Home » Articles » நாளொன்றுக்கு 48 மணி நேரம்

 
நாளொன்றுக்கு 48 மணி நேரம்


admin
Author:

‘எனக்கு நேரமே இல்லை’ என்று நாம் சொல்வது வாடிக்கை. ஆனால் அப்படிச் சொல்வதில் உண்மை இல்லை என்பதுதான் உண்மை. காலை எழுந்தவுடன் ஒவ்வொருவர் கையிலும் அரிதான ஒரு செல்வம், இந்த தேசத்தின் முதல் குடிமகன் முதல் கடைகோடி மனிதன் வரை அனைவருக்கும் சமமாக வழங்கப்படுகிறது. அது தான் நாளொன்றுக்கு வழங்கப்படும் 24 மணி நேரம். இந்த ஒன்றில் மட்டுமே உலகெங்கும் சம தர்மம் நிலவுகிறது.

நேரத்தை எல்லோருமே ஏதோ ஒரு வகையில் செலவழித்து விடுகிறார்கள். ஆனால் செலவழித்த அனைவருமே வெற்றி வாகை சூடுவதில்லை. நேரத்தை எந்த அளவுக்கு சிக்கனமாக, முழுமையாக, முறையாக பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியமே அடங்கியிருக்கிறது. அதில் அவரவர் திறமை ஆளுமை, வளர்ச்சி என வாழ்க்கைப் புதையலே மறைந்துள்ளது.

‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்” என்பது குறள். இது பொருட் செல்வத்துக்கு மட்டுமன்று, நேரச் செல்வத்திற்கும் பொருந்தும் நேரத்தை அளவறிந்து செலவு செய்யாதவனுடைய வாழ்க்கை இருப்பது போல் தோன்றினாலும் இல்லாமல் அழிந்துவிடும். நேரத்தை மிகுந்த பயனுள்ளதாக்கிக் கொள்ள மேற்கொள்ளும் வழிமுறையைத்தான் நேர நிர்வாகம் என்கிறோம்.

வாழ்க்கையை நேசிப்பவர்கள் நேரத்தை நேசிக்க வேண்டும். வெற்றி பெறத் துடிப்பவர்கள் நேரத்தைப் போற்ற வேண்டும். காலத்தை கொண்டாடுகிறவர்களைத்தான் காலம் கொண்டாடும் மற்றவர்களை அது வெறுமனே கொண்டுபோகும். நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள், நேரத்தைத் தவிர, என்ற நெப்போலியன் கூற்று நேரத்தின் அருமைக்குச் சிறந்த சான்று.

எதனோடும் ஒப்பிடமுடியாத அளவுக்கு மதிப்புமிக்க நேரத்தை எப்படியெல்லாம் நிர்வகித்து வாழ்வை வளப்படுத்திக் கொள்வது என்ற விழிப்புணவர்வை ஏற்படுத்தி அதற்கான வழிமுறைகளை கோடிட்டு காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். முதலாவதாக நேரத்தை சிறந்த முறையில் கையாளுவதற்கான சில வழிறைகள்;

1 ) நேர பட்ஜெட் தயாரித்தல்:

நேரத்தை நிர்வகிக்க நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் பட்ஜெட் தாயரிப்பது. அதாவது நேரத்திற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது. ஒவ்வொரு நாளும் வரவு 24 மணி நேரம் அதை உடல் ஆரோக்கியத்திற்கு பொருள் தேடுவதற்கு, படிப்பதற்கு, உற்சாகத்திற்கு, ஓய்விற்கு உறக்கத்திற்கு என்று ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்க வேண்டும்.

பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டால் நமது நேரம் எந்தெந்த வகைகளில் விரயமாகிறது என்பதை பட்டியலிட்டு நேரத்தை பெருமளவில் வீணாக்கும் அரட்டையடித்தல், ஊர் வம்பு பேசுதல், தொலைக்காட்சிப் பார்த்தல் போன்றவற்றிற்கு ஒரு வரம்பு கட்ட வேண்டும். இதன் மூலம் மிச்சப்படுகிற நேரத்தை கொண்டு பற்றாக்குறையை சரிகட்டலாம்.

