Home » Articles » திறந்த உள்ளம்

 
திறந்த உள்ளம்


admin
Author:

தங்களின் ‘தன்னம்பிக்கை’ இதழ் எமக்கு கிடைக்கப் பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதழ் மிகச் சிறப்பாக வெளிவருகிறது. சூலை 2005 இதழில் நிறுவனரின் ‘குறிக்கோள நோக்கி’ கட்டுரை என்னைப் பெரிதும் கவர்ந்தது. மகிழ்வித்தது. எளிய நடையில மிக இனிமையாக கருத்துக்களைச் சொல்லியுள்ளார்!

‘சமுதாயக் குறிக்கோள்’ என்ற பகுதியில் – “தனி மனிதனுக்கே அன்றி ஒரு நாட்டின் மக்கட் சமுதாயத்திற்கே குறிக்கோள் இருத்தல் வேண்டும். பண்டைத்தமிழகத்தில் ‘கோசர் என்று ஒரு இனத்தவர் இருந்தனர். ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக அவர்கள் வாழ்ந்தார்கள். உண்மையே பேசினார்கள். அதனால் அவர்கள் ‘ஒன்றுமொழிக் கோசர்’ என்று புகழப் பட்டார்கள்’. அதுபோல் மக்கட் சமுதாயம் அனைத்தும் ஒன்றுபட்ட நோக்கு உடையதாக விளங்க வேண்டும்” என்று வரிகளைப் படித்துப் பெரிதும் மகிழ்ந்தேன்.

சுமார் 40 ஆண்டுகட்கு முன்பு திரு. சதாசிவ பண்டாரத்தவர் எழுதிய ‘சோழர் வரலாற்றில் கோசர்களைப் பற்றி படித்த நினைவு (இந்தச் செய்தி) நான் அப்போது தமிழ் பிரிலிமினரி தேர்வுக்குப் படித்த காலம்.

‘கோசர்கள்’ பற்றி எழுதியது சிறப்பு மற்றும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை கவிதை. பாரிதியின் எண்ணிய முடிதல் வேண்டும்’ கவிதைகளை ஒட்டிய செய்திகள் எல்லாம் கற்கண்டாக இனிக்கின்றன’ உடனே மெதுவாகக் கிடைக்கும் நிந்தர வெற்றி மேலானதல்லவா?

ஒன்றைவிடாது தொடர்ந்து பற்றிக் கொண்டிருப்பதே கூட வெற்றிக்கு வழியாகும்” துன்பத்தைக் கண்டு சரியாத மனமே வெற்றிக்கு வழி வகுக்கும்” என்ற வரிகள் வாழ்த்தக் கூடிய வரிகளாகும்.

‘தன்னம்பிக்கை’ தமிழ்ப் பெருமக்களிடையே நாளும் பெருக தங்கள் இதழ் பணியாற்றுவதை பெரிதும் பாராட்டுகிறேன்.

டாக்டர் குலசேகரன்,
அமிழ்தம் பதிப்பகம், வ.உ.சி. நகர் வேலூர்.

இந்த மாதம் தன்னம்பிக்கை இதழ் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தது.

கவிஞர் வாலி அவர்கள் ஆயிரக்கணக்கான பேட்டிகள் காணப்பட்ட அனுபவத்திற்குரியராக இருந்தாலும் தன்னம்பிக்கை இதழுக்காக கேட்கப்பட்ட கேள்விகளின் கோணம் வேறுபட்ட சிந்தனைகளை தூண்டிய மாறுபட்ட அனுபவமாகவே இருந்திருக்கும்.

பேராசிரியர் ஆ. இரத்தினசாமி அவர்களின் கட்டுரை குழந்தைகளுக்கு நல்ல நட்பு, எத்தனை முக்கியமானவை என்பதனையும், நட்பின் வலிமையையும் விளக்கியது, பாராட்டுக்கள்.

காட்டூர் சீ. அருள்மொழி, சேலம்

மருந்தே இல்லாத கொடிய வியாதி என்று பொறாமை உணர்வைப்பற்றி திருமிகு. எச். நடராஜன் அவர்கள் எழுதியிருப்பது அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. மனித வாழ்கை நிலையற்றது என்றும். இந்த நிலையற்ற வாழ்வில் பொறாமை என்ற உணர்வால் எவ்வளவு பாதிப்புகள் உள்ளது என்றும் சரியான விளக்கங்களையும் கொடுத்து கட்டுரையை மிகவும் உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கின்றார். மோசமான விளைவுகளை பொறாமை உணர்வுகள் ஏற்படுத்தும் என்று உணர கட்டுரை உதவும்.

பொ. சிவகுமார்,
வடக்கு சுள்ளிப்பாளையம்.

சூலை தன்னம்பிக்கை இதழில், நிறுவனர் பக்கம், குறிக்கோளை நோக்கி.. கட்டுரையில் வெளியான “இவ்வுலகில் பிறந்து வாழ்வதன் நோக்கம் குறிக்கோள், வறியவர்க்கு உதவுதலும் புகழ் விளங்க நற்செயல்கள் புரிந்து வாழ்தலுமே” என்கிற வார்த்தைகள் அமரர் இல.செ.க.வின் தெளிந்த நல்லறிவை நன்கு உணர்த்துகிறது. நன்றி!

