Home » Articles » கோழியும் குஞ்சும்

 
கோழியும் குஞ்சும்


சௌந்தர்ராஜன் தே
Author:

கோழி தன் குஞ்சுகளை கூட்டி செல்வதை கவனித்திருப்பீர்கள். பகலிலும், இரவிலும், விழிப்பிலும், தூக்கத்திலும் உணவு உண்ணும் போதும், ஓய்வு எடுக்கும்போதும் எப்போதும் இடைவிடாமல் கோழியும் குஞ்சுகளும் இணைபிரியாதிருக்கும்.

தாய்கோழி தன் குஞ்சுகளை காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்து போராடும். சாதாரண கோழிகளை விட இந்த தாய் கோழிகளுக்கு வேகமும் அதிகம், வீரமும் அதிகம், பலமும் அதிகம்.

இப்படி, உயிருக்கு உயிராய் வளர்த்து எதிரிகளிடம் இருந்து தன் குஞ்சுகளை பாதுகாத்து வரும் தாய்கோழி நான்கு மாதங்கள் சென்றபின் தன் குஞ்சுகளை கொத்தி கொத்தி விரட்டி விடும். நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள் என்று தன் வழியில் சென்றுவிடும். நீ யாரோ நான் யாரோ என்று மறிவிடும். மேடையை விட்டு இறங்கியதும் தன் தாய் வேஷத்தை கலைத்து விடும். நடிகையைப் போல் தன் தாய் பாசத்தை துறந்துவிடும். நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். இது இயற்கை அன்னையின் திருவிளையாடல்.

மனிதன் எப்படி இருக்கிறான்? எப்படி இருக்க வேண்டும்? மனிதனின் நிலைமையோ தலைகீழாக இருக்கிறது. அங்கு தாய் குஞ்சை விரட்டியது. இங்கு பிள்ளைகள் பெற்றோரை விரட்டுகிறார்கள். இதுவும் இயற்கை அன்னையின் திருவிளையாடலே.

அப்படியானால் பெற்றோர்கள் என்னதான் செய்ய வேண்டும், குடும்பத்தில் செல்லாக்காசாக ஆகும் முன் சென்றுவிட வேண்டும். எங்கே வீட்டை விட்டுச் சமுதாயத்திற்கு வந்துவிட வேண்டும். நான்கு சுவர்களை தாண்டிப் பரந்த பூமிக்கு வந்துவிட வேண்டும். தன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் முடிந்ததா? இதோ இந்த சமுதாயம் உங்களை எதிர்பார்த்திருக்கிறது. இந்த உலகுக்கு நீங்கள் ஆற்ற ஏராளமானக் கடமைகள் தொண்டுகள் உண்டு.

தான் பெற்ற பிள்ளைகள் மட்டுமல்ல, நாம் காணும் மற்ற குழந்தைகள் யாவும் தன் குழந்தைகள் என்ற எண்ணத்தோடு செயல்படவேண்டும். கிணற்றில் நீச்சல் அடித்தது போதும், கடலில் நீந்தத் தயாராக வேண்டும்.

ஏசு ஒருமுறை ஒரு மனிதருடைய உணவான 5 அப்பம், இரண்டு மீனையும் எடுத்து ஐயாயிரம் பேருக்கு உணவாக்கினார் என்கிறது விவிலியம். அதேபோல ஐந்து பேருக்காக வாழ்ந்த மனிதன் ஐயாயிரம் பேருக்காக வாழமுடியும். பரந்த உலகில் செயல்படும்போது பெரிய பொதுக் காரியங்களில் ஈடுபடும்போது நம் பலமும் பல மடங்கு பெருகிறது. நமது திறமைகளும் பெருகுகின்றன. நம் குடும்பத்துக்காக உழைக்கும்போது வெளியில் இருந்து எந்த உதவியும் கிடைக்காது. ஆனால் சமுதாயத்திற்காக உழைக்கும் போது எல்லாப் பக்கங்களில் இருந்தும் ஒத்துழைப்பும் உதவியும் கிடைக்கும். தனிப் பெண்ணாகத் தன் சேவைகளை ஆரம்பித்த அன்னை தெரசாவின் தொண்டு பெருகி ஆலமரமாகி தழைக்கவில்லையா?

முதுமையின் அழகு, அவர்களின் முதிர்ந்த தெளிவான அனுபவ அறிவு. தன்னலமற்ற அன்பு மனங்களில் வெளிப்படுகிறது.

மூத்தோர்கள் அநேகர் பயனற்றவர்கள். நம்மை யாரும் மதிப்பதில்லை என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகமானோர் தொலைக்காட்சிகளில் தங்கள் நேரத்தை தொலைத்துக் கொண்டும் செய்தித்தாள்களை வரிக்குவரி படித்துக் கொண்டும், வெட்டி அரட்டையிலும் தங்கள் காலத்தை வீணடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். காலத்தால் அவர்கள் உடல் கரைந்து போனாலும் ஞாலத்தால் அவர்கள் பெயர் நிலைக்கவில்லையா?

வேதாத்திரி மகரிஷி தன் 50-வது வயதிற்கு மேல்தான் முழுமையாக ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டார். அதன்பின் அவர் சாதனைகள் சரித்திரம் படைக்கவில்லையா?

உடலிலும், மனதிலும் தெம்பு இருந்தால் மனிதன் முதுமையிலும் மிகப்பெரிய சாதனை செய்ய முடியும்.

நடுத்தர வயதுடையோரைவிட முதியோர் அதிக சாதனைகளை நிகழ்த்த முடியும். அந்த அளவுக்கு அவர்களுக்கு அனுபவ அறிவும் உண்டு. வாழ்க்கை போராட்டங்களில் இருந்து விடுபட்டால் நல்ல நேரமும் நிறைய உண்டு. மனம் இருந்தால் போதும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்