Home » Cover Story » மக்களின் நலனே பதவியின் பலன்

 
மக்களின் நலனே பதவியின் பலன்


வெங்கடேஷ் தி.ந
Author:

“மகிழ்ச்சியடைவதற்கான வழி – மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்வதே” என்பார் இங்கர்சால். மற்றவர்களை மகிழ்ச்சிகொள்ளச செய்து அவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சி காணுகின்ற ஆற்றல் மிக்கவராக,

“இனிய வார்த்தைகள் இரும்புக் கதவையும் திறந்துவிடும்” என்பார்களே இந்த இனிய வார்த்தைகளுக்கு சொந்தக்காரராக,

நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும், தூய்மையும், ஆனந்தமும் இருக்கின்றன. அதனை பயன்பாடு ஆக்குங்கள் என இளைய தலைமுறையினரை தட்டி எழுப்புபவராக,

தமிழ், இந்தி, ஆங்கிலம், மராட்டியம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை அறிந்து கல்வி பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டியும், ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு தக்க ஆலோசனைகள் வழங்கியும் ஊக்குவிப்பவராக,

எத்தனைதான் ஏற்றமான பொருள்களும், பரிசுகளும் கிடைத்தாலும், மக்களின் அன்பை விட மேலானது ஒன்றுமே இருக்க முடியாது என்பார்களே அந்த மக்களின் அன்பை நிரம்பப் பெற்றவராக,

வாழ்வில் நமக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய சொத்து, நம் நல்ல செயல்களே என்பார் சார்லஸ் கோல்ட்டன். அந்த நல்ல செயல்களையே சொத்தாக்கி கொண்டவராக,

தன் பணிக் காலத்தில் தன்னால் இயன்றதை முடிந்தளவு மக்களுக்கு செய்துவிட வேண்டுமென இடைவிடாது பணியாற்றி வருகின்ற கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தி. ந. வெங்கடேஷ், ஐ.ஏ.எஸ். அவர்களை டாக்டர் திரு.செந்தில், பேராசிரியை திருமதி, கலைச்செல்வி, திரு.வெள்ளியங்கிரி உடன் நாம் சந்தித்த போது,

“வாழ்வின் இலட்சியம் இன்பம் மட்டுமல்ல;
நம்மையும் பிறரையும் நல்லோர் ஆக்குவதோடு
நல்ல செயல்களின் மூலம்
நாமிருக்கும் நாட்டை உயர்த்துவதும் தான்”

“நல்ல மனிதனின் நல்வாழ்வே உலகில் மிகவும் அழகிய பொருள்”. என நம் பங்குக்கு ஜார்ஜ் ஹெர்பரட் பாமரின் வாக்கைச சொல்லி அவரோடு உரையாடியதில் இனி,

“நல்ல சூழ்நிலைகளே மனிதனது சுகத்துக்கு முதல்படி” என்பார் கவியரசு கண்ணதாசன் அவர்கள். உங்கள் பிறப்பு, வளர்ந்த சூழல் பற்றி…

