Home » Articles » தடைகளைத் தாண்டுங்கள்

 
தடைகளைத் தாண்டுங்கள்


தங்கவேலு மாரிமுத்து
Author:

வெற்றிக்கு அடிப்படை உழைப்பு. உழைப்பை ஒடுக்க முனைவது தடைகள். தடைகளைத் தாண்டத் துணை புரிவது விடாமுயற்சி. ஆக, வெற்றியின் ரகசியம் விடாமுயற்சி தான்.

மிகப்பெரிய சாதனையைச் செய்த ஒரு மிகச்சிறிய மனிதன், தன்னைச் சுற்றி வந்த தடைகளை எப்படித் தாண்டினான், எப்படி வெற்றி கண்டான் என்பதைப் பார்க்கலாம்.

கொலம்பஸ்

உலக வல்லரசுகளின் பட்டியலில் முன்னணியில் நிற்கும் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவன், அவன் பின்னணி என்ன?

ஜெனோவா நாட்டில் ஒரு நெசவாளக் குடும்பத்தில் பிறந்தவன். ஏழை. அவனுக்கு ஒரு கனவு. கடல் வழிப் பயணம் செய்து புதிய நாடுகளைப் பார்க்க வேண்டும் என்பது. கனவோ பெரிது. கையிலோ காசில்லை. இதுவே முதல் தடை.

இந்தியாவுடன் வாணிபம் செய்து வந்த போர்த்துக்கல் நாடு, சில காரணங்களால் புதிய கடல் வழியைத் தேடிக் கொண்டிருந்தது. அதைக் கேள்விப்பட்ட கொலம்பஸ், போர்த்துக்கல் அரசரையும், அமைச்சர்களையும் சந்தித்தான். தனது திறமைகளையும் திட்டங்களையும் எடுத்துச் சொன்னான். திட்டங்களை ஏற்றுக்கொண்ட அவர்கள், அற்பத் தொகைக்கு அதை விலைப்பேசினார்கள். பேரம் படியவில்லை. தோல்வி. இது ஒரு தடை.

இதற்கிடையில் அவனுடைய மனைவி இறந்தாள். கையில் ஐந்து வயதுக் குழந்தை. குழந்தையைப் பார்த்துக் கொள்ள உறவினர்களின் உதவியும் இல்லை. இந்தக் குடும்பச் சூழ்நிலை இன்னொரு தடை கைக்குழந்தையை வைத்துக் கொண்டு கனவை எப்படி நனவாக்குவது?

நண்பனின் யோசனையின் பேரில் பக்கத்து ஊரில் உள்ள அநாதை இல்லத்தில் தன் குழந்தையைச் சேர்த்தான். அங்கிருந்த பாதிரியார் இவன் கதையைக் கேட்டு ஸ்பெயின் நாட்டு இளவரசிக்கு ஒரு கடிதம் தந்தார். கொலம்பஸூக்குப் புதிய நம்பிக்கை.

ஆனால், அரசியைச் சந்திக்க அனுமதியே கிடைக்கவில்லை. என்ன செய்வது? அரசி பல்லக்கில் நகர்வலம் வருகையில், கட்டுக் காவலை மீறி, ஓடிச் சென்று, அரசியின் கையில், பாதிரியார் தந்த் கடிதத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் தந்து விட்டான்.

விளைவு? அரசியை மறுநாள் அரண்மனையில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. தன் லட்சியங்களையும், தனக்குத் தேவையான உதவிகளையும் எடுத்துச் சொன்னான். உதவுவதற்கு அரசிக்குச் சம்மதம். ஆனால் மீண்டும் தடை, அமைச்சர்கள் வடிவில்.

அப்போது ஸ்பெயின் நாடு எதிர் நோக்கியிருந்த ஒரு போரைக் காரணம் காட்டி கிடைக்கவிருந்த உதவிகளைத் தடுத்து விட்டனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டிவில்லை.

