Home » Articles » உங்கள் கவனத்திற்கு…

 
உங்கள் கவனத்திற்கு…


சீனிவாசன் D
Author:

பல சிகிச்சைகள் எடுத்தும் தொடர்ந்து நீடிக்கிறதா…

அதற்கான காரணம் கண்டறிய முடியவில்லையா?

அப்படியென்றால் இதை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

நீங்கள் மட்டுமே இந்த உடல் உபாதைகளினால் அவதிப்படுகிறீர்கள் என்று எண்ண வேண்டாம். மக்கள் தொகையில் ஏறக்குறைய உங்களைப் போல் இருப்பத்தைந்து சதவிகிதத்தினர் மேற்கண்ட உடல் உபாதகளுக்கான காரணம் தெரியாமல் அவதிப்படுகின்றனர்.

எவ்வளவுதான் மருத்துவ ஆலோசனையும் பல்வேறு விதமான சிகிச்சை முறைகளும் மேற்கொண்ட போதிலும் பலன் கிட்டுவதில்லை – காரணம்?

உங்கள் பிரச்சினைக்கான பதிலை (விமோசனத்தை ) அது இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத இடங்களிலெல்லாம் தேடி அலைகின்றீர்கள்.

நாங்கள் இதுவரை பார்த்த நோயாளிகளிடம் செய்த ஆய்வின் மூலம் நூற்றில் எண்பது சதவிகித மக்கள் தனக்கு எந்தவிதமான பயம் மற்றும் டென்ஷன் இல்லை என்று கூறுகின்றனர். மேலும் சரியான சிகிச்சை பெறாமல் தேவையில்லாத பரிசோதனைகளுக்கும் அறுவை சிகிச்சைகளுக்கும் ஆளாகின்றனர். இதனால் குறைந்த பட்சம் 30,000 முதல் 7,00,000 ரூபாய் வரை செலவு செய்திருக்கின்றனர். சில சமயங்களில் அவசியமற்ற இரண்டு மூன்று அறுவை சிகிச்சைகளுக்கும் உட்படுகின்றனர். மேலும் அவர்கள் முறையான சிகிச்சை பெறுவதற்கு மூன்றில் இருந்து எட்டு ஆண்டுகள் காலதாமதமாகிறது. சிகிச்சையை கால தாமதப்படுத்துவதால் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகி அரைகுறை மனதுடன் சிகிச்சைக்கு ஒத்துக்கொள்கின்றனர். உங்கள் பிரச்சினைக்கான காரணத்தையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் அறிய வேண்டுமானால், இதை கவனமாகப் படியுங்கள்.

லஷ்மி, 38 வயதான குடும்பத் தலைவி கூறுகிறார்

நரம்புத் தளர்ச்சியால் நான் எட்டு வருடங்ளுக்கு மேல் அவதிப்பட்டேன். அது என்னைப் பல விதத்திலும் பாதித்தது. ஆனால் மன நல சிகிச்சை எடுத்ததன் மூலம் நான் என் பழைய வாழ்வைத் திரும்பப் பெற்றேன். இது ஒரு மறுபிறப்பு என்றே சொல்ல வேண்டும்.

ரவிசங்கர், 42 வயது கம்பெனி மேலதிகாரி

‘வாழ்க்கையில் வெற்றிக்கான சோதனை நீங்கள் உங்கள் இலக்கை அடைவது அல்ல. அந்த இலக்கை அடைவதற்கு முன் ஏற்படும் இடையூறுகளை எவ்வாறு வெற்றி கொள்கிறீர்கள் என்பதே ஆகும். சிகிச்சையின் மூலம் இதற்கான வழிமுறைகளை நான் அறிந்து கொண்டேன்.’

51 வயது கல்லூரி ஆசிரியர் கூறுகிறார்…

‘பலர் இதற்கு வைத்தியம் இல்லை என்றெண்ணி எவருடைய உதவியையும் நாடுவதில்லை. விதி என்றும் நேரம் சரியில்லை என்றும் ஒரு நாள் தானாகவே சரியாகிவிடும் என்றும் நினைத்து தொடர்ந்து துயரத்தை அனுபவிக்கின்றனர். ஆனால் அதற்கு சிகிச்சை நிச்சயமாக உண்டு- மருத்துவ ரீதியாகவும் மனப்பயிற்சி ரீதியாகவும்’.

