Home » Articles » வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!

 
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!


admin
Author:

தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய மண்ணில் பிறந்து , உலகம் போற்றும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்து நோபெல் பரிசு பெற்றவர் சர்.சி.வி. ராமன். அவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதியைத் தான் 1987ம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம்.

1888 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி இந்திய அறிவியல் வானில்தோன்றிய விடிவெள்ளி சர்.சி.வி.ராமன் தமிழகத்து மண்ணில் பிறந்து அறிவியல் துறையில் நோபெல் பரிசு பெற்ற அவரின் கண்டுபிடிப்பான ‘ராமன் நிறத்தோற்றம் அறிவியல் துறையின் அடிப்படையாக விளங்குகிறது. சர்.சி.வி. ராமனின் நுண்ணறிவையும், திறமையையும் ஆராய்ச்சிகளின்சிறப்பையும் உண்ந்து 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்திகு அருகில் உள்ள மாங்குடி என்ற ஊரில் சந்திரசேகரய்யர், பார்வதி அம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் சர்.சி.வி. ராமன். பெற்றோர் இட்ட பெயர் வெங்கட்ராம். இளம் பருவத்திலேயே வெங்கட்ராமன் கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் திறமையோடு விளங்கினார். 1917- முதல் 1933 வரை பேராசிரியர் பதவி வகித்த ராமன் 1933 புமங் 10 ஆண்டுகள் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவன இயக்குனராக பணியாற்றினார்.

1943 ஆம் ஆண்டு தமது பெயரில் பெங்களூரில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். 1948-இல் அவ் தேசியப் பேராசிரியர் ஆனார். அவருக்கு கிடைத்த விருதுகளும், பதவிகளும் பலப்பல. 1954-இல் நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத் ரத்னா’ விருதும், 1957-இல் ‘சர்வதேச லெனின் விருதும்’ அவருக்கு வழங்கப்பட்டன. உலகம் போற்றும் மேதையாக விளங்கிய சர்.சி.வி. ராமன் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி தமது 82 வயதில் காலமானார்.

சர்.சி.வி.இராமனைப் போன்றே இந்திய அறிவியலாளர்கள் எஸ். சந்திரசேகர் மற்றும் ஹர்கோவிந்த குரானா ஆகியோர் நோபெல் பரிசு பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த கணித மேதை ராமானுஜம், உலகப் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீனுடன் ஆராய்ச்சி மேற்கொண்ட எஸ்.என். போஸ் தாவரவியல் அறிஞர் சகானி, இயற்பியலார் மேகநாத் சஹா, ஆரியப்பட்டாவை விண்ணில் பறக்க வைத்த விக்ரம் சாராபாய், புவியியலார் எம்.எஸ். கிருஷ்ணன்,ஹோமிபாபா, அணு விஞ்ஞானி அப்துல் கலாம் வேளாண் விஞ்ஞானி அப்துல் கலாம் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் முதலியோர் இந்தியாவை உலக அறிவியல் அரங்கில் வெளிச்சம் போட்டுக் காட்டிய மாமேதைகள்.

அருப்பெரும் விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகளால் உலகம் வேகமாக மாறி வருகிறது. அவர்கள் சந்தித்த சோதனைகளும், அடைந்த சாதனைகளும் வார்தைகளில் கண்டுபிடிப்புகளால் நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகாராஜாக்கள், மகாராணிகள் கூட வாழாத சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இயற்கையில் இயல்பாய் தோன்றும் மாற்றங்கள் சில. மனிதனின் அறிவுக் கூர்மையினாலும், விடாமுயற்சியினாலும் உருவாக்கப்படும் மாற்றங்கள் பல. மனிதனின் அறிவுத்திறன் பெருகப் பெருக இயற்கையின் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு புதிய கண்டுபிடிப்புகளும் அறிவியல் உண்மைகளும்மலர்ந்த்உ கொண்டே இருக்கின்றன. மனிதனின் முடிவில்லாத முயற்சியின் காரணமாக அன்று மண்ணை அளந்தவன் இன்று விண்ணை அளக்கிறான். ஞானம் முதிர்ந்தது. விஞ்ஞானம் கனிந்தது.

அறிவியல்என்பது முறைப்படுத்தப்பட்ட அறிவு. ஒன்றைப் பற்றி தொகுத்தும், பகுத்தும், முறைபடுத்தியும் தருகின்றபோது அது அறிவியலாகிறது. சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஏன்? எதற்கு? எப்படிழ என்று கேள்விகள் கேட்டு உண்மையை அறிய முற்படுவதே அறிவியல்.

எந்த ஒரு நாகரிகத்துக்கும் அடிப்படை அறிவியலே. மனிதனுக்கு சிந்தனா சக்தி வளரவில்லை என்று கருதப்பட்ட காலத்தில் கூட வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக்கொள்ள அறிவயிலை பயன்படுதினான். கற்களை பலமாக வீசி மிருகத்தை காயப்படுத்தி அதனை நகர முடியாமல் செய்தான். பின்னர் கற்களை கூர்மையாக்கி தாக்கும் சக்தியை அதிகப்படுத்தினான். இப்படி கற்கால மனிதன் காலத்திலிருந்தே ஒவ்வொரு கால கட்டத்திலும் அறிவியல் நம் வாழ்வோடு இணைந்தே வந்திருக்கிறது.

