Home » Articles » தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்

 
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்


திருவள்ளுவர் ம
Author:

“ஆள்” – என்னும் தமிழ்ச் சொல்லின் அழகை உணர்ந்திருக்கிறீர்களா? “ஆள்” என்பது அழைப்பா? அல்லது ஆணையா?. “ஆள்” என்னும் சொல்லை மனிதனை அழைக்கும் விளிச் சொல்லாகவும் பார்க்கலாம்; அதே நேரத்தில் மனிதனைப் பணிக்கும் கட்டளைச் சொல்லாகவும் பார்க்கலாம்.

வெறும் விளிச் சொல் என்றால் மனிதனைச் சுட்டுவதற்கும் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாறாக அதை ஒரு கட்டளைச் சொல்லாகப் பயன்படுத்தும்போது அதன் பல்வேறு பரிமாணங்களைக் காணமுடிகிறது.

மனிதனை “ஆள்” என்கிறது தமிழ். இந்த ஒரு சொல்தான் ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவாகவும் இருக்கிறது. இந்தச் சொல்லிருந்து தான் “ஆளுமை” – என்னும் சொல்லும் பிறந்திருக்கிறது. சரி வாருங்கள் – சொல்லின் உள்ளே செல்வோம்.

“ஆள்” என்றால் எதை ஆள்வது? அல்லது யாரை ஆள்வது? பெரும்பாலும் “ஆள்வது” என்றதும் பிறரை – மற்ற மனிதரை ஆள்வதைக் குறிப்பதாகவே நாம் பொருள் கொள்கிறோம். ஆனால் மெய்பொருள் அதுவல்ல!

தன்னைத்தானே ஆளும் கலையே நாம் “ஆளுமை” என்கிறோம். எழுத்தாளர், பேச்சாளர், பொருளாளர் – எனப்படும் சொற்களெல்லாம் – தாம் கையாளும் தமது பேச்சை, தமது எழுத்தை, தம்மிடமுள்ள பொருளை ஆள்பவர் என்னனும் பொருள்களிலேயே பயனபடுத்தப்படுகின்றன. எனவே “தன்னை” ஆள்வதையே இந்த “ஆள்” என்னும் சொல்லும் “ஆளுமை” என்னும் சொல்லும் குறிக்கின்றன. இதை அனைவருக்கும் உணர்த்துவதற்காக நான் கண்டெடுத்த /கடைந்தெடுத்த சொல்லே “தன்னாளுமை” என்னும் உன்னதமான சொல்லாகும். ஆங்கிலத்தில் “Personality” என்னும் சொல் “PERSONA” என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்தது என்பார்கள். “Persona” என்றால் மேடை நடிகர்கள் தமது வேடத்திற்கேற்ப தம்மை வெளிப்படுத்திக்கொள்வதற்கான – புனைந்து கொள்ளும் “முகமூடி” என்று பொருள். முகமூடி இட்டுக் கொள்ளுகிறபோது தாம் ஏற்கும் கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போகும் தன்மையை நடிகர்கள் பெற்று – ரசிகர்களின் பாராட்டையும் பெற்று விடுகிறார்கள். இந்த “பர்சனாலிட்டி” என்னும் சொல் ஒருவரின் நடவடிக்கைகளில் ஒளிரும் ஆளுமையின் அளவீடாகக் கருதப்படுகிறது. இதையே நான் ஒருவரின் தன்னாளுமையின் அளவீடு என்கிறேன். ஒருவர் தன்னைத் தானே ஆளும் தன்மையில் எவ்வளவு தூரம் உன்னதத்தை எட்டியிருக்கிறார்? என்பதையே ஒரு “ஆளின் வளர்ச்சி” என்பது குறிப்பிடுகிறது. இந்த தன்னாளுமை என்பது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. எனவே உலகில் நடைபெறும் செயல்களும் பல்வேறு விதமாய் உள்ளன.

