Home » Articles » கடமைகளை மறக்கலாமா?

 
கடமைகளை மறக்கலாமா?


தங்கவேலு மாரிமுத்து
Author:

மனிதர்கள் அனைவருக்கும், வாழ்நாள் முழுவதும், கணக்கற்ற கடமைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. திரும்பத் திரும்பச் செய்யும் கடமைகளும் உண்டு. வயதுக்கு ஏற்ப, நிலைமைக்கு ஏற்ப புதிய புதிய கடமைகள் தோன்றுவதும் உண்டு.

இறங்கியதும் எந்தக் காரியமாக இருந்தாலும், அதற்குரிய கடமைகளை, தவறாமல் அந்தந்த நேரத்தில் செய்துவிட்டால், அந்தக் காரியம் வெற்றிகரமாகத் தான் முடியும். கடமைகளில் ஒன்றிரண்டு குறையும் போதும் பிழைபடச் செய்யப்டும்பு போதும், வெற்றி வாய்ப்புகளும் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

கட்டாயமாகச் செய்து முடிக்க வேண்டிய வேலைகளையும், கடமைகள் என்று சொல்லாம். கடமைகளை கடன் என்ற் சொல்லாலும் குறிப்பிடுவதும் உண்டு.

பெற்ற கடனுக்குப் பிள்ளைகளைக் கைதூக்கி விட வேண்டியது பெற்றோரின் கடமை. பிறந்த கடனுக்குப் பெற்றோருக்குப் பெருமை தேடித் தருவது பிள்ளைகளின் கடமை.

கடமைகளைச் செய்யும் போது, அதில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமே இருக்கக்கூடாது. ஆகவே செய்யலாமா? கூடாதா? இப்படிச் செய்யலாமா, அப்படிச் செய்யலாமா? என்ற கேள்விகளுக்கு அங்கு இடமே இல்லை. லட்சியம், மனசாட்சி இவைகளுக்கு மட்டுமே மதிப்பளிக்க வேண்டும்.

அதே போல, இன்று செய்ய வேண்டிய கடமைகளை, நாளைக்கு ஒத்திப் போடுவதிலும் பிரச்னை இருக்கிறது. என்ன பிரச்னை? வெற்றிகள் விளைவது தாமதமாகலாம். தாமத்தால் வெறிகள் கை நழுவியும் போகலாம்.

ஆகவே, இவை என்னுடைய கடமைகள் என்று முடிவாகி விட்டால், கால தாமதமின்றி, செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய முறைப்படி அவைகளைச் செய்து முடித்து விட்டால், வெற்றிக்கான எனது பங்கை செலுத்திவிட்டேன் என்று திருப்தியும் நிம்மதியும் அடையலாம்.

காலா காலத்தில், அப்படி கடமைகளை செய்யத் தவறும் போதுதான், கடைசி நிமிடத்தில் கலவரப்பட வேண்டியிருக்கிறது. கண்டவர் காலைப் பிடிக்க வேண்டியிருக்கிறது. அங்குமிங்கும் அலைய வேண்டியிருக்கிறது. வேண்டாத பதற்றமும் பரபரப்பும் வந்து விடுகிறது. என்ன ஆகுமோ எப்படி முடியுமோ? என்று ஏங்க வேண்டியிருக்கிறது.

கடமைகளும், காலமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கடமை கண் போன்றது. காலம் பொன் போன்றது என்று ஏன் சொன்னார்கள்? கண்ணைப் பராமரிப்பது போல், கண்ணைப் பாதுகாப்பதுபோல் கடைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும், அப்படி செலுத்தாமல் போனால், நாம் வாழும் காலமும் வருங்காலமும் இருண்ட காலமாகி விடும் என்பதற்காகவும் தான்.

மாணவரின் கடமை, அன்றாடம் தவறாமல், படிப்புக்கு என்று நேரம் ஒதுக்கி படித்து வருவது, அந்தக் கடமையை மறந்து விட்டு, கையிலே புத்தகத்தை எடுக்காமல் கண்டபடி காலத்தைக் கழித்து விட்டு பரீட்சைக்கு முதல் நாள் படிக்க உட்கார்ந்தால், பரீட்சையில் பாஸ் ஆக முடியுமா? தோல்வி தானே கிட்டும்?

சோம்பல், அல்டசியம் இவை மட்டுமல்ல, பாசம், நேசம் போன்ற நல்ல பண்புகள் கூட கடமைகளைப் புறக்கணிக்கத் தூண்டும்.

குருஷேத்திரப் போரில் அதுதானே நடந்தது.

வில்லெடுத்த விஜயன், கண்ணெடுத்துப் பார்க்கிறான். எதிரே இருப்பவர்கள் அவனைவருமே அவனது ரத்த உறவுகள். . வணங்கதக்க பெரியவர்கள். இவர்களையா நான் கொல்வது? இவர்களையா நான் கொல்வது? என்று கலங்கினான்; குழம்பினான். கைகள் காண்டீபத்தைத் தூக்க மறுத்தன.

அந்த சந்தர்ப்பம் தானே, ஒப்பற்ற தத்துவக் களஞ்சியமான கீதையை உலகிற்கு வழங்கியது.

