Home » Articles » தேசிய இளைஞர் தின சிந்தனைகள்

 
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்


admin
Author:

வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. ‘உலக இளைஞர் ஆண்டு’ உலகெங்கும் கொண்டாடப்பட்ட 1985ம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

விவேகானந்தர் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், தலைசிறந்த தத்துவ மேதை, ஆன்மீகச் செம்மல். அவரது உலகப் புகழ் பெற்ற சிகாகோ சொற்பொழிவு இந்தியர்களின் இறைஉணர்வையும், ஒழுக்க நெறிகளையும் உலகுக்கு எடுத்துக் காட்டியது. அந்த சர்வதேச அனைத்துச் சமய மாநாட்டில் ‘சகோதரர்களே, சகோதரிகளே’ என்று அவர் விளித்துப் பேசியது உலக சரித்திரமாகி விட்ட ஒன்று.

இளைஞர்களின் ஆற்றலை ஆக்கபூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்த வழி காட்டியவர் விவேகானந்தர். அனுபவ முதிர்ச்சி இல்லாதவர்கள் என்று பெரியவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட இளைஞர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.

மடாலயங்களிலும், தவச் சாலைகளிலும் அடங்கியிருந்த வேதாந்தக் கருத்துக்களுக்கு அறிவியல் ரீதியாக விளக்கம் கொடுத்தவர்.

மனவலிமையும், உடல் உரமும் கொண்ட இளைஞர்களால்தான் புதிய இந்தியாவைப் படைக்க முடியும் என்பது அவர் நம்பிக்கை. ‘எனது வீரக் குழந்தைகளே! நீங்கள் மகத்தான் பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்று இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டினார்.

இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாக்க் கூறுகிறார். ‘ஒரு விதையை நிலத்தில் போடுகறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது’. அதுபோல, ‘கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி சொல்கிறார்.

‘அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் இப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால லட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். வயதாகி சலித்துப் போன பிறகு உங்களால் எக்காரியத்தையும் செய்ய முடியாது’ என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

மக்களிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் இன்றைய சமுதாயக் கொடுமைகளுள் ஒன்று. ஒருவன் செல்வத்திலும், சந்தோஷத்திலும் பிறக்கிறான், திளைக்கிறான். மற்றொருவன் வறுமையிலும், துக்கத்திலும் பிறக்கிறான், தவிக்கிறான். ஏன் இந்த நிலை? யார் இதற்குக் காரணம்? கடவுளா? அல்லது மனிதனா? விடை கூறுகிறார் விவேகானந்தர். ஊர் முழுக்க மழை பெய்கிறது. நன்றாக பண்படுத்தப்பட்ட பூமி அதன் முழுப்பயனையும் பெறுகிறது. பண்படுத்தப்படாத பூமி அந்த அளவுக்கு பயனைப் பெறுவதில்லை. அதுபோல கடவுளின் கருணை வெள்ளம் எல்லையற்றது. யாவரிடத்தும் அது பொழிகிறது. வித்தியாசம் நம்மிடம்தான் இருக்கிறது. என்று கூறி அவரவர் செய்யும் செயலின் பலனே ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணம் என்று கூறுகிறார்.

இளைஞர்களுக்கு கல்வியின் பொருள் சொல்லி அதன் தன்மைகளைக் கூறுகிறார். விவேகானந்தர். கல்வி என்பது ஒருவனுடைய மூளையில் பல செய்திகளை திணிப்பதன்று. வெறும் செய்திகளைச் சேகரிப்பதுதான் கல்வி என்றால் புத்தகச் சாலைகள் மகான்களாக மாறியிருக்கும். அகராதிகள் மகிரிஷிகளாக ஆகி இருக்கும். கற்ற கல்வி மற்றவர்களுக்கு உயிர் ஊட்டுவனவாய், ஊக்கம் அளிப்பனவாய் மனிதத் தன்மை தருவனவாய் இருக்க வேண்டும் என்கிறார்.

பெரியோர்களிடம் பணிவு, ஏழைகளிடம் இரக்கம், மனித நேயம், நியாயத்துக்காக போராடும குணம் போன்ற நற்பண்புகளை இளைஞர்கள் நெஞ்சில் உருவாக்கி, “எழுமின்! விழிமின்! உழைமின்!” என்ற இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பியவர் விவேகானந்தர்.

பெறுவதற்கரிய பிறவி மனிதப் பிறவி. நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை எனும் வரம் ஒன்றே ஒன்றுதான். இந்த எண்ணம் எப்போதும் மனதில் இருக்க வேண்டும். நாம் கழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கைப் பாதையை குறைக்கிறது. வயதைக் கூட்டுகிறது. இடைப்பட்ட இக்குறுகிய காலத்தில் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ வேண்டாமா?

நம்மிடம் இரண்டு வகையான எண்ண ஓட்டங்கள் மேலோங்கி நிற்கின்றன. ஒன்று வாழ்வுக்கு உரம் சேர்க்கின்ற எண்ணங்கள், மற்றொன்று வாழ்வை உருக்குலைக்கின்ற எண்ணங்கள. வாழ்வுக்கு உந்து சக்தியைக் கொடுக்கின்ற கொள்கைகளைப் பிடிப்பு, நல்ல குறிக்கோள், தெளிவான சிந்தனை, நம்பிக்கை, சாதனை மனம், நேர்மறைச் சிந்தனை, அடுத்தவர்கள் மீது அன்பு காட்டுதல், உற்சாக மூட்டுதல், பாராட்டுதல் போன்றவற்றை நம்மில் வளர்த்தால் அவை நம்மை வளர்க்கும், நம் வாழ்வை வளப்படுத்தும்.

மாறாக பயம, அவநம்பிக்கை, தோல்வி மனம், தாழ்வு மனம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, பழிச்சொல் போன்றவற்றை வளர்த்தால் அவை நம்மை வீழ்த்திவிடும், வாழ்வை உருக்குலைத்து விடும். இந்த இரண்டு வகையான எண்ணங்களில் எதற்குச் செயல்வடிவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் நம்முடைய வாழ்க்கை வளமாவதும், வீணாவதும்.

சோதனைகள் தந்த சாதனைகள்தான் இம்மண்ணில் ஏராளம். வாழ்க்கை என்பது ஒரு போராட்டம், அது ஒரு கடல், அது ஒரு வேள்வி. விழுப்புண் இல்லாத போர் இல்லை, புயல் இல்லாத கடல் இல்லை. தீ இல்லாத வேள்வி இல்லை. இவை அனைத்தையும் சிரித்த முகத்தோடு ஏற்றுக் கொள்பவர்களுக்குத் துன்பம் இல்லை.

சில மாணவ மாணவியர் தேர்வில் தோல்வி அடைந்தவுடனேயே தங்கள் வாழ்க்கையே பறிபோனதாக எண்ணிச் சோர்ந்து விடுகிறார்கள். தேர்வு என்பது என்ன? ஒரு மாணவன் அல்லது மாணவி ஒரு வகுப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பாடங்களை நன்கு படித்து திறமை பெற்றவராய் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தீர்மானிக்கத்தான். அவர் அந்த வகுப்பில் தோல்வியுற்றவர் என்பதால் வாழ்வதற்கே தகுதியற்றவர் என்று தீர்மானிக்க அல்ல என்பதை உணர வேண்டும்.

அழுது கொண்டிருப்பவர்களை எவரும் மதிப்பதில்லை. கூனிக் கொண்டிருப்பவர்களிடம் நம்பிக்கை என்றும் பிறப்பதில்லை. நம்பிக்கை யாரிடம் குடிக்கொண்டிருக்கிறதோ அவர்களுடைய முகத்தில் புன்சிரிப்பு தவழும். ஓடுகின்ற ஆறு சலசலக்கும், தேங்குகிற குட்டை நாறும். நாற்றம் வீசும் குட்டையாக இல்லாமல் சலசலக்கும் ஓடை போல மனதை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

படிப்பது மட்டுமே தொழில் என்று இளைஞர்கள் நினைப்பது மதியீனம். அதிகாலையில் எழுந்து இறைவனைத் தொழுவதும், பாடங்களைப் படிப்பதும், பெற்றோருக்கு இயன்றவரை உதவி செய்வதும், பள்ளி கல்லூரிகட்கு ஒழுங்காகச் செல்வதும், மாலையில் விளையாடுவதும, ஓய்ந்த நேரங்களில் கலைகளைக் கற்பதும், நல்ல நூல்களைப் படிப்பதும் அன்றாடப் பணிகளாக அமைய வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமையும்.

உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் கனவைச் சொல்லும்போது, உங்கள் வார்த்தைகளில் உயிர் துடிப்பு இருக்க வேண்டும். உங்களின் ஆர்வம் கேட்போரைத் தொட வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாது என்று ஒதுக்க வேண்டாம். “சாத்தியமில்லாதது” என்று எதுவுமேயில்லை.

தன்னம்பிக்கையும் விடாமுயறசியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடாமுயற்சியோடு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். “Never, neer, neer give up’ என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வதுண்டு. வீட்டில் சன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் போல, விடா முயற்சியுடையவர்கள் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவர்.

கனியைக் கொய்யும் வில் வித்தைப் போட்டியில் அர்ச்சுன்னுக்கு மட்டும் மரம் தெரியவில்லை. இலை தெரியவில்லை- கனி மட்டும்தான் தெரிந்தது. அர்ச்சுனனின் கண்களுக்கும் ஆரம்பத்தில் எல்லாம் தெரிந்திருக்கும். ஆனால் ஒன்றன் பின் ஒன்றாக தேவையற்றதை ஒதுக்கிக்கொண்டே வந்த பிறகு, மனத்தில் தெரிந்து கொண்டிருந்தது கண்களுக்கும் தெரிந்தது. விடாமுயற்சி தடைகளைத் தாண்டும் வழியைக் காட்டுகிறது. தன்னம்பிக்கை, இவ்விரண்டின் இணைந்த பயனே வெற்றி.

‘எல்லா வித்துக்களும் முளைப்பதில்லை! அதேபோல எல்லா முயற்சியும் வெல்வதில்லை!’ இயற்கை நமக்குக் கற்றுத் தரும் அரிய பாடம் இது. வாழ்க்கையும் இப்படித்தான். வெற்றிக் கனிகளை நாம் பறிக்க பலமுறை முயற்சிக்க வேண்டியிருக்கும். சில முயற்சிகள் தோல்வியடையும்போது நாம் சோர்ந்து போய் மூலையில் முடங்கிவிடக்கூடாது. அடுத்த முயற்சி மற்றொரு வித்தாக வீரியத்துடன் முளைப்பெடுக்க வேண்டும். வெற்றிக்கு உறுதியோடு முயல்வது முக்கியம்.

முயற்சி என்பது தேவைக்கான தேடல. அந்த முயற்சியை வெளியில் தேட வேண்டியதில்லை. அது நமக்குள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறது. “நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது” என்கிறார் விவேகானந்தர். விதை முளைக்கும்போது உற்றுப் பாருங்கள் விதையை. எந்த நிலையில பூமியில் புதைத்தாலும் வினாக்குறிபோல் முளைவிட்டு சூரியனை நோக்கியே தன்னை முன்னெடுத்துச் செல்லும். இலக்கை நோக்கிய விதையின் முயற்சி அது. அந்த விதையின் முயற்சி மனிதனுக்கும் பொருந்தும்.

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்களே. சலிப்புக்கு இடங்கொடாமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள், “ஒளி படைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சம், களிபடைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவு பெற்றமதி” என்றெல்லாம் முகமன் கூறிய பாரதியின் வார்த்தைகளை இளையபாரதம் மெய்ப்பிக்க வேண்டும். குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.


Share
 

3 Comments

  1. anitha says:

    இளைங்கர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாய் இருந்த ஒரு வழிகாட்டி சுவாமி விவேகனந்தர் … அவரை போன்று ஒரு வழிகாட்டி மட்டும் இன்று இந்தியாவில் இருந்தால் கண்டிப்பாக 2012 ஆம் ஆண்டு இந்திய வல்லரசு நாடாகவும் , சொர்க்க பூமியாகவும் காட்சி அளிக்கும் ….

  2. anitha says:

    இளைங்கர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாய் இருந்த ஒரு வழிகாட்டி சுவாமி விவேகனந்தர் … அவரை போன்று ஒரு வழிகாட்டி மட்டும் இன்று இந்தியாவில் இருந்தால் கண்டிப்பாக 2020 ஆம் ஆண்டு இந்திய வல்லரசு நாடாகவும் , சொர்க்க பூமியாகவும் காட்சி அளிக்கும் ….

  3. kugathas says:

    I wish to u

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்