Home » Articles » பென்சன்

 
பென்சன்


திருமுருகன்
Author:

இன்று அப்பாவிடம் எப்படியாவது கேட்டுவிடுவது என்று தீர்மானித்தான் சதிஷ். பென்சன் பணத்தை அநாவசியமாக செலவு செய்கிறார் என்பது வீட்டிலிருபவர்கள் அவர் மீது சொல்லும் குற்றச்சாட்டு. இத்தனை நாள் அதை பொருட்படுத்தாத சதீஷ் இன்று அவர் வேண்டாத பொருட்கள் வாங்கி குவிப்பதை கண்கூடாக பார்த்தான்.

குடும்பத்தோடு எல்லோரும் சுற்றுலாவாக காரில் குற்றாலம் வந்திருந்தார்கள். வழியில் உள்ள கோவில்களில்லாம் சுவாமி தரிசனம் செய்துவிட்டு குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வண்டியை நிறுத்தியது தான் தாமதம். ஓலைவிசிறி, கூடை, கொய்யா, நுங்கு என்று ஆளாளுக்கு மொய்த்தார்கள்.

“அய்யா வாங்கிக்கய்யா, சீசன் இல்லாத்தால் வியாபாரமே இல்லைய்யா” என்று கெஞ்சல் வேறு.

“வேண்டாததெல்லாம் வாங்கி ஏமாந்திடாதீங்க” என்று எச்சரித்தாள் சதீஷின் அம்மா. எல்லோரும் ஆசை தீர குளித்துவிட்டு வந்து பார்த்தால், அப்பா ஏலெட்டு கூடை, விசிறி, கொய்யா, ஊறுகாய் என்று வாங்கி கார் நிறைய குவித்திருந்தார்.

“என்னப்பா எதுக்கு இப்படி எதை எதையோ வாங்கி குவிச்சிருக்கீங்க” என்றான் சதீஷ் தந்தை சாம்பசிவத்திடம்.

“விடப்பா, ஏழைங்க பார் வெயில் நேரத்துல ஏதோ கொஞ்சம் வியாபாரம் ஆனாத்தான் அவங்களுக்கும் நூலு காசு கிடைக்கும்” என்றார்.

“அதுக்காக வாங்கற பென்சன் எல்லாம் இப்படி செலவு செஞ்சு தீர்த்துராதீங்க மாமா” என்றாள் சதீஷின் மனைவி.

மருமகளிடம் விவாதம் வளர்த்துவது நாகரீகமல்ல என்று நினைத்தாரோ என்னவோ சதீஷை பார்த்தே சொன்னார்.

“இதொன்றும் அநாவசிய செலவு இல்லைப்பா. இத விக்கிறவர்கள கொஞ்சம் திரும்பி பார். பெரும்பாலும் அறுபது வயதை தாண்டினவங்க. அதுவும் இந்த கூடை விக்கிற பெண்கள் அத்தனை பேரும் வயதானவங்க. காலைல இருந்து வெயில்ல அலைஞ்சு திருஞ்சு நாலு சாமான் வித்தா தான் அவங்க வீட்ல உலை கொதிக்கும். தவிர இந்த தள்ளாத வயதிலும் சும்மா உட்கார்ந்து சாப்பிடணும்னு இல்லாம வந்து வியாபாரம் பண்றாங்க பாருங்க. அவர்களிடம் நம்மள மாதிரி வசதியானவங்க வாங்காம வேற யாரு வாங்குவாங்க. தவிர மூன்று நான்காயிரம் செலவு செஞ்சு டூர் வர்றோம். ஒரு இருநூறு ரூபாய் செலவு செய்து இந்த பொருட்கள் வாங்கினா என்ன தப்பு. அங்க பாருங்க ஆளுக்கொரு கூடை வித்ததுல அவங்க முகத்துல என்ன திருப்தி”.

“அரசாங்க உத்தியோகத்துல இருந்து நல்ல வசதிகளை அனுபவித்து, உங்களை நல்லா படிக்க வெச்சு, நீங்களும் எல்லா சௌகர்யங்களோடும் செட்டில் ஆயிட்டீங்க. என்னுடைய பென்சனெல்லாம் உங்களுக்கு பெரியதல்ல என்று எனக்குத் தெரியும். நானும் இனி இதை சேர்த்து வைத்து யாருக்கு கொடுக்கப்போறேன். குழந்தைகளுக்கு செலவு செஞ்சது போக ஏதோ இந்த மாதிரி இன்டைரக்டா இல்லாதவர்களுக்கு ஹெல்ப் பண்ணலாமே” என்று எல்லா கேள்விகளுக்கும் சேர்த்து பதிலளித்தார்.

சதீஷ் விடுவதாக இல்லை, “அதுக்கு சும்மா கொடுத்தரலாமேப்பா, இதுக்கு எதுக்கு கூடையெல்லாம் வேஷ்டா” என்றான்.

“அதுதான் தப்பு. கவுரவமா வியாபாரம் பண்றவங்களை சும்மா கொடுத்து கெடுக்கச் சொல்றியா. வயசான காலத்தில லைப்ல எந்த செக்யூரிட்டியும் இல்லாத இந்த கிராமத்து ஏழை ஜனங்களுக்கு நாம பன்ற சின்ன உதவி இந்த மாதிரி அவங்க கிட்ட ஒரு பொருள் வாங்கறதுதான். அதையும் தடுக்காதீங்க. பெரிசுபடுத்தாதீங்க” என்றார் சாம்பசிவம்.

“ஸாரிப்பா” என்று தலைகுனிவதை தவிர வேறு வழியில்லை சதீஷிற்கு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்