Home » Articles » கேள்வி பதில்கள்

 
கேள்வி பதில்கள்


பாலசுப்ரமணியம்
Author:

1. தொழில் வளர்ச்சி (or) பொருளாதார வளர்ச்சிக்காக நியாய நெறிமுறை மீறல்கள், நுணுக்கங்கள் தந்திரங்கள் என்ற பெயரில் ஏற்கப்படுவதைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

– ஆறுச்சாமி, அன்னூர்

தொழில் நெறிமுறைகள் காலத்துக்கு காலம் மாறிவருவதை தடுத்து நிறுத்த முடியாது.

நாடு, இனம், மொழி, மதம், சமயம், கலை, கலாச்சாரம், பண்பாடு, அறிவியல் போன்றவற்றில் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதானே இருக்கின்றன.

எந்தத்துறையில் அணுகுமுறைகள் மாறவில்லை என்கிறீர்கள்?

இங்கு பிரச்சினை என்னவென்றால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நீங்கள் விரும்புது போல் இல்லை என்பதுதான்!

உங்களுக்குத் தெரிந்த, உங்களுகுப் பிடித்தமான ஒரு அளவுகோலை வைத்துக் கொண்டு இது இப்படித்தான் இயங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்குள்ளே இருக்கிறது உங்கள் எதிர்பார்ப்புக்கு முரணான செயல்பாடுகளோடு உங்களால் ஒத்துப் போகமுடியவில்லை.

தொழில் வளர்ச்சியிலோ, பொருளாதார மேம்பாட்டிலோ அனுபவமற்ற சாமானியர்களின் ஆதங்கம்தான் உங்களுடையதும்.

சாமானியர் உலகம் வேறு
வணிக உலகு வேறு.

பல கோடிகளை முதலீடு செய்து, வங்கியில் கடன் பெற்ற, தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் நிறுவி, பலருக்கு வேலை வாய்ப்பையும், ஊதியத்தையும், வழங்கி, பல குடும்பங்களை வாழவைப்பவர்களுக்கு மட்டுமே வெற்றியின் அவசியமும், தோல்வியின் விளைவும் -வேதனையும் புரியும்.

பார்வையாளருக்கும், விளையாட்டாளருக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன.

விளையாட்டாளர்களுக்கு வெற்றி பெறவேண்டிய பொறுப்பு இருக்கிறது. போராட்டங்களுக்கு ஈடு கொடுத்து, சமாளித்து சாதிக்கவேண்டும்.

பார்வையாளர்களுக்கு இது எதுவுமே கிடையாது. திடலுக்கு வெளியே இருந்து கொண்டு விளையாட்டை, விளையாட்டாளனை விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள்.

உங்களுடைய கேள்வி – நீங்கள் விளையாட்டாளனல்ல, விமர்சகன் என்று அடையாளம் காட்டுகிறது.

மாறி வரும் உலக நடப்புக்கேற்ப, தங்களை தயார்படுத்திக் கொள்பவர்கள் வெற்றியாளர்களாகவும், முடியாதவர்கள் விமர்சகர்களாகவும் மட்டுமே இருப்பார்கள்.

விமர்சனங்கள் – விமோசனமல்ல.

சிந்தித்துப் பாருங்கள். உண்மை உறைக்கும்.

2. தனிமனித பொருளாதர முன்னேற்றத்திற்கு காதல் (எதிர்பாலினத்தின் மீதான ) தடையா?

– ரமேஷ்பாபு, சத்தியமங்கலம்

காதல் வசப்படுவதில் தவறில்லை, வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பகுதி காதலாகும். ஒரு பகுதி முழுமையல்ல. நேர நிர்வாகம் (Time Management) செய்யுங்கள். காதலிக்க நேரம் ஒதுக்குங்கள். காதலே கதியென்று முன்னேற்றத்தை மூட்டை கட்டிவிடாதீர்கள்.

எலும்பைக் கடித்த சுவைக்கின்ற நாய்தான் சுவைப்பது தன் வாயிலிருந்து வடிகின்ற ரத்தம் என்பதை அறியாதது போன்றது;

காதல் மட்டுமே வாழ்க்கை எனும் மயக்கத்தில் விழுந்து கிடப்பவர்கள் தான் சிதைத்துக் கொண்டிருப்பது தன்னுடைய எதிர்காலத்தைத்தான் எனபதை அறியாதவர்களாவர்.

3. அறிவியல் கண்டுபிடிப்புகளினால் கயமைதனம் பெருகிவிட்டதாகக் கருதுகிறேன் தங்களின் கருத்து என்ன?

– மூர்த்தி, ஈரோடு

எந்த உலகத்தில் வாழ்கிறீர்கள்? ஒவ்வொரு கணமும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் அளப்பரிய நன்மைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். மேம்பாடுகள் விண்ணோக்கி வளர்ந்து கொண்டிருக்கின்றன.

எங்கோ, ஏதோ சிலவற்றில் கோளாறுகள் இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த அறிவியல் கண்டுபிடிப்பையே குறை சொல்வதா? மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா?

4. பண்டிகைகள், திருவிழாக்கள், வீட்டு விசேஷ நிகழ்ச்சிகள் தற்காலத்திற்கு தேவையானதா? தேவையற்றதா?

– வெள்ளியங்கிரி, பொள்ளாச்சி

ஒரு இனத்தின் கலை, கலாச்சார, பண்பாடுகள் தான் அந்த இனத்தின் ஆணி வேர்களாகும். இன்று உங்களை அடையாளப் படுத்திக் கொண்டிருப்பதும் இந்த வேர்கள் தான். வேர்கள் மரத்தை நிற்க வைத்துக் கொண்டிருக்கின்றன. வேர்களைப் பிடுங்க நினைப்பது அபத்தம்.

5. மீடியாக்கள் மக்களின் குறுக்கு புத்தியினை அதிகரிக்கச் செய்கின்றனவா?

– துரைசாமி, பெங்களூர்

கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது இன்றைய தலைமுறையின் புத்திசாலித்தனம் பெருமளவு உயர்வு கண்டுள்ளது என்பது மறுக்கவியலாத உண்மையாகும்.

அடிமைப்பட்டுக் கிடந்த அன்றைய பெண்களோடு இன்றைய பெண்களை ஒப்பிட்டுப்பாருங்கள். அனைத்து துறைகளிலும் உயர்நிலை அடைந்துள்ளார்கள்.

இத்தகு மாற்றங்களுக்கும், குற்றங்களுக்கும் மீடியா – தகவல் சாதனங்களின் பங்கு அளப்பரியதாகும்.

மீடியாக்களின் ஆதிக்கம் இல்லாத அந்தக் காலத்து புராணங்களைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள் போட்டியும் – பொறாமையும், காமமும், கற்பழிப்பும், வக்கிர புத்தியும் – குறுக்குப் புத்தியும் இல்லாத காவியம் ஏதேனும் உண்டா?

எந்த மீடியாவைப் பார்த்து இந்திரன் அகலிகையை காமுற்றான்?

நேர்மறை(Positive), எதிர்மறை (Negative) போல நல்லதும்/கெட்டதும் இயற்கைப் படைப்புகளே. இரவுக்கும் பகலுக்கும் உள்ள தவிர்க்க முடியாத உறவுபோல அன்றும், இன்றும், என்றென்றும் நல்லெண்ணம் உள்ளவர்களும், குறுக்கு புத்தியுள்ளவர்களும் இருந்து கொண்டேயிருப்பார்கள்.

மீடியாக்களினால் குறுக்கு புத்தி கூடிவிட்டதற்கு நிகராக புத்திசாலித்தனமும் – நல்லெண்ணமும் கூடியுள்ளது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். மீடியாக்கள் ஒரே விஷயத்தை ஒரே மாதிரியாக நீண்ட காலத்துக்கு சொல்லிக் கொண்டிருக்க முடியாது. காலத்துக்கேற்ப மாற்றங்கள் வரும்.

அன்றைய பாகவதர் காலத்து காதல் காட்சிகளை உங்களால் இன்று ரசிக்க முடியாது. அதுபோலவே இன்றைய காதல் காட்சிகளை நாளை தலைமுறை கிண்டலடிக்கும். இந்த மாற்றங்களைத் தவிர்க்க முடியாது. இன்று நடந்து கொண்டிருப்பது – நாளை இருக்காது.

உங்கள் கவலை எனக்குப் புரிகிறது. கவலைப்படாதீர்கள். எத்தகைய சூழலிலும் வாழுவதற்குரிய பக்குவத்தை மனிதகுலம் இயல்பாகவே கொண்டுள்ளது.

இனிமேல் பொறுக்க முடியாது என்ற அளவில் தீமைகள் பெருகும்போது அதைத் தடுத்து நிறுத்த ஒரு தலைவன் தோன்றுவான்.

இது இயற்கை நியதியாகும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்