Home » Articles » மதிக்கும் நேசம்

 
மதிக்கும் நேசம்


மெர்வின்
Author:

நாம் மற்றவரை சந்தித்துப் பேசுவதற்கு முன்பு சில நடைமுறைகளைத் தெரிந்து கொண்டு செயல்பட்டால் அவருடைய நேசம் நம்மீது நீங்காமல் என்றென்றும் நிலைத்து இருக்கும்.

அவருடைய உள்ளத்திலும் நம்மிடம் கொண்டிருக்கும் அன்பு என்றும் மறையாது. நம்மீது வைத்திருக்கும் பற்று அதிகமாகி நாம் கேட்கப்படும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.

நாம் மட்டும் நேசம் கொண்டிருக்காமல் மற்றவர்களும் நம்மிடம் நேசம் கொண்டிருந்தால்தான் வெற்றியும் மகிழ்ச்சியும் ஏற்படும். மற்றவர்கள் நம்மீது கொண்டிருக்கும் மதிப்புதான் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தித் தரும்.

இதில் சந்தேகமே இல்லை. நாம் ஒருவரைச் சந்திக்கச் செல்வதற்கு முன்பு அவருக்கு இருக்கும் நேரம் வாய்ப்பு, சூழ்நிலை இவற்றைத தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்.

ஒருவருடன் பேசுவதற்குக் காத்திருக்க நேர்ந்தால் அவருடைய பார்வைக்குப் படும் இடத்தில் அமர்ந்துவிட வேண்டும்.

அதே சமயத்தில் நாம் காத்துக் கொண்டிருப்பதை அவர் தெரிந்து கொள்ளுமாறு செய்யவும்.

காரணம் நமக்குத் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் மற்றவர்களுடன் பேச நினைக்கலாம். அல்லது நாம் அதனைக் கேட்க நேரிடும். நல்லதாகப் பேசியிருந்தாலும் மகிழ்ச்சி ஏற்படும் கெட்டதாகப் பேசினால் நம்முடைய மனம் வருத்தப்படும்.

அது மட்டுமல்லாமல் நாம் அவரிடம் கொண்டிருக்கும் நேசமும், அன்பும் மறைந்து விடும். அவரைப்பற்றி தவறான எண்ணமும் வெறுப்பும் ஏற்பட வழிவகுக்கும்.

நாம் வந்திருக்கிறோம் என்று நேருக்குநேர் உணர்த்த வேண்டுமே தவிர அவருடைய முதுக்குக்குப் பின்னால் நின்று கொண்டு இருமுவதோ, கனைப்பதோ கூடாது.

நம்முடைய இருமலைக் கேட்டு வருகையை விளங்கிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியான முறையல்ல.

அவசரமாக சென்று கொண்டிருப்பவரை நிறுத்தி பேசுவதும் நல்லதல்ல. நம்மால் அவருடைய காரியம் தடைப்பட்டால் எப்படி அவர் நம்மை நேசிக்க முடியும்? அவருடைய வேலையைக் கெடுத்து இடையில் நிறுத்தி வைத்துப் பேசுவது தகுதியான செயல் அல்ல.

நபிகள் நாயகம் தோழர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஒருவர் உள்ளே நுழைந்தார். அனுமதியும் பெறவில்லை. வணக்கமும் கூறவில்லை.

உடனே நபிகள் நாயகம் அவரை நோக்கி, “திரும்பிச் சென்று அனுமதி பெற்று வணக்கம் கூறி உள்ளே வாருங்கள். அதுதான் முறை”, என்று அறிவுறுத்தினார்.

ஒருவர் நற்பண்புகளுடன் நடந்து கொள்வது வாழ்க்கையில் மிகவும் அடிப்படையான உண்மையாகும் என்கிறார் நபிகள் நாயகம்.

நீ இறைவனிடத்திலும், மனிதனிடத்திலும், அன்பை விரும்புவாயானால் நல்ல பண்புடன் இரு. ஏனெனில் கர்வம் கொண்ட இதயம் யாரையும் நேசிப்பது இல்லை. அது தன்னைத்தானே விரும்பிக்கொள்ளுமே யல்லாது மற்றவர்களால் நேசிக்கப்படுவதில்லை என்கிறார் குவார்லஸ்.

மதத்தின் முதல் கருத்து என்ன என்று நீ என்னிடம் கேட்டால் முதல் இரண்டாவது மூன்றவது மற்ற எல்லாமே நேசமான பண்புதான் என்று நான் பதில் சொல்வேன் என்று கூறுகிறார் அகஸ்டின்.

“பண்பும் அன்பும் உண்மையான மதத்தின் வாசல்களாக இருக்கின்றன” என்கிறார் ரொஸ்மல். எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன்பு சற்று எண்ணிப் பார்த்துக்கொள்ள வேண்டும். செய்யப்போகும் செயல் எவருடைய மனத்தையாவது நோகச்செய்யுமா? எவருக்காவது வருத்தத்தை உண்டு பண்ணுமா? மனம் திறந்து இந்த வினாகளுக்கு விடை காண வேண்டும்.