சிகிச்சை எடுப்பது ஏன் அவசியமாகிறது? சிகிச்சை எடுக்காவிடில்…

உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் இந்த உடல் உபாதைகளினால் அவதிப்பட வேண்டும். இந்நோய் உங்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் உங்களுக்குள்ள உறவு முறையை, நட்பை மிகுதியாக பாதிக்கும். உங்களுடைய வாழ்க்கைச் சக்கரம் மிகவும் சிறியதாகிவிடக் கூடும். தனிமைச் சிறையில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

உங்கள் தொழில் திறன் குறைந்துவிடும்

சில நேரங்களில் நிரந்தர ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமை கூட வரலாம்.

மேலும் சிகிச்சை மேற்கொள்ளாவிடில் இதிலிருந்து மீள்வதற்கு நீங்கள் மது அல்லது போதை மருந்து பழக்கத்தை நாடக்கூடும். சில நேரங்களில் தற்கொலை எண்ணங்கள் கூட வரலாம்.

இவ்வாறு பல கஷ்டங்களுடன் நீங்கள் ஒரு நரக வாழ்க்கை வாழ வேண்டிய அவசியமே இல்லை. காரணமின்றி நீடிக்கும் உடல் உபாதைகள், மன நரம்புத் தளர்ச்சியிலிருந்து மீள்வதற்கு வழி நிச்சயமாக இருக்கிறது. என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சொல்லப்போனால் முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் தொன்னூறு சதவிகிதத்தினர் சில வாரங்களிலேயே நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

கிருஷ்ணசாமி ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவர்

அரசு ஊழியர். அடக்கமான குடும்பம். அமைதியான வாழ்க்கை என்றிருக்கும் பொழுது, சில நேரங்களில் நெஞ்சு படபடப்பு கை நடுக்கமும் மூச்சுத்திணறலும் உண்டாயிற்று. அதை அவர் அவ்வளவாக பொருட்படுத்த வில்லை. ஆனால் அவற்றுடன் தலைவலியும் வயிற்றுவலியும் வர ஆரம்பித்தன. சின்ன சின்ன வேலைகள் செய்தாலே உடல் மிகவும் அசதியாகி விடுகிறது. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது.

தன்னுடைய குடும்ப மருத்தவரிடம் சென்றபோது அவர் இதயக் கோளாறினால் இவ்வாறு இருக்கலாம் என்று கூறி மருந்துகள் கொடுத்தார். அவர் கொடுத்த மருந்துகளைச் சாப்பிட்டும் சிறிதளவு கூட முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து தொந்தரவுகள் நீடித்தன. எப்போதும் ஒரு அசௌகரியமான உணர்வே இருந்தது. வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே தனகுத் தெரிந்த இதய நிபுணரிடம் சென்றார். அவர் எல்லா பரிசோதனைகளும் செய்துவிட்டு, இதயத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்றார்.

ஆனால் கிருஷ்ணசாமியின் உபாதைகள் தொர்ந்து நீடித்தன. அதனால் தன் நண்பர் ஒருவரின் ஆலோசனையில் காது, மூக்கு, பரிசோதனைகள் செய்து விட்டு எந்தக் கோளாறும் இல்லை என்றார். ஆனால் சில நேரங்களில் மூளையில் ஏற்படும் சிறு இரத்த அழுத்த மாற்றங்களினால் இவ்வாறு வரக்கூடும் என்று கூறி சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். ஆனால் கிருஷ்ணசாமிக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. நரம்புக் கோளாறினால் இவ்வாறு தொந்தரவுகள் வரக்கூடும் என்று ஒருவர் கூறியதைக்கேட்டு ஒரு மூளை நரம்பியல் நிபுணிடம் சென்றார். அவர் ஸ்கேன் செய்துவிட்டு மூளையில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றார். அவரே கிருஷ்ணசாமியை ஒரு மனநல மருத்துவரிடம் அனுப்பினார்.