2) பணிகளை வகைப்படுத்துதல்:

பணிகளில் அவசரப்பணிகள் எவை என்றும் அவசியப் பணிகள் எவை என்றும் வகைப்படுத்தி செயல்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டியவை அவசரப்பணி. ‘இத்தனை மணிக்குள் பணத்தை கட்ட வேண்டும். இன்றைக்குள் டிக்கெட் வாங்க வேண்டும் என்பது போன்றவை. நமது இலக்கை அடைய உதவும் பணிகள் அவசியப் பணிகள். பிளாட் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவை இதில் அடங்கும். அவரசப் பணிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். அவசியப்பணிகளை ஆற அமர யோசித்து செய்ய நேரம் உண்டு.

3) பரிபூரணத்துவ (Over Perfection) எண்ணம் கூடாது:

ஒரு பணியை எந்தவிதக் குறையும் பிழையுமின்றி சிறந்த முறையில் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் நல்லதுதான். ஆனால் இந்த உணர்வை கட்டாயமாக்கிக் கொள்ளக்கூடாது. அதிகமான பரிபூரணத்துவ எண்ணம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பழக்கம் பணியை செயலிழக்கச் செய்து பணியை ஒத்திப்போடத் தூண்டும் தவிர்க்க முடியாமல் செயலில் ஒரு சிறு தவறு நிகழ்ந்துவிட்டால் அது மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே ஒழிய செய்த செயலையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கக்கூடாது.

4) பொறுப்புகளை பகிர்ந்தளித்தல்:

நாமே எல்லாவற்றையும் செய்து முடிக்க முயற்சிக்கக்கூடாது. அது தோல்வியில்தான் முடியும். நம்மால்தான் சிறப்பாக செய்ய முடியும் என்று எண்ணுவது தவறு. உரிய முறையில் பொறுப்புகளைப் பிறருக்கு பகிர்ந்து அளிக்க பழக வேண்டும். உதாரணமாக ஒரு மேலாளர் அனைத்துப் பணிகளையும் தானே செய்து முடிப்பது கடினம். அவர் உரியவரிடம் பொறுப்புகளையும், வேலையையும் பகிர்ந்தளிக்க வேண்டும்.

5) வீண் பேச்சை தவிர்த்தல்:

சக ஊழியர்களிடம் சுமுக உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தேவையற்ற செய்திகளைப் பேசக்கூடாது. இச்செயல் அவர்களையும் தேவையற்றதை பேச ஊக்குவித்து நேரத்தடையை ஏற்படுத்தும். அதிக அளவிலான உறவு கடமையை முழுமையாகச் செய்ய உதவாது. சுமக உறவு கொள்வதற்கு ஒரு எல்லை வகுத்துக் கொள்ளவேண்டும்.

6) தொலைபேசி உரையாடல்:

இப்போதெல்லாம் தொலைபேசி மற்றும் அலைபேசியின் உபயோகத்தை விட தொந்தரவுகளே அதிகமாகி வருகின்றன. தொலைபேசியில் எப்போது, எப்படி, எவ்விதம் பேசுவது என்பதற்கு ஒரு நெறிமுறைவகுத்துக் கொண்டால் ஒழிய நேரத்தை சேமிக்க முடியாது. தொலைபேசியில் அவசியமெனில் மட்டுமே பேச வேண்டும். நண்பர்களையும் மற்றவர்களையும் அலுவலக நேரத்தில் தொலைபேசியில் அழைத்துப் பேச ஊக்குவிக்க கூடாது. தொலைபேசியை அவசியமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எத்தனையோ முக்கிய பணிகளுக்கு நேரம் இல்லை என்ற நிலையில் பல இடங்களில் அந்த நேரம் வீணாகிப் போகிறது. பேருந்து ரயில்வே நிலையங்கள், விருந்தினர்கள் வரவேற்பு என்று அவரவர் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப சிறிதும் பெரிதுமாய் காத்திருப்புகள் நம் மீது திணிக்கப்படுகின்றன. அந்த காத்திருப்புகளை பயனுள்ளதாக மாற்ற முடியும். ‘மனமிருந்தால் மார்க்கம் உண்டு’ தினம் தினம் செய்யக்கூடிய சின்ன சின்ன வேலைகளையும் கிடைக்கும் சிறு சிறு நேர இடைவெளிகளையும் உரிய முறையில் இணைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இன்றைக்கு செய்ய வேண்டியதை நாளைக்கு செய்ய இருக்கிற வேலைகளை இன்றைக்கே செய்கிற முயற்சியும் வேண்டாம். இலக்குகளை சிறிய அடைவுகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய பள்ளத்தை இரண்டு தாண்டல்களில் தாண்ட முடியாது.