மீண்டும் ஆளுமையை, அலசுவோம். தன்னை ஆள்வது என்றால் என்ன? “தான்” அல்லது “நான்” என்பதை உளவியல் ரீதியாகப் பார்க்கும்போது இரண்டே இரண்டு கூறுகளால் மட்டுமே ஆனது. ஒன்று – பலம்; மற்றொன்று பலவீனம். ஒருவனைப் பகுக்கும் எனது அணுகுமுறை – ஆன்மீகம் சார்ந்தது அல்ல. எனவே நான் உடல், உயிர், மனம், ஆன்மா என்றெல்லாம் இங்கே இப்போது கூறுபோட்டுப் பார்க்கவில்லை.

சரி. “பலம், பலவீனம்” என்னும் இரண்டு கூறுகளால் ஆன “நானை” – நான் ஆள்வது எப்படி? இது நல்ல கேள்வி. பலமென்ன? – பலவீனம் என்னென்ன? எனப் பட்டியலிட்ட பின் பல்வேறு உளவியல் சார்ந்த பயிற்சிகளின் மூலம் நமது பலவீனங்களைக் குறைத்துப் பலத்தைப் பெருக்கிக் கொள்வதே ஆளுமை எனப்படும். தன்னை ஆள்வது என்றால் தனது பலவீனத்தை அல்லது குறைகளைக் குறைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு பாடுபட்டு வெல்வதே ஆகும். அப்படித் தன்னைத்தானே ஆண்டவனாகவும், தனக்குத்தானே ஆண்டவனாகவும் பிற்காலத்தில் மனித குலத்தால் போற்றப்படுகிறான். இத்தகைய தன்மையை எட்டுகிற ஒவ்வொரு தனிமனிதனுமே தனக்குத்தானே ஆண்டவனாக திகழ்கிறான். தன்னைத்தானே (தனது புலன்களையும் – மனதையும்), ஆண்டு கொண்டவன் வேறு யாரிடமும் /யாருக்கும் அடிமையாவதில்லை.

தனக்குத்தானே ஆண்டவனாகவும், தனக்குத் தானே அடிமையாகவும் திகழ்பவன் தன்னை வென்றவனாகிறான். அவன் அனைத்து விலங்குகளிலிருந்தும் விடுபட்டவனாகிறான். இதுவே மானுட அவலங்களிலிருந்து விடுபடும் “விடுதலை” நிலையாகும். நிரந்தர சுகந்தரும் சுதந்திர நிலையும் இதுவே. அப்படிப்பட்ட ஆளுமை கொண்டவர்களிடம் எவ்வித பயமும் இருப்பதில்லை. இவர்களை அதிகாரம் கொண்டு பயமுறுத்தி அடக்கிவிட முடியாது. இவர்கள் சுயமாகவே கட்டுப்பாடு கொண்டவர்கள்- ஏனெனில் இவர்கள் தமது சுயத்தை மதிப்பவர்கள் – ஏனெனில் இவர்கள் சுய சிந்தனை உடையவர்கள்!

சுய சிந்தனையே சுயமதிப்பை வளர்க்கும், சுய மதிப்பே சுய கட்டுப்பாட்டின் வித்தாகும். இந்த மூன்றும் ஒருவனுக்கு வாய்த்துவிட்டால் அது போன்றதொரு “பொது நலன்” வேறு எதுவாக இருக்க முடியும்?

பொதுவான மனிதனை உற்றுநோக்கினால் அவனை இப்படி வரையறுக்கலாம்.

மனிதன் = நிறைகுறை நிறைந்த அரை குறையாவான். சில வரைமுறைகளின் மூலமும், சில வரையறைகளின மூலமும் குறைகளையெல்லாம் படிப்படியாகக் குறைத்து, நிறைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து வந்தால் அரைகுறையாய் இன்று திகழும் ஒவ்வொருவரும் நாளை முழுமையான மனிதர்களாக மலர்வார்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை!

நிறையாய் நிறையும் எதையும் நாம் இறையென்று அழைக்கலாமல்லவா?

தன்னை ஆளாத ஒருவரால் தரணியை ஆள இயலாது என்பதால் வாருங்கள்.. தன்னாளுமை பெற்று மன்னாளும் தகைமையைப் பெறுவோம்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்