சென்னை தி. நகரில் திரு.நரசிம்மன் ராஜீவி நரசிம்மனுக்கு மூன்றாவது மகனாக பிறந்து அங்கேயே ஆறாவது வரை படித்தேன். அதற்கு பின்பு இந்திய தபால் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த அப்பா மாறுதலாகி மும்பையில் பணியில் அமர்ந்த போது +2 வரை அங்கு படித்தேன். இளநிலை முதுநிலை டெல்லியில் படித்து முடித்தேன். எனது சித்தப்பா திரு. இராசானந்தம் தமிழகத்தில் சீனியர் I.A.S அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவரை இளம் வயதில் இருந்தே பார்த்துப் பார்த்து அவரைப் போல் ஒரு சிறந்த அதிகாரியாக வரவேண்டும்; மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணம் மனதில் ஆழமாக பதிந்தது. மேலும் டெல்லியில் இருந்தபோது எங்கள் இல்லத்தைச் சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேரும் பெரிய பெரிய அரசு பதவிகளில் இருந்தவர்கள். இப்படி செல்லும் இடமெல்லாம் அமைந்த சூழல் என்னை ஐ.ஏ.எஸ் படிக்கத் தூண்டியது. 22வது வயதில் எம்.ஏ. (பொருளாதாரம்) முடித்தவுடன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். அதன் மூலமாக இரயில்வே துறையில் பணி கிடைத்தது. என்றாலும் இலட்சியக் கனவே IAS ஆக வேண்டும் என்பதால் மீண்டும் ஆட்சியாளர் பணித்தேர்வுக்கு முயற்சித்தேன். “உங்களுடைய முயற்சிகளுக்கு நீங்கள் எந்தவிதமான எல்லையையும் ஏற்படுத்திக் கொள்ளாமலிருந்தால் உங்களால் மிகப் பெரிய காரியங்களைச் செய்ய முடியும்” என்னும் நியூமேனின் சிந்தனையை நினைத்துப் பார்த்தேன். இரண்டாவது முயற்சியிலேயே தமிழகத்தில் இரண்டாவது இடம் (IInd Rank) பெற்று தேர்ச்சி பெற்றேன்.

அர்ப்பணிப்போடும் தியாக உணர்வோடும் துணிவோடும் ஈடுபட வேண்டிய கடினமான தொழில் ஆட்சியர் பணி. அப்பணியில் அமர்வதற்கு முன் தாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டு பணியாற்றிய துறைகள்?

  • கடலூரில் உதவி ஆட்சியர் பணி
  • பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் பணி
  • சென்னை வணிகவரித் துறையில் அமலாக்கப்பிரிவு துணை ஆணையர்

இப்படி பொறுப்பேற்ற பணியனைத்தையும் அரவிந்தர் வாக்குப்படி எதற்கும் அஞ்சாமல், எதையும் வெறுக்காமல் யாரையும் ஒதுக்காமல் பணியை ஊக்கமுடன் செய்தேன் என்று சொல்லிக் கொள்ள முடியும்.

பொள்ளாச்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது சேத்துமடை, வேட்டைக்காரன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கொத்தடிமைகளாக பலர் உள்ளதைக் கேள்விபட்டு உடனே அவர்களை மீட்டு அவர்களுக்காக காளியாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்டு முதலியார்பதி ‘நத்தம்’ என்கிற புதிய குடியிருப்பு பகுதியை உருவாக்கி கொடுத்தது மனதை விட்டு அகலாத சம்பவமாகும். இப்படி தன்னால் முடிந்த பணிகளை மக்களோடு மக்களாக கலந்து செய்த சேவைகள் என்னை மேலும் மேலும் சிறப்புடன் பணியாற்ற ஆர்வத்தை தூண்டியது.

மக்கள் மனதில் நுழைந்து சிறப்பிற்குரிய இடத்தைப் பெற்று விடுவது என்பது சுலபமான காரியம் அல்ல. ஆனால் நீங்கள் அதை மாவட்ட ஆட்சித் தலைவர் பணியில் அமர்வதற்கு முனபே பெற முடிந்திருக்கிறது என்றால் எப்படி?

எனக்கு இளம் வயதில் இருந்தே எதையாவது சாதித்து நம்மால் முடிந்தளவு பிறருக்கு உதவிகள் புரிந்திட வேண்டும் என்கிற எண்ணம் அதிகம் இருந்தது. ‘ரூரல்’ பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் தேவைகளை உணர்ந்து அதை அவர்கள் எளிதில் பெற்று வாழ்க்கைத் தரத்தில் உயர நாம் துணையாக இருந்திட வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டே இருப்பேன். கல்லூரியில படித்துக் கொண்டிருக்கும் போது திரு.உபமன்யு சாட்டர்ஜி, ஐ.ஏ.எஸ். அவர்கள் ஆங்கிலத்தில எழுதியிருந்த “இங்கிலீஸ் ஆகஸ்ட்டு” என்கிற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அதில் ஒரு IAS அதிகாரி எந்த வசதி வாய்ப்பும் இல்லாத கிராமத்திற்குள்ளே நுழைந்து அங்கு அவர் திறம்பட பணியாற்றிய பின்பு அக்கிராமத்தை விட்டு வெளியே வரும்போது அந்த கிராமம் அடைந்த வளர்ச்சி எந்தளவுக்கு இருந்தது என்பதை ஒரு கதை வடிவில் அற்புதமாக எழுதியிருந்தார். அந்தப் புத்தகம் என்னை தூண்டியது.

அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் நினைத்தால் வறட்சியான பகுதியையும் வளமையானதாக மாற்றமுடியும் என்பதை உணர்ந்தேன். இன்றைக்கு தன்னால் முடிந்ததை பணி சார்ந்த மற்ற அதிகாரி பெருமக்களோடு இணைந்து செய்து வருகிறேன். மக்கள் நலன்தான் வகிக்கின்ற பதவியின் பலனாகும்.

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக எப்போது பணியில் அமர்ந்தீர்கள்? இன்றைக்கு தங்கள் பணி குறித்து?

2001ல் இந்திய ஆட்சிப் பணிக்கு (IAS) தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியின் ஐந்தாவது ஆண்டிலேயே 2006ல் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்ற வாய்ப்புக் கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதுதான் தலையாய பணி அதை திறம்பட செய்து விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து பணியாற்றி வருகிறேன்.

என்னைப் பொறுத்த வரையில் IAS என்பதில் S – என்பது முழுக்க முழுக்க சர்வீஸ் என்று எடுத்துக் கொள்கிறேன்.

நாம் எடுக்கின்ற முயற்சிக்கு ஏற்ப பலன் நிச்சயம் கிடைக்கும்.

IAS படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்ட நீங்கள் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து?

மிகச் சிறிய வயதில் அரசின் உயர்ந்த பதவியை வகிக்க I.A.S, I.F.S. அல்லது I.P.S. போன்ற படிப்பினால் மட்டும் முடியும். அதோடு பொறுப்பு, கவுரவம், சவால் நிரம்பிய இப்பணிகளுக்கென மத்திய தேர்வாணையம், “Civil Services Examination” என்ற பெயரில் பொதுவான ஒரு தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

இந்தத் தேர்விற்கான தகுதி, தேர்வுத் திட்டம், படிக்க வேண்டிய பாடங்கள் மற்றும் சிறப்புப் பயிற்சி மையங்கள் பற்றியத் தகவல்கள் தெரியாமல் வளரும் தலைமுறை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்றும், அவர்களுக்கு ஏற்படும் குறைகளைப் போக்கவும் ‘ஐ.ஏ.எஸ். – வெற்றியின் ரகசியம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

இந்நூலானது திரு சி. சைலேந்திர பாபு, IPS அவர்கள் எழுதிய ‘நீங்களும் ஒரு IPS ஆகலாம்” என்கிற நூலையும், திரு. வெ. இறையன்பு IAS அவர்கள் எழுதிய ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்” என்கிற நூலையும் தழுவி தற்போது உள்ள IAS தேர்வு நடைமுறைக்கு ஏற்றாற்போல் எழதப்பட்டதாகும்.

இந்த நூலினை இலவசமாக பெறவும் சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கவும் எனது மின்னஞ்சல் முகவரியில் (venkatesh_tn01@rediffmail.com) தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறேன்.

இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நகராட்சி அரசுப் பள்ளியில் படித்தவருமான டாக்டர். திரு. ப.முத்துக் குமாரசாமி என்பவர் IAS ல் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பதை சொல்லிக் கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

எதிலும் தொடர்ந்து ஆர்வம் கொண்டிருந்தால் முன்னேற்றம் வந்தே தீரும்.

இன்றைக்கு IAS தேர்வில் நமது தமிழகத்து இளைஞர்களின் தேர்ச்சி விகிதம்?

