Home » Articles » வேரில் பழுத்த பலா

 
வேரில் பழுத்த பலா


கமலநாதன் ஜெ
Author:

மனதின் ஆற்றலை பேசும் தொடர்

ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அமைப்பின் தலைவர் அண்மையில் வெளிநாடு சென்று வர்த்தக சபை கருத்தரங்கில் உரையாற்றி திரும்பி வந்திருந்தார். அவருக்கான பாராட்டுவிழாதான் அது.

நான்கு நண்பர்கள் வெளியில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு நண்பர் சொன்னார்: “அதோ, அவரைப் பாராட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார்களே…. அவர் ஆரம்பக்காலத்தில் எப்படி இருந்தார் தெரியுமா? சுமாரான படிப்பு, தயக்கமான சுபாவம். சரியாக பேசக்கூடாத் தெரியாது. இப்பொழுது பாருங்கள்…. ஆச்சரியமாக இருக்கிறது!”.

மற்றொரு நண்பர் புன்னகைத்தார்: உங்களுக்கு தெரியுமா? அப்பொழுது அவரது தொழில்கூட சுமார்தான். ஆனால் 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். இரவும் பகலும் பாடுபட்டார். தொழிலில் முன்னேற்றம ஏற்பட்டது. பெரும் செல்வந்தர் ஆனார். அது அவருக்குள் இருந்த தன்னம்பிக்கையை மேம்படச் செய்த்து, பிறகு இது போன்ற வர்த்தகசபைக் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார். கூட்ட செயல்பாடுகளை கூர்ந்து கவனித்தார். மேடையேறி சில வார்த்தைகள் பேசத் தொடங்கினார். கூட்டத்தை நடத்துவதில் உள்ள பணிகளை இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பித்தார், எல்லோரும் கவனிக்கத் தொடங்கினார்கள். இன்று இந்த அமைப்பின் தலைவராகி வெளிநாடு சென்று ஆங்கிலத்தில் உரையாற்றும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?” என்று கேட்டு நிறுத்தினார்.

அடுத்த நண்பர் ஆவலுடன் கேட்டார்: “என்ன காரணம்?”

“அவர் தன்னிடம் இருந்த குறைபாடுகளை மறந்து விட்டதுதான். தன் குறைபாடுகளை பற்றிய தன் உணர்வை தூக்கி எறிந்துவிட்டார். தொழில்தான் முதன்மையானது என்று கருதி முதலில் அதில் கவனம் செலுத்தினார். அது ஒரு நிலைக்கு வந்ததும் தன்னை முன்னிறுத்தும் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். எல்லாம் திட்டமிட்டு செய்த்து. அதில் ஒரு ஒழுங்கை கடைபிடித்தது. அவ்வளவுதான். இப்போது அவரைப் பழைய குறைபாடுகளைப் பற்றி யாருமே பேசுவதில்லை பாருங்கள்” என்றார் நண்பர்.

நான் மேடைமீது புன்னகையுடன் அமர்ந்து பாராட்டுகளை ஏற்றுக் கொண்டிருந்த அந்த மனிதரை வியப்புடன் பார்த்தேன். எப்படி இது சாத்தியமாயிற்று? பணம், பேச்சாற்றல், புகழ் மூன்றிலுமே கடை நலையில் இருந்த மனிதர் மூன்றிலுமே மேல் நிலைக்கு வந்தது எப்படி?

அவர் மனத்தில் தேவையற்றகவலைகளை, வருத்தங்களை திணித்துக் கொண்டிருக்க வில்லை. அவ்வளவுதான்! அவருக்குள் உற்சாகம் தீ மாதிரி கனன்று கொண்டிருந்தது . சாதிக்க வேண்டும் என்ற வெறி, அவர் மனதை முழுமையாக ஆக்ரமித்திருக்கிறது. தன்னை தன் பணியிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டார் அவர். அது அவரை நம்ப முடியாத உயரத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. உற்சாகம் அச்சங்களை அப்புறப்படுத்திவிடும். உற்சாகம் நமது குறைபாடுகளை மறக்கச்செய்யும். உற்சாகம் நமது பணிகள் சிறக்க வழிகாட்டும். நல்ல நண்பர்களைத் தேடி தரும்.

வலிமை வலிமை என்று பாடுவோம் – என்றும்
வாழும் சுடர்க்குலத்தை நாடுவோம்
கவியைப் பிளந்திடக் கை ஓங்கினோம் – நெஞ்சில்
கவலை இருள் அனைத்தும் நீங்கினோம்.

என ஓங்கிக் குரல்கொடுக்கும் மகாகவி பாரதி நெஞ்சில் பார்த்துக் கொண்டு வலிமை வலிமை என்று குரல் கொடுத்தால் கலியுகக் கேடுகளை வெல்லலாம் என்று வழிகாட்டுகின்றான். அப்படிச் செய்தால்

மின்னல் அனைய திறல் ஓங்குமே! உயிர்
வெள்ளம் கரையடங்கிப் பாயுமே!
தின்னும் பொருள் அமுதமாகுமே – இங்கு
செய்கையதனில் வெற்றி ஏறுமே!

என்று வாக்குறுதி தருகின்றான். மனதில் கவலை எனும் இருள் மட்டும் சூழாமல் பார்த்துக்கொண்டால் இதெல்லாம் நடக்கும் என்பது கவிவாக்கு.

தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. சோம்பி நிற்கும் மனிதனிடம் துன்பங்கள் உற்பத்தி ஆகின்றன. சோம்பலும் கவலையும் நமது துயரங்களை இருமடங்காக்கிவிடும். உடலில் சோம்பலும் உள்ளத்தில் கவலையும் வளர விடக்கூடாது. மனம் என்கின்ற மாளிகை ஒளிவீசும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட வேண்டும். அதனை இருள் அடர்ந்த குடிசையாக வைத்திருக்கக் கூடாது. ‘தன்னை உருவாக்குபவனும் சிதைப்பவனும் தானே’ என்கிறார் ஜேம்ஸ் ஆலன்.

‘நம்முடைய எண்ணமும் வார்த்தையும் செயலும் வாழ்வில்பாராட்டத்தக்க குறிக்கோளை கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கை முழுமையானதாக ஏற்று கொள்ளப்படும்’ என்றார் நெப்போலியன் ஹில் என்ற அறிஞர்.

குறைபாடுகளை எண்ணிக் குமுறுபவர்கள் இறைவன் தமக்கு தந்த வரங்களை எண்ணிப் பார்த்து நிம்மதி கொள்ள கற்றுக்கொண்டால் பார்த்து நிம்மதி கொள்ள கற்றுக்கொண்டால் வாழ்க்கை சோலைவனமாகி விடும்.

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக – அன்னை
மடியை விரித்தால் எனக்காக

என்பது கவிஞர் கண்ணதாசனின் கொண்டாட்டம் ஆகும். இந்த உணர்வு நமக்கு வந்துவிட்டால் வானமும் பூமியும் நமக்காக என்ற நிறைவு ஏற்பட்டுவிடும். அழகிய பறவைகள் நீலவானில் சிறகடித்துப் பறக்கின்றன. கருமேகங்களும் ஒன்றின்மீது ஒன்று படுத்துப் புரள்கின்றன. மாடியில் நின்று மாலை நேரத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கீழே வீதியில் கிறீச்சிட்டபடி சிறுமிகள் பலர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ‘பழம் பழம்’ என்று கூவிக்கொண்டே பழவண்டிக்காரன் சென்று கொண்டிருக்கிறான். மேற்கு திசையில் மூழ்கும் கதிரவன் பாய்ச்சிய பொன்னிறத்தில் கதிரவன் தகதகக்கின்றது. அடுத்த வீட்டுத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் இருவாட்சி, மல்லிகை, நித்யமுல்லை, செண்பகப் பூக்களின் வாசம் வீட்டுக்கார்ரின் அனுமதி இன்றி வேலிதாண்டி வந்து என்மீது படர்கின்றது. மூன்றாவது வீட்டில் ‘குறையொன்றும் இல்லை கோவிந்தா!’ என்று இசை ஆசிரியரிடம் பாடம் படிக்கிறாள் ஒரு மாணவி. அவளது இனிய குரலில் வாழ்க்கை வசந்த காலங்களால் உருவாக்கப்பட்டது’ என்ற பொருளில் அமைந்த கல்கியின் பாடல் வரிகள் மனதின் புல்வெளிகளின் மீது பனிபொழிகின்றது. மனைவி அன்போது கொடுத்த இனிய காபியின் கசந்த சுவை நாக்கில் இன்னமும் மீதி இருக்கின்றது. மாடி முற்றத்தில் உலவும்போது ஊருக்கு போயிருக்கும் எங்கள் வீட்டுக் குழந்தையின் பிஞ்சுக்கரம் கொட்டும் காட்சி நினைவில் அலை மோதுகின்றது.

‘இதற்கு மேல் என்ன தேவை?’ என்று மனம் கேள்வி கேட்கின்றபோது ‘குறையொன்றுமிலை கோவிந்தா’வும் உலகம் பிறந்தது எனக்காக’வும்

காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்!

என்ற பாரதி கவிதையும் ஒன்று கலந்து ஓருணர்வாகி நெஞ்சில் இனிமை ஏற்படுத்துகின்றது. இவையெல்லாம் கடவுள் நமக்களித்த வரங்கள் அல்லவா? நமக்கு சொந்தமில்லாத எத்தனையோ இன்பங்கள் நமக்காக நம்மைச் சுற்றி நமக்கு மகிழ்ச்சி தருவதற்காக காத்திருக்கின்றன. ஆனால் எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற அச்சமூட்டும் கற்பனைகளால் நிகழ்காலத்தை நரகமாக்கிக் கொள்பவர் பலர் உண்டு.

“நேற்று நல்லதே நடந்தது; இன்று நல்லதே நடக்கின்றது; நாளை நல்லதே நடக்கும்!” என்கின்ற நம்பிக்கையை பகவத்கீதை தருகின்றது. இந்த உணர்வை முதன்மை உணர்வாக மனதில் வைத்து பூட்டிக் கொண்டால் மனம் நல்லுணர்வு மலர்களால் அலங்கரிக்கப்படும். அப்படி அலங்கரிக்கப்பட்ட மனம் நமிடம் இருந்தால் பூமியில் சொர்க்கத்தைக் காணலாம்.

– தொடரும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்