Home » Articles » மெய்வருத்தக் கூலி தரும்

 
மெய்வருத்தக் கூலி தரும்


சூரியன்
Author:

திருவள்ளுவர் உழைப்புக்கு ஏற்ற பலன் உறுதியாக உண்டு என்று ஆணித்தரமாக கூறுகிறார். “செயலுக்கு ஏற்றவிளைவு” என்பது இயற்கை நியதிதான்.

அப்படியானால் அதிர்ஷ்டம், நல்ல நேரம், நல்ல விதி என்பதெல்லாம் என்ன?

ஒரு மனிதன் ஆற்றில் படகை துடுப்பால் செலுத்திக்கொண்டிருக்கிறான். அவன் சொல்லுகிற திசையை நோக்கி காற்று வீசினால் நல்ல நேரம் என்றும், காற்று எதிர்திசையில் வீசினால் கெட்ட நேரம் என்றும் மனிதர்கள் சொல்கிறார்கள். ஆனாலும் அவன் துடுப்பை அசைத்து செயல்புரிந்தால் அந்த அளவுக்குபடுகு நகர்ந்து சென்றே தீரும். சூழ்நிலையை சார்ந்திருந்தால் அது உடன்பாடாக மாறலாம். அல்லது எதிர்மறையாக மாறலாம். புறச் சூழ்நிலை நம் சூழ்நிலை பற்றிக் கவலைப்படாது மெய்வருத்தம் செய்தால் கூலி கிடைத்தே தீரும்.

ஒரு மாணவன் ஒரு பாடத்தில் உள்ள பத்து கேள்விகளில் ஐந்து கேள்விகளுக்கு பதில்களை படித்துவிட்டு தேர்வுக்கு செல்கிறான். பெரும்பான்மையான தெரிந்த கேள்விகள் தேர்வில் வந்தால் அதிர்ஷ்டம் என்கின்றனர். பதில் தெரியாத கேள்விகள் அதிகம் வந்தால் துரதிஷ்டம் என்கின்றனர்.

வருச ஆரம்பம் முதல் எல்லாக்கேள்விகளுக்கும் பதிலை நன்கு படித்து வைத்திருந்தால் அதிர்ஷ்டம் துரதிஷ்டம் என்பது பற்றி கவலைப்படாமல் தைரியமாக தேர்வை அணுகலாம். இங்கும் மெய்வருத்தக்கூலி தரும். எந்தக் கேள்வி வரும்’ என்பது நம் கட்டுப்பாட்டில் உள்ளது. கட்டுப்பாடில் இல்லாத விசயம் பற்றி கவலைப்படாமல் கட்டுப்பாட்டில் உள்ளனவற்றில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்.

ஒரு விவசாயி விளைப்பொருளை விளைவிக்கிறார். மார்க்கெட்டுக்கு வரும்போது விலை ஏற்றி விற்றால் அதிர்ஷ்டம் என்றும் விலை குறைவாக விற்றால் துரதிஷ்டம் என்றும் கூறுகின்றனர். கடந்த கால சில அனுபவங்களை வைத்து எந்த சீசனில் விலை ஏற்றமாக இருக்கும். எந்த சீசனில் விலை இறக்கமாகி இருக்கும் என்பது பற்றி மார்க்கெட் கணிப்பு செய்யலாம்; அல்லது முன்பு இருந்தே பண சேமிப்பு வைத்திருந்து பொருளை உடனே விற்காமல் விலை ஏற்றமடைந்த உடன் விற்கலாம். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளுகிற விசயம் என்னவென்றால் அறிவை பயன்படுத்தி நிகழ்வுகளை ஆராயந்து காரண காரியங்களை கண்டுபிடிப்போம். அறிவுப்பூர்வமாக செயல்பட்டால் மெய் வருத்தக்கூலி தரும்.

குறள்

பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து
ஆள்வினை இன்மை பழி

பொருள்

நன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

விளக்கம்

சில பேரிடம் நீங்கள் ஏன் முன்னேறவில்லை? என்று கேட்டால் பல காரணங்களை சொல்கின்றனர். பொதுவாகசிலர் சொல்லுகிற காரணங்கள்
1. நான் இருக்கிற ஊர், நாடு சரியில்லை.
2. அரசியலமைப்பு சரியில்லை.
3. போதி படிப்பு இல்லை.
4. ஆங்கிலம் தெரியவில்லை.
5. பெரிய பக்க பலம் இல்லை (Support)
6. எனக்கு யாரையும் தெரியாது.
7. எனக்கு உதவி செய்யவும், வழி நடத்தவும் யாருமில்லை.
8. என்னுடைய பொருளாதார நிலை சரியில்லை.
9. நான் ராசியில்லாதவன். எதை செய்தாலும் தோல்வி மேல் தோல்வி வருகிறது.
10. நம் கையில் என்ன இருக்கிறது. எல்லாம் அவன் செயல்.
11. எனக்கு போதிய வாய்ப்புகள் இல்லை..