பாராட்டும்படி அமைந்து வருகிறது. 2004-2005ல் அகில இந்திய அளவில் நமது தமிழகம் ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் 3-வது இடம் பிடித்திருக்கின்றது. ஒரு கால கட்டத்தில் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், போன்ற தேர்வில் வட இந்தியர்களால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். நம்மால் எல்லாம் முடியாத ஒன்று என்றிருந்த எண்ணம் எல்லாம் தமிழகத்து இளைஞர்களிடையே மாறியிருக்கிறது. மொழிப்பிரச்னை தான் இப்படியெல்லாம் யோசிக்க வைத்தது. ஆனால் இன்றைக்கு தமிழிலேயே தேர்வுகள் எழுதலாம். தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக்கி கொள்ளலாம் என்கிற மாற்றகள் ஒரு மாறுதலை உண்டு பண்ணியிருக்கிறது. இன்றைக்கு நிறையவே இளைஞர்களிடையே ஆர்வம் வந்திருக்கிறது. தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் நல்ல வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. மேலும் தனி மனிதர்களும் தூண்டுதலாக இருந்து வருகிறார்கள்.

திருச்சி வேலை வாய்ப்பு பணிமனையில் உள்ள திரு. சுரேஷ்குமார் என்பவர் இதற்காக ஸ்டடி சென்டர்’ அமைத்து மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள உருவாக்கியிருக்கிறார்.

தமிழக அரசு, “இயக்குநர், குடிமைப் பணிகள் தேர்வு மைம், 255, இரண்டாவது என்கிற முகவரியில் பயனுள்ள நூலகத்துன் தங்கிப்படிக்க விடுதி வசதியும் செய்து கொடுக்கிறது.

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் உள்ளவர்கள் எல்லா வகையான உதவிகளும் செய்து தரத் தயாராக உள்ளார்கள்.

முயற்சிகள் இருந்தால் போதும். நாளைய தலைவர்கள் பட்டியலில் உங்களுக்கான இடம் பதிவாகிவிடும்.

IAS, IPS மற்றும் TNPSC குரூப் I, II போன்ற போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருத்தமான படிக்கும் முறை ஒன்று சொல்லுங்களேன்?

3D’s முறை என்பது படிக்கும் முறைகளில் சிறந்த முறையாகும். இம்முறை போட்டித் தேர்வுக்கு மட்டுமல்லாது எல்லாவிதத் தேர்வுக்கும், வாழ்க்கையின் வெற்றிக்கும் கூடச் சரியானதாகும்.

Discipline (ஒழுங்கு) திட்டமிட்டு, படிக்க வேண்டியதை Time Schedule போட்டுக் கொண்டு அதை அப்படியே காலத்திற்குள் படிக்கும் முறை.

Devotion (ஈடுபாடு, அர்ப்பணிப்பு) அரை மனத்தோடு முயற்சிக்காமல் முழு மனத்தோடு முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொண்டு படிக்கும் முறை.

Determination (மன உறுதி) தேர்வுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராகி அதிக உழைப்பு, புதுப்புது யுத்திகள் என முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு படிக்கும் முறை.

படிக்கும் காலத்தில் இந்த மூன்று ‘D’ க்கள் உடன் இருப்பின் வெற்றி நிச்சயம்.

நூலகப் பயன்பாடு என்பது ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தளவு பயன்களைத் தரும்?

எல்லையில்லா பயன்களைத் தரும் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கென்று பிரத்யேக வசதிகள் மாவட்ட மைய நூலகங்களில் செய்யப்பட்டுள்ளன. தனி அறை வசதி, மேற்கோள் மற்றும் குறிப்புதவி நூல்கள் (Reference Book) போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் தினமும் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு போன்றவை நூலகம் செல்வோருக்கு கிடைக்கும் பயன்களில் முக்கியமானவை.

போட்டித் தேர்வுக்கு உதவும் பருவ இதழ்கள், ஆங்கில இதழ்கள் மற்றும் பல நல்ல நூல்களை நூலகங்களில் பெற முடியும். சக மாணவர்களுடன் கலந்தாலோசிக்கவும் அவர்கள் பரிந்துரைக்கும் நூல்களைப் படிக்கவும் முடியும்.

