Home » Articles » வாராய், நீ வாராய்!

 
வாராய், நீ வாராய்!


தேவமணி க
Author:

கொஞ்சம் பொறுங்கள்! உங்களோடு ஒரு ஐந்து நிமிடம் பேசவேண்டும். உங்கள் இறுகிய முகத்தைப் பார்க்கும்போது ஏதோ விபரீதமான முடிவு எடுத்துவிட்டது போலத் தெரிகிறது.

தற்கொலை செய்து கொள்ள தயாராக இருந்தாலோ, அல்லது தயார்படுத்திக் கொண்டிருந்தாலோ, அல்லது தயார்படுத்திக் கொண்டிருந்தாலோ என்னோடு வாருங்கள், நான் உங்களுக்கு உதவிசெய்கிறேன்!

நான் சொல்வதை சற்று கவனமாகக் கேளுங்கள். அதன்பிறகு முடிவெடுங்கள். மற்றவர்களைப் போல, இந்த நேரத்தில் தத்துவங்களை சொல்லியோ உங்களை மேலும் குழப்பப் போவதில்லை. சாதாரணமாகவே பேசுகிறேன். நான் சொல்லும் வார்த்தைகள் உங்களுக்கு பயன் அளிக்கவில்லையானால் நீங்கள் தூக்குப் போட்டுக் கொள்ளவோ, கிணற்றில் விழவோ, விஷம் அருந்தவோ வேண்டிய உதவிகளை செய்து தர சித்தமாயிருக்கிறேன். மேலும் பிணத்தை அறுவை சோதனை செய்து வீடு கொண்டு போய் சேர்ப்பது என் பொறுப்பு. கவலையை விடுங்கள்.

நீங்கள் தற்கொலை செய்ய வேண்டியதற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அது தோல்வி என்ற வேரிலிருந்து விளைந்த மரமாகத்தான் இருக்கும்.

தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி, கொடுக்கல் வாங்கலில் தோல்வி, எதிர்பார்த்தது கிடைக்காமல் போனதால் தோல்வி, உங்கள் மறைவான குற்றங்கள் வெளியரங்கமானதால் மானத்துக்கு ஏற்பட்ட தோல்வி, உங்கள் எதிரி வெற்றி அடைந்ததால் வீரத்திற்கும் விவேகத்திற்கும் ஏற்பட்ட தோல்வி, வியாபாரத்தில் தோல்வி, தொழிலில் தோல்வி, கணவன் மனைவிக்கிடையே புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தோல்வி, – இப்படி ஏதாவது ஒரு தோல்விதான் உங்களின் இந்த முடிவுக்குக் காரணம்.

இந்தத் தோல்வியை எதிர்கொள்ள முடியாமல், தோற்றுப் போனதாக எண்ணி வாழ்விற்கு புறமுதுகு காட்டி உயிரை மாய்த்துக்கொள்ள , ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்.

“நான் இறந்து போனால், என் மீது விழுந்த பழிச்சொல் மறைந்து விடும். பெரும் பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கும். கண்ட கண்ட நாய்களிடத்தில் கைகட்டி தலைகுனிந்து நிற்க வேண்டிய அவலம் இல்லை.

என்னை ஏளனம் செய்தவர்கள் ஏமாற்ற நினைத்தவர்கள், ஏமாற்றியவர்கள், வீண்பழி சுமத்தியவர்கள் திகைத்துப் போவார்கள். என் நிம்மதியைக் கெடுத்தவர்கள் வாய் அடைத்துப் போகும். அவர்களைப் பழிவாங்க இதுதான் சரியான வழி. உலகம் இனி என்ன செய்யும்?” இதுதானே உங்கள் தீர்மானம்?