இப்படிப் பல காரணங்கள் தொடர்கின்றன.

வள்ளுவர் சொல்லுகிறார், எதுவும் சாதகமாக இல்லாமல் இருப்பது குற்றமில்லை. நினைத்தவற்றை அடைய வேண்டியதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதை அடைய முயற்சி செய்யாத்து தான் குற்றம்.

“அடைய முடியாது என்று ஒன்றில்லை
அதை அடைய வழி தெரியவில்லை என்பதே உண்மை”

அதாவது இதுவரை ஒன்றை நினைத்து அதை அடையவில்லை என்றால் எப்பொழுதே நம்மால் அடைய முடியாது என்று அர்த்தமல்ல. ‘அதை அடைவதற்கான சரியான வழிமுறைகளை; அறிந்து பின்பற்றவில்லை’ என்பதே உண்மை.

நான் டெல்லி செல்ல வடக்கு நோக்கி செல்ல வேண்டும். ஆனா நான் டெல்லியை சென்று சேர வேண்டும் என்று குறிக்கோள் வைத்து, எவ்வளவு வேகமாக தெற்கு திசையில் சென்றாலும் நிச்சயம் டெல்லியை அடைய முடியாது. சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தால் தான் சரியான இலக்கை அடைய முடியும்.

“முகத்தை தேர்ந்தெடுக்கும், நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடத்தில் இல்லை” என்று கவிஞர் வைரமுத்து சொன்னதுபோல் நம் கட்டுப்பாட்டில் இல்லாத நடந்து முடிந்துவிட்ட விசயங்களை பற்றி கவலைபட வேண்டாம்.

நாம் இங்கு இருக்கிறோம் என்பதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எங்கேபோகப்போகிறோம் என்பதை பற்றிமுடிவு செய்து தக்க வழிகளை பின்பற்றி தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

ஹில்லாரி முதல் முறை எவரெஸ்ட் மலை சிகரத்தை ஏறமுயற்சி செய்து தோல்வி அடைந்ததற்கு பிறகு மலையை நோக்கி கீழ்க்கண்டவாறு சொன்னார்.

ஓ மலையே நான் தாயாராகி மீண்டும் வருவேன். ஆனால் நீ வளர முடியாது. நீ அப்படியே தான் இருப்பாய். ஆனால் நான் அப்படியில்லை; நான் மனிதன்; நான் தயாராகி வந்து உன்னை வெல்வேன்.

பின் அவர் அடைந்த வெற்றிக் கதையைச் சரித்திரம் சொல்லும்.

குறள்
ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர்.
பொருள்
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.

விளக்கம்
ஒரு மனிதன் ஒரு செயலை செய்யத் துவங்கி செயல்படும்போது தடைகள் தோல்விகள், பல சமயங்களில் வருகின்றன. அப்போது மனின் நினைக்கிறான் ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது? சில பேர் இதுதான் விதியோ!’ என்று எண்ணுகின்றனர்.

ஆனால் ஒரு செயல்வீரன் – சாதனையாளன் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் செயலை வெற்றிகரமாக முடிப்பதிலேயே கவனத்தை செலுத்தி வெற்றிபெறுகிறான். “தனைகள் வருவது இயல்புதான். அது எந்த ரூபத்திலும் வரலாம்” என்று வாழ்வியலை புரிந்து செயல்படுகிறபொழுது வெற்றி நமதாகிறது.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கிறபொழுது நாம் தெரிந்து கொள்வது:

விதி என்ற ஒன்று இருக்கட்டும்; அல்லது இல்லாமல் போகட்டும். அதைப்பற்றி நமக்கு ஒரு பொருட்டில்லை.

நாம் செயல்வீர்ராக இருந்தால் – கரும யோகியாக இருந்தால் – காரிய சித்தராக இருந்தால் – செயலைச் செய்து வெற்றி பெறலாம்.

எத்தனை தடைகள் – பிரச்னைகள்- சிக்கல்கள் -சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து செயல் செய்து செய்து – செயல்புரிவது நம் இயல்பு ஆகிவிடும்.. சக்தியும், திறனும் பெருகும், வாழ்வு வளர்ச்சியுறும்.

 

1 Comment

  1. jashu says:

    உழைப்பே உயர்வு தரும் கட்டுரை

Leave a Reply to jashu