தே.வேணுகோபால்
காவேட்டிப்பட்டி
நாமக்கல்.

டாக்டர். பெரு.மதியழகன் அவர்களின் ‘முன்னேற்றத்தின் மூலதளங்கள்’ தொடர் படித்தேன். இப்பகுதியில் சென்னையில் வாழும் டாக்டர் தம்பையா அவர்களைப் பேட்டி கண்டு எழுதியிருந்தார் சென்னையில் புகழ்மிகு தோல்சிகிச்சை நிபுணர் டாக்டர் தம்பையா தொண்டு பாராட்டுக்குரியது.

இரா. மோகனசுந்தரம்
மோகனூர்.

புலம் பெயர்ந்த நாங்கள் மும்பை தமிழர்களுக்காக மும்பை தூரிகையெனும் இலக்கிய சிற்றிதழை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

எங்களின் பொருளாதார நெருக்கடியால் கால தாமதமாக வெளியிட்டாலும், தங்களைப் போன்ற தன்னம்பிக்கையுள்ள இதழாளர்களின் ஊக்கத்தாலும் ஒத்துழைப்பாலும் தொடர்ந்து இதழ் வெளியிடுகிறோம்.

தங்களின் தமிழ்மொழிச் சேவைக்கும் இதழில் அவசியமான சில புதுமையான செய்திகளை மக்களுக்கு உரிய காலத்தில் தெரிவிக்கும் பணிக்காகவும் என்றும் எங்களின் வாழ்த்துக்களும் வணக்கமும்.

தன்னம்பிக்கை இதழ் எங்களின் சேவைக்கு இன்னமும் ஊட்டச்சத்தாக அமைந்தது என்பது உண்மையென்பதை உறுதியாக தெரிவிப்பதோடு.. நாளென்றும் நன்றியுடன்

நெல்லை நாதன்
நிர்வாக ஆசிரியர், மும்பை தூரிகை, மும்பை.

‘தன்னம்பிக்கை’ இதழ் மாபெரும் தலைவர் வாழும் மகாத்மா’ மேதகு குடியரசுத்தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களோடு இளம் விஞ்ஞானி ம. சுகப்பிரியாவோடு இருந்த அட்டைப்படம் என்னைப் பார்த்த மாத்திரத்திலேயே வாங்கிப் படிக்கத் தூண்டியது. அட்டை முதல் அட்டை வரை ‘தன்னம்பிக்கை வரிகள்’. எல்லாக் கட்டுரைகளும் கவிதைகளும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டிது. எச். நடராஜன் அவர்கள் எழுதிய ‘மருந்தே இல்லாத வியாதி பொறாமை’ என்ற கட்டுரை ஒவ்வொரு மனிதனும் படித்துப்பார்த்து திருத்திக் கொள்ள வேண்டிய வகையில் வெளியான அற்புதப் படைப்பு. தன்னம்பிக்கை இதழ் மேலும் பலர் வாழ்வில் இருளகற்றி ஒளியேற்ற வாழ்த்துக்கள்.

மு.கு. பாலசுப்ரமணியன்,
முத்தூர், ஈரோடு மாவட்டம்.

சூலை 2005 ‘தன்னம்பிக்கை’யில் மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரித் தாளாளர் திரு. சு. பழனியாண்டி அவர்களின் பேட்டி படித்தேன். சுயநிதக் கல்லூரிகளாக விளங்கும் காலத்தில் மொழி உணர்வு கொண்ட தாளாளராக இவர் விளங்குவது வியப்பையும் மகிழ்வையும் அளிக்கிறது. மேலும் 1972ல் பெரியார் தனது கல்லூரிக்கு வருகை தந்ததைப் பெரும்பேறாக இவர் கருதுவது, சமூக உணர்வு உள்ளவராகவும் இவர் திகழ்கிறார் என்பதன் அடையாளம் என்று கூறத் தோன்றுகிறது. மொழி உணர்வும் சமூக உணர்வும் கொண்ட ஒரு தாளாளரை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய ‘தன்னம்பிக்கை’ இதழுக்கு மிக்க நன்றி.

முனைவர் கூ. துரை.
முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை.
அ.அ. அரசுக் கலைக்கல்லூரி
நாமக்கல்.

‘தன்னம்பிக்கை’ இதழ் முழுவதும் படித்து பயனடைந்தேன். நன்றி. வாழ்க்கைப் பிரச்சனைகள் – ‘தீர்வுகள்’ என்ற பகுதியில் வெளியான தகவல்கள் மிக அருமையான பயன்தரக்கூடிய தகவல். மிக அழகான தொகுப்பு. தீர்வைத் தந்த ‘சூரியன்’ – மனிதவள பயிற்சியாளருக்கு பாராட்டுக்கள். சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் திறைமயானவராகத் திகழுங்கள் கட்டுரையும் மிக அருமை.

எஸ்.டி.சி.கற்பகம், ஈரோடு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2007

நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
தளர்வறியா மனம் தா
மனிதனும் மனோதத்துவமும்
சமுதாயமும் இளைஞர்களும்
தெய்வம் நீ என்று உணர்
முன்னேற்றத்தின் மூலதனங்கள்
வெற்றிக்கு வழி
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி