Home » Articles » வேரில் பழுத்த பலா

 
வேரில் பழுத்த பலா


கமலநாதன் ஜெ
Author:

“மகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது?”

என்பதை கண்டுகொள்வது மனதின் முக்கியமான பணி. வாழ்க்கையில் மாபெரும் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய ரகசியம் . இதில் ஒளிந்திருக்கிறது. 90 சதவீத மக்கள் தன் மகிழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது என்று தெரியாமல் தான் அல்லாடுகின்றனர்; தள்ளாடுகின்றனர். அவர்களது மகிழ்ச்சி கொலுவீற்றிருக்கும் திசை அறியாமல் வேறு திசை நோக்கி பயணம் மேற்கொண்டு ஏமாற்றமடைந்து விரக்தி நிலை எய்துகின்றனர். அவர்கள் தமது மனதின் குரலை கேட்காதவர்கள்.

மனதுக்கு தெரியும் மகிழ்ச்சி எங்கே என மனதின் குரலை அக்கறையோடு செவிமடுத்தால் மகிழ்ச்சி இருக்கும் இடத்தை எளிமையாய்க் கண்டறியலாம். மகிழ்ச்சி என்பது ஒருவர்க்கு ஒருவர் வேறுபடுவது. ஒருவர் மகிழ்ச்சி இன்னொருவர் துக்கம். கர்நாடக இசையில் ஆர்வமுடைய ஒருவர்க்கு ஒரு சங்கீத சபா மேடையில் பாட வாய்ப்பு கிடைத்தால் அது சந்தோஷம். கர்நாடக இசை பற்றி அறியாதவர்க்கு அந்த வாய்ப்பு கிடைத்தால்…அவர் மனம் சஞ்சலத்திலும் அச்சத்திலும் பயத்திலும் மூழ்கும்.

பேச்சாற்றலில் ஈடுபாடு உள்ள ஒரு மாணவன் இருக்கிறான். தலைமை ஆசிரியர் அவனை அழைத்து “வரும் திங்கட்கிழமை இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெறவுள்ளது நீதான் வரவேற்புரை நிகழ்த்த வேண்டும்” என்கிறார். அவன் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான். இதனையே தலைமையாசிரியர் பேச்சாற்றல் இல்லாத, வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கின்ற, மாணவனை அழைத்துச் சொன்னால் அவன் வெடவெடவென்று நடுங்கத் தொடங்குவான். அவன் மனது அச்சத்தால் ஆட்கொள்ளப்படும். மகிழ்ச்சி என்பது மனதில் தோன்றும் உணர்வு. மனிதரின் ஆற்றல், சூழலுக்குத் தக்கபடி அது மாற்றம் கொள்கிறது. ஒருவரின் மகிழ்ச்சி இன்னொருவரின் மகிழ்ச்சியாக இருப்பதில்லை.

என் நண்பர் ஒருவர் கர்நாடகாவில் உள்ள ஒரு ஊருக்கு மாறுதலாகிச் சென்றார். அது மாவட்டத் தலைநகர்தான் என்ற போதும் தண்ணீர் வசதி இல்லை. உப்புத் தண்ணீர். கிரெடிட் கார்டு பயன்படுத்தும் கடைகள் ஏதும் இல்லை. நல்ல ஹோட்டல் கூட இல்லை. குடும்பத்தை விட்டு 600 கி.மீ. தள்ளி வாழ வேண்டிய சூழ்நிலை. “முதல் ஆறு மாதங்கள் நரகமாகிவிட்டது வாழ்க்கை” என்று சொன்னார். “பிறகு என்னவாயிற்று” என்று கேட்டேன். “எனது நிலைய விவரித்து திருச்சியில் இருந்த என் தந்தைக்கு கடிதம் எழுதியிருந்தேன். எனது தாங்க முடியாத மனத் துயரங்களை அவருக்கு தெரியப்படுத்தியிருந்தேன். அவரிடமிருந்து ஒரு வாரம் கழித்து பதில் வந்தது. ஒரு நீண்ட தாளில் இரண்டே வரிகள்தான் எழுதியிருந்தார்.

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்தப் பார்த்து நிம்மதி நாடு”

என்ற கண்ணதாசன் வரிகள்தான் அவை. வேறு எதையும் அவர் எழுதவில்லை. எனது மனது முற்றிலும் மாறிபோய்விட்டது. நான் எனது அலுவலகத்தில் தலைமை அதிகாரியாக பிரமோஷனில் சென்றிருந்தேன். அலுவலகப் பணிகளை ஊன்றி கவனிக்க ஆரம்பித்தேன். விதிமுறைகள பற்றிய புத்தங்களை கவனமாக படித்தேன். ஊழியர்களிடம் நிறைய விவாதித்தேன். அன்பு காட்டினேன். அவர்கள் வீடுகளுக்கு சென்றேன். அங்கிருந்த குழந்தைகளிடம் விளையாடினேன். மாலையில் இரண்டு மணி நேரம் வாக்கிங், ஊரில் நடக்கும் ஆங்கிலக் கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் போனேன். எனது வாழ்க்கைப் பாதை மாறிப்போய்விட்டது. தண்டனையோ என்று கருதியது ஆரவாரமாக ஆனது. சொந்த ஊரில், மனைவி மக்களோடு இருந்தபோது செய்யத் தவறியதை எல்லாம் அங்கே செய்ய முடிந்தது. இந்தப் புதுமை எனக்கு மகிழ்ச்சி தந்தது. உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனார் “அங்கிருந்து இரண்டு ஆண்டுகள் கழித்து மாறுதல் பெற்று வந்தபோது என் மனது துயரத்தில் மூழ்கிக் கிடந்தது.”