ஒரு நல்ல செயலைச் செய்ய கால நேரம் பார்க்கக்கூடாது. ‘நல்லதுக்கு காலமில்லை’ என்ற முதுமொழி கூறுவது இதைத்தான். ஒவ்வொரு நாளும் ராகு காலம், எமகண்டம், என்று பல மணி நேரத்தை பலர் எந்தக் காரியமும் செய்யாமல் வீணாக்கி விடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, அஷ்டமி, நவமி, பாட்டிமை, செவ்வாய்க்கிழமை என்று பல நாட்கள் வீணாக்கப்படுகிறது. இக்கணக்கின்படி ஆண்டில் 168 நாட்கள் கெட்ட நாட்கள். இப்படி நாள்தோறும் பல மணிநேரமும் மாதந்தோறும் பல நாட்களும் வீணாக்கப்பட்ட நாட்களை வாழ்நாள் முழுவதற்கும் கணக்கிட்டால் ‘வாழ்க்கையில் இவ்வளவு நாட்களை வீணாக்கிவிட்டோமா!’ என்று மலைப்பாக இருக்கும்.

உங்களுக்கு ஒரு வங்கி கணக்கு இருக்கிறது என்று வையுங்கள். தினமும் அதில் ரூ. 86400 வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அதை அதே தினம் செலவழிக்க வேண்டும். மிச்சமிருப்பதை மறுநாள் பெற முடியாது. அப்படி என்றால் என்ன செய்வோம்? ஒவ்வொரு நாளும் அன்றைய வரவை ஜாக்கிரதையாக அன்றே செலவு செய்வோம். வருங்காலத்திற்காகச் சரியான இடத்தில் முதலீடு செய்வோம். பண வங்கிக்கு பொருந்தும் இந்த நியதி நேர வங்கிக்கும் பொருந்தும். அதாவது ஒவ்வொரு நாளும் நம்முடைய நேர வங்கியில் 86400 நொடி நேரம் வரவு வைக்கப்படுகிறது.. அதனை முறையாக முதலீடு செய்ய வேண்டும். செலவழிக்காமல் விட்ட நேரம் மறுநாள் கிடைக்காது. ஆனால் அன்றைய தினம் தள்ளிப் போட்ட வேலைகளும் மறந்துவிட்ட கடமைகளும் அடுத்த நாள் வந்து சேர்ந்து கொள்ளும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஒவ்வொரு கடைபிடிக்க வேண்டிய கபிலரின் பாடல் ஒன்றினைப் பாருங்கள்.

ஒன்றைச்செய்யவும் வேண்டும்
ஒன்றும் நன்றே செய்ய வேண்டும்
நன்றும் இன்றேசெய்ய வேண்டும்
இன்றும் இன்னே செய்ய வேண்டும்

ரமண மகிரிஷியிடம் ஒருவர் ‘உலகின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கவலையாக இருக்கிறது’ என்றாராம். அதற்கு ரமணர்’ ‘எதிர்காலத்தை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? நிகழ்காலத்தையே நீங்கள் சரியாக அறியவில்லையே. நிகழ்காலத்தை சரியாகப் புரிந்து கொண்டு வாழ்ந்தால் வருங்காலம் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்’ என்று தெளிவுபடுத்தினாராம். எனவே நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்ந்தால் எதிர்கால வாழ்க்கை புதிராக இருக்காது. புதிதாக இருக்கும்.

எந்தவொரு செயலுக்கும் பொருள் மற்றும் பணத்தைப் போல காலம் என்பதுவும் ஒரு முதலீடு காலத்தின் அடிப்படையில்தான் முதலீடு ‘நீண்ட கால முதலீடு, குறுகிய கால முதலீடுய என்று வகைப்படுத்தப்படுகிறது. காலச்செல்வம் அனைவருக்கும் எளிதாக, இலவசமாக கிடைக்கக்கூடிய ஒன்று. அதனை சிறப்பான வழியில் முதலீடு செய்ய வேண்டும்.

விடிந்தது எழுந்தோம், இருட்டியது படுத்தோம் என்று இருந்தால் ஒருகாலும் வளமாக வாழ முடியாது. காலையில் எழுந்தவுடன் ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்க வேண்டும். அங்கே இங்கே பேசுவது, அப்படி இப்படி வேடிக்கை பார்ப்பது என்று காலத்தைக் கழித்தால் வெற்றி எப்படி கிட்டும்?

‘பொழுதுபோக்கு’, ‘பொழுதைக் கழிப்பது’ என்று கூறுவதே தவறு. வெற்றிக்கு முதல் தகுதி பொழுதை நல்ல வழியில் பயன்படுத்துதலே ஆகும். போனால் வராத பொழுதை நாம் போற்றி வாழ பழகிக் கொள்ள வேண்டும். கடவுளால் தரப்பட்ட அரிய கொடை பொழுது. அதன் அருமை தெரியாதவர்கள்தான் ‘பொழுது போகவில்லை’ என்று புலம்புவார்கள். காலத்தின் அருமை தெரிந்தோர் ‘பொழுது போதவில்லை’ என்று வருந்துவார்கள்.

‘நீ கூற நினைக்கும் உண்மையை முதல் மனிதனாக நீயே அறிவித்து விடு இல்லையேல் இன்னொரு மனிதன் அதனை அறிவித்து உயர் புகழ் அடையும்போது – முன்னரே வெளிபடுத்தாமல் போனோமே என வருந்த நேரிடும்’ என்கிறார் எமர்சன் எனும் அறிஞர். எண்ணும் காலத்திற்கும் அதனை அறிவிக்கும் காலத்திற்கும் இடைப்பட்ட சில வினாடிகள் கூட வாழ்க்கைப் பாதையை மாற்றி விடும் வல்லமை படைத்தது.

வாழ்க்கைப் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேற்ற உழைப்பையும் மன உற்சாகத்ததையும் விடா முயற்சியையுமே துணையாகக் கொண்டு, காலநேரம் நமக்கு சாதகமாக வரும் என்று எண்ணிக் கொண்டிராமல் கருத்துடன் சிந்தித்து செயல்பட்டு நன்னம்பிக்கையோடு முயன்று முன்னேறவேண்டும்.

வாழ்க்கையும் நேரமும் ஒரே பொருளுடையது. வீணாகிற நேரம் வீணாகிற வாழ்க்கை என்று பொருள். நல்ல முறையில் உபயோகிக்கப்படுகிற நேரம் வாழ்வை வளப்படுத்துகிறது. நேரம் அதனுடைய தன்மையில் நல்லதுமல்ல. கெட்டதுமல்ல. நம் திறமையின்மைக்காக நேரத்தை குற்றம் சாட்டுவது நியாயம் அல்ல.

மனிதன்தான் நேரத்தை நிர்வகிக்க வேண்டும். நேரம் மனிதனை நிர்வகிப்பதாக இருக்கக்கூடாது. நேர நிர்வாகம் என்பது நேரத்திற்கு அடிமை ஆவது என்பதல்ல. நேரத்தை வென்று மகிழ்வுடன் வாழ உதவும் வழிமுறை. நேரத்தை நிர்வகித்து வாழ்வது ஒரு இயந்திர வாழ்க்கை என்று பலர் நினைக்கின்றனர். அது தவறு. நேரத்தை நிர்வகித்து வாழ்வது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்க வல்லது. நேர நிர்வாக நுணுக்கங்களை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டால் நாளொன்றுக்கு 24 மணி நேரம் அல்ல 48 மணி நேரமே கிடைக்கும்.

 

3 Comments

  1. M.Rahman says:

    Really its very good

  2. M. J. SYED ABDULRAHMAN says:

    டைம் நிர்வாகம் ரொம்ப முக்கியம் என்பதை தெளிவாக விளக்கம் தந்தமைக்கு நன்றி
    நன்றி – சிறப்பு மனோசக்தி

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்