Home » Articles » மனிதா, மனிதா!

 
மனிதா, மனிதா!


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

இனிய வாசகர்களே!

வாழ்க வளமுடன். மனதிநேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று பாடினர் நம் முன்னோர்கள். மனிதன் என்ற பெயரில் என்னவெல்லாம் இருக்கிறது பாருங்கள். மனம் இருக்கிறது. மனதின் இருப்பிடமான பிரம்மம் (சிவம்) இருக்கிறது. எல்லாமே உள்ளது. உயிர் நீங்கியபின் நம் உடலை சவம் என்று பெயரிடுகிறோம். உயிரோட்டம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும்.

உலகிலுள்ள உயிரினங்களிலேயே தலை நிமிர்ந்து நிற்கும் தகுதி பெற்ற இனம் தான். மனிதராய் பிறந்து, வாழ்ந்து வரும் நாம் ஒருநாள் இந்த உலகை விட்டுச் சென்று விடுவோம். ஆனால், இந்த உலகம் பலகோடி ஆண்டுகளாக வந்தவர்களையெல்லாம் வாழவைத்து அனுப்பிக் கொண்டே உள்ளது.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்
பெருமை உடைத்திவ் வுலகு”

என்று இந்த உலகத்தின் பெருமையைக் கூறிய திருவள்ளுவரும் நமது சிறப்பை மிகச் சுருக்கமாய் கூறிவிட்டார். பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீரவேண்டும்; இது இயற்கைச்சட்டம். அதற்காக பிறந்தது இறப்பதற்கே என்ற எதிர் மறையான எண்ணத்திற்கு செல்லக்கூடாது. நாம் பிறந்தது வாழ்வதற்கே! அதுவும் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கே என்பதை எந்த நிலையிலும் மறந்துவிடக்கூடாது.

நோக்கம்

இந்த வாழ்க்கையில்தான் நமது அனுபவங்கள் எத்தனை வகை. நம் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், நம்முடன் வேலை செய்பவர்கள் எனப் பல நூற்றுக்கணக்கான மனிதர்கள் நம் வாழ்க்கையைக் கடந்து செல்கின்றனர். மனித இனத்தின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம், தனிச்சிறப்பு, மனிதப் படைப்புக்கான காரணம் பஞ்ச பூதங்கள், வேற்று கிரக வாழ் உயிரினங்கள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், அதனால் நாம் பெறும் இன்ப, துன்பங்கள், மனக்குறைகள், நிறைகள் என நம் அன்றாட வாழ்வில் நாம் கடந்து வந்த பாதைகள் நமது விருப்பங்கள் தெரிந்தே தவறுகள் செய்து முதலில் மகிழ்ந்து பின் வருந்துதல். நம் வாழ்க்கையை நாமும் மற்றவர்களும் துன்பப்படாமல் வாழ்வதற்கான வழிகள் ஆகியவைகளை அலசிப் பார்த்து நம் நினைவுகட்கு உரமிட்டு மகிழும் நிலையை உருவாக்குவதே இத்தொடரின் நோக்கம். வாசகர்கள் படிப்பதுடன் அவரவர் வாழ்க்கை நிலையை ஆராய்ந்து செப்பனிட அருமையானதொரு வாய்ப்பு.

தன்னம்பிக்கை

இவ்வுலகில் எல்லா உயிர்களுமே தன்னம்பிக்கையுடனேயே படைக்கப் பட்டுள்ளன. ஆறாவது அறிவைப் பெற்றுள்ள நமக்கு மற்ற உயிரினங்களைவிட தன்னம்பிக்கை அதிக அளவில் உள்ளது. இதை அறிந்திருந்தாலும் நம் மனதிலுள்ள தேவையில்லாத எதிர்மறையான பதிவுகளால் பயம், சந்தேகம், உண்டாகி, பல சமயங்களில் தன்னம்பிக்கையின்றி செயல்பட்டு தோல்வியடைகிறோம். ஏன் தோல்வி எனப் பல சமயங்களில் சிந்திக்காமல், நம்மால் இது முடியாது என்றெண்ணி நம்பிக்கையற்ற நடைபிணமாகிவிடுகிறோம். நமது சிறப்பே சிந்தனையாற்றல் தான். நமக்கு இன்பம், துன்பம் எது வந்தாலும் அவற்றுக்கு பிறர் மட்டுமே காரணமல்ல. நாமும் காரணம் என்பதை மறந்து விடக்கூடாது. இதைத்தான்

“தீதும் நன்றும் பிறர்தர வாரா”

என்றார் கனியன் பூங்குன்றனார்.

தாழ்விலும் உயர்வு

படிப்பு, வேலை, கும்டுபம், எனப் பல பிரிவுகளிலும் உயர்ந்த நிலையில் தலை நிமிர்ந்து தலை வணங்காமல் வாழ்வது இயல்பு. ஆனால் தாழ்வடைந்த நிலையிலும், வறுமையிலும், தோல்வியிலும் தலை வணங்காமல் வாழ முடியுமோ? இதோ ஒரு பாடல்;

“உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால்
உலகத்தில் நீ வாழலாம்;
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல்
நீ வாழலாம்”

இந்த நிலை நமது தனிச்சிறப்பு:

வறுமை, தோல்வி, தாழ்வு மனப்பான்மை என்றெண்ணி நத்தைபோல் சுருங்கி விடாமல், எதனால் இதுபோன்ற நிலை வந்தது எனச் சிறிதுநேரம் தெளிவான மனநிலையில் சிந்தித்தாலே போதும். கோளாறு எங்கே எனக் கண்டுபிடித்து விடலாம். அதன்பின் அதைச் சரிசெய்வது மிகச் சுலபமே.

ஓடிக் கொண்டிருக்கும் வாகனம் திடீரென நின்று விடுகிறது; பதட்டமான நிலை. வாகனப் பழுது நீக்குபவர், தம் அனுபவத்தின் காரணமாக நாம் கூறும் செய்திகளின் அடிப்படையில், விரைவாக முடிவெடுத்து எதனால் வாகனம் நின்றது எனக் கண்டுபிடித்து, அதைச் சரி செய்து மீண்டும் ஓடுமாறு செய்து விடுகிறார்.

இதே போல்தான் நம் வாழ்க்கையும் மகிழ்வாக இருப்போம்; திடீரென ஒரு செய்தி வரும் இடிந்துபோய் துக்கமடைவோம். வாகனத்தைப் பழுதுநீக்குபவர்கள் போல, நம் உடல் நோயைக் குணப்படுத்த மருத்துவர்கள், நம் மனநோயைக் குண்படுத்த மனநல ஆலோசகர்கள் எனப் பலரும் உள்ளனர். இவர்களை அடிக்கடி பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்க்கையல்ல.

வாகன ஓட்டுநர் என்றால், அந்த வாகனத்தை பற்றிய எல்லா விபரங்களையும் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் திடீரென ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து அவர் பயணத்தைத் தொடர முடியும். முழுநேரமும் வாகன ஓட்டுநர்களாக்ப் பணிபுரிபவர்கட்கும் உள்ள வித்தியாசம் நமக்கு நன்கு தெரியும். இத்தகைய பல நிலைகளிலும் மனிதனாய் நாம் வாழ ஒன்றை மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டுமென்கிறது ஒரு குறள்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

இதில் அளவு என்பது பொருளை மட்டுமே குறிப்பதல்ல; நம் பண்புகள், தகுதிகள் என எல்லாவற்றையுமே குறிப்பது என்பதை நாம் அனுபவத்தில் காண்கிறோம்.

இயற்கை ரகசியம்

இயற்கை தான் படைத்துள்ள எல்லா உயிர்களும் ஒற்றுமையாக, சுமுகமாக, மகிழ்வாக இருப்பதற்கான எல்லா வசதிகளையும் போதிய அளவு உண்டாக்கியுள்ளது. சிந்திக்கும் ஆறாவது அறிவைப் பெறாத உயிரினங்கள் அனைத்துமே இந்த இயற்கையின் இரகசியத்தை அறிந்து, அதற்கேற்ப வாழ்ந்து மகிழ்வாக இருக்கின்றன.

ஆனால், சிந்தனையாற்றல் என்ற தனிச் சிறப்பைப் பெற்ற நாம் பேராசை காரணமாக அளவுக்கும் தேவைக்கும் அதிகமாக சொத்துக்களைப் பெருக்கி சமுதாயத்தில் உயர்வு, தாழ்வு, ஏற்ற இறக்க நிலையை உண்டாக்கி விட்டோம். அதைச் சரி செய்ய சில சமயம் இயற்கை கோபத்தில் செயல்படும் நிகழ்வுகளே பூகம்பம், வெள்ளம், நெருப்பு, புயல் போன்றவைகள்.

வறட்சிக்கு என்ன காரணம் என சிந்திப்போமே. மழையில்லாவிட்டால் நம்மால் வாழ முடியாது. இதை “நீரின்றி அமையாது உலகு” என்ற அனுபவச் சொல் உறுதி செய்கின்றது. 2000 ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்டதாய் நாம் கூறிவரும் திருக்குறள்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

என்று கூறியுள்ளது. சிந்திப்போமே! ஏன் வறட்சி? உங்கள் சிந்தனைக்குத் தீனி போட்டுள்ளேன்.

மக்கள் தொண்டர்கள்

மக்கள் நலனே தமது உயிர்மூச்சு என வாய்கிழியப் பேசி, திட்டமிட்டு, நம் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் ஒதுக்கி, சுயநலத்துடன், அதைத் தனதாக்கிக் கொள்ளும் அதிகார வர்க்கமும் அரசியல்வாதிகளும் எல்லா மக்களையும் சகோதரர்களாய் எண்ணாத்தால் தானே இந்த இழிநிலை நீடிக்கிறது. வளரும் நாடு (Developing Country) என்ற நிலை தொடருகிறது. வளர்ந்த நாடுகள் (Developed Countries) என்று கூறும் நாடுகளைவிட, நம் நாட்டில் இயற்கை வளம், , மனிதபலம், இளைஞர் சக்தி ஏராளமாய் இருந்தும், இழிநிலை நீடிக்கக் காரணம் சக மனிதனை சுரண்டி, ஏமாற்றிப் பிழைக்கும் கயவர் கூட்டமே. ஆனால், அவர்கள்தான் இன்றைய கிராம்ப்புற இளைஞர்களின் கனவுக் கதாநாயகர்களாய் தவறான முறையில் உலா வருகின்றனர்.

சமீபத்தில் ஓர் ஊராட்சி கவுன்சிலரைச் சந்தித்தேன். அவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடந்த ஒரு வருட பொறுப்புக் காலத்தில் தன் பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான சாலைகள், தெரு விளக்கு வசதி மற்றும் குடிநீர் வசதிகளை எவ்வித எதிர்பார்ப்பு மின்றி சேவை மன்பான்மையுன் செய்ததாய் கூறினார். கைக்காசும் செலவாவதால், அதை ஈடுகட்ட வீட்டின் முன் புறத்தை சிறிய மளிகைக் கடையாக்கி தன் மனைவியை வியாபாரம் செய்ய வைத்தாராம்.

சாலைப்போட்ட கான்ட்ராக்டர், JE மற்றும் அலுவலகத்திலிருப்பவர்கட்குத்தான் பெர்சன்டேஜ் தர முடியும்; கவுன்சிலருக்கு தர இயலாது. என்றாராம். இவர் என்னிடம்; “ஆமாம் அய்யா, JE மற்றும் அலுவலகத்திலிருப்போர்கள் பணம் செலவு செய்து தானே இங்கு வருகின்றார்கள். அவர்கள் வேறு எங்கே செல்ல முடியும்” என்று சமாதானமும் கூறினார்.

இது நம் நாட்டு நிலை அதாவது நமது நாடு வளர்ந்து வரும் நாடு. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், பல அப்துல்கலாம்கள் அவதரித்தாலும், வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைவது எளிதல்ல. இருப்பினும் மனம் தளராமல், தன்னம்பிக்கையுடன், நாட்டுப் பற்றுடன் ஆக்கப்பூர்வமான எண்ணங்களை விதைப்போம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் துவங்கி சுமார் 25 ஆண்டுகட்கு முன்பு வரை கிராமங்களின் மணியகாரர் என்ற முக்கிய பதவியை அந்தக் கிராமத்தின் செல்வந்தர்களுள் ஒருவருக்கு அளித்தது. அரசாங்கம். தங்கள் வசதி கருதி, அவர்கள் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டனர். இன்றைக்கு VAO எனப்படும் பதவிக்கு பல ஆயிரம் ரூபாய், சில இடங்கட்கு லட்சத்தில் எனச் செலவழித்து வருபவர்கள் எப்படி சேவை மனப்பான்மையுடன் செயல்படுபவர் என எதிர்பார்ப்பது? அதோடு மந்திரி முதல் உள்ளூர் அலுவலர்கள் வரை உபசரிப்பு, போக்குவரத்து என எல்லாச் செலவுகளையும் அவர்கள் எப்படிச் செய்ய முடியும்? திருவாளர் பொதுஜனம் தான் இருக்கிறாரே!

தற்போது அரசில் முக்கியத் துறைகளான பத்திரப்பதிவு, போக்குவரத்து மற்றும் வணிகவரி ஆகியவற்றில் போன் பில் கட்ட பணம் ஒதுக்குவதில்லை. தபால் ஸ்டாம்ப் வாங்க பணம் கிடையாது; பேப்பர் முதலிய எழுது பொருட்கள், பதிவேடுகள் முதலியன வாங்க எவ்விதத் தொகையும் ஒதுக்குவதில்லை. ஆனால், இவைகளைப் பரிசீலிப்பதற்காக சென்னையிலிருந்து பல உயர் அதிகாரிகள் வருகின்றன.

அரசாங்கத்தின் சார்பாக வரும் இந்த உயர் அதிகாரிகள் இருமுகத்துடன் செயல்படுவதை நாம் உணரவேண்டும். பணம் ஒதுக்க வேண்டிய நிலையிலுள்ளவர்கள் அதைச் செய்யாமல், லஞ்சத்தை ஒழிப்பதாய் வாய் கிழியக் கூறிக் கொண்டு, லஞ்சப் பணத்தில் வாங்கும் பதிவேடு ஆளைப் பார்வையிட வருவது வெட்கக்கேடாக உள்ளது.

எனவே, நேராகவோ, மறைமுகமாகவோ, நாம் செலுத்தும் வரிப்பணத்தை நாட்டுப் பற்றில்லாமல், மனித நேயமில்லாமல், மனிதன் என்ற போர்வையில் செயல்பட்டு தன்னுடமையாக்கும் நிலையை நீக்கும் வழிகளை இனி விரிவாய் காண்போம்.

வாழ்க வளமுடன்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்