இவ்வாறு நான்கு ஆண்டுகளில் ரூபாய் 40,000க்கு மேல் செலவு செய்துவிட்டு கிருஷ்ணசாமி தன் உபாதைகளுக்கு பயம் தான் காரணம் என்பதை ஏற்க மறுத்தார். இருந்தாலும் ஒரு அவநம்பிக்கையுடன் மனநல மருத்துவரிடம் சென்றார். மனநல மருத்துவர் கிருஷ்ணசாமியுடன் நடத்திய விரிவான உரையாடலில் சில விபரங்கள் தெரிய வந்தன. அவருடைய மாமா ஒருவருக்கு 55 வயதில் நெஞ்சு வலியும் மயக்கமும் இருந்தது. பிறகு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு சில நாட்களிலேயே இறந்து போனார்.

இதைக் கேள்விப்பட்ட கிருஷ்ணசாமிக்கு தன் இதயத்துடிப்பு அதிகமானால் தனக்கும் அதே போல் நேர்ந்து விடுமோ என்ற அச்சம் மனதில் ஆழப்பதிந்தது. எந்த நேரமும் மாரடைப்பு வந்து விடுமோ, மூளையில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு தன் நண்பர் ஒருவருக்கு ஆனது போல் கை, கால் வராமல் போய் விடுமோ என்றெல்லாம் பயந்தார். யாராவது இறந்த செய்தி கேட்டால், பயம் அதிகமாயிற்று. அதனால் எந்த ஒரு பொதுக்காரியங்களுக்கும் செல்வதை நிறுத்திக் கொண்டார். தன் மனைவி மக்களிடம் கூட தன் கஷ்டத்தை முழுதாகக் கூறவில்லை. உடல் அசதியால் அவ்வாறு இருப்பதாக கூறி வைத்தார்.

கிருஷ்ணசாமியைப் போல், இவ்வுலகில் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய உபாதைகளுக்கான விமோசனத்தை அது இருக்கும் இடத்தை விட்டு விட்டு இல்லாத இடத்தில் தேடி அலைகின்றனர்.

இவ்வாறு சில உபாதைகள் எந்த ஒரு உடலியல் காரணமும் இன்றி தோன்றலாம். அவ்வாறு இருந்தால் அதற்கு மனப்பதட்டம் (மன இறுக்கம்) அல்லது மன வருத்தம் காரணமாக இருக்கலாம்.

இராமச்சந்திரன் ஒரு நெசவாலையில் வேலை செய்பவர்

வயது 26. வேலை செய்து கொண்டிருக்கும் போதே திடீரென படபடப்பும், மயக்கமும் வந்தது. உடல் வியர்த்தது. மூச்சுத் திணறியது. சக ஊழியர்கள் அவரை உடனே மருத்துவமனைகு அழைத்துச் சென்றனர். ஏறக்குறைய ஸ்கேன் வரையில் எல்லா பரிசோதனைகளும் செய்தாயிற்று. ஆனால் உடலளவில் எந்த பிரச்னையும் இல்லை என்றனர். அதனால் அவர் ஒரு மனநல மருத்துவரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் அங்கே சொன்னது. சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு நண்பருடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது அவர் ஒரு உறவினரின் திடீர் மரணத்தைப் பற்றிக் கூறினார்.

இராமசந்திரனுக்கு ஒரு காரணமுமில்லாத பய உணர்வு ஏற்பட்டது. சில நாட்கள் கழித்து ஒரு திருமண விழாவிற்குச் சென்றிருந்தார். நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென நெஞ்சு படப்படப்பு வந்தது. வாய் உலர்ந்து தலை சுற்றியது. உடல் வியர்த்து மூச்சுத் திணறியது. சில நிமிடங்களில் எல்லாம் தானாக சரியாயிற்று.

இராமச்சந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் திரும்பவும் அதுபோல் வந்துவிடுமோ என்ற பயம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருந்தது. ஏனோ காரணம் தெரியாமல் பேருந்தில் செல்வதற்கு பயமாக இருந்தது. அதனால் அவர் அதை தவிர்த்தார்.

ஒருநாள் குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்குச் சென்றிருந்தார். டிக்கெட் வாங்க நின்று கொண்டிருக்கும்போதே அவருக்கு ஒரு மாதிரியான பயம் ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சுத்திணறலும் படபடப்பும் வந்தது. மயக்கம் வந்து விடும் என்ற நிலை வந்ததும் ஏதோ காரணம் சொல்லி வீடு வந்து சேர்ந்தார்.

