Home » Articles » மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்

 
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்


கந்தசாமி இல.செ
Author:

நிறுவனர் பக்கம்

இன்றைய சமுதாயம், எதை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறது என்பதை யாராலும் அறுதி இட்டுச் சொல்ல முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தச் சமுதாயத்தை வழி நடத்திச் செல்லும் நமது தலைவர்கள் எப்படி எல்லாம் போலித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்பதிலிருந்து, இன்றைய சமுதாயத்தின் நிலையை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

தொடர்பு இல்லை

முன்பெல்லாம் சொல்வதற்கும் செய்வதற்கும் தொடர்பு இருக்கும்; சிறிதளவே வேறுபாடு இருக்கும். இப்போது சொல்வதற்கும் செய்வதற்கும் சிறிதளவும் தொடர்பே இருப்பதில்லை. தலைவர்கள் என்றால் இப்படித்தான் பேசுவார்கள் என்ற நிலையே பொதுவாக எல்லார் உள்ளத்திலும் படிந்து வருவதைக் காண்கின்றோம். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் – மிகவும் பழக்கப்பட்டவர்கள்போல் ஆகிவிட்டோம். அதுவே வாழ்வின் நடைமுறை போலவும் ஆகிவருவது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

வீணாகிறது

மேடை அமைத்துக் கூட்டங்கள் நடத்துகிறார்கள், கருத்தை விளக்கவும் மக்களது அறியாமையைப் போக்கவும் நடத்தப்படுகின்ற அந்த நிகழ்ச்சிகளில் வண்ண வண்ண விளக்குகளும், மலர்த் தோரணங்களும் ஏதோ ஒரு திருமண நிகழ்ச்சிபோல் நடத்தப்படுகின்றன. அங்கே பேச வருகின்ற தலைவர்களுக்கு ஆள் உயர மாலை, அதுவும் ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்படுகின்றது. மாலை போடும் நேரம்வரை மலர்கள் வாடாமலும் உதிராமலும் இருக்கவேண்டும். சிறிய மாலையாக இருந்தால் தலைவர் கோபித்துக் கொள்வார்; அவரை அவமதித்தது போலவும் ஆகும். ஒரு மாலை மட்டும் போட்டால் போதாது; வெவ்வேறு அமைப்புகளில் இருந்து மாலை போட்டால், அல்லது நாமே வெவ்வேறு பெயர்களில் சூட்டினால்தான் தலைவர் கூடுதல் மகிழ்ச்சி அடைவார். மாலை ஒரு குட்டி மலைபோல் மேஜையின்மீது குவிந்தால் தான் தலைவரை நாம் கௌரவப்படுத்தியதாகப் பொருள். இப்படி நினைத்துக் கொண்டு, நிகழ்ச்சிகள் தோறும் ஒவ்வொரு மாலைக்கும் ரூபாய் 100 முதல் 200 ரூபாய் வரை செலவு செய்வதைக் காண்கிறோம். மக்களின் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணாகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

கண்டிப்பு

“எளிமையை விரும்புகின்றவர்கள் நாங்கள்” என்று சொல்லும் தலைவர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டாமா? ‘எனக்கு மாலை மேடை அமைக்க வேண்டாம். வீதிக்கு வீதி வளைவுகள் அமைக்கவேண்டாம்’ என்று சொல்ல வேண்டாமா? இப்படி நாம் சொன்னால் அவர்கள் ஒரு கேள்வியைப் போடுவார்கள். ‘பூக்கடைக்காரர்கள் எல்லாம் பிழைக்க வேண்டாமா? என்பார்கள். இப்படி ஊதாரித்தனமான செலவால்தான் அந்த வியாபாரிளைப் பிழைக்க வைக்கவேண்டும் என்பது வேண்டாத ஒன்று. இது பீடித் தொழிலாளர்கள் பிழைக்க வேண்டும் என்பதற்காக எல்லோரும் பீடி குடியுங்கள் என்று சொல்வதுபோல் இருக்கிறது. இப்படி இவர்கள் ஒரு மாலைக்குக் கேட்ட விலை கொடுத்து வாங்குவதால், சாதாரண மக்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்குப் பூ வாங்கும் போதும், பூக்கடைக்காரர்கள் பூ வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற குடும்பத்துக்குப் பெண்மணிகள் விலை உயர்வைப் பார்த்துவிட்டு வெறுந்தலையுடன் இருப்பதையும், பூ வைத்துக் கொள்வது கூட வசதி உள்ளவர்களால் தான் முடியும் என்ற நிலை வளர்ந்துள்ளதை காண்கின்றோம். சாதாரண மக்களுக்குப் பூ வைத்துக்கொள்வதுகூட ஆடம்பரமானதாகவும், அதிகப்படியான செலவினமாகவும் இன்று ஆகிவிட்டது.