காத்திருந்தான் கொலம்பஸ். ஆறு ஆண்டுகளாய் பொறுமை காத்த கொலம்பஸ், புதிய நம்பிக்கையுடன் மீண்டும் அரசியைச் சந்தித்தான் மீண்டும் அமைச்சர்கள் குறுக்கே நின்றனர். போரினால் ஏற்பட்ட அழிவுகளைச் சீராக்க நிதி தேவைப்படுகிறதே. கலங்கினான் கொலம்பஸ்.

ஆனால் இம்முறை அரசியின் முடிவு மிக உறுதியாக இருந்தது. தனது சொந்த நகைகளை அடகு வைத்து தேவையான பணத்தை வழங்கினார்.

பணம் கிடைத்துவிட்டது. நீண்ட கடல் பயணத்துக்கான தேவைகளுடன், மூன்று கப்பல்களைத் தயார் செய்தான். ஆனால் மீண்டும் ஒரு சிக்கல்.

கிட்டதட்ட பத்தாயிரம் மைல்கள் நீளம் கொண்ட அட்லாண்டிக் கடலில் மாதக் கணக்காகப் பயணம் செய்ய யாருமே முன் வரவில்லை.

தளரவில்லை கொலம்பஸ். ஆயுள் தண்டனையோடு சிறையில் அடைக்கப்பட்டுக் கிடந்த அத்தனை கைதிகளையும், அரசியிடம் கேட்டுப்பெற்றான். அவ்வளவு பேரும் முரடர்கள், மூர்க்கர்கள்.

ஆரம்பித்தது கனவுப் பயணம், வழியில் எத்தனை சோதனைகள்!

மூன்றில் இரண்டு கப்பல்கள், பயணத்தின் போது உடைப்பட்டுப் போயின. அத்தனை மாலுமிகளும் இப்போது ஒரே கப்பலில்.

சூறாவளி, கடலின் சீற்றம், பேய் மழை…. இப்படிப் பல வகைகளிலும் இந்தக் கப்பலும் பல சேதங்களுக்கு உள்ளானது

அது மட்டுமா? கப்பலின் உணவும் தீரும் நிலைக்கு வந்துவிட்டது. மாலுமிகளின் மனதில் தெம்பு தீர்ந்து விட்டது; விரக்தி மண்டிவிட்டது. கப்பலைச் செலுத்த மாலுமிகள் மறுத்துவிட்டனர்.

ஸ்டிரைக். ஊருக்குத் திரும்பு என்று கோஷம்.

கொலம்பஸ் கெஞ்சினான். கொஞ்சினான். நம்பிக்கை ஊட்டினான். தைரியம் ஊட்டினான். மாலுமிகளின் மனதை மாற்றினான். ஆரவாரம் அப்போதைக்கு அடங்கியது. பயணம் தொடர்ந்தது.

ஒரு விடியற்காலை நேரம். அவனது விழிகள் விரிந்தன. ஆச்சரியம். ஆனந்தம். அதோ ஒரு நிலப்பரப்பு..

ஆம். வருடக்கணக்கான முயற்சிகளுக்கும் மாதக்கணக்கான பயணத்திற்கும் பலன் கிடைத்தது. கனவு நனவானது. உலகிற்கு ஒரு புதிய கண்டம் கிடைத்தது.

ஆக கொலம்பஸ் தாண்டிய தடைகள் தான் எத்தனை!

  • வறுமை, அவனை சிறைபடுத்தவில்லை.
  • குடும்பப் பிரச்னை அவனைக் குப்புறத் தள்ளவில்லை.
  • பொறுமை அவனைக் கைவிடவில்லை
  • தோல்வி அவனைத் துவளச் செய்யவில்லை
  • எதிர்ப்புகள் அவனை இடறித் தள்ளவில்லை
  • இயற்கைச் சீற்றங்களால் அவனது இரும்பு இதயம் இளகி விடவில்லை.
  • உடன் இருந்தவர்களின் ஒத்துழையாமை அவனது திடமனதைச் சாய்த்து விடவில்லை.

சுருக்கமாக,

அடைய விரும்பும் லட்சியத்தில் அளவு கடந்த ஆர்வம் தடைகள் எது வந்தாலும் தாண்டிச் செல்லும் விடாமுயற்சி.

இவைபோதும், எதையும் தன்னம்பிக்கையுடன் சாதிக்கலாம்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்