Home » Articles » மேலே மேலே…..

 
மேலே மேலே…..


கந்தசாமி இல.செ
Author:

ஒவ்வொருவரும் தங்களது முன்னைய நிலையிலிருந்து ஒருபடி, பலபடி, மிகப் பல படிகள் பொருளாலும், புகழாலும், பதவியாலும், பல்வேறு வகையாலும் உயர்ந்து நிற்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அந்த உயர்வையும் நிலையான உயர்வாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும், அவசரமும் ஒவ்வொருவர் வாழ்விலும் வெளிப்படையாகவே காணப்படுகிறது. இந்த ஆர்வத்தையும் வேகத்தையும் யாரும் தவறாகக் கருதுவதில்லை. ஆனால் அவர்கள் எண்ணியதையும விரும்பியதையும் அடையும் வழிமுறைகளால் அரசாங்கத்தை ஏமாற்றுதலும், பிறர் உழைப்பைச் சுரண்டுதலுமான குறைபாடுகள் இருப்பதையே சமுதாயம் பெருங்குறையாக கருதுகிறது.

வாழ்க்கைப் பந்தயம்

ஓட்டப் பந்தயத்தில் உடல் வலிமையுள்ளவன் வெற்றி பெறுவதுபோல, வாய்ப்பும் வசதியும் பெற்றவர்கள் மட்டும் வாழ்க்கைப் பந்தயத்தில் வெற்றி பெறுகிறார்கள். வாய்ப்பும் வசதியும் இல்லாதவர்கள் – அவற்றை உருவாக்கிக் கொடுத்தாலும் அதனைப் பயன்படுத்திக்கொள்ள இயலாதவர்கள் – நாட்டில் அதிகம் பெருகிக்கொண்டே போகிறார்கள். இந்த இடைவெளி – வெற்றி எண்ணிக்கையும் அதிகமாக – மிக அதிகமாகக் கூடிக்கொண்டே போவதால், நாடு சமநிலையை இழந்துகொண்டே வருகிறது. இந்த நிலையை நீடித்து, வெற்றி பெறமுடியாத, இயலாதவர்களே அதிகமானால், நாடு மிக்க கடுமையான சூழ்நிலையை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும் என்பதைச் சமுதாய உணர்வு உள்ளவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

வாய்ப்பும் வசதியும்

இயற்கை அமைப்பில் – நில அமைப்பில் இயல்பாக மேடு பள்ளங்கள் இருப்பதுபோலச் சமுதாய அமைப்பிலும் இத்தகைய மேடு பள்ளங்கள் கால வெள்ளத்தில் அமைந்து விட்டன. அறிவும் திறனும் நிறைந்தவர்கள் மேலே உயர்ந்து, அறிவும் திறனும் குறைந்தவர்களை அடிமை கொண்டார்கள். அந்த அமைப்பே தொடர்ந்து நீடித்து, இவர்கள் உயர்ந்தவர்கள் என்றும், இவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் உருவாகி, வசதி உடையவர்கள் மேலும் மேலும் வசதிகளைப் பெருக்கிக்கொள்வதும் வசதி இல்லாதவர்கள் எதையும் செய்து கொள்ள முடியாமல் மேலும் மேலும் பள்ளத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து போவதும் – ஆன ஒரு சூழ்நிலையே இன்று நிலவக் காண்கிறோம்.

கிராமத்தில்

கிராமப்புறங்களில் இருந்து ஒரு பெண், சாதாரணக் குடும்பப் பெண் படித்து மேலே உயர்ந்து, தனித்து நின்று ஒரு வேலை பார்க்கும் நிலைக்கு உயர வேண்டுமானால், இதற்கு மலை அளவு முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதே நிலையில் வசதியுடைய ஒரு குடும்பத்துப் பெண்ணுக்கு இத்தகைய சிரமங்கள் இல்லை. இந்தச்சூழ்நிலையில் வசதி குறைந்த குடும்பங்கள் முன்னேறப் பல தலைமுறைகள் தேவைப்படுகின்றன.

என்ன செய்யவேண்டும்

வருங்காலச சந்ததியினர் நியாயமான அடிப்படை வசதிகளையாவது பெறவேண்டுமானால், மிகப் பெரிய அடிப்படை மாற்றங்கள நிகழ்த்தியே ஆகவேண்டும், மனமாற்றம் செயல்மாற்றம் என்ற வகையில் உள்ளும் புறமும் அம்மாற்றம் நடைபெற்றாக வேண்டும். இவற்றைத் துணிந்து செய்தாக வேண்டும்.

உள்ளத்தில் மாற்றம்

அற உணர்வுகளும், ஒழுக்க உணர்வுகளும் மதிப்பிழந்து போய்விட்ட இந்தக் காலத்தில், மீண்டும் அவற்றை உடனடியாகக் கொண்டுவருவது இயலாது என்றாலும் – நம்பிக்கை இழக்காமல் முயன்று கொண்டே வந்தே ஆகவேண்டும். அதற்கு மிகப்பெரிய முதலீடுகள் தேவையில்லை. நாட்டில் பெரிய பெரிய திட்டங்கள் தீட்டவேண்டியதில்லை. நமது தலைவர்கள் அறத்தில் நம்பிக்கை வைத்து நடந்தால் கூட போதுமானது. சொல்வதை அளந்து சொன்னாலும் போதும். அதை அவர்கள் ஓரளவு கடைப்பிடித்தாலும் போதும்; தொண்டர்கள் பின்பற்றுவார்கள். ஒரு தந்தை ஒழுங்காக நடந்தால், வீட்டிலுள்ள குழந்தைகள் திருந்துவார்கள். வீட்டில் இருந்து கொண்டே ‘இல்லை என்று சொல்’ என்று தன் குழந்தைகளிடமே சொல்லி அனுப்பும் பெற்றோரின் குழந்தைகள், வளர்ந்த பிறகு என்ன செய்வார்கள்? இனி நாட்டைத் திருத்தியே ஆகவேண்டும் என்று மேடைகளில் ‘ஆய்ஊய்’ என அங்கலாய்ப்பதை விட, முழங்குவதைவிட, இந்த மேடை மனிதர்கள் ஒழுங்காக நடந்தால் கூடப்போதும்; நாடு உருப்பட்டுவிடும்.

வெளியில் மாற்றம்

அதே நேரத்தில் ஆடம்பரமான போக்குகளை, அநிநாயச் செலவுகளைக் கண்டிக்கும் வெளிப்படையான போக்கினையும் இனி மேற்கொண்டே ஆகவேண்டும். ஒருவர் இருவராகச் சென்றால் இந்தக் காலத்தில் எதுவும் நடைபெறாது. ஒரு குழுவாகச் சென்று – அவர்களின் போக்கை அறிவுறுத்த வேண்டும். இல்லாவிடில் அச்சுறுத்தவும் வேண்டும். யாரோ சிலர் செய்கின்ற ஆடம்பரச் செலவுகள் அவர்களை மட்டும் பாதிப்பதில்லை. அது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும், ஏழைகளையும், இந்த நாட்டின் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது. ஆடம்பர வளைவுகளையும், சுவரொட்டிகளையம், வானவேடிக்கைகளும் மின்விளக்கு அலங்காரங்களும் மாலை மரியாதைகளும் இந்த நாட்டையே பாதிக்கிறது என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

மேலே.. மேலே…

மேலே… மேலே… உயர்ந்தவர்கள்… சற்றே எண்ணிப்பார்க்கவேண்டும். அவர்களின் உயர்வுக்கு ஏதேனும் அளவுகோல் உண்டா என்றால் அது அவர்களுக்கே தெரியாது. எவ்வளவு வந்தாலும், அதற்கு மேலும், அதற்கு மேலும் என்று எல்லையில்லாத ஓர் வேகம், ஒரு வெறியே எங்கும் காணப்படுகிறது. அவர்களின் பேராசை அவர்களைப் பிச்சை எடுப்பவர்களை விடக் கேவலமாக அலைய வைக்கிறது. முயற்சி வேறு, பேராசையால் அலைவது வேறு என்பதை அவர்கள் ஒருகணம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அத்தகையவர்கள் எப்போதாவது தங்களுக்கும் கீழே உள்ளவர்களை எண்ணிப் பார்த்தது உண்டா? அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்தது உண்டா? அப்படித்தான் மேலே.. மேலே. சென்ற அவர்கள் இதுவரை எதைச்சாதித்தார்கள்? இனி எதைச் சாதித்துவிடப் போகிறார்கள்? தானும் உயர்ந்து தங்களைச் சார்ந்தவர்களையும் உயர்த்தி விடுவதில்தான் மனித வாழ்க்கையின் நாகரிகம் அடங்கி உள்ளது. தனித்து உயர்ந்து மட்டும், அவர்கள் எந்த விண்வெளியை அடைந்து விடப் போகிறார்கள்? இந்த உணர்வினை அவர்களுக்கு எந்த வகையிலேனும் ஊட்ட வேண்டும்.

நம்முடைய வளமும் நலமும் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், நம்மைச் சுற்றி உள்ளவர்களும் நலமாகவும் வளமாகவும் இருக்க வேண்டும். இல்லாவிடின் நம் நலமும் வளமும் ஒருநாள் நிச்சசயம் பறிபோய்விடும்.

இதற்கு முன் நியாயத்திற்குப் புறம்பாக மேலே மேலே உயர்ந்தவர்கள், அநியாயமாகப் பணம் சேர்த்தவர்கள். பிறரைக் கீழே தள்ளிப் பதவியைப் பிடித்தவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று எண்ணிப் பார்க்கவேண்டும். மாவீரன் அலெக்சாண்டரும் ஹிட்லரும் என்ன ஆனார்கள் என்று எண்ணிப் பார்க்கவேண்டும். இறந்த பிறகும் இன்னும் சிலர் பழியைச் சுமந்து கொண்டே இருக்கிறார்கள். காந்தியைப் போன்றவர்கள் இறந்த பிறகும், முன் உதாரணமாக விளங்குகிறார்கள் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

பொறுப்புணர்ச்சி

இனி, பொதுமக்களுக்கு என்று சில சமுதாயப் பொறுப்புணர்ச்சி இருக்கவே செய்கிறது தீமைகளைத் தட்டிக் கேட்கவும் கொடுமைகளை எதிர்த்து நிற்கவும் இனி அஞ்சக் கூடாது. நியாயத்திற்காகப் போராடுவதால் துன்பம் வரும் போல் தோன்றினாலும் அது நிரந்தரத் துன்பமல்ல. நியாயத்திற்காகப் போராடிய மன நிறைவு உண்டாகும். ஆதலின் அவரவர் கடைமைகளைச் செய்தால் மட்டும் போதாது. கடமைகளைப் புறக்கணிக்கின்றவர்களை இனம் கண்டு, அவர்களைத் திருத்தவும் வேண்டும். நல்லவர்களை ஒதுங்கி ஒதுங்கி வாழ்வதால் அவர்களும் ஒருவகையில் தீமைக்குத் துணை போகின்றவர்களே ஆகிறார்கள். “அவர்களே ஒன்றும் சொல்வதில்லை, நீ என்ன” என்று மிரட்டியே கெட்டவர்கள் காரியத்தைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

கீழேயும் பாருங்கள்

மேலே மேலே உயர்கின்றவர்கள், கீழே உள்ளவர்களை, கீழே கீழே போய்க்கொண்டு இருப்பவர்களையும் கைதூக்கி விடவேண்டும். அது அவர்கள் வாழ்க்கைக் கடமைகளில் ஒன்று என்பதையும் உணர வேண்டும். காலம் மாறி வருகிறது. எடுப்பதற்கு முன் கொடுக்க வருவது கீழே தள்ளப்படுவதற்கும் முன் நாமே இறங்கி நின்று எல்லோரும் போல நடப்பது – நல்லது அல்லவா? ‘ஏற்பது இகழ்ச்சி’ இல்லாத மனிதனுக்கு இருக்க வேண்டிய நாகரிகம், “ஐயம் இட்டு உண்” என்பது வசதி இருக்கும் மனிதனுக்கு இருக்க வேண்டிய நாகரிகம். அவரவர் நிலைக்கு ஏற்பக் கடைப்படிப்போமாக.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்