Home » Cover Story » உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு

 
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு


தங்கராஜ் பி
Author:

உழைப்பினால் கிடைக்கும் மகிழ்ச்சிதான் அடுத்த உயர்வுக்கு அடித்தளம். ‘உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை’ உழைப்பின் மூலம் உயர்ந்திருக்கின்றவர்களும், நம்பிக்கை என்ற விதையில் தான் வெற்றியின் கரு அடங்கியிருக்கின்றது என்று கரூரில் செய்யும் தொழிலில் நாளும் உயர்ந்து வருகின்றவர்களும், உற்சாகமே நீடித்த வெற்றியைப் பெற்றுத்தரும் என்று தமிழகத்தின் முன்னனி பஸ்பாடி பில்டர்களாக திகழ்ந்து வருகின்றவர்களும், எடுத்துக் கொண்ட இலக்கை தெளிவானதாகவும், உண்மையானதாகவும், அடையக்கூடியதாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும், சவாலானதாகவும் அமைத்துக் கொண்டு சாதிக்கக் கூடியவர்களாகவும் சிறந்து விளங்குகின்ற கரூர் பி.டீ. கோச் பில்டர்ஸ்(பி)லிமிடெட் சேர்மன் திரு. பி. தங்கராஜ், திரு. த. முருகானந்தம், திரு. த. சக்திவேல் அவர்களை நாம் நேர்முகத்திற்காக சந்தித்தபோது, திரு. த. முருகானந்தம் அவர்கள்,

”எதை அடைய வேண்டும் என நினைக்கிறோமோ அதைப்பற்றி முழுமையான சிந்தனையில் ஈடுபட்டால் அதனை நிச்சயமாக அடையலாம்” என்ற அவரோடு இனி நாம்.

கரூரில் முக்கிய தொழில்களாக டெக்ஸ் டைல், பஸ்பாடி பில்டிங், கொசுவலை என இருக்க தாங்கள் பஸ்பாடி பில்டிங் தொழிலை தேர்ந்ததெடுக்கக் காரணம்?

எனது தந்தை திரு. பி. தங்கராஜ் அவர்கள் தான் முக்கிய காரணம். எனது தந்தை கடுமையான உழைப்பாளி. கரூர், எல். ஜி. பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் என்ற நிறுவனத்தில் பணியில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி உற்பத்தி மேலாளராக உயர்ந்தவர். காலத்தின் வேகத்தில் நிர்வாகத்தில் ஏற்பட்ட சில நெருக்கடிகள் காரணமாக கம்பெனியிலிருந்து வெளியில் வந்து 1984ம் வருடம் பி. தங்கராஜ் & கோ என்ற பெயரில் (Pee Tee Coach புதிதாக ஒரு தொழிற்சாலையை தொடங்கினார்.

பேருந்து உரிமையாளர்கள் மனப்பான்மையை உணர்ந்து தரம், சரியான நேரத்தில் டெலிவரி என எல்லாவற்றிலும் தனித்தன்மையை உருவாக்கி பஸ்பாடி பில்டிங்கிற்காக கரூரில் உள்ள 10 பெரிய கம்பெனிகள், 40 சிறிய கம்பெனிகளுக்கு மத்தியில் பி.டீ. கோச் ஒரு சிறப்பிற்குரிய இடத்தை பெற்றிடும் அளவுக்கு வளர்த்தார். பஸ் பாடி பில்டர் அசோசியேசன் தலைவராகவும் சிறந்து விளங்கினார்.

இடையூறுகள், ஆபத்துக்கள், பிரச்சனைகள் என எல்லாவற்றையும் கடந்து அவரது அயராத உழைப்பினாலும், தொழிலாளர்களுடனான நல்லுறவினாலும் உருவாக்கிய பி.டீ. கோச் பஸ்பாடி கட்டும் நிறுவனத்தை இன்றைக்கு நானும், என் தம்பியும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டு சிறப்புடன் நடத்தி வருகிறோம்.

படிப்பை முடித்தவுடன் நேரடியாக இந்த தொழிலுக்கு வந்து விட்டீர்களா?

இல்லை. பி.ஏ. கார்ப்பரேட் முடித்தவுடன் 1993ம் வருடம் ஆட்டோ மொபைல் மீது ஆர்வம் கொண்டதன் காரணமாக ”ஹீரோ புக்” பைக் டீலர்சிப் எடுத்தேன். அப்போது எங்கள் ஊரில் TVS 50 மாதம் 200 வண்டிகள் முதல் 300 வண்டிகள் வரை விற்பனை ஆகும். ஆனால் ஹீரோ புக்கானது இரண்டு அல்லது மூன்று வண்டிகள் விற்பதே பெரும்பாடாக இருக்கும். ஐந்து வண்டிகள் விற்று விட்டால் அது பெரிய சாதனையாக இருந்தது.