பல நூலகங்களில் நகலெடுக்கும் வசதிகள் உள்ளன. அண்மைக்கால நவீன வசதியான ‘இணைய தளம்’ பல நூலகங்களில் உள்ளது. இன்டர்நெட் மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடியும். இணையதள வசதியை முழுமையாக பயன்படுத்துவது ஐ.ஏ.எஸ். மாணவர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரும்.

சென்னையில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்திலும், தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலகத்திலும் குடிமைப்பணி போட்டித் தேர்வு மையம் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. மாணவர்கள் நூலகங்களை நல்ல முறையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் உண்டு.

ஐ.ஏ.எஸ். படிக்க விரும்பும் பயிற்சி நிறுவனங்களை தேர்வு செய்வது எப்படி?

பயிற்சி நிறுவனங்களில் பயில விரும்பும் மாணவர்கள் மிக கவனமாக பயிற்சி நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பயில விரும்பும் நிறுவனத்தில் பயின்ற முன்னாள் மாணவர்களின் கருத்துக்கள் பயிற்சி தரும் வல்லுநர்களின் சிறப்பு, நிறுவனம் வைக்கும் தேர்வுகள் (Practice Test) நிறுவனத்தின் Reading Materials ஆகியவற்றைப் பரிசீலித்துப் பயிற்சி நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பயிற்சி நிறுவனங்களில் பயில்வது ஒரு சில விசயங்களில் நல்லது. பயிற்சி நிறுவனம் பயிற்சி நேரத்தை மிச்சப்படுத்தித் தரும். சரியான நூல்களைப் பரிந்துரைப்பார்கள். பல புத்தகங்களின் சாரத்தை (Essence) குறைவான நேரத்தில் தந்து நேரத்தை மிச்சப்படுத்த உதவுவார்கள்.

பயற்சி நிறுவனங்கள் மூலம் பயிலத் தேவையில்லை என்ற கருத்து ஒரு சிலருக்கு உள்ளது. பயிற்சி நிறுவனங்கள் catalyst போன்று உதவக்கூடியன. சுயமாக முயன்றும் வெற்றிபெற முடியும்.

இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

உயர வேண்டும் என்கிற எண்ணம் எந்தளவு இருக்கிறதோ அந்தளவு உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

தன்னம்பிக்கை நிரம்ப இருக்கட்டும். உழைப்பும், தன்னம்பிக்கை என்ற இரண்டும் இல்லாம் பெரிய வெற்றியில்லை என்பதை புரிந்து செயலாற்றுங்கள்.

என்றைக்கும் குறுக்கு வழியைத் தேடாதீர்கள். மனதில் திடம், திறமை மேல் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கட்டும்.

நல்ல விசயங்களை உள்வாங்கி சேமியுங்கள். அவை நல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து கொடுக்கும்.

‘தன்னம்பிக்கை’ இதழ் குறித்து தங்கள் கருத்து?

அரசியல், சினிமா சாராது 18 ஆண்டுகளாக தொடர்ந்து ‘தன்னம்பிக்கை’ இதழ் நல்ல சிந்தனைகளை மட்டுமே எடுத்து பலரின் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டி வருவது பாராட்டுதலுக்குரிய செயலாகும்.

மேலும் மாணவ சமுதாயத்திற்கு தேவையான அளவு தன்னம்பிக்கை பயிலரங்கங்களை வாசகர் வட்டம் சார்பில் நடத்தி வருவது அற்புதமான முயற்சியாகும்.

எதைக் கொடுத்திருக்கிறோமோ இல்லையோ, சோர்வு ஏற்படும் போதெல்லாம் ‘தன்னம்பிக்கை’ உடன் இருந்தால் மனம் மறுபிறவி பெற்றுவிடும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தி.ந. வெங்கடேஷ், ஐ.ஏ.எஸ், பொள்ளாச்சியில் சார் ஆட்சியராக பணியாற்றியதை குறித்து மாணவர் திரு. வெள்ளியங்கிரி…..

