Home » Articles » முதல் சந்திப்பு

 
முதல் சந்திப்பு


தியாகராசன் தூசி
Author:

நிறுவனர் பற்றிய நினைவுகள்

முன்னுரை

வேளாண்மைக் கல்லூரியிலேயே 1973 முதல் 1979 வரை மாணவராகப் பயின்ற காலத்திலும், 1980 முதல் 1984 வரை ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்திலும் அய்யா இல.செ.க. அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றவன்.

அவரது அலுவலகம், குடும்பம், பொதுக்கூட்டங்கள், கட்டுரை தயாரித்தல், நூல்களை வெளியிடுதல், மாணவர்களை – இளைஞர்களை வழி நடுத்துதல் போன்ற பல காரியங்களில் பங்கெடுத்துக்கொண்டவன்.

எந்தெந்தச் சூழ்நிலைகள் அவரது எழுத்துக்கு கருவாக அமைந்ததன? எந்தெந்த நிகழ்ச்சிகள் அவரைப் பாதித்தன? எந்தெந்த நேரங்களில் தடைகளை எப்படியெல்லாம் சமாளித்தார்? என்பதையெல்லாம் நேரில் கண்டவன்.

அவரிடம் நான் அறிந்து கொண்டவற்றையெல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இதை எழுதுகிறேன்.

நல்லாரைக் காண்பதுவும்
நல்லார் சொல் கேட்பதுவும்
நல்லாரைத் தெரிந்து கொள்வதும்
நன்றன்றோ?

கோவை வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் நடந்த சம்பவம் இது. “அய்யா இல.செ. கந்தசாமி அவர்களைப் பார்க்க வேண்டுமா? அதோ, அந்த அறிஞர் அண்ணா அரங்கத்தின் கீழ் அவரது அலுவலகம் இருக்கிறது. போய்ப் பாருங்கள்” என்று வழிகாட்டினார் ஒரு நண்பர்.

“பொருத்தம் தான். அரங்கத்தின் பெயரிலும் அறிஞர். அரங்கத்தின் உள்ளேயும் அறிஞர்!” என்று எண்ணியபடி நடந்தேன்.

“வளரும் வேளாண்மை வரவேற்கிறது” என்ற வண்ண எழுத்துக்கள் என்னை வருக என்றன.

“இல.செ. கந்தசாமி, ஆசிரியர், என்ற பெயர் பலகை பதிந்த அறையின் நுழைவாயிலில் தயக்கத்துடன் நின்றேன். உள்ளே கண்டேன், அவரை.


வாரிவிட்ட சுருட்டைத் தலைமுடி –
சிந்தனையில்
ஊறிவிட்ட அகன்றநெற்றி – முல்லைக்குப்
பாரிவிட்ட தேரினைப் போல் தேகம் – பருத்தி
நூலிலிட்ட வெண்ணிற முழுகைச் சட்டை –
பூவில் ஏறிவிட்ட வண்டுகள் போல் கண்கள் –
நெஞ்சம் கூறிவிட்ட படி எழுதும் பேனா
கையில் – நானும்
தேனிலிட்ட எறும்பினைப்போல்
நினைத்து நின்றேன்.

சற்று தெளிந்து “அய்யா வணக்கம்” என்றேன். நிமிர்ந்தவர் என்னைப் பார்த்து “ஓ! நீங்களா! வாங்க! வாங்க! வணக்கம். உள்ளே வாங்க! என்ன தயக்கம்?” என்றவாறே எழுந்து வந்து என்னை வரவேற்றார்.

நானோ, கோவை வேளாண்மைக் கல்லூரியில் 1976-ஆம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவன், அவரோ, அங்கே பணியாற்றும் தலைசிறந்த பேராசிரியர்களில் ஒருவர். அவர் எழுந்து வந்து, என்னை அழைத்தபோது, என் ஐம்புலன்களும் உறைந்து போயின. நான் ஊமையானேன். அவரோ பேச்சைத் தொடர்ந்தார்.

“நேற்று நமது கல்லூரி முத்தமிழ் விழாவில் உங்களது ‘கொதிக்கும் பனித்துளிகள்’ நாடகம் தான் மிகச்சிறப்பாக இருந்தது, வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் படும் துன்பங்களை அற்புதமாகக் காட்டியிருந்தீர்கள். கதாநாயகியை அலங்காரப் பதுமையாகக் காட்டாமல், கணவனால் அடித்துவிரட்டி விழுவது போல் காட்டியது வித்தியாசமாக இருந்தது..”

இப்படி மளமளவென்ற மனந்திறந்து அடுக்கிக்கொண்டே போனார். அவரது பேச்சைக் கேட்டு, மற்ற ஊழியர்களும் வந்து சூழ்ந்து கொண்டார்கள். பிறரை அவரை பாராட்டும் பண்பினைக் கண்டு மயங்கி நின்றார்கள்.

உற்சாகத்தோடு அவர்களையும் எனக்கு அறிமுகம் செய்யத் தொடங்கினார். அப்போதுகூட, அவரவருடைய நல்ல குணங்களை மட்டுமே குறிப்பிட்டுச் சொன்னார்.

‘இவர் நமது துணை ஆசிரியை, வருகின்ற கட்டுரைகளை வெட்டி ஒட்டி வடிவமைப்பதில் கெட்டிக்காரர்.

‘இவர் நமது கணக்கர். தணிக்கையாளர்களால் தவறே சொல்ல முடியாத கணக்கு வைத்திருப்பார்”.

இவர் நமது தட்டச்சர், நான் கிறுக்கி எழுதித் தருவதை பிழைகளின்றி அக்கா மாற்றித் தருவார்.”

“இந்தப் பெண் தினக்கூலிக்கு வருபவர். அச்சகத்திலிருந்து வரும் புத்தகங்களுக்கு தபால் தலை ஒட்டி, படப்படவென்று அனுப்பி விடுபவர். மிகவும் கெட்டிக்காரி.

அப்போது ஒருவர் குறுக்கிட்டு, “என்னங்கய்யா இது? ஒரு மாணவருக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்.

அதற்கு அய்யா தந்த பதில் அற்புதமாக இருந்தது. “மாணவரா, ஆசிரியரா, ஏழையா, பணக்காரரா என்று நான் பார்ப்பதில்லை.

நல்ல குணம் யாரிடமிருந்தாலும் பாராட்டுவது என் இயல்பு. நம்மைவிடப் பெரியவர்களைப் பாராட்டுவது அவர்கள் பவனி செல்ல பல்லக்குத் தருவதைப் போல, நம்மைவிடச் சிறியவர்களைப் பாராட்டுவது, அவர்கள் முன்னேறுவதற்கு ஏணி தருவதைப் போல. பிறருக்கு ஏணி தருவது எனக்கு பிடிக்கும்” என்று முடித்தார்.

எல்லோருடைய இதயங்களும் கனத்துப் போயின
என் கண்கள் பனித்துப் போயின.

நண்பர்கள், பகைவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் – யாரென்றும் பாகுபாடு பார்க்காமல், அவரிடமுள்ள நல்ல குணத்தைப் பாராட்டும் நற்பண்புக்கு அய்யா அவர்களே நல்லதோர் உதாரணம்.

-நீங்கா நினைவுகள் மலரும்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு