Home » Articles » அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை

 
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

நம் வாழ்க்கை – தொடர்

இனிய வாசகர்களே!

வாழ்க வளமுடன், தீபாவளித் திருநாள் நம் அனைவர் வாழ்க்கையிலும் அல்லவை அகற்றி நல்லவை நடத்திட வாழ்த்தி மகிழ்வோம்.

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்” இவ்வரிகள் நமக்கு அறிமுகமானவை. இதைச் சிறிது மாற்றி “நாமார்க்கும் அடிமையல்லோம்; நமனை அஞ்சோம்” என உரத்துச் சப்தமிடுவோம். அடிமையுணர்வு இல்லாதபோது சாவுக்கும் பயப்பட வேண்டியதில்லை என்றே இவ்வரிகள் நமக்கு போதிக்கின்றன.

“அஞ்சியஞ்சிச் சாவாரடி கிளியே! இவர்
அவணியில் அஞ்சாத பொருளில்லை”

என்றார் முண்டாசுக் கவி பாரதி. அடிமைத்தனம் எந்நேரமும் பய உணர்வைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அடிமைத்தனம், இன்றைய நிலை, தன்னம்பிக்கைக்கான பாதிப்பு, அதிகரிக்கும் வழிகள் ஆகியவற்றை விரிவாய் காண்போம்.

அடிமைகள் பலவிதம்

அடிமைத்தனம் என்பது நாம் அறியாமலேயே நம் வாழ்வில் கலந்துவிட்டது. நாம் நம் விருப்பப்படி நியாயமானவைகளைக்கூட பேசவும், செய்யவும் இயலாத நிலையில் பிறர் என்ன சொல்வார்களோ என்ற எதிர்பார்ப்புடன், பிறருக்காகவே பயவுணர்வுடன் வாழும் நிலையை அடிமைத்தனம் என்று கூறலாம்.

உணவு, போதை, புகை, பொருட்கள், ஆடைகள் போன்ற பலவற்றுக்கு நாம் பல சமயங்களில் அடிமைகளாக இருக்கிறோம். பலர் விதிவிலக்காகவும் வாழ்ந்து வருகின்றனர். நம் விருப்பமின்றி, சூழ்நிலைக் கைதியாக பிறரது வற்புறுத்தலினால் செயல்படும் நிலை என்றும் கூறலாம்.

தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் பலர் கூறுவது; பிறருக்கு கம்பெனி கொடுப்பதற்காக ஆரம்பித்து, பிறகு அது இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலைக்குச் சென்று விட்டது. ஜாலி, நட்பு, உபசாரம், பண்பாடு என்ற பெயர்களில் அவர்கள் தங்கள் சுதந்திரத்தை அடகு வைக்கின்றனர். இதனால் அவர்களின் தன்னம்பிக்கை குறைந்து, மறைந்து விடுகின்றது.

கோவை நண்பர் ஒருவரிடம் சமீபத்தில் பேசினேன். பஸ் நிலையம் அருகில் 10 மதுபார்கள் இருப்பதாகவும் கடைகளில் மாதம் ஒன்றுக்கு சுமார் முக்கால் கோடி ரூபாய் மதுபானங்கள் இக்கடைகளில் விற்பனையாவதாகவும் கூறி வேதனைப் பட்டார். பெரும்பாலும் இளைஞர்கள் வருவதாகவும் தெரிவித்தார். நதியின் ஆரம்பம் போல் துவக்கும் இத்தீய பழக்கம் கடைசியில் அவர்களை அழித்து விடும் என்பது தெரியாமலே உள்ளனர். இதேபோல் புகைபிடித்தல், இப்பழக்கமுள்ள பலர் கூறுவது அது மனதுக்கு நிம்மதியைத் தருகிறது. கவலைகளை மறக்கச் செய்கிறது. இப்படிப்பல , அவர்கள் கூறுவது உண்மையென்றால் வந்துவிட்ட நிம்மதியும், மறந்துவிட்ட கவலைகளும் நீடிக்க வேண்டுமல்லவா? மீண்டும் தொடர்ந்து அப்பழக்கங்களைச் செய்வது ஏன்?

பெண்கள் டி.வி. பார்ப்பதற்குக அடிமைகளாகி விட்ட நிலை இன்றும் தொடர்கிறது. ஒருநாள் டி.வி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படாத போது, எதையோ பறிகொடுத்தவர்கள் போல் அந்தநாளைக் கழிக்கின்றனர். பொதுவாக டீ, காபிகுடிப்பது, அதிலும் அதிகமாய் குடிப்பது ஆண்களின் பழக்கம். சமீபத்தில் ஒரு பெண் உடல் எடையைக் குறைக்க ஆலோசனை கேட்டு வந்தார். அவர் தினமும் நான்கைந்து முறை வீட்டிலேயே டீ குடிப்பதாய் கூறினார். அப்படிக் குடிக்காவிட்டால் எதையோ இழந்தது போல் இருப்பதாயும் தெரிவித்தார். சாப்பாடு கூட வேண்டாம். குறிப்பிட்ட நேரத்தில் சிறிது டீ இருந்தால் போதும் என்றார். இதுபோன்று நம் வாழ்வில் பல வகைகளில் அடிமைகளாக இருப்பதை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம். பொருள், புலன் இன்பம், புகழ், அதிகாரம் என்பதே அவை.

பொருள்:

பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை என்றார் செந்நாப்புலவர். ஆனால் பொருள் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதைப் பலரும் அறியவில்லை. தற்கால வாழ்க்கை முறை, குழந்தை வளர்ப்பு என எல்லா நிலைகளிலும் பொருள் பற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பொருளை அளவறிந்து செலவழித்து இன்பம் பெறுவதே சிறந்த வாழ்வு எனலாம். பொருளின் பின் மயக்க நிலையில் இன்று எல்லோருமே ஓடிக்கொண்டு இருக்கிறோம். இதனால் வாழ்ந்து மகிழ வேண்டிய இளமை வீணாகிறது. நம்மிடமுள்ள பொருள், நமக்குச் சுமையாக இருக்கக் கூடாது; சுகமாக இருக்க வேண்டும். நேர்மையான வழியில் ஈட்டும் பொருள் இந்தச் சுகத்தைத் தரும். பொருள் என்பது பணமாகவோ அதன் மூலம் நாம் வாங்கி நம் வாழ்நாளில் உபயோகிக்கும் பொருட்களாகவோ இருக்கலாம். உபயோகிக்காதவைகளைத் தேவைப்படுவோருக்குத் தரும் எண்ணம் நல்ல எண்ணமாகும். அப்படி இருந்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாய் இருக்கும்.

நம் முன்னோர்கள் இதற்காகத் தான் ஆயுத பூஜை போகிப் பண்டிகளை என்பவைகளை உருவாக்கினார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. தேவையில்லாத உபயோகிக்க இயலாத பொருட்களை அகற்றி, சுத்தமாகச் செயல்படும் நிலைக்கு இவைகள் நம்மை இட்டுச் செல்கின்றனர்.

பள்ளி, கல்லூரியில் முதல் மதிப்பெண்; விளையாட்டு, போட்டிகளில் பல பரிசுகள், கோப்பைகள் என்ற நிலையில் படிப்பு முடிந்தவுடனே கை நிறைய சம்பளத்துடன் (மாதம் ரூ. 50,000-) வேலைக்குச் செல்லும் இளைஞர்கட்கு பொருளின் அருமை தெரிவதில்லை. வறுமை, கஷ்டம் தெரிய வாய்ப்பில்லை. ஒரு நாளின் பெரும் பகுதியைப் பணிக்கும், எஞ்சிய சிறு பகுதியை உறக்கத்துக்கும் செலவிட்டு, அடிமைகளாய் வாழ்ந்து வருகின்றனர். பழக்கவோ, உறவினர் வீட்டு விசேடங்களுக்குச் செல்லவோ நேரமின்றி உள்ளனர். இது அவர்களாகவே போட்டுக் கொண்டு கைவிலங்கு.

சமீபத்தில் நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். இன்று தங்கத்தால் விலங்கு என்றால் அதை மாட்டிக்கொள்ள “நான், நீ” எனப் போட்டி போட்டு வரும் நிலையில் மக்களிடம் பொருளாசை மலிந்து விட்டதாய் கூறி வருந்தினார். இலவசம் என்றால் உறக்கமின்றியே பலமணி நேரம் கால் கடுக்க நின்று பெற விரும்புகின்றனர். அரசாங்கமும் இலவசமாய் பல பொருட்களைக் கொடுப்பதால் பெரும்பாலானவர்கள் சோம்பேறித் தனத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.

புலனின்பம்:

நமது மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து புலன்களால நாம் பெறும் இன்ப உணர்வுகளே புலனின்பம் எனப்படுகிறது. நமது சீவகாந்தம் இப்புலன்களின் வழியே செலவாகி நம்மால் உணரப்படும் உணர்வே இவை.

உணவு ருசியாக, சுவையாக உள்ளதென நாக்கு தெரிவிக்கிறது. இன்பமடைகிறோம். அதே உணவு அதிகமாகி விட்டாலோ, அஜீரணமாகி விட்டாலோ துன்பம் அடைகின்றோம். உணவில் கட்டுப்பாடு இல்லாமல் அடிமையாக இருப்பதால் தான் இன்று பெரும்பாலோர் நோயாளியாக உள்ளனர்.

அதேபோல் T.V. நிகழ்ச்சிகள் கண், காது இவைகட்கு இன்பத்தை அளிப்பதாய் தவறாக எண்ணிக் கொண்டுள்ளோம். நம் உடலின் சக்தியை அவை திருடிக்கொண்டு, நம்மில் பெரும்பாலோரை மனநோயாளிகளாக்கி விட்டன. தினசரி கடைமைகளைச் சரியாகச் செய்ய முடியாத பலரையும் பார்த்துள்ளோமே!