இனி வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம்? எதற்காக, யாருக்காக வாழ வேண்டும்?” என்று கேட்பதும் எனக்குப் புரிகிறது. அப்படியானால், விலை மதிப்பில்லாத உங்கள் உயிரைக் காட்டிலும், வேறு ஏதோ ஒன்றை முக்கியமானதாகக் கருதுகிறீர்கள். அதை இழந்து விட்டதாகவும் எண்ணுகிறீர்கள். அது என்ன?

மானம், மரியாதை, கௌரவம், சமாதானம், பணம், சொந்த பந்தம், இதர செல்வங்கள் இவைகளில் ஏதாவது ஒன்றை உயிரினும் மேலாகக் கருதியிருக்கலாம். அதுபோனபின் உங்கள் உயிர், கீழே விழுந்து முடிக்கு சமமாகிவிட்டது! சரிதானே?

வாருங்கள். அந்த மலை உச்சிக்கு பேசிக்கொண்டே போவோம். அங்கிருந்து குதித்தால் சுலபத்தில் மண்டை உடைந்து மூளை சிதறி, இறந்து போகலாம்.

நீங்கள், எப்போதாவது, உங்களுக்காக வாழ்ந்திருக்கிறீர்களா? அதாவது மானத்துக்காக, மரியாதைக்காக வாழாமல் ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று சுதந்திரமாக வாழ்ந்திருக்கிறீர்களா? ஏனெனில், மானமும் மரியாதையும் உங்கள் பிறப்புரிமை அல்ல. நீங்கள் சேர்த்து வைத்த சொத்துமல்ல. அது பிறர் கொடுக்கப் பெற்றுக் கொள்வது. அன்புகூட, பிறருக்குக் கொடுத்தால்தான் திரும்ப உங்களுக்குக் கிடைக்கும். இது அனுபவ உண்மை. இதுதான் மானம், இதுதான் மரியாதை என்று இலக்கணம் ஏதாவது உண்டா? அது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள், காலத்துக்குக் காலம் மாறும். பச்சோந்தி! இதையா பெரிதாக எண்ணுகிறீர்கள்.

நம் ஊரில் ஒரு பெண் குளிப்பதை ஒரு ஆண் பார்த்துவிட்டால், மானம் போய்விட்டது என்கிறோம். ஆனால் அமெரிக்காவில் ஆண்களும் பெண்களும் முழு நிர்வாணமாக எதிர்எதிரில் நின்று வலைப்பந்து விளையாடுகிறார்கள். இந்த கர்மத்தை என்ன சொல்வது! அப்படியானால், மானம் என்பது என்ன? பச்சோந்திதானே?

மனதில் நாமாக வரிந்து கொண்ட பண்பாட்டு அடையாளங்கள். இதுதான் வாழ்க்கை என்று நாமாக ஏற்படுத்திக்கொண்ட முறை. நாமாகப் போட்டுக் கொண்ட பொன்விலங்கு. ஒரு நெல்மணிக்காக, தன்னை அடிமைப்படுத்திக்கொண்ட கூண்டுக்கிளி. இதைத்தானே, நீங்கள் இழந்து விட்டதாக எண்ணி கவலைப்படுகிறீர்கள்?

அதோ, அந்த மரத்தின் உச்சியில், மனிதர்கள் எட்ட முடியாத இடத்தில் கூடுகட்டியிருக்கும் பறவையைப் பாருங்கள். தனது சிறு குஞ்சுகளை கூட்டிலிருந்து கொத்திக் கீழே தள்ளிவிடுகிறது. அந்தக் குஞ்சுகளுக்கு பறக்கவே தெரியாது. பாவம். இவ்வளவு நாள் அன்புடன் பாதுகாத்து வந்த தாயே, திடீரென அவைகளைக் கீழே தள்ளும்போது அவைகளுக்கு எப்படி இருக்கும்? அது போலத்தானே நீங்களும் இப்போது ஆதரவின்றி தவிக்கிறீர்கள்? அந்தக் குஞ்சுகள் எப்படியும் பறந்துவிடும். மீண்டும் கூட்டுக்குத் திரும்பும் என்பது அதன் தாய்க்குத் தெரியும். அதுதான் வாழ்வின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை உங்களுக்கு இல்லையா? ஒரு பறவையை விட நீங்கள் பலவீனமானவரா?

இறந்து போவதால், உங்களுக்கு விடுதலை கிடைக்குமென்று யார் சொன்னது? உங்கள் உயிரை துச்சமாக எண்ணியதுபோல், உங்கள் ,துயரங்களையும் தோல்விகளையும் ஏன் துச்சமாய் எண்ண முடியவில்லை.

விரலுக்கேற்ற வீக்கம் எனபது போல், உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சோகம் நிழல் போல் பின் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். அதேபோல, ஒவ்வொரு வரும் ஒரு குற்றவாளிகள் தான். அதற்காக அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வதில்லை.

சாவுதான் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்றால், முக்கால்வாசி உலகம் காலியாகத்தான் இருக்கும்.

வீரபாண்டிய கட்டபொம்மனையும் பகத்சிங்கையும் தூக்கில் ஏற்றினார்கள். அவர்கள் உயிர் போகும்போது, என்ன நினைத்திருப்பார்கள்?

“இந்த நாட்டில் விடுதலைக்காக என் உயிரைக்கொடுப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால் நீங்கள் இறப்பதால் என்ன பெருமை வரப்போகிறது? யாருக்கு நன்மை ஏற்படப்போகிறது? நீங்கள் எதைக் கண்டு ஆனந்திக்கப் போகிறீர்கள்? ஒன்றுமில்லை.

காலை இழந்தவன் நடக்கிறான். கண் இல்லாதவன் படிக்கிறான். கை இல்லாதவன் ஓவியம் வரைகிறான். அவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட தடைக்கல்லை, படிக்கல்லாக மாற்றிக் கொண்டார்கள்.

நீங்கள் ஒரு சந்து வழியாகப் போகும்போது ஒரு பாம்பு படுத்திருப்பதைக் காண்கிறீர்கள். தைரியமிருந்தால், அதை எதிர்கொள்ளலாம். அல்லது வேறு வழியில் போகலாம். அதைவிட்டு உங்கள் பயணத்தை அத்துடன் முடித்துக் கொண்டு திரும்புவது கோழைத்தனம். அறிவீனமும் கூட.

தற்கொலையும் அதுபோல கோழைத்தனம். உங்களை நம்புங்கள். உங்களுக்கு நீங்களே தீங்கு உண்டாக்கிக் கொள்ள மாட்டீர்கள். உற்றார் உறவினர் மேலும், உலகத்தின் மேலும் உலகத்தில் உள்ள செல்வங்கள் மேலும் வைதிருக்கும் நம்பிக்கைப் போரவையை களைத்தெரியுங்கள். தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்வில் தென்றல் வீசி, வசந்தம் வலம் வருவதைக் காணலாம்.

இப்போது நாம் மலை உச்சியை அடைந்துவிட்டோம். உங்கள் முடிவு என்ன? மூளைப் பந்தை வெளியேற்றி விடலாமா? அல்லது உள்ளே வைத்து இன்னொரு முறை வாழ்வை விளையாடிப் பார்க்கலாமா?

ஆம்… வாருங்கள் நண்பரே.. மலைச்சாரல் வசந்தம் அழைக்கிறது. தோல்வி என்பது விசைத்தடுப்பான் (ஸ்பீடு பிரேக்கர்)! அதுவும் உங்கள் பாதுகாப்புக்காகத்தான். தாண்டி வாருங்கள்! நம்பிக்கையுடன் கைகொடுங்கள் அதோ புதிய வெளிச்சம்.


Share
 

1 Comment

  1. gmurugan says:

    i will agreed that,where ever we can keep and follow good thinks, donot nerves ,worlds so big,we will open our mind also broad,then u will see manyway to open for us

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்