Home » Articles » மகிழ்ந்து குலாவிய மாமனிதர்

 
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்


தியாகராசன் தூசி
Author:

பொதுவாக பேராசிரியர்கள் எப்போதும் மாணவர்களுடன் நெருக்கமாகவும், சகஜமாகவும் இருப்பதை விரும்பமாட்டார்கள். ஏனென்றால், மாணவர்களுடன் சகஜமாகப் பழகினால் அவர்கள் எல்லை மீறுவார்கள்; தன்னைப் பற்றித் தவறாகக் கருதுவார்கள் என்ற எண்ணம் அவர்களுடைய மனதிலே குடியிருக்கும். ஆனால்…

அய்யா இல.செ. கந்தசாமி அவர்கள் இதற்கு விதிவிலக்கு. அவர் அலுவலக அறைக்குள் இருந்தாலும், வகுப்பில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும், மாணவர்கள் அவரை மொய்த்துக் கொண்டே இருப்பார்கள்.

சிலர் பாடத்திலே ஐயப்பாடுகளைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். சிலர் தாம் எழுதிய கவிதைகளை அவரிடம் வாசித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் தமது மனத்துயரங்களைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பார்கள். சிலர், சமூக அவலங்களை கொதிப்போடு கூறிக் கொண்டிருப்பார்கள். சிலர், அவர் நடத்திய பாடங்களிலேயே குற்றும் கண்டுபிடிப்பதாகக் கூறி, தமது மேதாவித்தனத்தைக் காட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அத்தனை பேருடைய பேச்சுக்களையும், பொறுமையாகக் கேட்டு அவரவர் கருத்துக்கு ஏற்ற பதிலுரைகளைக் கொடுத்து, அவர்களது மனம் புண்படாத வகையில் மறுப்புரைகளைத் தெரிவித்து, மாணவர்களை வசீகரம் செய்து விடுவார், அந்தப் புன்னகை மன்னர்.

அவரது முதல் வகுப்பில், கேலியும் கிண்டலும் செய்த மாணவர்கள், அவரது மூன்றாம் வகுப்பில் மகுடி நாதத்தில் மயங்கிய நாகம் போல் அடங்கி விடுவர். கோபமாகப் பேசும் மாணவர்களைக் கூட, தனது நகைச்சுவை மிக்க பதில்களால் சிரிக்க வைத்துவிடுவார்.

ஒரு முறை என்னுடைய வகுப்புத் தோழர் வசந்தகுமார் (இப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்) என்பவர், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை பற்றிக் கூறுவதற்காக, வகுப்பில் எழுந்து, “அய்யா, எப்போதும் எங்கள் கண்களுக்கும இந்த இடைவெளியே” தெரிவதால் தான் எங்களைப் போன்ற இளைஞர்களுக்குப் பிரச்சனை அதிகமாகிறது. சரியாக பாடத்தை முழுமையாகப் படிக்க முடிவதில்லை” என்று கோபத்தோடு சொன்னார். அதற்கு அய்யா அவர்கள், குறும்பு கலந்த நகைச்சுவையோடு “ஆமாம், ஆமாம். அந்த ‘இடை’ வெளியே தெரிவதால்தான் இளைஞர்களுக்குப் பிரச்சனை அதிகமாகிறது படிப்பது சிரமந்தான்” என்று சிலேடையாகப் போட்டார் ஒரு போடு!

வகுப்பறையே சிரிப்பில் ஐந்து நிமிடம் அதிர்ந்தது. என் நண்பர், கோபமெல்லாம் மறந்து, அவரிடம் சொக்ககிப் போனார்.

இன்னொரு முறை, அவருடைய ‘இலக்கியத்தில் வேளாண்மை’ என்று பாடத்தில் மூழ்கித்திளைத்த மாணவர்களில் பொன்னுசாமி, K.A. (இவர் வேளாண் பல்கலைக்கழக வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பேராசிரியராக இருக்கிறார்) என்பவர், “அய்யா, உங்களைக் கண்டால் நாங்களெல்லோரும் நிலவு கண்ட கமலம் போல் மயங்கி விடுகிறோம்” என்றார். அதற்கு அய்யா அவர்கள், நீங்களோ நிலவு கண்ட கமலம் என்கிறீர்கள். ஆனால் நானோ, கமலம் கண்ட நிலவு” என்றார். உட்கருத்து புரியாமல், ‘அய்யா, கொஞ்சம் விளக்கம் தேவை’ என்றார் பொன்னுசாமி.

அய்யா சிரித்துக்கொண்டே, “நீங்கள் என்னை நிலவு என்று சொல்லிவிட்டீர்கள். எனது துணையியாரின் பெயர் கமலம். அப்படியானால் நான், கமலம் கண்ட நிலவு தானே?” என்றாரே பார்க்கலாம்! அவரது சொல்நயத்தை ரசித்து மாணவர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர் இது இன்னும் என் காதுக்குள் ஒலிக்கிறது.

“என்னங்க அய்யா, இப்படியெல்லாம் வித்தியாசம் பாராமல், மாணவர்களிடம் பழகி வருகிறீர்களே? உங்க இமேஜ் என்னாகும்?” என்று கேட்டால், அவர் சொல்லும் பதில் இதுதான்.

“நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களிடம், மனம் விட்டுப் பேசும் போதுதான், நாட்டு நடப்பு நமக்குப் புரிகிறது. இளைஞர்களின் இன்றைய நிலை என்ன? அவர்களது எதிர்ப்பார்ப்புகள் என்ன? தடையாக உள்ள காரணிகள் எவை? அவற்றை உடைத்து, அவர்களை எப்படி முன்னேற்றலாம்? என்றெல்லாம் நமக்குச் சிந்திக்க முடிகிறது. எனது எண்ணங்களுக்கும், எழுத்துக்களுக்கும் இவர்கள் தான் கருவாக அமைகிறார்கள். எனது இமேஜ் பற்றி அதிகம் கவலைப்படுதில்லை. இளைஞர்களது ‘இமேஜ்’ஜை எப்படி உயர்த்துவது என்றே நாம் அதிகம் சிந்திக்கிறேன். எனது வாழ்நாளுக்குள் ஒரு இலட்சம் இளைஞர்களையாவது நான் சந்திக்க விரும்புகிறேன். அவர்களில் ஒரு ஆயிரம் பேரை உயர்த்தினாலும் அது எனது வெற்றியே”.

இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருகும். இளைஞர்க்கான ‘தன்னம்பிக்கை’ இதழ் எப்படி அவருள்ளே கருக்கொண்டது என்று. மனித நேயத்தோடு மாணவர்களுடன் மகிழ்ந்து குலாவி இருந்தால் அன்றோ, அந்த மாமனிதரின் மனக்கடலில் முகிழ்த்து இந்த முத்து!

கண்ணை மூடிக் கட்டிலிற் சாய்ந்து எண்ணும் போதே இன்பம் பயக்கும் இதுபோன்ற இன்னும் பல சுவையான நிகழ்ச்சிகளை வரும் இதழ்களில் பகிர்ந்து கொள்வோம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்