Home » Cover Story » சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்

 
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்


தங்கராசு ப
Author:

தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம்
நன்மைகள் புரிந்தவர் இல.செ.க.
அவர் உதித்த
இராசிபுரம் மண்ணிலிருந்து
இன்னொரு மனிதநேயம்!

உதவிகளுக்கே உதவி செய்கிற
உன்னதமான உள்ளம் படைத்தவர்
தங்கம் பெயரில் மட்டுமில்லை
குணத்திலும் தான்!
பட்டிக்காட்டில் பயணம் தொடங்கி
பாரத நாடறிய உயர்ந்துள்ள
துணைவேந்தர்
முனைவர் ப. தங்கராசு
அவரோடு இனி நாம்….

சென்னை கால்நடை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உயர்ந்திருக்கின்ற உங்களின் இந்த வெற்றிக்கு காரணமா நீங்கள் கூற விரும்புவது?

நாம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். பெற்ற தாய் தந்தையர் காட்டிய அன்பு, பாசத்தோடு பக்கபலமாக இருந்து நாளும் உற்சாகப்படுத்திக்கொண்டே வந்த நண்பர்களின் நல்ல சிநேகம் இவைதான் என் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. மேலும் கடின உழைப்பு என்னிடம் இருந்தது. அத்துடன் எந்தவொரு நட்பையும் நான் உதாசீனப்படுத்தியதில்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு எல்லோரிடமும் நன்றாக பழகுவேன். இந்தக குணமும் என்னை உயர்த்தியதற்கு காரணமாகச் சொல்லலாம்.

உங்களின் கல்வி/பணிக்காலம் குறித்துச் சொல்லுங்களேன்?

1971ல் சென்னை கால்நடை மருத்துவக கல்லூரியில் B.Sc. முடித்தேன். தேர்வு எழுதிய 120 பேரில் 16 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார்கள். அதில் நானும் ஒருவன்.

அன்றைக்கு கால்நடைத்துறையானது கால்நடை பராமரிப்புத் துறை, கால்நடை ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை என்று இரண்டு அம்சமாக செயல்பட்டது.

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அன்றைய இயக்குநர் பணியில் அமர்த்தினார்கள். முதல் முறையாக மேட்டூர் அணை அருகில் இருக்கக்கூடிய மேச்சேரியில் மேச்சேரி ஆடுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.

ஆராய்ச்சிப் பணியைச் சிறப்பாகச் செய்ததற்காக டெல்லியில் இருக்கக்கூடிய இந்திய வேளாண்மை பல்கலைக்கழக்கத்தின் புள்ளியியல் துறையில் ஆராய்ச்சி செய்து வருவதற்காக அன்றைய இயக்குநர் அனுப்பி வைத்தார்கள். ஓராண்டு மரபியல் துறைசார்ந்து படித்து வந்தேன். அதன் பிறகு கால்நடை மருத்துவக் கல்லூரியில் புள்ளியியல் துறையில் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். அதன் பிறகு முதுநிலை பட்டப்படிப்பு முடித்த பிறகு மரபியல் துறையில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்தேன். பின்பு 1991ல் பேராசிரியராக உயர்வு பெற்று துணைவேந்தரின் தொழில்நுட்ப அலுவலராகவும், மரபியல் துறைபேராசிரியராகவும் அதன் தலைவராகவும் ஓர் ஆண்டும், கால்நடை உற்பத்தி மையத்தின் இயக்குநராக ஓர் ஆண்டும், அதன்பின் 2002ம் ஆண்டு சென்னை கால்நடை பல்கலைக்கழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளும் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்.

உங்களை பாதித்த சம்பவங்கள்?

இப்போதைய நாமக்கல் மாவட்டம், அப்போதைய சேலம் மாவட்டம் சேந்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதித் தேர்வில் முதல் மதிப்பெண் பெற முயன்று படித்தேன். ஆனால் இரண்டு மதிப்பெண்கள் குறைவாக பெற்று இரண்டாவதாக வந்தேன். எனக்குள் இது பாதித்தது என்றாலும் வைராக்கியத்தை அதிகப்படுத்தியது. நம் முயற்சி போதவில்லை இன்னும் வேண்டும் என்று அதிகப்படுத்தினேன். அன்றிலிருந்து உயர்வை நோக்கியப் பயணம் ஆரம்பமானது.