‘பாலைவனம் சோலைவனமாக வேண்டும். பசுங்கிளிகள் அங்கிருந்து பாட வேண்டும்” என்று கனவு க்ண்டான் பாட்டுக்கொரு புலவன் பாரதி. அவன் கனவு நனவாக மாறுவதற்கு அடிப்படை அறிவியல் தொழில்நுட்பம்தான். ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டியும், ஒற்றையடிப் பாதையாகவும் இல்லாத கிராமங்களுக்கு தார் சாலை வசிதிகளைத் தந்தும், எண்ணெய் விளக்கு கூட எரிய வழியில்லாதிருந்த கிராமங்களில் மின்விளக்கை எரியச் செய்தும் மக்கள் வாழ்வை வளப்படுத்தியது அறிவியல்.

‘அடுப்பூதும் பெண்கள்’ என்ற சொற்றொடர் அர்த்தமற்றதாகி விட்டது. அம்மிக் கல்லும் ஆட்டுக்கல்லும் அருங்காட்சியகத்தில் பார்க்க வேண்டியநிலை. திரையரங்கிற்கு வெளியே காத்திருந்து படம் பார்த்தவர்கள் படுக்கை அறையில் சொகுசாகப் பார்க்கிறார்கள். பொதிகைத் தென்றலும், உதகைக் குளுமையும் நாமிருக்கும் அறைக்கே வந்து விடுகின்ற. கருப்பையில் வளர வேண்டிய குழந்தை சோதனைக்குழாய்களில் வளர்கிறது.

மக்கள் தொகைப்பெருக்கத்தால் உலகில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் என்ற மால்தஸின் கூற்றை பசுமைப்புரட்சி பொய்யாக்கிவிட்டது. விவசாயம், மருத்துவம், போக்குவரத்து , தகவல்தொடர்பு என்று அனைத்துத்துறையிலும் அறிவியல் கால்பதித்துள்ளது. தேனிலவுக்கு சுற்றுலா மையங்களுக்கு செல்லும் புதுமணத் தம்பதிகள் அந்த நிலவுக்கே செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இன்று விதவிதமான மின் உபகரணங்கள் சிறிய மின்னியல் டேப் ரிகார்டர்கள், காமிரா அலைபேசிகள், மடிக் கம்ப்யூட்டர்கள், பென் டிரைவ், எம்பி3, எம்பி4 மின் இசைக்கருவிகள் மூன்றாம் தலைமுறை அலைபேசிகள் எனப்படும் 3G அலைபேசிகள் என்று புதுப்புது வடிவில் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன.

அறிவியல் யுகத்தில் புதிதாக அவரதாரம் எடுத்திருப்பது மரபணு மாற்றம், ஓர் உயிரிலிருந்து மரபணுக்களை பிரித்தெடுத்து வேறொரு உயிரிக்குச் செலுத்தி புதிய குணாதிசயங்களை உருவாக்கும் முயற்சிதான் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்பது மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் வகைதான் பி.டி. ரக நெல்.

அறிவியலின் அடுத்த பரிமாணம் குளோனிங் எனப்படும் படியாக்கம். மனிதன் முதலில் உயிரினங்களை வேட்டையாடி அழிப்பதில் தனது வாழ்க்கையைத் தொடங்கினான். தற்போது குளோனிங் என்ற அறிவியல் தொழில்நுட்ப உதவியோடு உயிர்களை படைப்பதில் ஈடுபட்டு வருகிறான்.

அறிவியலுக்கு ஓர் எல்லை உண்டு. இயற்கையின் பல நியதிகளை, பௌதீக விதிகளை அறிவியல் அடையாளம் காட்டலாம். இயற்கையின் இரகசியங்களை, முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டலாம். ஆனாலும் இயற்கைக்கு நிகராக எதுவுமில்லை. விரல் நகம் ஆரஞ்சு பழத்தின்தோலை உரிக்கிறது. உள்ளே இருக்கும் சுளையை எடுத்துத் தருகிறது. என்றாலும் விரல் நகமே பழச்சுளையாகி விடாது. அதுபோல அறிவியல் இயற்கையை அறிந்து கொள்ள துணை நிற்குமே அன்றி அதுவே இயற்கையாகி விடாது.