இவ்வாறு பல முறை வந்ததும் மருத்துவ ஆலோசனைக்காக அலைந்தார். பல பரிசோதனைகள் செய்தும் எந்தக் கோளாறும் இல்லை என்று கூறப்பட்டது. பலவிதமான மருந்துகள் சாப்பிட்டும் எந்த பயனும் இல்லை. தொல்லை தொடர்ந்து நீடித்தது.

கும்பலனா நெரிசலான இடங்களில் சில நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியவிலை. இதனால் பொதுக்காரியங்களை தவிர்க்க ஆரம்பித்தார். தனியாக வீட்டை விட்டு வெளியே செல்வதற்கே பயமாக இருந்தது. ஒரு இனம் தெரியாத பயம் அவரை எப்போதும் தொற்றிக் கொண்டது.

இராமச் சந்திரனின் இந்த உபாதையே தீவிரமான மனப்பதட்ட நோய் என்று கூறுகிறோம்.

மனப்பதட்டம் என்பது எல்லோருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் வரக்கூடிய ஒன்றாகும். உதாரணமாக தேர்வு சமயத்தில், மேடைப் பேச்சின்போது…

ஆனால், மனப்பதட்டம் எப்போது ஒரு நோயாக மாறுகிறது என்றால், அது நம்முடைய அன்றாட வாழ்வில் இடையூறாக இருக்கும்பொழுதுதான். மனப்பதட்டத்தினால் உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள் பல. அவற்றுள் சில.

 • தலைவலி
 • தலை சுற்றல், தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வு
 • நெஞ்சு வலி, இறுக்கம்
 • மூச்சுத் திணறல்
 • அதிக வியர்வை
 • உடல் நடுக்கம்
 • தசை இறுக்கம்
 • உடல் சில்லிட்டுப் போவது; முதலியவை

ஆனால் இந்த மனப்பதட்டம் (இறுக்கம் மற்றும் ‘டென்ஷன்’ உடலியல் அறிகுறிகளுக்கு எவ்வாறு காரணமாகிறது?
-தொடரும்


Share
 

6 Comments

 1. Ysrbala says:

  நீங்கள் கீழே சொன்ன அனைத்தும் எனக்கு இருக்கு ஜயா…
  ஏதே பறிக்கொடுத்த மாதிரி இருக்கு. . நான் நார்மலா தான் இருக்கனா. . .செத்துவிடலாம் போல உள்ளது..
  எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது…

 2. Ysrbala says:

  நீங்க மட்டும் தான் எனக்கு உள்ளது அப்படியே சொல்லுரீங்க. .
  எல்லா மருத்துவர்ரையும் பரிசோதனை செய்து விட்டேன் எனக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லைஃ. . . .

 3. p gopinath says:

  நீங்க மட்டும் தான் எனக்கு உள்ளது அப்படியே சொல்லுரீங்க. .
  எல்லா மருத்துவர்ரையும் பரிசோதனை செய்து விட்டேன் எனக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லைஃ. .ஆனால் இந்த மனப்பதட்டம் (இறுக்கம் மற்றும் ‘டென்ஷன்’ உடலியல் அறிகுறிகளுக்கு எவ்வாறு காரணமாகிறது?

 4. அன்பரசு says:

  அய்யா எனக்கும் இது போன்ற பிரச்சனை கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது வந்தது.,தற்பொழுது 3மாதங்களாக தினமும் நீடிக்கிறது, தீர்வு சொல்லுங்கள் Please. எனக்கு வயது 36, விசைத்தறி ஓட்டுகிறேன்.இந்த பிரச்சனையால் என் வாழ்வாதாரமே கெட்டுவிட்டது.மிகவும் துன்பப்படுகிறேன்.தயவு செய்து தீர்வு சொல்லுங்க சார்.

 5. கார்த்திக் says:

  நீங்கள் சொன்னதை படிக்கும் பொது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. நானும் எல்லா பரிசோதனை செய்து விட்டேன் இதயத்தில் எந்த வித கோளாறும் இல்லை. அனால், எனக்கு இதயம் படப்டப்பகவேதான் இருக்கிறது ஏன் என்று தெரியவில்லை. ஒரு ஸ்ட்ரெஸ் இருந்து கொண்டே இருக்கிறது மரண பயம் ஏற்படுகிறது ஏன்.

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்