Home » Articles » தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது

 
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது


கந்தசாமி இல.செ
Author:

பிறக்கும்போது, சுதந்திரமாகப் பிறக்கும் மனிதன், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அடிமையாகிக்கொண்டே வந்து, தன்னை ஏதோ ஒருவகையில் முழுமையாகவே சிறைபடுத்திக் கொள்கிறான். அதனால் அவனால் உண்மையைப் பேச முடிவதில்லை. தான் ‘சரி’ என்று நினைப்பதை நிறைவேற்றவும் முடியவில்லை.

அன்புக்காக

‘அன்பு’ என்ற பெயரில் சிலர் அடிமையாகி, யாரோ சிலரின் அன்புக்காக நான் எதையும் செய்வேன் என்று, அறிவு வளர்ந்தவர்கள் கூடத் தவறு செய்வதை – முறைமாறி நடப்பதை – நடுவு நிலைமை பிறழ்வதைக் காண்கிறோம்.

நன்றி என்ற பெயரில்

இதேபோல் ‘நன்றி’ என்ற பெயரில் – அவர் நான் துன்புற்ற காலத்தில் உதவி செய்தார் – அவர் உதவியால் தான் நான் இந்த அளவு வளர்ந்துள்ளேன் என்று – அந்த உதவியைப் பாராட்டுவதோடு அமையாது அவர்களுக்காகக் குறுக்கு வழியில் எல்லாம் சென்று காரியங்கள் செய்து கொடுத்து, அவர்கள் பெற்ற உதவிக்குக் கைமாறு காட்டுகிறார்கள்.

இவ்வாறு தனி மனித வாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கையிலும், ஒருவர் யாரோ ஒருவருக்கோ அல்லது ஒரு சிலருக்கோ ஏதோ ஒரு வகையில் அடிமைப்பட்டதன் காரணமாக, உண்மைகள் நிலைநாட்டப் படாமல், நன்மைகள் நிகழாது நிகழ்ந்துவிடுகின்றன.

தலைவர்கள்

நம்மை வழி நடத்திச் செல்லும் தலைவர்களோ, பெருந்தலைமைக்கு முழுமையாக அடிமைப்பட்டு, எதையுமே எடுத்துச் சொல்லமுடியாதபடி கோழைகளாகிவிடுகிறார்கள். எடுத்துச் சொன்னால் எதிர் பார்த்தது கிடைக்காமல் போகுமே என்று எண்ணுகிறார்கள். மாறாக எதிர் விளைவுகள் நிகழ்ந்து விட்டால் எதிர் காலமே போய்விடுமே என்று அஞ்சவும் செய்கிறார்கள்.

இப்படிப் பெரும்பாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக யாரிடமாவது அடிமைப் பட்டுப் போவதால் குனிந்து குனிந்து வாழ வேண்டி உள்ளது. ஏன் இப்படி அடிமைகளாகிறார்கள், அதற்குரிய காரணங்கள் என்ன? இதை மாற்றி அமைக்க என்ன செய்வது, இதை எண்ணிப் பார்க்க வேண்டியது இன்றியமையாதது ஆகிறது.

தேவைகள்

ஒவ்வொருவரும் தங்கள் தேவைகளைப் பெருக்கிக் கொள்வதாலேயே, தங்கள் தகுதிக்கு மேல் செலவு செய்வதாலேயே தங்களை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள். நியாயமான செலவுகளுக்குக் கடன்படுவது அடிமைத்தனமாகாது. தேவையற்ற செலவுகளுக்காகவும், ஆடம்பரத்திற்காகவும் – செலவுகளைப் பெருக்கி, அதனால் கடன்பட்டு, கடன் சுமை அதிகமாகி அதைச் சரிகட்டப் போதிய வருமானம் இல்லாமல் பலரிடம் பலவிதமாகப் பேசி – வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமையை வளர்த்துக் கொண்டவர்கள், கடன் பட்டவர்களுக்கு அடிமையாகாமல் வேறு என்ன செய்ய முடியும்?

அதேபோல் பிறருடைய உதவியைக்கூட ஏற்றுக்கொள்வதில் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும். அவர்கள் உதவியை ஏற்றவுடனேயே, மரியாதைக்காகவாவது அவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டிய நிலை, பின்னர் அவர்கள் தவறு செய்தால் அதைக் கண்டும் காணாதுபோல் இருக்க வேண்டிய நிலை பின்னர் அவர்கள் தவறுகளுக்குத் துணைபோகின்ற நிலை பின்னர் அவர்கள் தவறுகளை மறைத்துப் பாதுகாக்கின்ற நிலை, இப்படி அடுக்கடுக்காக வளைந்து வளைந்து குனிந்து, மனக் கூனர்களாகி விடுகின்றோம்.

முன்னோர்கள் வழி

அதனால்தான் இளஞ்சிறுவர்களுக்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் – ‘நீ சாப்பிடும்போது உனக்கு முன்னால் பசித்தவர்கள் இருந்தால் அவர்களுக்குக் கொடுத்து விட்டு நீ சாப்பபிடு’ என்று சொன்னார்கள். இருப்பவன் அவனாக முன் வந்து கொடுத்து உதவவேண்டும் என்பது அதன் நோக்கம். அதே நேரத்தில் பிறர் உதவியில்தான் நீ வாழ வேண்டும் என்ற நிலை நல்லது அல்ல; அது இழிவானது. அந்த நிலையிலிருந்து உன்னை உயர்த்திக் கொள் என்றும் சொல்லி வைத்தார்கள். ‘ஏற்பது இகழ்ச்சி, ஐய மிட்டு உண்’ என்பது பள்ளிப் பாடம்.

வாழ்க்கை கற்றுத் தந்தவை

பிறரிடம் கேட்பதோ இழிந்தது; கேட்டும் வைத்துக் கொண்டு உதவாமல், இல்லை என்று சொல்வது அதைவிட இழிந்தது. சிலர் பெற்றுக்கொள் என்று கொடுக்க முன் வருவார்கள். அது உயர்ந்த பண்பாடு அதைத் தவிர்த்து விட்டுத் தாமாகச் சொந்தக் காலில் நிற்பதே மிக உயர்ந்த பண்பாடு எனச் சமுதாயத்தின் சமநிலையை, இருப்போர் இல்லாதோர் நிலையைச் சீர்படுத்தச் சொன்ன இந்தக் கருத்துக்கள் பொது நோக்கானவை. ஆனால், தனிமனித மேம்பாட்டிற்கு – ஒருவன் தன்னைத்தான் அடிமைப்படுத்தி – ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்காமல் இருப்பதே சிறந்த வழியாகும்.

ஆதலால் தனி மனிதன் – தன்னுடைய முயற்சியை- உழைப்பை- நம்பியே வாழ வேண்டும். அதுவே ஏறுபோல் பீடுநடை போட்டு வாழவைக்கும் தனித்தன்மை இழப்பது என்பது ஆண்மையை இழந்து விட்ட ஆடவரின் நிலைமை போன்றதாகும். மனித உருவில் வாழ்வதைவிட மனிதனாக வாழ்வது சிறந்தது அல்லவா?

இருவர் மொழி

‘நாமார்க்கும் குடி அல்லோம்’ என்று திருநாவுக்கரசர் வாக்கையும்; பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்’ என்ற பாரதியின் வாக்கையும் நம் மனத்தில் ஆழப்பதித்துக் கொள்வோமாக இம்மொழிகள் அவ்வப்போது நினைவில் வந்து எச்சரிப்பதாக!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்