Home » Articles » அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்

 
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

சிரிப்பின் பலன்கள்

தன்னம்பிக்கை

இது இயல்பிலேயே நம்மிடம் உள்ளது. ஆனாலும் முன் அனுபவம், சந்தேகம், பயம் இவைகளால் மூடப்பட்டு சில சமயம் மறைந்து விடுகிறது. சிரிப்பு நமது தன்னம்பிக்கயை வெளிக்காட்டகிறது. சில உதாரணங்களை பார்க்கலாம்.

தெனாலிராமனைப் பற்றி நாம் எல்லோருமே படித்திருப்போம். ஒருமுறை பலவிதமான மயிர் கூச்செறியச் செய்யும் சாகசங்கள் செய்த மந்திரவாதியுடன் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் உண்டானது. தன்னம்பிக்கையுடன் சிரித்து, இவ்வளவு தானே! மிக அற்புதமான போட்டி எனக்கூறிய தெனாலிராமன் தான் இரு கண்களையும் மூடிக்கொண்டே செய்வதை அந்த மந்திரவாதி கண்கள் இரண்டையும் திறந்து கொண்டே செய்ய வேண்டும் என்றார். மந்திரவாதிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. வெற்றி பெற்றதாகவே முடிவு செய்து போட்டிக்குச் சரியென உடனே ஒப்புக்கொண்டார். தெனாலிராமன் இரு கைகளிலும் மிளகாய்ப் பொடியை எடுத்துக் கொண்டு தன் கண்களை மூடி, அதன்மீது கொட்டினார். மூன்று நிமிடங்கள் கழித்து மிளகாய் பொடியை அகற்றிவிட்டு, ஈரம் படாமல் கண்களைத் திறந்தார்.

மந்திவாதி மிளகாய் பொடியை முகர்ந்து பார்த்தார்; நெடி மூக்கில் ஏறி தும்மல் வர, கண்களில் கண்ணீர் திரண்டது. இந்தப் பொடியைக் கண்களைத் திறந்த அதற்குள் போட்டால் கண்களே போய்விடும் எனப் பயந்து கொண்டு தோல்வியை ஒப்புக்கொண்டார். சமயோசிதமாய் செயல்பட்டு தெனாலி ராமன் வென்றார்.

மற்றொரு சமயம் அரண்மனையில் மன்னர் தெனாலிராமனுக்கு தண்டனை வழங்கியே ஆக வேண்டிய நிலை உண்டானது. மரண தண்டனை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. கடைசி ஆசையாக மரண தண்டனைப் பெறுபவர் கேட்பதை நிறைவேற்றிய பின்பே அவரைக் கொல்வார்கள். தெனாலிராமனிடன் கடைசி ஆசையாக நீ எப்படிச் சாக விரும்புகிறாய்?” என மன்னர் கேட்க அடுத்த வினாடியே, “மன்னரே! நான் கிழவனாகித்தான் சாக விரும்புகிறேன்” என்றாராம். பின்னர் என்ன நடந்திருக்கும் அதுதான்.

தைரியம்

சிரிக்கும் போது நமது சக்தி குறைவாகவே செலவாகிறது; வலது பக்க மூளை வேலை செய்கிறது; ஆழ்மனம் விழித்துக் கொள்கிறது. மூளையின் அலைச்சுழல் வேகம் குறைகிறது. நல்லோர் தொடர்பு நம் அறிவை அடைகிறது. சிக்கல்கட்கு தீர்வு காணும் தைரியம் மனோதிடம் உண்டாகிறது.

சிரிக்கும்போது நம் பலம் அதிகமாவதை நம்மால் உணர முடியும். சிரித்து முடித்தபின் தைரியத்துடன் , புத்துணர்ச்சியுடன் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் மனமாற்றம் வந்து சேரும்.

சிரிப்பு கிளப்புகள்

சமீபத்திய செய்தி பல வெளிநாடுகளில் டென்சன் நோயாளிகளுக்குப் புதுமையான முறையில் சிகிச்சை அளிப்பதைப் போட்டோவுடன் வெளியிட்டிருந்தனர். ஓர் அறையில் பல பொருட்கள் இருக்கும். டென்சன் நோயாளி எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தன் விருப்பம் போல் உடைத்து, அடிக்கலாம். அவைகளின் விலைதான் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் என வசூலிக்கின்றனர். அப்போது மன இறுக்கம் குறையும். ஆனால், இது சரியான சிகிச்சை முறையல்ல.

தற்போது பரவலாக எல்லா இடங்களிலும் செயல்படும் சிரிப்பு கிளப்புகளில் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தால், உடல்நலம், மன நிலை,பொருள் வளம் அனைத்துமே அதிகரித்து மகிழ்வுடன் வாழ முடியும். எப்படி வெளிச்சத்தை நோக்கி நகர்ந்தால் நிழல் குறையுமோ, அதைப்போல் சிரிப்பை நோக்கி நகரும்போது நோய்களும்,கவலைகளும் குறைந்து, இறுதியில் மறைந்து தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றது.

நகைச்சுவையின் பலன்கள்

ஒரு விதையை மண்ணில் நடுகிறோம்; நீர் ஊற்றுகிறோம்; காற்று வீசுகிறது; உரம் போடுகிறோம். வளரும் செடி மண்ணாகவோ, நீராகவோ, காற்றாவோ, உரமாகவோ ஆவதில்லை. அதன் இயல்புப்படி, செடியாக முளைத்து, பருவத்துக்கேற்றவாறு பலன்களைத் தருகிறது. அதேபோல் அழுது கொண்டே பிறப்பது மனிதனின் இயல்பு என்றாலும், வாழ்நாள் முழுவதும் தானும் சிரித்து பிறரையும் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் திறமை முழுமையாகவே நம்மிடம் உள்ளது. இத்திறமைகள் இருப்பதை அறியாமலேயே பலர் வாழ்ந்து மறைகின்றனர்.

நாம் சிறிது சிந்தித்தால் போதும். பலவிதமான சிரிப்புத் துணுக்ககளை நம் மனமே கூறும். சர்தார்ஜி ஜோக்குகளைக் கேட்டிருப்போம். இவைகள் ஒரு சாராரை மனம் புண்படக் கூறுவதைத் தவிர்க்கவும்.

“வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்” இது தன்னம்பிக்கைத் தாரக மந்திரம். வழிகள் உள்ளன. நினைக்க வேண்டும். மனக்கண்ணால் பார்க்க வேண்டும்.

பார்க்கத் தெரிந்தால் – பாதை தெரியும்
பாதை தெரிந்தால் – பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் – கதவு திறக்கும்

இன்று பார்வை இழந்தவர்களும் செயற்கை முறையில் பயிற்சியால் பாதைகளை அறிந்து பல துறைகளில் வெள்ளி நட்சத்திரங்களாக மின்னுகின்றனரே ஏன் நம்மால் முடியாது? “இதுவரை வாய்விட்டுச் சிரித்ததே இல்லை. இப்போது சிரித்தால் வீட்டில் ஒரு மாதிரியாகப் பார்த்து, ஏதோ என நினைத்துக் கொள்வார்கள்; எனது இமேஜ் பாதிக்கும்; இப்படியே இருந்து விடுகிறேனே” எனப் பலரும் எண்ணுவதை உணர்கிறோம்.

மாற்றம் என்பது நிரந்தரமானது. இன்றைய முதியோர்கள் நேற்றைய இளைஞர்கள்தானே! இன்றைய நோயாளிகள் நேற்றுவரை ஆரோக்கியமாக இருந்தவர்கள்தானே! நாளை நிச்சயம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்தானே கடனை வாங்கியாவது சிகிச்சை மேற்கொள்கிறோம். எனவே நமது எஞ்சிய கால வாழ்க்கையில் நல்லதொரு மாற்றம் தேவையெனில் ஒரு சிறிய செயலை மட்டுமே செய்யுங்கள்.

நான்(!) என்ற ஒரு சுயநல வட்டத்தை உடைத்து வெளிவர வேண்டும். தனது என்ற இமேஜ் (Image) மாற்றத் தயங்கக்கூடாது. இதைச் செய்தால் சிரித்து வாழலாம்; சிந்தித்து வாழலாம்; தன்னம்பிக்கையுடன் தரணியில் நிறைவுடன் வாழலாம். பிறரையும் சிரிக்க வைத்து மகிழ்வுடன் வாழலாம்.

வாழ்க வளமுடன்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்