Home » Articles » வேரில் பழுத்த பலா

 
வேரில் பழுத்த பலா


கமலநாதன் ஜெ
Author:

உங்களை நீங்களே வலிமையானவராக உணர்கிறீர்களா? உங்களைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று அளவுக்கதிமாக கவலைபடும் நீங்கள் உங்களைப் பற்றி நீங்களே என்ன நினைக்கிறீர்கள் என்று கவலைப்பட்டதுண்டா? ‘அட, என்னய்யா என்னைப் பற்றி எனக்குத் தெரியாதா?’ என்று கேட்பது புரிகிறது . உங்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் சக்தியை உணர்கிறீர்களா? உங்களுக்குள் ஒரு ஒளியேற்றும் நெருப்புத் துண்டு ஒளிந்திருப்பதை அறிவீர்களா? உலகத்தை அடைந்து நமது நாட்டை அல்லது நமது மாநிலத்தை ஈர்க்கக்கூடிய செயல்பாடுகளை நிகழ்த்தவல்ல திறமை நமக்குள் இருக்கிறது; அதை இன்னும் நாம் பயன்படுத்தவில்லை என்பதை நினைத்துப் பார்த்ததுண்டா? உங்கள் மீதே நீங்கள் மதிப்பு வைத்திருக்கிறீர்களா? உங்களை நீங்களே ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?

அல்லது வேறுவிதமாக இருக்கிறீர்களா? உங்களைப் பற்றி மிக உயர்வாக நீங்களே நினைத்துக்கொண்டு, உஙளைப் பற்றி அளவுக்கதிகமான மதிப்பீடுகளை மனதில் ஏந்திக் கொண்டு உங்களைப் பற்றி தன் அகங்கார எண்ணங்களை ஏராளமாய் தாங்கிக் கொண்டு, ‘எனக்குத் தெரியாதது ஏதும் இல்லை’ என்கிற எண்ணங்களோடு குடித்தனம் நடத்திக் கொண்டு வாழ்கிறீர்களா?

அல்லது உங்களைப் பற்றி நீங்களே பலவீனமானவராக கருதிக்கொண்டு, சபிக்கப்பட்ட வாழக்கை உங்களுடையது என்று முடிவுகட்டிக்கொண்டு, ‘எனது படிப்பு போதாது; எனக்கு அறிவு கொஞ்சம் கம்மி, எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை, சாதாரண குடும்பம் என்னுடையது, எனக்கென்று தனித்துவமான திறமைகள் ஏதுமில்லை’ என்பது போன்ற எண்ணங்களை கயிறுகளாக்கி உங்களை நீங்களே கட்டிப்போட்டுக் கொண்டு சிறைக்குள் தவிக்கும் கைதி போல வாழ்கிறீர்களா? ஆம், உங்களைப் பற்றி அடுத்தவர்கள் என்ன நினைக்கிறீர்கள். என்பதைவிட உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது மிகமிக முக்கியமானது. அதுதான் உங்களை நிலைப்படுத்த உதவும் நங்கூரம். நம்மில் நிறையப் பேர் இதற்காக நேரம் செலவிடுவதேயில்லை…

உங்களைப் பற்றி நீங்களே உணர்ந்து கொண்டால் உங்களிடம் உள்ள குறைகளைக் களைந்து நிறைகளை பலப்படுத்திக் கொள்ள முடியும். உங்களைப் பற்றி நீங்களே உணர்ந்து கொண்டால் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள ஆசை தோன்றும். துணிவு பிறக்கும். உங்களைப் பற்றி நீங்களே உணர்ந்து கொண்டால் முன்னேற்றப் பாதையை கண்டுபிடிக்கும் வழி திறக்கும்.

‘உங்களுக்கு ஒரே ஒரு சுதந்திரம்தான் இருக்கிறது; உங்களை நீங்களே பகுப்பாய்வு செய்து உங்களை நீங்களே ஒழுங்குப்படுத்திக் கொள்ளுவதற்கான சுதந்திரம் ஒன்றுதான் இருக்கிறது’ என்கிறார் பெர்னார்டு பரூங் என்கிற அறிஞர். நிஜமாகவா? வேறு சுதந்திரம் ஏதும் இல்லையா? யோசித்துப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. இந்த வாழ்க்கை வாழ்வதற்காக வழங்கப்பட்டது. இதை நெறிப்படுத்தி செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டியது. நம் பொறுப்பு எல்லாவற்றையும் எல்லோரும் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பலவற்றைக் கேட்டுத்தான் பெற முடியும். கேட்க தயக்கம் கூடாது. கேட்டால் கொடுக்க பலர் தயாராக உள்ளனர். கேட்க நீங்க தயாராக இருக்கிறீர்களா என்பதுதான் முக்கியம்.

பல சக்திகள் நமக்குள்ளே இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான சக்திகள் கேட்பாரற்று இறுதிவரை நமக்குள் சும்மா இருந்து மக்கிப் போகின்றன. டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் அவர்கள் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் சாதாரண ஆசிரியர் பணியில் சேர்ந்து ‘வேந்தர்’ நிலைக்கு உயர்ந்தவர். அவருடன் ஒருமுறை பேசிக் கொண்டிருந்த பொழுது சொன்னார்:

“பெரும்பாலோர் தனக்குள் இருக்கும் உன்னத சக்திகளில் 30 சதவிகிதம் மட்டுமே பயனபடுத்துகின்றனர். சிலர் 70 சதவிகிதம் வரை பயன்படுத்தி உயர்ந்த இடத்தை பிடிக்கின்றனர். 100 சதவிகிதம் பயன்படுத்தியவர்கள் உலகில் யாருமே இல்லை”

நான் அவரிடம் கேட்டேன்: “அம்மா! நீங்கள் ஆசிரியர் நிலையிலிருந்து பல்கலைக் கழக வேந்தர் நிலைக்கு உயர்ந்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் சக்திகளை எந்த அளவு பயன்படுத்தி உள்ளீர்கள்?”

அவர் சொன்னார்: “நான் எனது சக்திகளில் 60 சதவிகிதம் பயன்படுத்தியிருக்கிறேன் என்று நம்புகிறேன். எனக்குள் இருக்கும், இன்னும் பயன்படுத்தப்படாத சக்திகளைப் பற்றி எனக்குத் தெரியும்”.

இந்த பதில் எனக்கு வியப்பளித்தது. தன்னைப் போற்றிப் பேசும் பலர் நடுவே அவர் வாழ்ந்த போதும், தன்னைப் பற்றி நன்றாக எடைபோட்டு வைத்திருந்தார் என்பது புரிந்தது.

“வளமான காலத்தில் நண்பர்களுக்கு நம்மைத் தெரியும்; வறுமை வந்த காலத்தில் நமக்கு நண்பர்களைத் தெரிந்து கொள்ள முடியும்” என்றார் ஜான் சார்ட்டன் காலின்ஸ் என்ற அறிஞர்கள்.

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றம்
பழகும்போது தெரிவதில்லை
பாழாய்ப்போன இந்த பூமியிலே”

என்று எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.

நமக்கு நண்பர்களைப் பற்றியும் தெரியாது. பகைவர்களைப் பற்றியும் தெரியாது. நம்மைப் பற்றியும் தெரியாது என்பதுதான் உண்மை. நம்மைப் பற்றி முதலில் தெரிந்து கொண்டால்தான் நம்மைச் சுற்றி இருப்போரைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். நம்மை நாமே படிக்கும் கல்வியில் முதலில் தேறுவோம். பிறகு அடுத்தவர் பற்றி அறிந்துகொள்ளும் பட்டயப் படிப்பில் சேரலாம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்