நமக்கு ஒரு செயல் எவ்வளவு பிடித்தமானதாக இருந்தாலும் அடுத்தவரை அது புண்படுத்தும் என்று தோன்றினால் அந்தச் செயலை மேற்கொள்வதிலிருந்து அறவே விலகிக்கொள்ள வேண்டும்.

முன்கூட்டி எண்ணிப் பார்த்து செயல் புரியும் பழக்கத்தை மேற்கொண்டால் நாளடைவில் மனம் பண்பட்டு விடும். மனம் பண்பட்டுவிட்டால் எல்லோரையும் நேசிக்கும் பக்குவம் ஏற்பட்டுவிடும். நம்முடைய சொல்லாலும், எண்ணத்தாலும், செயலாலும் மற்றவர்களுக்கு இன்னலை ஏற்படுத்திவிடக்கூடாது.

மற்றவர்களுக்கு இடைஞ்சல் தராமல் இருக்கும்போது அவருடைய நேசத்தை எளிதாக நம்மீது திருப்பிவிட முடியும். “மற்றவர்களை மிகிழ்வுறச் செய்வதே ஒருவன் பெற்றிருக்க வேண்டிய நற்பேறுகளில் எல்லாம் மிகவும் மேலான நற்பேறாகும்” என்று கூறுகிறார் செஸ்டர் பீல்ட் பிரபு.

நாம் நல்ல மனிதனாக எப்பொழுது இருக்க முடியும் என்றால் மற்றவர்களை மகிழச் செய்யும் பண்பு இருக்கின்றபோது தான்!

இந்தப் பண்பு ஒன்றுதான் எல்லோரையும் நம்மிடம் இழுத்துக் கொண்டு வரும். சந்திரனை நட்சத்திரங்கள் சூழந்து நிற்பதுபோல நாமும் அளவற்ற ஆதரவாளர்களால் சூழ்ந்திருக்க வேண்டுமென்றால், மற்றவர்களுடைய காரியங்களில் அக்கறைக்காட்டி அவர்களை மகிழச் செய்ய வேண்டும்.

அப்படி இல்லாவிட்டால் மற்றவர்களின் நேசத்திற்கு பாத்திரமாகவோ, அவர்களுடைய செல்வாக்கைப் பெறுவதோ முடியாத காரியமாகிவிடும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான மூலதனங்களில் ஒன்று பிறரை மகிழச்செய்யும் தன்மைதான்.

பணத்தால் ஆகாத அலுவல்கள் எல்லாம் இந்தத் தன்மையைப் பெற்றிருந்தால் எளிதாகப் பெற்றுவிட முடியும் நாம் பிறர்மீது நேசம் செலுத்தி அவர்களை மகிழச் செய்யாவிட்டால், பிறரும் நம்மீது நேசம் கொள்ளவோ நம்மை மகிழ்ச்சிப்படுத்தவோ செய்யமாட்டார்கள். அது உலக நியதி.

அதானல் நாம் மகிழ்ச்சி தரும் முகம் கொண்டவர்களாகவும் பிறர்மீது நேசம் செலுத்துபவர்களாகும் பிறருக்கு உதவி செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு மாறுபட்டு இருப்பின் நம்மைத் தொலை தூரத்தில் கண்டபோதே முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்று விடுவார்கள்.

பார்த்தும் பார்க்காமல் போய்விடுவார்கள். இது நடைமுறை இயல்பு. காந்தத்தை நோக்கி இரும்பு வருவதைப் போன்று நாம் பிறரை நம்மிடம் இழுத்து வர வேண்டும் என்று விரும்ப வேண்டாம். அதற்கு மாறாக-

நாம் பிறர்மீது நேசம் கொண்டு அவர்களிடம் நாமே செல்வோம். காந்தம் அவர்களாகவும், நாம் இரும்பாகவும் இருப்போம். அவர்களின் பண்பு காந்தமாகவும் , நம்மிடமுள்ள நேசம் இரும்பாகவும் இருந்து கவர்ந்து கொள்ளும் படியாக வாழ்வதுதான் சிறப்பானது.

பிறர் நம்மீது நேசம் செலுத்த வேண்டுமென்று ஒரு ஆண்டு முயற்சி செய்வதைவிட நாம் பிறர்மீது நேசம் கொள்வது ஒரே நிமிடத்தில் முடிந்துவிடும்.

பிறருடைய எண்ணத்தையும், நல்ல உறவையும் பெற அவர்களிடம் நேசம் கொண்டால் மட்டும் போதாது. நம்முடைய அவர்கள் உணருமாறு செய்ய வேண்டும். நம் நேசம் தங்கம்போல இருப்பது அவசியம். கலப்படத் தங்கமாக இருக்கக்கூடாது.

பிறர் மீது நேசம் செலுத்துவதாகப் பாவனை செய்வதைவிட உண்மையான நேசம் கொள்வதில் எந்தவித சிரமும் இருக்காது. பிறருடைய சிறந்த பண்புகள், தொழில் செயல் இவற்றைக் கவனித்து, அவர்மீது உண்மையான நேசம் கொள்ளவேண்டும்.

அவர்களுடைய சிறப்பை வாய்ப்பு கிடைக்கும் பொழுது எடுத்துச் சொல்லி மகிழ்வித்து அதன் காரணமாக நாமும் ஏன் மகிழ்ச்சி அடையக்கூடாது?


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு