எத்தனை மனிதநேரங்கள் (Man Hours) விரையமாகின்றன! பொதுமக்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்துவதற்குப் பதிலாக, பொழுதை வீண்டிப்பதற்கே இந்தப் பட்டிமன்றங்கள் நடக்கின்றன. ஆனால், நமது எண்ணம், சொல், செயல் எல்லாமே மனித வளர்ச்சிக்கா அமைய வேண்டும். நானே தலைப்பைச் சொல்கிறேன். பேசத் தயாரா?” என்று கேட்டார்.

“சரி சொல்லுங்கள்” என்றோம். “நமது நாட்டின் முதுகெலும்பு விவசாயம். மக்கள் தொகை அதிகமான நமது நாட்டுக்கு உணவளிப்பது வேளாண்மைத்துறை. இதறகு அடுத்தபடியாக ந்தத் துறைக்கு முக்கியத்தவம் கொடுத்தால், உற்பத்தி பெருகி, உணவுப் பற்றாக்குறை நீங்கும என்று சிந்தக்கலாமோ?” என்று கேட்டார்.

எங்கள் இதயங்களிலே அவரது கேள்வி, பளீரென்று ஒருமின்னலை உருவாக்கியது. சுளீரென்று ஒரு சவுக்கடி கொடுத்தது. பயனுள்ள வகையிலும் பட்டிமன்றம் நடத்தலாமே என்று எண்ணத் தோன்றியது.

“வேளாண்மைத் துறை சாதித்த பசுமைப் புரட்சிக்கு அடுத்தபடியாக, நாம் கவனிக்க வேண்டியது மீன்துறையா? வனத்துறையா? இதுதான் தலைப்பு. அடுத்த வகுப்பில, இதை நடத்தலாம்” என்று முடித்தார். பட்டிமன்றத்தை நடத்தும் முறைகளை எல்லாம் விளக்கினார். தைக்குள்ளே மூளையைத் தலைகீழாகப் புரட்டி வைத்ததைப் போன்ற உணர்வோடு திரும்பினோம்.

மறுநாள் நடந்த பட்டிமன்றத்திலே நடந்த சுவையான விவாதங்கள் கூட இன்னும் நினைவில் இருக்கின்றன. ‘மீன்துறையே’ என்ற தலைப்பில் பேசிய பரமாத்மா என்ற மாணவர் “நிலத்திலே கிடக்கும் உணவு உற்பத்தி ஒரு எல்லைக்கு உட்பட்டது. ஆனால் கடலிலே கிடைக்கும் உணவோ (Sea Food) அளவில்லாதது. ஆகவே மீன்துறையைத்தான், பசுமைப்புரட்சிக்கு அடுத்ததாக்க் கவனிக்க வேண்டும். நமது தமிழகத்தின் மூவேந்தர்கள், முக்கொடிகளிலே ஒன்றாக மீன் கொடியை வைத்திருந்தார்கள் என்றால், அதன் சிறப்பை என்னவென்று சொல்வது?” என்றார்.

அடுத்து “வனத்துறையே” என்ற தலைப்பில் பேசிய நான், “நண்பர் பரமாத்மா மீன்கொடி பற்றிக் குறிப்பிட்டுப் பெருமையடித்துக் கொண்டார். ஆனால் பாருங்கள், மீதமிருக்கும் கொடிகளில் ஒன்று புலிக்கொடி. அது வனத்திலே வாழ்வது. மற்றொன்று வில் கொடி அதுவும் வனத்திலே வேடர் பயன்படுத்துவது. ஆக, முக்கொடிகளிலே ஒன்றுதான் மீன் துறைக்குச் சொந்தம். மீதமிரண்டும் வனத்துறைக்குச் சொந்தம். அதனால் வனத்துறையே உயர்ந்தது.” என்று பேசினேன். பலத்த கைத்தட்டல் ஒலித்தது. அய்யா அவர்கள் மிகவும் ரசித்து, இருவரையும் வெகுவாகப் பாராட்டினார். சிலகாலம், மாணவர்கள், நண்பர் பரமாத்வாவை வேடிக்கையாக, ‘பசுமைப்புரட்சி பரமாத்மா’ என்று பட்டங்கொடுத்து அழைத்தார்கள். (அவர் இன்றும் வேளாண்கல்லூயிரியில் உயிரி-திரவ எரிசக்தித்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டுள்ளார்.)

“சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்”

என்று சொன்னார் வள்ளுவர். அந்தச் சொல்லுக்கேற்ப, எங்களைப் பயனுடைய சொற்களையே சொல்லச் சொன்னவர்; சொல்ல வைத்தவர்; சொல்லிச் சென்றவர், அய்யா இல.செ.க. அந்த சொற்கொண்டலின் பெருமையைச் சொல்ல எனக்கினி சொல்லில்லை என்றே சொல்வேன்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!