Home » Articles » கேள்வி – பதில்

 
கேள்வி – பதில்


பாலசுப்ரமணியம்
Author:

ஒருவர் முதலாளி ஆகி மாதம் 2 லட்சம் (Or) 5 லட்சம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் அடுத்து வரும் அதிக வருமானத்தை தனக்கு கீழ் உள்ள அடுத்தவருக்கு விட்டுக்கொடுத்தால் சமுதாயத்தில் பொருளாதாரத்தை சமமாகப் பரவச் செய்ய இயலும். அதைவிடுத்து ஒருவரே பிரமாண்ட கோடீஸ்வரர் ஆக முயல்வது ஏன்?
-ப. உதயகுமார், கணபதி


முயற்சிக்கேற்ற முன்னேற்றம் என்ற தத்துவத்திற்கும், ஓரிடத்தில் மட்டுமே சொத்துடமை குவிந்துவிடக்கூடாது என்கிற தத்துவத்திற்கும், இருப்பவன் இல்லாதவனுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிற தத்துவத்திற்கும் நிகழ்ந்து வரும் இழுபறிதான் இந்தக் கேள்வியின் பின்னணியாகும்.

இவற்றில் எது சரி என்கிற வாதத்தைவிட எது நாட்டுக்கும் மக்களுக்கும் மேம்பாட்டைக் கொண்டு வந்தது என்பதை சான்றுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கவும்.

தனிமனிதர்களின் தொழில் வளர்ச்சிதான் ஒரு நாட்டுக்கும் மக்களுக்கும் உயர்வினைத் தந்து கொண்டிருக்கிறது என்ற உண்மை புரியும்.

ஒரு நாட்டு மக்களுக்கு அதிகம் வேலைவாயப்பை உருவாக்கியது யார்? தனியார் துறையா? அரசாங்கமா?

ஒரு நகரம் என்று இருப்பது – தனியார் துறையின் கட்டிடங்கள்தானே.

ஒரு நாட்டின் மக்கள் தொகையில் 10% விகிதத்திற்கும் குறைவான தொழில் முனைவர்களே அந்த நாட்டின் 90% வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளனர்.

தனி மனிதர்களின் முயற்சியில்லாமல் ஒரு நாடு செழிப்புற்று இயங்க முடியாது.

ஒரு தொழிலைத் தொடங்கி வெற்றி பெற்று கோடீஸ்வரராகுவது என்பது சரியான காரியமல்ல.

தொழில் அறிவு, முதலீடு, திட்டமிடல், முடிவெடுக்கும் திறன், நிர்வாகத்திறன், நீண்டநேர உழைப்பு, மன உளைச்சல், குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்க முடியாமை இவற்றோடு இத்தனை முயற்சிகளுக்குப் பின்னரும் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லாமை, தோற்றுவிட்டால் கடன்காரனாகி குடும்பமே அல்லல்படும் துன்பத்துக்குள்ளாகும் கொடுமை போன்ற தொடக்க கால சிக்கல்கள, சவால்களைத் தாண்டித்தான் வெற்றி பெறமுடியும்.

இவ்வளவு சிரமப்பட்டு, தியாகம் செய்து, போராடி பெற்ற வெற்றியை அவர்கள் முழுமையாக அனுபவிக்கக் கூடாது, மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது உங்களுடைய கருத்தாகும் . வெற்றியாளர்களிடம் பங்கு கேட்கும் நீங்கள் தோல்வி பெற்று கடன்காரனாக அல்லல்படுபவர்களை மறந்துவிட்டீர்களே!

ஒரு சிலர் மட்டும் ஏகபோகமாக, வாழ்வதா மற்றெல்லோரும் வறுமையில் வாடுவதா என்ற கடந்த கால வீரவசனத்தை இன்று நாகரீகமாக அழகு தமிழில் அடக்கமாகக் கேட்டிருக்கிறீர்கள். பானை புதியதுதான். ஆனால் உள்ளே இருக்கும் கள் பழையதுதான். மொழி மாறியிருக்கிறது. ஆனால் புத்தி மட்டும் மாறவில்லை.

உங்கள் கூற்றுப்படி பார்த்தால், இந்த உலகத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் பணம் உள்ளது போலவும், இதைத்தான் எல்லோரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது போல் இருக்கிறது. இது உங்கள் அறியாமையைக் காட்டுகிறது.

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பணத்தின் எண்ணிக்கையா இன்னும் பழக்கத்தில் உள்ளது? நாட்டு வளர்ச்சிக்கேற்ப, தேவைக்கேற்ப, புதிய கரன்சி நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நினைவில் கொள்ளுங்கள். இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் பணத்தின் அளவு கூடிவிடும். வளர்ச்சியும் – தேவையும் மட்டுமே பணபுழக்கத்தை நிர்ணயம் செய்கின்றன.

எவ்வளவுக் கெவ்வளவு தனிமனித முன்னேற்றம் ஏற்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு பணத்தின் அளவும் கூடிவிடும். குறையாது.

இந்த வளர்ச்சியைத்தான் உங்கள் கேள்வி முடக்கப் பார்க்கிறது.

தனி மனிதர்கள் கோடீஸ்வரர்களாக ஆகியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஈட்டிய பணத்தை, வாழுகின்ற வீட்டை, பயன்படுத்துகிற வாகனத்தை, அனுபவிக்கின்ற உல்லாசங்களை மட்டும் பார்க்காதீர்கள்.

அவர்கள் முயற்சியில் இயங்கும் தொழிற்சாலைகளையும் வணிகங்களையும் அவற்றை மையமாகக் கொண்டு தொழில் செய்யும் சிறு வணிகர்களும், பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள், அதனால் உயிர் வாழும் பல குடும்பங்கள், பல இலட்சம் குழந்தைகளின் கல்வி வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

இத்தகையோர்தான் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறைக்கும் வேலை வாய்ப்பு வழங்கி வாழவைக்கப் போகும் வணக்கத்துக்குரியவர்கள் ஆவார்கள்.

முயற்சியும், திறமையும் உள்ளவர்களின் உயர்வில் தான் நாடும் மக்களும் வளம் பெற்று வாழ முடியும்.

இச்சாதனை மனிதர்களுக்கு எல்லைக் கோடிட்டு அவர்களின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்காதீர்கள்.

இவர்களின் ஊக்கத்துக்கு தூக்க மாத்திரை கொடுத்து விடாதீர்கள்.

இயற்கை மனிதனுக்கு வழங்கிய படைப்பாற்றலுக்கு படையல் போட்டு விடாதீர்கள்.

இருப்பவரிடம் இருந்து பிடுங்கி இல்லாதவனுக்குக் கொடுக்கும் காலத் தேவையை நாம் தாண்டிவிட்டோம்.

முயற்சிக்குரிய முன்னேற்றத்திற்கு வழியுள்ள காலத்தில் வாழ்கிறோம்.

வெற்றியாளரின் வரிசையில் நீங்கள் வந்து நிற்க வேண்டும். உங்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்புகள் பெற்று, வளமோடு வாழவேண்டும். இந்த முயற்சியில் உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள். உங்களால் முடியும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்