“போரிடுவது, உன் கடமை. கடமையைச் செய்யும்போது, பாசம் கண்ணை மறைக்கக்கூடாது. இது நான் நடத்தும் நாடகம். இதனால் வரும் பாவமும் புண்ணியமும் என்னைத்தான் சேரும். எடு வில்லை. தொடு கணையை” என்று கடமையின் பெருமையை பார்த்தனுக்கு மட்டுமல்ல, இந்தப் பாருக்கே பாறைசாற்றினான் கண்ணன்.

இதையே திருவள்ளவர் வேறு கோணத்தில் சொல்கிறார்;


கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ் களைகட்டதனொடு நேர் ( 550)

என்ன அர்த்தம்?

கொடுஞ்செயல் செய்தோரை கொலைத் தண்டனை கொடுத்து அரசன் தண்டித்தல், ஒரு விவசாயி வளர வேண்டிய பயிரைக் காப்பாற்றுவதற்காக களையைப் பிடுங்கி எறிவதற்குச் சமம்.

அரசனுக்கு அது கடமை. உழவனுக்கு இது கடமை. இங்கே இரக்கம் தேவையற்றது.

கடமையைச் செய். பலனை எதிர்பாராதே என்பதை, நாம் பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். ஒரு பலனை எதிர்நோக்கித்தானே நம் கடமைகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு குறிக்கோளை நோக்கித்தானே நாம் அடியெடுத்து வைக்கிறோம். அப்படியென்றால் என்னதான் அர்த்தம் இதற்கு?

உன் கடமைகளை சரியான விதத்தில், சரியான நேரத்தில், செய்து முடித்து விட்டால் வெற்றி உனக்கு நிச்சயம்; தோற்றுவிடுவோமோ என்ற அச்சம் தேவையற்றது; பலனைப் பற்றி எந்தச் சந்தேகமும் பயமும் அடைய வேண்டாம்; அடுத்த கடமையில் கவனம் செலுத்து…. என்றல்லவா இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வள்ளலாரும் இதைத்தான் சொன்னார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று.

எனக்கென்று இட்ட பணிகளை, என் மீது வந்து விழுந்த பணிகளை, நான் விரும்பி ஏற்றுக் கொண்ட பணிகளை, பழுதின்றி பக்குவமாய் செய்து முடிப்பதே, என் கடன்; என் கடமை; அப்படிச் செய்து முடித்து விட்டால், நன்மைகளும் வெற்றிகளும் மட்டுமே விளையும். அதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஆகவே எனது கடமைகளில் கவனமாய் இருந்தாலே போதும் என்று தானே இதற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

பலனை எதிர்நோக்காமல் கடமை களைச் செய்து கொண்டிருப்பதே கர்ம யோகம் என்று சொல்லப்படுகிறது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அன்புக்கட்டளை இட்டாரே அண்ணா, அதில் முதல் சொல்லே கடமைதான், கடமை என்பது, ஆடசியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அவ்வளவு முக்கியமானது என்பதைத்தான் சூசகமாகச் சொன்னார் அவர். ஏன்? கோடிக்கணக்கான குடிமக்களின் நல்வாழ்வே அவர்களின் கையில்தானே இருக்கிறது.

நாடோடி மன்னன் திரைப்படத்தில் ஒரு பாடல் வரி;

கடைதனில் தூங்கியவன்
முதல் இழந்தான் –
சொந்தக் கடைமயில் தூங்கியவன்
புகழ் இழந்தான்

புகழ்தானே, போனால் போகிறது யாருக்கு வேண்டும் இந்தப் புகழ் என்று இதைச் சாதாரணமாகய் எடுத்துக்கொள்ளலாமா? கூடாது. என் தெரியுமா?

புகழுக்கு எதிர்ப்பதம் என்ன? இகழ் கடமையில் தூங்கிவிட்டால் புகழ் போவது மட்டுமல்ல, இகழ் வந்து சேரும். அதாவது அறிந்தவர் தெரிந்தவர் அத்தனை பேரின் ஏளனத்திற்கும் இகழ்ச்சிக்கும் ஆளாக வேண்டும் என்றல்லவா சொல்கின்றன இந்த வரிகள்.

ஆகவே, கடமையை நாம் மறக்கவில்லை என்றால் வெற்றியும் நம்மை மறக்காது. வெற்றியால் வரும் புகழும் நம்மை மறக்காது. புகழால் வரும் மகிழ்ச்சியும் நம்மை மறக்காது.

கடமையில் வைப்போம் கண்களை.


Share
 

1 Comment

  1. எனக்கென்று இட்ட பணிகளை, என் மீது வந்து விழுந்த பணிகளை, நான் விரும்பி ஏற்றுக் கொண்ட பணிகளை, பழுதின்றி பக்குவமாய் செய்து முடிப்பதே, என் கடன்; என் கடமை; அப்படிச் செய்து முடித்து விட்டால், நன்மைகளும் வெற்றிகளும் மட்டுமே விளையும். அதில் எனக்குச் சந்தேகமே இல்லை. – நல்ல கருத்து – பணி தொடர வாழ்த்துக்கள் – பாபு நடேசன்

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்