இனிப்புக்கு, சுவையான சாப்பாட்டுக்கு அடிமையாகாத சர்க்கரை நோயாளிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அதிகாரம்:

அதிகாரம் என்பது பிறரை நல்வழியில் நடத்திச் செல்ல சிலருக்கு வழங்கப்பட்டுள்ள கடைமைகள் என்றால் அது மிகையாகாது. ஆனால், இன்றைய நிலை: அதிகாரம் என்பதை உரிமையாக எடுத்துக் கொண்டு, சமுதாய நலனைப் புறந்தள்ளி செயல்படுகின்றனர். தமக்குத் தேவையான வசதிளை முறையான உழைப்பின்றி, பிறர் மூலம் எளிதில் பெறுவதற்கு அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர். இதனால் இன்று நாட்டில் ஊழல் மலிந்து விட்டது. இது போன்றவர்கள்தான் (அரசியல்வாதிகள், திரையுலக கலைஞர்கள், உயர் அதிகாரிகள்) இன்றைக்கு இளைஞர்களின் ஹீரோக்களாக உள்ளனர். அவர்களைப் போலவே உழைக்காமல் பொருள் ஈட்ட முயல்கின்றனர். இந்நிலை இளைஞர் சமுதாயத்தைத் தனிநபர் வழிபாட்டுக்கு அடிமைகளாக்கி விட்டது. சுயமாய் சிந்திக்காமல் பிறர் சொல்வதை வேதவாக்காய் எட்டுத்துக்கொண்டு மகிழ்வுடன் அடிமைகளாய் செயல்படுகின்றனர்.

தற்போது “முற்பகல் இன்னா செய்யின் பிற்பகல் தனக்கே அதுவரும்” என்ற வாக்குபடி, ஆட்சிமாற்றமும், அதன்பின் வழக்குகளும் அணிவகுத்து வருதைப் பொதுமக்கள் வேடிக்கை தான் பார்க்க முடியும். அதிகாரம் என்பதைப் பிறருக்கு எந்த அளவு உபயோகமாக இருக்க முடியும் என திட்டமிட்டு சேவை செய்ய ஒரு வாய்ப்பாகவே கருதவேண்டும் என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

புகழ்:

ஒருவரது பேச்சு பிறருக்கு உபயோகமானாலோ, ஒருவரது செயல் மற்றவர்கட்கு நன்மை செய்தாலோ, அவற்றால் பயனடைந்தவர்கள் மகிழ்ந்து, உள்ளம் நிறைந்து, அம்மகிழ்ச்சிக்குக் காரணமானவர்களைப் பாராட்டுவதே புகழ் ஆகும். இது இயல்பாகவே இருக்க வேண்டும். புகழ் பெற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டுச் செயல்படுவது புகழைத் தரும்; ஆனால் அப்புகழ் கானல் நீராய் மறைந்துவிடும். இயல்பான செயல்கள் மூலம் பிறரிடமிருந்து பாராட்டைப் பெறவேண்டும். பெறும், சொல் செயலுக்கு வாழ்க்கை மறைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் அதனால் பெறும் புகழால் அவருக்கு மதிப்பில்லை. பிறருக்கு நல்ல ஓர் உதாரணமாய் இருக்க வேண்டும்.

இன்று திரையுலக கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் அதிலும் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் பலர் புகழ் பெற்று விளங்குகின்றனர். ஆனால், அவர்களது தனிமனித வாழ்க்கை சிறை வாழ்க்கையைவிட மோசமாக உள்ளது. சுதந்திரமாய் தன் சிறு சிறு விருப்பங்களைக் கூட நிறைவேற்ற முடியாமல் சூழ்நிலைக் கைதிகளாக உள்ளனர்.

அடிமையாதல்: (TEMPT)

இவை தவிர மற்றவர்களது பேச்சும் செயலும் நமக்கு கோபத்தை உண்டாக்க, தவறான செயல்களில் ஈடுபடவைத்தால், நாம் அவர்கட்கு அடிமையாகி விட்டதாகவே அர்த்தம். நம்மில் பெரும்பாலானவர்கள் பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்ததில் அச்செயலில் ஈடுபடாவிட்டால், அவர்களது மனம் அலைபாயும். பிறர் சொல்லும் செயலும் நம்மை உணர்ச்சி வயப்படாத நிலைக்கு நாம் சென்று விடுவதே விடுதலை, சுதந்திரம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையை அடைய மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்குரிய ஒரே பயிற்சி தியானம் செய்தல், தியானம் என்பதற்கு இரண்டறக் கலத்தல் என்று பொருள்

அடுத்த இதழில்…
“தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வழிகள்”

– தொடரும்….


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்