ஐயா அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்து பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை, போன்ற பகுதிகளில் இருப்பதால், அம்மலை சார்ந்த பகுதிகளில் வாழ்கின்ற மலைவாழ் மக்களின் நலனில் அக்கறைகொண்டு, அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும், கல்வி, சுகாதாரம், குடியிருப்பு வசிதிகள் போன்றவற்றில் தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வு மேம்பட 7 கி.மீட்டர் தூரம் நடந்தே சென்று பணியாற்றியதும் மறக்க முடியாத செயலாகும். குறிப்பாக, ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் நலனில் அக்கறைகொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செவ்வனே செய்ததும், சக அரசு அதிகாரிகளுடன் மற்றுமின்றி, தன்னார்வ சேவை நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களிடமும், மக்கள் நலப் பணிகளுக்காக அவர்களுக்கு வழிகாட்டியதும், மக்களின் குறைகளையும், தேவைகளையும், அதிகாரிகளிடத்தில் கொண்டு செல்ல தன்னார்வ சேவை நிறுவனங்களின் பணியாளர்களை ஊக்குவித்தும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபாடு கொண்டும் பணியாற்றியதால் இன்றைக்கும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.

இவர் பணியாற்றிய விதம் கண்டு, சக அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் அனைவரும் இவரை, ஓர் அதிகாரி என்பதை விட மனித நேயப் பண்பாளர் எனக் கூறுவார்கள்.

கடலூர் பகுதிகளில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய பின்பு, கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி சார் ஆட்சியராக பொறுப்பேற்று பணியாற்றிய கால கட்டத்தில் கடலூர் மாவட்ட பகுதிகளில் “சுனாமி” ஏற்பட்டபோது போர்க்கால அடிப்படையில் உடனடி நிவாரணப் பணிகள் மேற்கொள்ள அன்றைய கோவை மாவட்ட நிர்வாகம் இவரை Deputation-ல் கடலூரில் சென்று மக்கள் பணியாற்றுமாறு பணித்தது.

கடலூர் மாவட்ட சுனாமி நிவாரணப் பணிகளை செவ்வனே பணியாற்றியதன் காரணமாக அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சுகுன்தீப்சிங் பேடி அவர்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கிறார்.

பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு அவர்களின் ஆக்கப்பூர்வமான திறமைகளை வெளிக்கொணர, கிராமப்புற சூழ்நிலையிலும் மற்றும் மலைவாழ் பிரதேசங்களில் வாழும் குழந்தைகளின் நலனை மனதில் கொண்டு கோடை விடுமுறை சமயங்களில் விளையாட்டுப் போட்டிகள், நுண்கலைத்திறன் போட்டிகள் என எல்லா ஏற்பாடுகளையும் தானே முன்னின்று நடத்தி பரிசுகள் வழங்கி உதவிகள செய்ததெல்லாம் பாராட்டப்பட வேண்டியவையாகும். மேலும், தங்களை சந்திக்க வரும் மாணவ மாணவியர்களை நேரில் வரவழைத்து அறிவுரைகள் கூறி நினைவுப்பரிசாக புத்தங்கள் வழங்கியும் உற்சாகப்படுத்துவார்.

தன்னை சந்திக்க வரும் பொதுமக்களிடத்தில் எப்போதும் கால நேரம் பாராமல் சந்திக்க வேண்டும் என்ற முனைப்பு கொண்டவராகவும் திகழ்ந்தார்.

மொத்தத்தில் நல்ல செயல்களை முன்னின்று செய்யக்கூடிய நல்ல ஆற்றல் படைத்தவர் ஐயா, தி.ந. வெங்கடேஷ் ஐ.ஏ.எஸ். அவர்கள்.
********

கரூர் சித்தர் அமைப்பின் தலைவர், செயல் இயக்குநர், தமிழ்நாடு நலக் குழுமத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு கன்வீனர் திரு. சேதுலிங்கன், திரு. திரு. ந. வெங்கடேஷ், ஐ.ஏ.எஸ். அவர்களைப் பற்றிகூறியது.

“கல்வி தான் ஒரு வளர்ந்த சமுதாயத்தை உருவாக்கும். கல்வி தான் எல்லாவற்றிக்கும் மூலதனம். எனவே, கல்வி பயிலும் மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு, வாழிகாட்டுதலின்றி தவிக்கும் மாணவர்களுக்கு நல்வழி காட்டி வருகிறார்.

மேலும், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு தக்க ஆலோசனைகள் வழங்குவதிலும், போட்டித் தேர்வுக்கான கருத்தரங்குகளில் பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்தலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு நல்வழி காட்டி வருகிறார்.

“ஓடி வரும் உன்னதம்” என்ற புதுமையான மனித நேய அணுகுமுறையை உருவாக்கி கரூர் மாவட்ட கிராம மக்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக அவர்கள் இல்லத்திற்கே சென்று அவர்களது வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்டு வருகிறார்.

“வாருங்கள் பள்ளிக்குச் செல்வோம்” என்கிற திட்டத்தின் மூலம் கிராமம் ஒன்றில் பள்ளிக்குச் செல்வோர் எத்தனை பேர், பாதியில் நின்றவர்கள் எத்தனை பேர், செல்லாமலேயே இருப்பவர்கள் எத்தனை பேர் என கணக்கெடுப்பு நடத்தி, உண்மை நிலை அறிந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொடுத்து கல்வி கற்க மக்களோடு இணைந்து ஏற்பாடு செய்து வருகிறார்.

மேலும், சந்தர்ப்பத்தை உருவாக்குபவர்கள் வெற்றியை ஈட்டுகிறார்கள் என்பார்களே அதுவாய் சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்து கரூரில் உள்ள உடல் ஊனமுற்றோருக்கு ஒரு பொற்காலத்தை தந்திருக்கிறார். வீடு தேடிச் சென்று குறைகளை களைவதில் முன் நிற்கிறார்.

தன் கவனதுக்கு பாதிக்கப்பட்டவர்களின் செய்தி வந்தாலே உடனே உரியவர்களை தொடர்பு கொண்டு விரைவாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்வழி செய்து கொடுக்கிறார்.

மொத்தத்தில் மனித நேயமும் – அன்பும் அரவணைப்பும் ஒருங்கே பெற்று மக்கள் பணியாற்றுவதில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்.
*********

திரு. தி.ந வெங்கடேஷ், ஐ.ஏ.எஸ். அவர்களைப் பற்றி கரூர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மைய இயக்குநர்

திருமதி. ஜேஸ்மின்

கூறும்போது..

அரசு திட்டங்களோடு மேலும் பல்வேறு வழிகளில் நல்ல பல திட்டங்களை உருவாக்கி மக்களுக்கு உதவி வருகிறார்கள்.

நிறைய “கேம்ப்”கள் கிராமங்கள் தோறும் நடத்த ஏற்பாடு செய்து மக்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி அவர்களின் தேவைகளை முன்னின்று நிறைவேற்றி வருகிறார்கள்.

இந்த ஆண்டு ஊனமுற்றவர்களின் மறுவாழ்வுக்கு சிறந்த முறையில் பணியாற்றிதற்காக கரூர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம் முதல்வரிடம் விருது பெற்றிருக்கிறது என் நாங்கள் பெருமைப்படுவதில் ஆட்சித்தலைவரின் அயராத உழைப்பும் காரணமாகும்.

அடையாள அட்டை வழங்கவும், அறக்கட்டளை மூலம் கடனுதவி வழங்கவும் பெருமளவு ஐயா செயல்பாடுகள் உதவியாக இருந்து வருகிறது.

மேலும், உடலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து வளர்த்த வேண்டும் என்பதில் ஆலோசனைகளை தருவதில் ஆகட்டும், அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதிலாகட்டும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தேவையில்லை. ஆதரவுதான் தேவை என்றும், கடமை என்பதை விட “சேவை” என்று ஒவ்வொரு செயலையும் செய்து வருகிறார்.

எல்லோருடமும் பாராட்டுக்களை பெற காரணமாக இருந்து செயல்பட்டு வருகிறார். அவர் பணி மேலும் சிறக்கட்டும். வாழ்த்துக்கள்!

 

1 Comment

  1. பிரபாகரன் says:

    வாழ்த்துக்கள் ஐயா,
    நானும் முயற்ச்சிக்கிறேன்.

Post a Comment