எப்படி வண்டி விற்பனையைக் கூட்டலாம் என்று யோசித்து வண்டியில் சில மாற்றங்களைச் செய்தேன். அதன்பின்பு பால்கேன் உள்ளிட்ட பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல ”ஹீரோ புக்”கினால் முடியும் என்பதை மக்களுக்கு காட்டுவதற்காக சந்தைப் பகுதிக்கு நானே எடுத்துச் சென்றேன்.

இது முடியாது என நினைத்து எந்த நிலையிலும் நான் ஓய்ந்து போனதில்லை. போராடுவது என்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ரெக்ஸின் ஷாப், மாருதி ஆர்தரைஸ்டு சர்வீஸ் சென்டர் இப்படி ஒவ்வொன்றிலும் ஈடுபட்டு நிறைய அனுபவங்களைப் பெற்றேன். 1997ம் வருடம் அப்பாவுக்கு துணையாக பி.டீ. கோச் நிறுவனத்தில் இணைந்தேன்.

போட்டியாளர்கள் அதிகம் உள்ள துறையில் போட்டியை சமாளித்து அன்றும் – இன்றும் முன்னணி பஸ் பாடி பில்டராக தங்கள் நிறுவனம் திகழ தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் குறித்து?

நல்ல பெயர் எடுப்பது கடினம். கெட்ட பெயர் எடுப்பது என்பது எளிது. ஆனால் எடுத்த பெயரை தக்க வைப்பது என்பது அதைவிட கடினம்.

போராட்டம் என்பது இருந்து கொண்டே இருக்கும். போராடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்பாடா! போதும் என்று அமர்ந்தால் அவ்வளவுதான் அடுத்தவர்கள் நமக்கு கிடைக்கும் ஆர்டர்களை தட்டிச் சென்று விடுவார்கள். ஐந்து வருட காலம் மார்க்கெட்டிங் துறையில் எனக்கு கிடைத்த அனுபவம் மிகப்பெரிய அனுபவம்.

உதாரணமாக ஆரம்ப காலத்தில் மார்க்கெட்டிங்கிற்காக பல ஊர்களுக்கு சென்றால் 10 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து அதன் சுற்றுப்புற ஊர்களில் உள்ள பஸ் உரிமையாளர்களை நேரம் அறிந்து காத்திருந்து சந்தித்துப் பேசி ஒரு ஆர்டர் எடுத்து வருவதற்குள் அவ்வளவு அனுபவங்கள் கிடைத்து விடும். ஆனாலும் முயற்சி இருந்து கொண்டே இருக்கும்.

குறிப்பாக பல ஊர்களுக்கு செல்லும் போது பஸ் உரிமையாளர்கள் ஒன்று கூடும் நேரம் காலம் அறிந்து ஒரே இடத்தில் சந்தித்து அவர்களின் எதிர்பார்ப்பை சரியாகப் பூர்த்தி செய்யும் விதமாக பேசி ஆர்டர் எடுத்த அந்த நாட்கள் எல்லாம் நினைவிலிருந்து அழிக்க முடியாதவை.

ஒரு பேருந்துக்காக பாடி பில்டிங் வேலை முடிய எத்தனை நாட்கள் ஆகும்?

இருபத்தைந்து நாட்கள் ஆகும். ஆரம்ப காலத்தில் மூலப் பொருட்கள் சென்னை, சேலம், மும்பை, கோவையில் தான் கிடைக்கும். இன்றைக்கு கரூரிலேயே தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கிறது.

அது மட்டுமல்லாமல் ஸ்ட்ரச்சர், வுட்வொர்க், சீட் மெட்டல், பெயிண்டிங், எலக்ட்ரிக்கல் பிட்டிங், சீட் பிரேம், அப்போல்சர் இப்படி பேருந்தின் ஒவ்வொரு பகுதியையும் சிறப்பாகச் செய்ய தொழிற்கூடங்கள் நிறையவே கரூரில் தற்போது உள்ளது.

வேலைகளை உடனுக்குடன் முடிக்க போதுமான வசதிகள் பெருகிவிட்டதால் எடுத்த ஆர்டரை உரிய காலத்தில் கொடுத்துவிட முடிகிறது. ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் முடிய வேலை அதிகமாக இருக்கும்.

உங்களின் வெற்றிக்கு தூண்டுதலாக அமைந்த சம்பவம் அல்லது புத்தகம் குறித்துச் சொல்லுங்களேன்?

இளைஞர்களுக்காக கரூர் திரு. K.R. நல்லுசாமி எழுதிய ”உழைப்பை ருசித்துப் பார்” என்கிற புத்தகம் என்னை உற்சாகப் படுத்தியது.

பொதுவாகவே உழைப்பை ருசிக்க ஆரம்பித்தோமேயானால் வளர்ச்சி என்பது வந்தே தீரும்.