நான் கிராமத்தில் இருந்தபொழுது ஒருநாள் இரவில் நன்றாக இருந்த பசு காலையில் இறந்து கிடந்தது. கிராமத்தில் ஒருவர் வீட்டில் மாடு இறந்துவிட்டால் மனிதர்கள் இறந்துவிட்டால் எப்படிப்பட்ட நிலை இருக்குமோ அதேபோல உறவுக்காரர்கள் மற்றவர்கள் வந்து துக்கம் விசாரிப்பது போன்று அந்த அளவுக்கு மாடு இறப்பு முக்கியத்துவம் பெரும். என்ன காரணத்தால் இறந்தது என்று அன்றைக்கு தெரிவதற்கில்லை. அதற்கான காரணத்தை சென்னை கால்நடை பல்கலைக்கழகத்தில் படித்தபோது ‘ஆந்தராக்ஸ்’ நோயினால் இறந்திருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன். மேலும், என்னுடைய தம்பி, தங்கைகள் பிறந்தபோது கொஞ்சம் பாலுக்காக கஷ்டப்பட்டதை எல்லாம் மறந்துவிட முடியாது.

இப்படி பல்வேறு சம்பவங்கள் என்னை பாதிப்புக்குள்ளாக்கியது. இந்த பாதிப்புகள் தான் என்னை இத்துறையை தேர்ந்தெடுத்து படிக்கத் தூண்டியது. படித்தேன் இளநிலை படிப்பில் முதலாவதாக தேர்ச்சி பெற்றேன். மேலும் நன்றாக படித்து இன்றைக்கு துனைவேந்தர் அளவு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் விடாப்பிடியான, மனம் தளராத போராட்டக் குணமதான். போராட்டக் குணம் இருந்தால் சாதிப்புகள் தொடரும்.

கொஞ்சம் பாலுக்காக மிகவும் கஷ்டப்பட்ட நீங்கள் இன்றைக்கு பால்பண்ணை உற்பத்தியில் மக்களுக்கு பயன்படும் விதமாக கால் நடைத்துறையில் உங்களின் சாதனை என்ன?

கால்நடை பண்ணையின் கஷ்டங்களை மனதில் வைத்துக்கொண்டுதான் என் முதுநிலை பட்டபப்டிப்பை மரபியல் மற்றும் இனப் பெருக்கத்துறை சார்ந்து எடுத்து முடித்தேன். கருவுற்ற முறையில் அதாவது சினை ஊசி போடும் துறையில் சிறந்த பல ஆராய்ச்சிகளை கால்நடைகளின் சிரமங்களை ஆராய்ந்து அதனை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகளை இன்றைக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறேன்.

கொஞ்சம் பாலுக்கே கஷ்டப்பட்ட எங்கள் ஊரில் இன்றைக்கு எந்த நேரமும் பால் கிடைக்குமளவு ஒரு மாற்றத்தை இந்தச் செயற்கை முறை கருவூட்டல் உருவாக்கித் தந்திருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் இந்தச் செயற்கை கருவூட்டல் மூலமாக உலகளவில் பால் உற்பத்தியில் நமது நாடு முதலாவதாக உள்ளது. மேலும் மேலும் இதனை அதிகப்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு மறு மலர்ச்சியை ஏற்படுத்திட வேண்டும்.

அண்டை மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை என்று படிக்கிறோம். காரணம், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். வறட்சி ஏற்படும் போது அன்றாடத் தேவைக்கு கஷ்டப்பட்டு வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். நம் நாட்டில் அப்படியில்லை. காரணம், விவசாயத்துடன் கால்நடைகளை வளர்த்து வறட்சி காலங்களில் அதன் மூலம் பணவரவு பெற்று விடுகிற நிலை இருக்கிறது. இந்நிலை மேலும் நீடித்து பால் உற்பத்தி பண்ணை பெருகிட வேண்டும் என்பது தான் என் அவா.

இன்னும் பிற சாதனைகளாக நீங்கள் சொல்ல விரும்புவது?

நம் தமிழகத்தின் கால்நடை செல்வங்களான காங்கேயம் மாடுகள், உம்பளாச்சேரி மாடுகள், பொலிக்குலம் இனங்கள், பர்கூர் இனங்கள் என்று சொல்லக்கூடிய இவைகளை காப்பதற்காக மத்திய அரசிடம் பல்வேறு திட்டங்களைத் தீட்டி அதன் மூலமாக நிதி ஆதாரங்களைப் பெற்று உம்பளாச்சேரி மாடுகள் அழியாமல் காப்பதற்காக தஞ்சாவூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் ‘விம்லாச்சாரி மாடுகளின் அபிவிருத்தி சங்கம்’ ஒன்றை நிறுவி விவசாயிகளை உறுப்பினர்களாக்கி இந்த இன மாடுகளின் சிறப்பை எடுத்துச் சொல்லி உற்சாகப்படுத்தி அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம்.

அதேபோல, காங்கேயம் மாடுகளை மேலும் வளர்ப்பதற்காக கிராமங்களுக்குச் சென்று பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மேற்கொண்டு ஊக்கத்தொகையாக பண முடிப்பைத் தந்து உற்சாகப்படுத்தி இந்த இன மாடுகள் அழியாமல் பாதுகாப்பதற்கு வழிவகுத்தோம். இப்படி தமிழகத்தின் செல்வங்கள் அழிந்துவிடாமல் பாதுகாத்திட எடுத்த எமது நடவடிக்கைகளை மறக்க முடியாத சாதனையாக கருதுகிறேன்.

மரபியல் துறையில் சிறப்பாக செயல்பட்டு நீங்கள் நிகழ்த்திச் சாதனையாக கூற விரும்புவது?

நமது தமிழகத்து கால்நடை இனங்கள், அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா கால்நடை இனங்கள் என இவைகளை காப்பதற்காக இந்திய அளவில் ஒரு திட்டத்தை வகுத்து அந்த திட்டத்தின் மூலமாக இந்த காளைகளின் மரபியல் தன்மையை அறிவதற்காக ஒரு மத்திய ஆய்வுக் கூடத்தை தென் மருத்துவக் கல்லூரியில் 1996 ஆம் ஆண்டு ஏற்படுத்தினோம். அதில் முக்கிய ஆராய்ச்சியாளராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து இன்று ஆறு கால்நடை இனங்களையும், ஆறு வெள்ளாடு இனங்களையும், ஆறு செம்மறி ஆடு இனங்களையும் மரபியல் தன்மையாக ஆராய்ந்து அதனுடைய மரபியல் கூறுகளை எல்லாம் (DNAM) ஐ சேகரித்து உள்ளோம்.

இதுமட்டும் அல்லாமல் இந்த DNAM ஐ கர்நாடகாவில் உள்ள தேசிய அளவில் இயங்கக்கூடிய ஆய்வுக் கூடத்திலும் சேகரித்து வைத்துள்ளோம். மேலும் அங்கு உறை விந்துவையும் சேகரித்து வைத்துள்ளோம். இவை என் துறைசார்ந்த பணிக்காலத்தின் சாதனைகளாகும்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு துணைவேந்தராக இருந்து இனி வரும் காலங்களில் நீங்கள் செய்யப்போகும் திட்டங்கள் குறித்து சொல்லுங்களேன்…

உலக மயமாக்குதல், உலக தாராள மயமாக்குதல், மூலமாக பெரும் மாற்றங்களை சந்திக்க இருக்கிறோம்.

அதன் மூலமாக நமது நாட்டின் தொழில் நுட்பங்களை எல்லாம் வளர்த்து மேலும் வளர பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.

எந்தவொரு நாடும், எந்தவொரு நிறுவனமும் நன்றாக வளரவேண்டுமானால் அதன் உள்கட்டமைப்பு நன்றாக இருக்க வேண்டும்.

உள்கட்டமைப்புகள் மிகவும் சிறந்து விளங்குகிற நாடுகள் வளர்ந்த நாடுகளாகி இருக்கின்றன. அந்த உள்கட்டமைப்பு நாம் சிறந்த முறையில் உருவாக்கி விட்டோமேயானால் அதில் வேலை செய்யக்கூடிய ஆராய்ச்சியாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும், எந்தவொரு தடங்களும் நேராமல் சிறப்பாக பணிமுடிக்க ஏதுவாக இருக்கும். அதனால் உள்கட்டமைப்பை சிறப்பாக்க முயற்சிகள் எடுத்து வருகிறேன்.

பல்கலைக்கழத்தில் பணியாற்றக்கூடிய ஆராய்ச்சியாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் மற்றும் பிற ஊழியர்ளுக்கம் பணியை சிறப்பாக செய்துமுடிக்க பல்வேறு வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சி எடுத்துவருகிறேன்.

மேலும் இந்தப் பல்கலைக்கழகத்தை உலகளவில் சிறந்ததாக மாற்ற மத்திய அரசின் உதவியுடன் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறேன்.

அத்தோடு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அங்குள்ள சிறப்பான அம்சங்களை கற்றுவருவதற்கும், அதேபோல் அங்குள்ள மாணவர்கள் நம் நாட்டின் சிறப்புகள், கால்நடைகளின் நோய்கள் முதலியவறைத் தெரிந்துகொள்வதற்கும் வழிவகை செய்து கொடுப்பதோடு – வெப்பம், குளிர் பிரதேசங்களில் உள்ள கால்நடைகளின் பல்வேறு அம்சங்களை அறிந்து அதன் மூலம் புதிது புதிதாக ஆராய்ச்சிகளை மேறகொள்ள ஆராய்ச்சியாளர்களை அதிகம் உருவாக்கிடவும் ஏற்பாடு செய்து வருகிறேன்.

இந்த ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு நோய் சார்ந்தும் சிறந்த வல்லுநர்களாக உருவாக வேண்டும். பொதுவான ஆராய்ச்சியாளர்களாக இல்லாமல் ஒன்றைச் சார்ந்து அதில் உயர்ந்தவர்களாக வரவேண்டும். அவ்வாறு வருகின்ற பொழுது கால்நடைகளின் நோய்களைக் கண்டறிந்து அதை குணப்படுத்தி “கால்நடை பராமரிப்பில்” நாம் சிறந்து விளங்க முடியும் என நம்பி என் திட்டங்களை தீட்டி வருகிறேன்.

தமிழர் திருநாள் வாழ்த்தாக தாங்கள் சொல்ல விரும்புவது என்ன?

தமிழர் திருநாள் என்றால் அது மாட்டுப் பொங்கல்தான். தமிழர் பண்பாட்டின் சிகரமான விழா. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்கின்ற மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்ற விழா. பிறருக்காக வாழ வேண்டும் என்று மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விழா. உழைப்பின் உற்சவம் இந்த விழா. ஆண்டு முழுவதும் உழைக்கின்ற கால்நடைகளுக்குக் கிடைக்கின்ற ஒரே விடுமுறைநாள் இந்தப் பொங்கல் திருநாள் தான். இனி வருங்காலமெல்லாம் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு வசந்த காலமாகவே இருந்திட வேண்டும். பதினோறாவது திட்டத்தில் வேளாண்மை கால்நடை வளர்ப்புக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கவுள்ளது. இனி வரும் நாளில் உணவுத்துறை மிகுந்த முக்கியத்துவம்பெற இருக்கிறது. அதில் கால்நடைகளின் பங்கே மிகுதியாக இருக்கும். இந்தப் பொங்கல் நாளில் தமிழர்கள் வாழ்வு செழிக்க வாழ்த்துகிறேன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்