இயற்கையின் உற்பத்தி நிலை வேறு. மனிதன் கண்டுபிடித்த விஞ்ஞான உற்பத்திகளின் நிலை வேறு. எடுத்துக்காட்டாக – ‘பஞ்சு’ என்று ஒரு மூலப்பொருள். அதை நூற்றால் நூலாகும். நூலை நெய்தால் ஆடையாகும். ஆடையைக் கிழித்தால் கந்தலாகும். ஆனால் பஞ்சு மறுபடியும் கிடைக்காது. ஒரு மூலப்பொருள் பல்வேறு உதற்பத்தி நிலைகளைக் கடந்து தயாரிக்கப்பட்ட பொருளாகும்போது அதன் துணைப்பொருளாக அதே மூலப்பொருள் மறுபடியும் கிடைக்காது. இதுதான் மனித உற்பத்தியின் நிலை.

இயற்கையின் உற்பத்தியைப் பாருங்கள். ஒரு மாம்பழத்தைத் தின்று, மாங்கொட்டையை வீசி எறிகிறோம். அது மண்ணில் புதைந்து முளைவிட்டு, செடியாகி, மரமாகி, பூவாகி பிஞ்சாகி, காயாகி, கனியான பின்பும் அதன் உள்ளே ஒரு மாங்கொட்டை – மூலப்பொருள்- இருக்கும். உற்பத்தியான ஒரு பொருளின் ஒரு பகுதியாகவே, அதன் மறு உற்பத்திக்கு உரிய மூலப் பொருளும் கிடைப்பது இயற்கையின் உற்பத்தி நிலை.

எனினும் அறிவியலின் உயர்வை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அது சாதித்த அற்புதங்களை யாரும் மறுக்க முடியாது. இயற்கை எனும் மாமன்னரின் ஆற்றல் மிக்க தளபதி அறிவியல் என்று கூறலாம்.

அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும். நாம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவியல் மனப்பான்மை என்பது ஏன்? எதற்கு? எப்படி? என்று எதையும் சோதித்துப் பார்ப்பது, எந்த ஒன்றைஉம் அப்படியே நம்பி விடாமல் கேள்விக்கு உட்படுத்துவது. ஒரு பிரச்சனை ஏற்படும்போது யாராவது தீர்த்து வைக்க மாட்டார்களா என்று எண்ணாமல் பிரச்சனையைத் தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றி யோசிப்பது முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வராமல் உள்ளதை உள்ளவாறு புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு மனப்பான்மை.

சிறுவர்களைக் கவர்ந்திழுக்கும் மாயாஜாலம் கூட மனதிற்கு மகிழ்ச்சி தரும் அறிவியலே. ஒவ்வொரு தந்திரக் காட்சிக்கும் பின்னால் அறிவியல் உண்மை மறைந்துள்ளது. அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இது விளக்கப்படுவதுபோல மாயாஜால நிகழ்ச்சியில் விளக்கப்படுவதில்லை. அவ்வளவுதான்.

ஆக்கத்திற்கும் வழிவகுக்கும் அறிவியல் அழிவிற்கும் துணைபோகின்றது. 1945ல் ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட போது 2 லட்சம் பேர் உயிரிழந்தார்கள். போபால் நகரில் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு ஏற்பட்ட வாயுக்கசிவு ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டது. அறிவியல் புதுமைகளாக விளங்கி நமது அன்றாட பயன்பாட்டுக்கு ஒவ்வொரு கணமும் உதவி, உலகத்தையே நமது உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணுக் கருவிகளுக்குள்ளே மறைந்து கிடக்கும் அபாக்கரமான நச்சுப்பொருட்களைப் பற்றி அறியும்போது நடுக்கமாக உள்ளது.

எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் நன்மையும் தீமையும் சேர்ந்தே இருக்கும். அதற்காக அறிவியல் முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது தவறு. அணுசகதியால் பாதிப்புக்கு உள்ளான ஜப்பான் அதே அணுசக்தியால் முன்னேற்றம் கண்டுள்ளது வரலாறு காட்டும் உண்மை.
அறிந்து கொள்ள விரும்புவதும், அறிந்ததை பயன்படுத்துவதும் வேறு வேறு. அறிந்தவற்றில் தீமை இருக்கிறது என்பதற்காக அறிந்து கொள்வதை நிறுத்தக்கூடாது. அறிவியல் கற்பிக்கப்படும்போது அதில் அறமும் சேர்த்துக் கற்பிக்கப்பட வேண்டும். அறிவியல் ஒரு கருவி அறமே வாழ்க்கை நெறி, நல்வாழ்வே குறிக்கோள் என்பது உண்மையாக்கப்பட வேண்டும். மனித நேயம் கலக்காத அறிவியல் மனித குலத்தை சீரழித்துவிடும்.

அறிவியல் மன்ப்பான்மையை வளர்க்கும் வகையில் மத்திய அரசு 2004ம் ஆண்டை அறிவியல் விழிப்புணர்வு ஆண்டாகவும், 2005ம் ஆண்டை இயற்பியல் ஆண்டாகவும் அறிவித்தது. அறிவியல் மன்ப்பான்மையுடன் வாழப் பழகிவிட்டால், பல தீமைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். வாழ்க்கையில் தோன்றும் பல சிக்கல்கள் எளிதில் தீர்ந்து வாழ்வு வளமாகும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்