Two men looked out from prison bars
One saw the mud and the other saw the stars

இந்த ஆங்கிலக் கவிதை வரிகள் பார்வையில் இருக்கும் வேறுபாடுகளை புலப்படுத்துகின்றன. சிறைக்கூடத்திலிருந்து வெளியே பார்க்கும் இருவர். ஒருவர் வெளியே தெரியும் புழுதி மண்ணைப் பார்க்கிறீர். இந்த இரண்டு வரிகள் சுட்டிக் காட்டும் இரண்டு பார்வைகள், நாம் மகிழ்ச்சியை நோக்கி மேற்கொள்ளும் பயணத்தை விவரிக்கின்றன.

இப்பொழுதும் இருக்கும் சூழ்நிலையில் எது எனக்கு உகந்தது என்று கேள்விகேட்டு தீர்மானங்கள் எடுக்க வேண்டும். எதிலும் ஏதோ ஒன்று மகிழ்ச்சி தரக்கூடியதாக ஒளிந்திருக்கிறது. நம் மனதால் அதை கண்டறிய முடியும். மனது ஆற்றல்கள் நிரம்பியது; பகுத்தறியும் திறன் மிக்கது. எல்லோருக்கும் மனதின் ஆற்றலை ஒன்றாகத்தான் படைத்திருக்கிறான் இறைவன். அறிவின் ஆற்றல்தான் ஆளுக்கு ஆள் வேறுபடும். மனதின் ஆற்றல் ஒன்றுதான். அந்த மனதின் ஆற்றலை சரிவரப் பயன்படுத்த வேண்டிய திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

“மனதுக்கு மட்டும் பயந்துவிடு;
மானத்தை உடலில் கலந்து விடு
இருக்கிற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு’

என்று நம்பிக்கை தருகிறார் கண்ணதாசன். மனம் என்ற குதிரை சரியான பாதையில் செல்லக்கூடிய பயிற்சி கொண்டது. கடிவாளம் நம் கையில் அந்தக் குதிரை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கும்போதே நாம் கடிவாளத்தை தேவை இல்லாமல் இறுக்கிப் பிடிக்கிறோம். குதிரையின் பயணத்தை தவறான திசைநோக்கி செலுத்துகின்றோம். மனதின் பயணத்தை தனது இயல்பான போக்கில் மனமே தீர்மானிக்கும். அதில் நாம் குறுக்கிடாமல் இருந்தால் அதுவே போதுமானது. “நான் வேறு; என் மனம் வேறு என்றா கூறுகிறீர்கள்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம், நீங்கள் வேறு; உங்கள் மனம் வேறுதான். நீங்கள் உங்கள் மனதை தனியே பிரித்து நிறுத்தி அதனிடம் அன்பு காட்டுங்கள்; அதன் சொற்படி கேளுங்கள். உங்கள் சொற்படி நடக்கும்படி மனதிடம் ஆணையிடாதீர்கள். மனம் பளிங்கு போல் தூய்மையானது. எல்லையற்ற ஆற்றல்கள் நிரம்பியது. ஆக்கபூர்வ சக்திகள் ஏராளமாய் கொண்டது. அதன் போக்கில் உங்கள் உடம்பு இயங்கினால் போதும். வெற்றிகளைக் குவிக்கலாம். “மனமும் உடலும் இணைந்து செல்கின்ற வாழ்க்கையே முழு வாழ்க்கை ஆகின்றது” என்கின்றார் சுவாமி பஜனானந்தர்.

பேயாய் உழலும் சிறுமனே
பேணாயென் கொல் இன்றுமுதல்
நீயாய் ஒன்றும் யானோகான்
தாயாம் சக்தி தாளினிலும்
தரும்மென யான் குறிப்பதிலும்
ஓயாதே நின்று உழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்

என்று மனதிடம் பேசுகிறான் பாரதி. நமது இச்சை, நமது ஆவல், நமது ஆசை, நமது பேராசை இவற்றால் பளிங்கு போன்ற மனதை பாழ்படுத்தி விட்டு பிறகு “பேயாய் உழலும் சிறுமனே” என்று புலம்பும் மானிட இயலாமையை தெளிவாய் காட்டுகிறது பாரதி கவிதை.

மனதின் பயணம் எப்போது வெற்றியை நோக்கியே அமைகிறது. மனம் பல நல்ல திட்டங்களை தீட்டுகிறது. முயற்சி, பேச்சாற்றல், குறிக்கோள், செயலூக்கம், சரிவர செயல்படுதல், தாமதமின்மை என்று மனம் பல நல்ல வழிகளை ஆராய்ந்து தெரிவு செய்து உடம்புக்கு கட்டளையிடுகின்றது. அதன்படி செய்தால் போதும்; செயல்பட்டால் போதும்; வெற்றி மேல் வெற்றி வரும். வெற்றி எதற்காக? “வெற்றி என்பதே மகிழ்ச்சியின் உன்னதம். மகிழ்ச்சி என்பது உல்லாசத்தில் இல்லை; வெற்றிகள் கடினமானவையே. ‘The best things are the most difficult” என்றார் தெல்மா தாம்ப்ஸன் என்ற அறிஞர். மனம் என்ற குதிரை தன்போக்கில் பயணிக்கட்டும். குறுக்கிட வேண்டாம். வெற்றி தானே வீடுதேடி வரும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்