Home » Articles » நாவடக்கம் ஒரு நாகரிகம்

 
நாவடக்கம் ஒரு நாகரிகம்


கந்தசாமி இல.செ
Author:

வாய்க்கொழுப்பு என்றால் பச்சையாகச் சொன்னது போலிருக்கும். மாறாக நாவடக்கம் வேண்டும்’ என்று சொன்னால் அது மிகவும் நாகரிகமான சொல்லாகக் கருதப்படும் நாவடக்கமாகப் பேசுவது மிகச் சிறந்த நாகரிகமாகும்.

நாவடக்கம்

நாவடக்கம் என்பதிலே மேம்போக்காகக் கருதினால் இரண்டு பொருள்கள் தொனிக்கும் ஒன்று நாவை அடக்கிப் பேசவேண்டும் என்பது மற்றொன்று நாச்சுவைக்கு அடிமையாகாமல் அடக்கி ஆளவேண்டும் என்பது. அதாவது அளவாகச் சாப்பிட்டு உடம்பைப் பெருக்க வைத்துக்கொள்ள கூடாது என்பது. இந்தக் குழப்பத்திற்கு ஆளாகாமல் இருக்கவே வாய்க்கொழுப்பு என்று வெளிப்படையாகச் சொல்வது.

வாய்க்கொழுப்பு

வாய்க்கொழுப்பு என்றால் என்ன? திமிராகப் பேசுவது. யாரையும் எடுத்தெறிந்து பேசுவது செல்வமும் செல்வாக்கும் இருக்கிறது என்பதால் பொய்யைக்கூட உண்மை என்று அடித்துப் பேசுவது. யாரும் எதுவும் நம்மைச் செய்து விட முடியாது என்று ஆணவமாக, செருக்காகப் பேசுவது அப்படிப் பேசிப்பேசியே உண்மையை எழுந்திருக்கவிடாமல் செய்துவிடுவது. தனக்குக் கீழே உள்ளவர்களை உண்மையைப் பேச முடியாமல் அடக்கிவிடுவது. இன்னும் இன்னும் பேசினால் ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மற்றொரு இடத்தில் அடிவாங்கிக் கொண்டே தீருவான். அவன் வாய்க்கொழுப்பு நீண்டநாள் நீடிக்காது. ஆனால் வசதி உள்ளவன் வாய்க்கொழுப்பாகப் பேசினால் அவனை உடனடியாக ஒன்றும் செய்துவிட முடியாது. அவனுடைய செல்வாக்கும் செல்வமும் குறைந்த பிறகே அவனுடைய வாய்க்கொழுப்பு அடங்கும். நா அடக்கம் பெறும். அதனால் அத்தகையவர்களிடத்தில் அவசரப்பட்டுப் பயனில்லை. ஆனால், அத்தகையவர்கள் தங்கள் வாய்க்கொழுப்பினாலே அழிவது என்பது உறுதி.

வாய்க்கொழுப்புக்காரர்களுக்கு

இத்தகைய வாய்க்கொழுப்புக்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துக் கொள்கிறோம். ஒருவரை நாம் திமிராகப் பேசித் திட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் மனம் பெரிதும் புண்படும். அந்த மன எரிச்சல் எத்தகைய மனிதனையும் எரித்துவிடும். இது பாவ புண்ணிய மில்லை. மாயமந்திரம் இல்லை. கடவுள் கவனித்துக் கொள்வார் என்பதும் இல்லை. சமுதாயத்தின் எண்ணமோ மாறுகிறது. அதனால் அத்தகைவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், அழிந்து போகிறார்கள். இது ஒரு நடைமுறை உண்மை.

எப்படி நிகழ்கிறது?

வாய்க்கொழுப்பாக பேசுகின்றனர். அவர் இவர் என்று பார்க்காமல், தன்னிடம் வருவோரிடம் எல்லாம் அப்படித்தான் நடந்துகொள்வார். அது ஒரு பழக்கம்தானே! நாளடைவில் அப்படிப் பேசினால்தான் தனக்குப் பயந்து நடப்பார்கள் என்று பேசுவார். அதுவும் நான்கு பேர் இருக்கும்போது இந்த நோய் உச்சநிலைக்குப் போய்விடும் எல்லோரையும் தான்தான் உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள வாய்த்துடுக்காகப் பேசவேண்டிவரும். இப்படி அவர் சிந்திக்கின்ற, அல்லது அவரைச் சந்திக்க வருகின்ற எல்லோரிடமும் இப்படியே நடந்து கொள்வதால், அந்த அனைவருக்கும், இந்த ஆள் வாய்க்கொழுப்பானவன் என்ற பொதுவான ஓர் எண்ணம் உருவாகும். அத்தனை பேரும் அந்த மனிதரைப் பற்றி மற்றவர்களிடம் பேசவேண்டி நேரும்போதெல்லாம, ‘அந்த ஆளுக்கு இருந்தாலும் இவ்வளவு வாய்க் கொழுப்பு ஆகாது’ என்று தங்கள் கருத்தைத் தங்களையும் அறியாமல் சொல்லியே தீருவார்கள்.

வழி அடைத்துப் போய்விடுகிறது

இப்படிப் பலருடைய எண்ணமும் சேர்ந்து உருவாகும்போது, அந்த மனிதரைப்பற்றி நல்ல எண்ணம் கொண்டுள்ளவர்கூட தங்கள் எண்ணத்தை மறுபரிசீலனைக்குக் கொண்டு வருகிறார்கள். எப்படி இருந்தாலும் உண்மை ஒரு நாளைக்கு வெளியாகித்தானே தீரப் போகிறது? அதனால் அவருக்குச் செல்வாக்கு வரும் இடமும், செல்வம் வரும் இடமும் நாளடைவில் அடைபட்டுப் போகிறது. அவர்கள் தங்கள் மனத்தை மாற்றிக் கொள்கிறார்கள். இது கண்ணுக்குத் தெரியாமல், ஒவ்வொருவரைப் பற்றியும் சமுதாயம் செய்கின்ற இயல்பான மாற்றமாகும். இதை அறியாதவர்கள், ‘நம்முடைய நேரம் சரியில்லை, கிரகம் கெட்டு இருக்கிறது.. இன்று விழித்த முகம் சரியில்லை’ என்று போல, வாய்க்கொழுப்புக்காரர்களுக்கு எல்லாம் இந்நிகழ்ச்சி ஒரு பாடமாகிவிட்டது.

பொதுமக்களின் பொறுப்பு

இத்தகைய வாய்க்கொழுப்புக்காரர்களை அடக்கப் பொதுமக்கள் போராட்டம் நடத்த வேண்டியது இல்லை. பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொண்டால் போதும். இத்தகைய மனிதர்களைப் பற்றிக் கருத்துக் கூறும் வாய்ப்பு நேரும்போதெல்லாம் அவரைப்பற்றிய சரியான நியாயமான கருத்தை எடுத்துக்கூறத் தயங்கக்கூடாது. நியாயமான கருத்தை எடுத்துச் சொல்லாமலிருப்பதும் குற்றந்தான். அத்தகைய குற்றத்தைச் செய்யாமல் இருப்பதே பெரிய தொண்டாகும்.

உயர்ந்த நாகரீகம்

உலகிலேயே உயர்ந்த நாகரீகம் பிறர் மனம் நோகும்படி, பேசாது இருப்பதுதான். வாய்க் கொழுப்பாகப் பேசுகின்றவர்கள் -வலிமையுள்ளவர்களாக இருந்தால், ‘உங்களின் அடக்கமில்லாத பேச்சு உங்களை அழித்துவிடும் என்று எச்சரிக்கை செய்யவேண்டும். வலியில்லாதவர்களாக இருப்பின், என்ன செய்வது? நீங்கள் இப்படிப் பேசுவதையும் கேட்கவேண்டிய சூழ்நிலை உள்ளது”. என்ற தங்கள் மன வேதனையை வெளிப்படுத்தி வரவேண்டும். எளியவர்களாக இருந்தால், ‘என்ன இருந்தாலும் இப்படிப் பேசுவது நியாயமில்லை’ என்று பணிவோடு தெரிவித்துவிடுவது, இது போதும், அவர்கள் வாய்க்கொழுப்பை அடக்க.


Share
 

1 Comment

  1. RAJU.R says:

    Thanks for usefull message

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்