மரியாதைகள்

இந்த மாலைகளில்தான் இப்படி ஆடம்பரம் என்று இல்லை. சில சமயங்களில் இவர்கள் வரும் வழி எல்லாம் மலர் தூவப்படுகிறது. கோயில்களில் குடமுழுக்குச் செய்து கும்பாபிசேகம் நடத்துவதைப்போல மேளதாளங்களுடன் வரவேற்பு . சின்னஞ் சிறு குழந்தைகளைத் தலைவர்கள் வரும் வழியின் இருமருங்கும் வெய்யிலாக இருந்தாலும் கால்கடுக்க நிற்க வைத்து மரியாதை செய்வது, அன்பளிப்புகள் கொடுத்து அவர்களை மகிழ்விப்பது. எந்தத் தகுதியும் இல்லாதவர்களை எதிர்பாராத விதமாகக் கிடைத்துவிட்ட பதவிக்காக, ‘இந்திரன் சந்திரன்’ என்று காது கூசும் அளவுக்குப் பாராட்டுவது – விளம்பரம் செய்வது, அதைக்கேட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு இத்தனையும் பொய் என்று தெரியும், ஏன்? அத்தகைய நிகழ்ச்சியை நடத்துகின்றவர்களுக்கும் தெரியும்; அதை ஏற்றுக் கொள்ளுகின்றவர்களுக்கும் கூட உண்மை நிலை தெரியும். எல்லாருக்கும் எல்லாம் பொய் என்று நன்றாகவே தெரியும். இருந்தாலும் நடக்கின்றதே! நம்மை நாம் தெரிந்தே ஏமாற்றிக் கொள்கிறோம். இப்படிச் செய்வதால் சில தலைவர்கள், தங்களுக்கு இல்லாத தகுதிகள் எல்லாம் இருப்பதாக நினைத்து மயங்கிப் போகிறார்கள்.

மலர்க் கிரீடங்கள்

சில இடங்களில் இன்னும் ஒருபடி மேலே போய்க் கிரீடங்கள் சூட்டி இந்தத் தலைவர்களை மன்னர்களாக்கிக் கற்பனை உலகில் மிதக்க வைத்து அந்தப்புர நினைவுகளையும் உண்டாக்கிவிடுகிறார்கள். வால் போஸ்டர்களில் (மிகப்பெரிய சுவரொட்டிகள்) புகைப்படங்களும் பத்திரிகைச் செய்திகளும் அவர்களை மதிமயங்கச் செய்துவிடுகின்றன. சாதாரண நிலையில் இருந்தவர்கள் தன்னை மறந்த நிலைக்கு ஆளாகி, நிதானம் இழிந்தும், நிலையில் இழிந்தும் போகிறார்கள். இதற்கு அவர்கள் மட்டும் அல்ல, அவர்களைச் சார்ந்துள்ளவர்களும் காரணமாக இருக்கிறார்கள். தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்யாதவர்கள் எல்லாம் இத்தகைய காரியங்களைத்தான் செய்வார்கள்.

அனுமதிக்கலாமா?

தலைவர்களால் ஆதாயம் அடைபவர்கள் எல்லாம் இத்தகைய காரியங்களைத்தான் செய்வார்கள். ஆனால் தலைவர்கள் இதை அனுமதிக்கலாமா? இதை இதைத்தான் ஏற்றுக்கொள்வேன். ஆடம்பரமாகச் செலவு செய்தால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாட்டேன் என்று வரையறைத்து வற்புறுத்திச் சொல்லிவிட வேண்டாமா? அப்படி ஓரிரு கூட்டங்களில் நடந்து கொண்டால், வெளிப்படையாகத் தெரிந்துவிட்டால், இந்த வீண்செலவுகள் எல்லாம் ஆகுமா? இந்த அற்ப சுகங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளத் தலைவர்களுக்குத் தைரியம் வரவேண்டாமா?

என்ன நடக்கிறது?

ஒரு ஊர்க்காரர் இப்படிச் செய்தால், அடுத்த ஊர்க்காரர் இதைவிடச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்று செலவு செய்கிறார். ஒரு அலுவலர் இப்படிச் செய்தால், நாமும் அவர்போல் செய்யாவிட்டால், கோபித்துக் கொண்டுவிட்டால் என்ன செய்வது என்று பயந்துகொண்டு செய்கிறார்கள். இன்னும் சிலர் வேண்டா வெறுப்பாக வேறு வழி இல்லையே என்று செய்கிறார்கள். துணிந்தவர்கள் எளிமையாகக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தால், இந்த அதிகாரிக்குத் திறமையில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது; இந்த ஊர்த் தொண்டர்கள் பயனில்லை என்று குறைகூறப்படுகிறது. பலர் அதற்காகவே செய்கிறார்கள்; அந்த அனுபவத்திற்குப் பிறகு செய்கிறார்கள்.

தொற்றுநோய்

இத்தகைய ஆடம்பரங்கள் எல்லாம் தொற்றுநோய் போன்றது. தலைவர்களும் தலைவர்களுக்குச் சமமாகக் கருதப்படுகின்ற மேல்மட்ட அதிகாரிகளும் கடுமையாக இருந்து, இத்தகைய ஆடம்பரங்களை நிறுத்த வேண்டும். எளிமையாக நடந்தால் போதும் என்ற உறுதியை மேற்கொள்ள வேண்டும். மாறாக இப்படியே போனால் இந்த தொற்றுநோய் தீர்க்கமுடியாத புற்று நோயாக மாறி, சமுதாயத்தை நலிவுறுத்தவே செய்யும். அதனால் மக்களை விட இந்த மாலைக் கழுத்தர்கள், மலர்க்கிரீடத் தலைவர்கள் சற்றே சிந்தித்துப் பார்த்து, போலித்தனங்களை உதறி எறிவார்களாக. நாம் ஒரு சில இலட்சியங்களை முன்னிறுத்தி வறுமையில்லாச் சமுதாயத்தை அமைக்க நமது திறமைகளை செலவிடுவோமாக. பொதுமக்கள் தங்கள் கடமை உணர்ந்து செயல்படும் இன்றியமையாத காலம் இக்காலம் என்பதை உணர்வார்களாக.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்