உங்கள் நிறுவனத்தில் பேருந்துகளுக்கு மட்டும் பாடி பில்டிங் செய்யப்படுகிறதா?

கரூரை பொறுத்தவரை பேருந்து, வேன் மற்றும் சிற்றுந்துகளுக்கு பாடிபில்டிங் கட்டப்படுகின்றன. அசோக் லைலேண்ட் கம்பெனியுடன் ஒப்புதல் செய்து கொண்டு ஸ்ரீலங்காவிற்கு பாடி பில்ட் செய்து அனுப்புகிறோம். ஸ்ரீ ஹரிகோட்டா ISRO (இஸ்ரோ) விற்கு தேவையான Staff பேருந்துகளையும் நாங்கள் செய்து அனுப்பி வருகிறோம். மற்றும் எங்களது மற்றொரு கிளையில் சைனாவிலிருந்து சேஸ்சை இறக்குமதி செய்து பஸ் பாடி கட்டி அதை துபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறோம்.

எதிர்வரும் காலங்களில் உங்களின் சாதனை என்ன?

இன்றைக்கு கரூரில் எங்கள் நிறுவனம் 2 கிளைகளாக செயல்பட்டு வருகிறது. ஒன்றில் எக்ஸ்போர்ட் ஆர்டர்களை பூர்த்தி செய்தும், மற்றொன்றில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மாநிலங்களின் ஆர்டர்களை பூர்த்தி செய்தும் இயங்கி வருகிறது. இனிவரும் காலங்களில் உற்பத்தி திறனை உயர்த்திடுவதற்கு புதிய தொழில்நுட்பத்தை கொண்டு, இருக்கின்ற இடத்திலேயே இருக்கிற தொழிலாளர்களை வைத்து ஆக்கும் சக்தியை அதிக மாக்குவோம்.

மேலை நாட்டில் சேஸிஸ் ஒரு பக்கம், ரெடிமேட் பாடி ஒரு பக்கம் என்றிருக்கும். ஆனால் நமது தாயகத்தில் அது போன்ற வசதிகள் இல்லை. அது மாதிரி உருவாக்க வேண்டும். எனக்குள் ஆராயாச்சி குணம் அதிகம் உண்டு. எதையாவது ஆராய்ந்து கொண்டே இருப்பேன். விடாமுயற்சியுடையவர்கள் இந்த உலகில் அடைய முடியாதது எதுவுமே இல்லை என்று சொல்லிவிடுமளவுக்கு சாதித்து காட்டுவார்கள் என்பார்கள். அது போல நானும் விடாமுயற்சியை உடன் வைத்து சாதிக்கப் போராடுவேன்.

தென்னிந்திய அளவில் பி.டீ. கோச்சுக்கென்று ஒரு தனிச்சிறப்பை எப்படி வரவழைத்துக் கொண்டீர்கள்?

நேர்மை, நம்பிக்கை இந்த இரண்டுமே ஒரு தொழில் நிறுவனத்திற்கு மாபெரும் பொக்கிஷங்கள். இதனை சரிவர கடைப்பிடித்து உரிய காலத்தில் தரம் குறையாமல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தோம். புதிய புதிய வடிவமைப்புகளை அவர்கள் எதிர்பார்த்ததிற்கு மேலே செய்து கொடுத்தோம். மொத்தத்தில் உண்மையோடு உழைத்ததிற்கு கிடைத்த பலன்தான் இன்றைக்கு எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிற நற்பெயர்.

மேலும், எங்களுக்கு அமைந்த நல்ல தொழிலாளர்கள், வழிகாட்டுதலுக்கு தந்தை, ஆர்வத்தோடு அடுத்தடுத்து பொறுப்புகளை திறம்பட செய்து முடிக்கும் எனது தம்பி த. சக்திவேல் இப்படி எல்லாமுமே சரிவர அமையப் பெற்றதனால் ஜெயிக்க முடிந்தது.

மூலதனம் இல்லாமல் மூளை தனத்தை வைத்து வெற்றி பெற முடியுமா?

முடியும். தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் முடியும்.

இனிவரும் காலங்களில் ஒருவர் தன்னை எப்படி எல்லாம் மாற்றிக் கொண்டால் வெற்றியாளராக வலம் வரமுடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

காலத்தை அளவிட்டு, வேலை நேரத்தில் கடினமாக உழைத்து, உழைத்த ஊதியத்தில் சேமிப்பும் இருந்தால் வெற்றியாளராக வலம் வரமுடியும்.

தன்னம்பிக்கை – உங்கள் பார்வையில்?

தடைகளை கண்டு சோர்வு அடையாமல் தைரியமுடன் செயல்பட்டு வந்தால் தோல்வியாளர்களை கூட தன்னம்பிக்கை தானாகவே உயர்த்திவிடும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு